Friday, 6 January 2012

நிறம் மா(ற்)றும் பதிவுலகம்!


Thanks to Brother Ghulam 

ஓரிறையின் நற்பெயரால்

இணைய வாசிப்பை தாண்டி., இணையத்தில் தம் வசிப்பை உறுதியாக்கும் நோக்குடனே பதிவுலகில் கரம் பதிந்தவர்கள் நம்மில் அதிகம்! நாம் சார்ந்த ஒரு கொள்கை கோட்பாடுகளை முன்னிருத்தியோ அதுவல்லாத மக்கள் பயன்பெறும் ஆக்கங்களையோ குறைந்தபட்சம் வெறும் பொழுதுப்போக்கான செய்திகளை வெளியிட்டோ நமது இருப்பை இணைய வாழ் உள்ளங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

குறிப்பாக சமூகம் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் தங்கள் வலைத்தளங்களை பலர் தொடங்கினாலும் இஸ்லாம் பணிக்கும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் விசயங்களில் இஸ்லாமிய பதிவர்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே பொதுவான பிற சமயம் சார்ந்த/சாரா பதிவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை அசைப்போடுவதற்காகவே இப்பதிவு...  
இஸ்லாமிய பதிவர்கள் குறித்து பரவலாக சொல்லப்படும் இரு குற்றச்சாட்டுகள்,

(1) அவர்கள் கொண்ட மதமான இஸ்லாத்தை பெரிதுப்படுத்தியும் அவர்களின் கடவுளான அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தியும் எந்த ஒரு சின்ன விசயமானாலும் சொல்கிறார்கள்.

(2) நன்மையே செய்வதாக சொல்லிக்கொண்டே தீமை ஏற்படுத்தும் விசயங்களையும் பதிவிடுகிறார்கள்

  • ஒன்று., இஸ்லாமிய பதிவர்களின் மீது தவறு
  • மற்றொன்று இஸ்லாமிய பதிவர்களின் தவறு

அதற்கு முன்பாக...

நாம் பின்பற்றும் ஒரு கொள்கையானது அது எல்லா நிலையிலும், எல்லா காலங்களிலும் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். அஃதில்லாமல் சில நேரங்களில் மட்டுமே அக்கொள்கையின் நிலைப்பாடுகளை பின்பற்றி ஏனைய காலங்களில் நமது எண்ணத்தின் படி நமது வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் என இருந்தால் நாம் பின்பற்றும் அந்த கொள்கை முழுமையானதல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட விதிமுறை, கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வாழ எத்தனிக்கும் எல்லா மதங்களுக்கும், மதம் சாரா இயக்கங்களுக்கும் பொருந்தும். மதங்களோ அல்லது வேறு கோட்பாடுகளோ மனித வாழ்வை சீர் செய்யவே உருவானதாக கூறினால் அதன் தலையீடு மனிதனின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்.

நம் வாழ்வில் எல்லா நிலைக்கும் வழிகாட்டுதலை நாம் பின்பற்றும் கொள்கை வகுக்கவில்லையென்றால் அதை எப்படி முழுமைப்பெற்ற ஒரு கோட்பாடாக சொல்ல முடியும்...?

முழுமைப்பெற்ற தொகுப்பாக இஸ்லாம் இருப்பதால் ஒரு முஸ்லிமின் எல்லா செயல்களிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. காலையில் எழுந்து கழிவறை செல்வதிலிருந்து உண்டு, உழைத்து, உறங்க செல்லும் வரை இறைவனின் நெறிமுறைகள் அவன் தூதரின் வழிமுறையில் ஒரு முஸ்லிமீன் வாழ்வில் எல்லா நிலைகளிலும் அங்கம் வகிக்கிறது.

அப்படியிருக்க உலகத்தில் எங்கிருந்தாலும் வாழும் நிலைக்கு தோதான வாழ்வியல் நெறிகளை பின்பற்றும் இஸ்லாத்தையும், ஏற்படுத்தி தந்த அல்லாஹ்வையும் எந்த இடத்திலும் நினைவு கூற என்ன தயக்கம்? அதற்கு இணையம் மட்டுமென்ன விதிவிலக்கா?

நீங்க பின்பற்றுவதோட இருக்க வேண்டியது தானே.. மற்றவர்களையும் ஏன் இங்கே வா இங்கே வானு கூப்பிடுறீங்க? - படிக்கும் உங்களில் ஒருசிலர் இப்படி கேட்கலாம்.

அழைக்கிறோம் சரிதான்..

எதற்கு?

இங்கே வந்தா நாலு பொண்டாட்டி கட்டிகிட்டு ஜாலியா வாழ்க்கைய நடத்தலாம் அப்படின்னா.? 

  • ஏனைய மதங்கள் இப்படி வாழுங்கள் என்று சொல்லும் போது இஸ்லாம் மட்டுமே எப்படி வாழக்கூடாதென்றும் சொன்னது.
  • ஏனைய கோட்பாடுகள் உழையுங்கள் என்று சொன்னபோது போது இஸ்லாம் மட்டுமே வட்டி வாங்கி உண்ணாதீர்கள் என்றது.

அதுமட்டுமா...

  • இந்த சமூகம் முறையற்ற உறவுக்கு பாதுக்காப்பு அவசியம் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கும்போது விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
  • அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்கி அருந்துங்கள் என்ற போது அல்கஹாலுடனான இறை வணக்கத்தால் எந்த பயனும் இல்லையென்று அறைகூவலிடுகிறது.

அரேபிய பாலையில் தொடரப்பட்ட அந்த இஸ்லாம் இங்குள்ள பாமர மக்களிலும் வாழ்விலும் படர என்ன காரணம்?
சிந்திக்க வேண்டும் சகோ..!

இனத்தால் அடையாளப்படுத்தினால்...
பிறிதொரு நிலப்பரப்பில் வேற்றினம் நாம்

மொழியால் அடையாளப்படுத்தினால்...
பிராந்திய மொழிகளுக்கு வேற்றாள் நாம்

எல்லைகளால் அடையாளப்படுத்தினால்
அயல் நாட்டிற்கு அந்நியம் நாம்

இப்படி எங்காவது ஒரு இடத்தில் முற்றுகையிடப்படும் அடையாளங்களை வைத்துக்கொண்டு எப்படி உலகளாவிய சகோதரத்துவத்தை அடைய முடியும்???

இப்படி இனம், மொழி, எல்லை கடந்து அனைவரையும் ஒரே அணியில் மட்டுமே நிற்க செய்யும் அந்த தூய மார்க்கத்தின்பால் மக்களை அழைப்பதில் என்ன தவறை கண்டு வீட்டீர்கள் சகோ..?

உங்கள் மீதும் உண்மையில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என்பதற்காக அழைக்கும் அந்த அழைப்பை தவறென்று சொல்கிறீர்களா...? உங்கள் பார்வையில் இது தவறென்றால் நிச்சயமாக அதே தவறுகள் இனியும் தொடரத்தான் செய்யும் .....
* * * 
இஸ்லாமிய பதிவர்களுக்கு இந்நேரத்தில் ஒரு ...

  • கோரிக்கை - 
  • அறிவிப்பு 
  • வேண்டுகோள் - அல்லது
  • எச்சரிக்கை 

 (படித்த பிறகு உங்கள் மன நிலைக்கு தகுந்த ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்)

தனிமனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் போன்றவற்றை மையமாகக்கொண்டு இங்கு எத்தனையோ இஸ்லாமிய பதிவர்கள் ஆக்கத்தை ஒருபுறம் எழுதி வந்தாலும் மறுபுறம் அனேக அபத்தங்கள் நிறைந்த ஆக்கங்கள் வலம் வரத்தான் செய்கின்றன இஸ்லாமிய பதிவர்கள் சிலரின் பெயர்களில்...

ஏனைய பதிவர்கள் தேவையற்ற அருவறுக்கதக்க பதிவிடும் போது வரும் எதிர்மறை பின்னூட்டத்தை விட இஸ்லாமிய பதிவர்கள் வெளியிடும் அத்தகைய நெருடல் பதிவுகளுக்கு வரும் கண்டனங்கள் மிக அதிகம். இது தான் இச்சமூகம் இஸ்லாம் மீது வைத்திருக்கும் கண்ணியத்தின் அடையாளம்.

வீண், கொச்சை பதிவுகளை பதிவிடுவதால் ஒருவேளை மக்களில் ஒரு பகுதினரிடம் வேண்டுமானால் பிரபலம் அடையலாம். ஆனால் நடுநிலை மக்களின் பார்வையில் தங்களின் தரம் தாழ்ந்து போவதோடு இஸ்லாம் மீதான அதிருப்தியையும் அத்தகைய பதிவுகள் ஏற்படுத்தும்.

ஏனெனில் இஸ்லாம் அங்கீகரிக்காத செயல்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகளாக பதிவிடும் போது அங்கு நமது பெயர் மறையப்பட்டு முதல் நிலையில் வைத்து இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது. அடுத்தவர் இஸ்லாம் குறித்து வசைப்பாடும் போது அதை விளக்கி பதிவிட முடியாவிட்டால் கூட பரவாயில்லை. மட்டமான, ஆபாசமான செய்திகளை பதிவிட்டு இஸ்லாத்தை கேவலப்படுத்தாதீர்கள்!

நம் எழுத்துகளால் ஆயிரம் பேர்கள் நன்மையை நோக்கி வராவிட்டால் கூட நமக்கு ஒரு பாதகமும் இல்லை. மாறாக ஒருவர் தீமை நோக்கி செல்ல நமது எழுத்துக்கள் காரணமாகின் நிச்சயமாக அதற்கு இறைவனிடத்தில் நாம் பதில் சொல்லியாக வேண்டும்!

மஸ்ஜிதுகளின் வாசலோடு மார்க்கத்தை நிறுத்திவிட்டு மாற்று எண்ணங்களோடு எதையும் செய்வதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. அது இணையமாக இருந்தாலும் சரியே! ஏனையவைகளை போல இறைவன் நமக்களித்த அமானிதம் இணையம். அத்தகைய அமானிதம் குறித்தும் நாளை நாம் வினவப்படுவோம் என்பதை மறந்து விட வேண்டாம்!

டிஸ்கி: இது எதிர்ப்பதிவு / உள்குத்து பதிவோ அல்ல.. இணையத்தில் இஸ்லாமிய பதிவர்கள் குறித்த என் பார்வையும், ஏனையவர்கள் குறித்த இஸ்லாமிய பதிவர்கள் பார்வையின் விளைவே இவ்வாக்கம். மார்க்கத்திற்கு புறம்பான வகையில் இத்தளத்தில் ஆக்கங்கள் இருந்தால் சுட்டிக்காட்டவும். இன்ஷா அல்லாஹ் நீக்கி விடுகிறேன்.

அப்புறம் ஒரு விசயம்
மைனஸ் வோட்டு போடுவதாக இருந்தால் ஒருவரியில் காரணத்தை சொல்லிவிட்டு தாரளமாக போட்டுக்கொள்ளவும்.
  

                                                          அல்லாஹ் நன்கு அறிந்தவன்

Brother Ashik Ahmed Comments 

Aashiq Ahamed said...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் குலாம்...

அல்ஹம்துலில்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்...மிக அருமையான விளக்கங்கள் மற்றும் சுய பரிசோதனை கேள்விகள். உங்களின் பல பாய்ன்ட்கள் நான் எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது.

இஸ்லாம் குறித்து அடுத்தவருக்கு எடுத்து கூறுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. ஒரு குர்ஆன் வசனேமேனும் தெளிவாக தெரிந்தால் அதனை அவர்கள் அடுத்தவருக்கு ஏத்தி வைக்க வேண்டும். அதேநேரம் வற்புறுத்தலோ, திணித்தலோ இஸ்லாம் தடுத்த ஒன்றாகும். நாயகம் (ஸல்) அவர்களுக்கே அடுத்தவரை வற்புறுத்தும் உரிமையை இறைவன் கொடுக்கவில்லை. விரும்புவர்கள் ஏற்கட்டும், விரும்புபவர்கள் புறக்கணிகட்டும்.

நம் அழைப்பு பணியை யாரேனும் விடச் சொன்னால், அல்லது விமர்சித்தால் அது எத்தகைய விளைவுகளையும் நம்மிடையே ஏற்படுத்த போவதில்லை. மறுமையில் பதில் சொல்ல வேண்டியது நாம் தான். அடிப்படைவாதி என்றோ மிதவாதி என்றோ அழைத்தாலும் அதனை பெரிதுபடுத்தவோ, சட்டை செய்யப்போவதில்லை நாம்.

இஸ்லாம் சொன்னபடி வாழ்ந்தோமா, நன்மைகளை செய்தோமா என்று போய்க்கொண்டே இருப்போம்.

முஸ்லிம் பதிவர்கள் இஸ்லாம் என்னும் அளவுகோலை கொண்டு நம் பதிவுகளை எடைப்போட்டு கொள்வோம். அப்படி செய்வோமானால் நம் பதிவுகள் தரமானதாக, சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

முஸ்லிம் பதிவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் செயல்படவும், இஸ்லாம் சொல்லாத செயல்களில் ஈடுபடுபவர்கள் இறைவனுக்கு அஞ்சி தங்கள் தவறான வழிமுறைகளை திருத்திக்கொள்ளவும் பிரார்த்திக்கின்றேன்.

வஸ்ஸலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
January 5, 2012 12:14 PM

1 comment:

  1. ஏனைய பதிவர்கள் தேவையற்ற அருவறுக்கதக்க பதிவிடும் போது வரும் எதிர்மறை பின்னூட்டத்தை விட இஸ்லாமிய பதிவர்கள் வெளியிடும் அத்தகைய நெருடல் பதிவுகளுக்கு வரும் கண்டனங்கள் மிக அதிகம். இது தான் இச்சமூகம் இஸ்லாம் மீது வைத்திருக்கும் கண்ணியத்தின் அடையாளம்.


    நம் எழுத்துகளால் ஆயிரம் பேர்கள் நன்மையை நோக்கி வராவிட்டால் கூட நமக்கு ஒரு பாதகமும் இல்லை. மாறாக ஒருவர் தீமை நோக்கி செல்ல நமது எழுத்துக்கள் காரணமாகின் நிச்சயமாக அதற்கு இறைவனிடத்தில் நாம் பதில் சொல்லியாக வேண்டும்!

    சமூகத்திற்கு தேவையான பதிவு.
    முஸ்லிமான எல்லோருக்கும் குரான்,ஹதீஸ்
    படி வாழ ஆசைதான்.சூழ்நிலையும்,
    சந்தர்ப்பமும்,மன இச்சைப்படி மனிதனை
    மாற்றி விடுகிறது.

    ReplyDelete