Tuesday, 14 August 2018

மாற்றம்


சில நெருக்கடியான தருணங்கள்
வளர்ச்சியும் மாற்றத்திற்கான
உந்து சக்தியாககும்.

Monday, 13 August 2018

கவியரங்கம் - கவிஞர் அப்துல் ரஹ்மான்


கவியரங்கம் - கவிஞர் அப்துல் ரஹ்மான்


இந்தக் காணொளியை இன்று பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை வாய்த்தது. இதில் பல சொல்லாடல்கள் பயன்படுத்தி சமூகத்தின் இரு கூறுகளை ஆய்கிறார் கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

அழகுத் தமிழ்

Sunday, 5 August 2018

இந்திய மாதா - காதரீன் மேயோ

ஏதோ மரபுவழியில் நாங்களெல்லாம் அப்படியே அறுத்து தள்ளினோம் அலோபதியால அழிஞ்சிட்டோம் எங்கள் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று கிளம்பி இருக்கிற கூமுட்டைகள் கவணத்திற்கு இதோ உங்கள் முன்னோர்கள் முட்டாள்கள் தான் என்பதற்கு நீங்கள் கடந்து வந்த பாதை !!.
"
இந்திய மாதா - காதரீன் மேயோ
காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா என்ற புத்தகம் 1928 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பெண்மணியான அவர் இந்தியாவை சுற்றிப் பார்த்து , தான் பார்த்ததையும் , கேட்டதையும் புத்தகமாய் எழுதி வெளியிட்டார். இந்தியத் துணைக்கண்டத்தின் பார்ப்பனிய முகத்தை புத்தகம் தொட்டுக் காட்டியதால் உலகம் அதிர்ச்சியுற்றது. அதில் அப்போது நடப்பில் இருந்த மகப்பேறு முறைகள் குறித்து அறியும் போது யாராலும் அதிர்ச்சியுறாமல் இருக்க முடியாது.
1. பிரசவம் என்பது ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வு. வழக்கம் போல தீட்டால் ஏற்ப்படும் கொடுமைகள் அனைத்தும் நடந்தன.
2. பிரசவம் பார்ப்பது மருத்தவச்சி என்ற ஒரு தனி சாதி பெண்கள். தீண்டப்படாத சாதியினர்.
3. பிரசவம் ஒரு தீட்டான நிகழ்வாய் இருப்பதால், அது ஒரு தனியான, ஒதுக்குப்புறமான, உபயோகமற்ற, வெளிச்சமும் காற்று வசதியும் அற்ற ஒரு அறையில் தான் நடக்கும். தீட்டு காரணமாய் பெரும்பாலும் பழைய அழுக்கான துணிகளே பயன்படுத்தப் படும்.
4. பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள் பாரம்பரியமாக தாங்கள் கேள்விப்பட்ட முறைகளையும், அப்போது தங்களுக்கு உதிக்கும் திடீர் யோசனைகளையும் பயன்படுத்தியே பிரசவம் பார்த்தனர்.
5. வலி வந்து நேரமாகி விட்டால் தங்கள் கைகளை உள்ளே விட்டு சிசுவின் கையோ காலோ எது கிடைக்கிறதோ அதைப் பிடித்து வெளியில் இழுப்பர். ஒருவரால் முடியாவிட்டால் இரண்டு மருத்துவச்சிகள் முயல்வர். நிச்சயம் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒன்றாவது போய் விடும்.
6. வலி வந்து தாமதமாகி விட்டால் பெண்ணை சுவர் ஓரமாய் நிறுத்தி வைத்து மருத்துவச்சி ஓடி வந்து பெண்ணின் வயிற்றில் முட்டுவர். அல்லது கைகளால் குத்துவர்.
7. பிரசவம் முடியும் வரையிலும் பெண்ணுக்கு எந்த ஆகாரமும் இல்லை. வலி நான்கு நாட்கள் இருந்தாலும் ஆகாரம் இல்லை.
8. பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.
9. தீட்டு காரணமாய் பிரசவம் அன்னியர் கண் படாமல் இருட்டறையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் நடக்கும். மூடிய அறையில் புகை நிறைந்திருக்கும் சமயத்தில் அன்னியர் யாராவது பார்த்து விட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் மருத்துவச்சி உடனே சில துர்நாற்றம் தரும் புகையை உண்டாக்குவாள். துர்நாற்றம் தீட்டை போக்கி விடும்.
10. பிரசவத்தில் பெண்ணின் உயிர் போய் விடும் என்ற சந்தேகம் வந்தால் அந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூள் நிரப்பப்படும். இறந்த பின் அவள் பேயாக மாறி வழி கண்டுபிடித்து வந்து பழி வாங்கலைத் தடுக்கவே இந்த முறை.
11. அதே போன்று பேயாய் மாறி பழி வாங்கலைத் தடுக்க பெண்ணின் கைகளை தரையில் வைத்து ஆணியடித்தலும் உண்டு. சற்று பிழைக்க வாய்ப்புள்ள பெண்களும் இதனால் இறந்து போயிருப்பார்.
12. தொப்புள் கொடி அறுக்க இரும்புத் தகடோ, கண்ணாடித் துண்டோ , மூங்கில் கழியோ உபயோகப் படுத்தப்படும்.
13. அறுபட்ட தொப்புள் மீது சாம்பலோ, சாணியோ, மண்ணோ தடவப்படும்.
மருத்துவம் வளர்ச்சியுறாத காலத்தில் உலகம் முழுதும் பிரசவங்கள் பாதுகாப்பாய் நடந்திருக்க வாய்ப்பில்லை. அரை குறை வைத்தியங்களே நடந்திருக்கும். ஆனால் இந்தியாவில் பிரசவம் ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வாய் இருந்ததால் உலகில் எந்த பகுதியிலும் அனுபவிக்காத கொடுமைகளை இங்கே பெண்கள் அனுபவித்துள்ளனர்.
இதில் தீட்டு இல்லாதிருந்திருந்தால் , சமூகத்தின் பொது அக்கறை இதில் இருந்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு வெளிச்சமுள்ள காற்றோட்டமுள்ள இடத்திலாவது பிரசவம் நடக்க வேண்டும் என்ற அறிவாவது பெற்றிருப்பர். தீட்டு பிரசவம் குறித்த ஒரு பொது அறிவை வளர விடாமல் தடுத்துவிட்டது.
சாதியத்தையும், பார்ப்பனியத்தையும், தீட்டையும், இந்து மதத்தையும் பிரித்துப் பார்ப்பது முடியாத ஒன்று.
- மூன்று வருடங்கள் முன்பு எழுதியது.
நன்றி தோழர் : துணைத் தளபதி மார்கோஸ்

ஹீலர் பாஸ்கர் - நாகூர் ரூமி

ஹீலர் பாஸ்கர் அவர்கள் என் நண்பர். ஆங்கிலத்தில் eye-opener என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவர். மிகமிக எளிமையானவர். திறந்த மனதுக்குச் சொந்தக்காரர். மனித உடலின் மகத்துவம் பற்றி அனாடமிக் தெரபி என்ற பெயரில் பல உண்மைகளை எளிமையாகப் புரிய வைத்தவர். (இந்த பெயரில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறுவிஷயம். இதற்கு ‘செவி வழி தொடு சிகிச்சை’ என்று சொதப்பலான  தமிழாக்கம் வேறு!).
ஆண்டவன் படைத்த உடல் எவ்வளவு அறிவுப்பூர்வமாகச் செயல்படுகிறது, எப்படி  ஒரு நோயை அதுவே தீர்த்துக்கொள்கிறது, அதற்கு உதவி செய்யும் பொருட்டு நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மருந்துகள் மாத்திரைகள், உடல் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்குதல் போன்ற செயல்கள் நம் உடலுக்கு எப்படி எந்த அளவுக்கு ஊறு விளைவிக்கும், உடலே உடலை  எப்படி குணப்படுத்திக்கொள்கிறது – இப்படிப் பல விஷயங்களை அவர் தனது ஆடியோ வீடியோக்கள் மூலம் உலக மக்களுக்கு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
எல்லாமே அவரது அனுபவம் சார்ந்தவையாகவும் இருப்பது அவற்றின் சிறப்பு. அவரது எல்லாக் கருத்துக்களையும், எல்லாச் செயல்பாடுகளையும் நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேபோல என் கருத்துக்களிலும் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நாங்கள் அனைவருமே உண்மை என்று உணர்ந்து கொண்டதைத்தான் எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் மக்கள் மத்தியில் பகிர்ந்துவருகிறோம்.
சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்துக்கொள்வது எப்படி என்று ஒரு நிகழ்வை அவர் நிறைவேற்ற இருந்ததை அறிந்துகொண்ட அலோபதி உலகம் தொடர்ந்து அப்படி நடக்குமானால் அது தங்களது வணிகத்தை பாதிக்கும் என்பதால் முறையான தகுதி இல்லாமல் அவர் அக்காரியத்தில் இறங்கியுள்ளதாகச் சொல்லி அவரைக் கைது செய்ய வைத்துள்ளனர்.
கைது செய்யப்படுபவர்களெல்லாம் தவறு செய்தவர்களுமல்ல. சுதந்திரமாக உலவிக்கொண்டு இருப்பவர்களெல்லாம் உத்தமர்களும் அல்ல என்பது நமக்குத் தெரியும்.
அதோடு தடுப்பூசி போடுவதைத் தடுக்கிறார்கள் என்ற குரலும் எழுந்துள்ளது. தடுப்பூசி கட்டாயமில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். தடுப்பூசி  கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு பிறந்த குழந்தைகளெல்லாம், நம் தாத்தா பாட்டிகளெல்லாம், நம்மைவிட ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதுதான் நிஜம். போகட்டும்.
கைது செய்யத் தூண்டியவர்கள் அல்லது அதன் பின்னால் இருந்தவர்கள் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்ததால் ஏற்பட்ட ஒரு சில மரணங்களைக் காரணம் / உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில் எத்தனையோ பிரசவ மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. அதற்காக எந்த மருத்துவரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லையே?! ‘அம்மாவையோ அல்லது குழந்தையையோ, இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும்’ என்று எத்தனை திரைப்படங்களில் சீரியல்களில் நாம் ’டயலாக்’கைக் கேட்டிருக்கிறோம்!
வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் அதற்காக அப்படிச் செய்வது குற்றம் என்று என்னால் சொல்லமுடியவில்லை. அவசர காலத்தில் இன்றைய ஆங்கில மருத்துவ உலகத்தின் உதவி உயிரைக் காப்பாற்றக் கூடியதாக உள்ளதை  நான் மறுக்கவில்லை. எல்லா விஷயங்களைப் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே ஒருவர் ஆங்கில மருத்துவ உதவியை நாடாமல் இருக்க முடியும். ஒரு குழந்தை சீரியஸான நிலையில் இருக்கும்போது ஒரு ஹீலரை அழைத்து ’டச்’ கொடுக்கலாம் என்று எந்த தாயும் / தகப்பனும் நினைக்க முடியாது.
ஒரேயடியாக ஆங்கில மருத்துவ உலகின் உதவி தேவையே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் மாத்திரை மருந்துகள் ஊசிகள் அறுவை சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை என்பதுதான் என் கருத்தும்.
ஆங்கில மருத்துவம் தோன்றாத, வளராத ஒரு காலகட்டம் இருந்தது. அதில் வாழ்ந்தவர்களெல்லாம் நம்மை விட ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். மருந்து மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்கள் உடலுக்கு நன்மை செய்வதே இல்லை, மாறாகப் பெரும் தீங்கைத்தான் விளைவிக்கின்றன என்று உலகப்புகழ் பெற்ற மருத்துவர்களான  டாக்டர் பி.எம்.ஹெக்டே, டாக்டர் தீபக் சோப்ரா போன்றவர்களே விலாவாரியாகப் பேசியும் எழுதியும் உள்ளனர்.
ஐந்து ஆண்டுகள் ஆங்கில மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு ஒரு ஆண்டு மருத்துவமனை அனுபவம் பெற்றுவிட்டால் மனித உடலை முற்றிலுமாக அறிந்துவிட்ட ஒரு மருத்துவ ஞானியாக, ஒரு ஹிப்பாக்கிரேடஸாக, ஒரு இப்னு சீனாவாக யாரும் மாறிவிடுவதில்லை. மாறாக நமக்கு மருந்துகளைக் கொடுத்து பரிசோதித்து பரிசோதித்துத்தான் அவர்கள் அனுபவம் பெறுகிறார்கள்! இதுதான் நிதர்சனம்.
எனவே ஹீலர் பாஸ்கரை கைது செய்ய வைத்தது தொழில் ரீதியான பொறாமையின் விளையேயன்றி வேறில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஹீலர்கள் வந்துவிட்டார்கள். டாக்டர் என்று சொல்லப்படுவதையே வெறுப்பதனால்தான் அவர்கள் தங்களை ஹீலர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்!
மனசாட்சியும் விபரமும் தெரிந்த மனிதர்கள் ஹீலர் பாஸ்கருக்கு உதவட்டும். அவர் விரைவில் வெளிவந்து தன் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.