Saturday, 3 December 2016

மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்படுவதாக புகார்: மத்திய அரசுக்கு எதிராக மம்தா போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டது ஏன், ராணுவப் புரட்சி நடக்கப்போகிறதா?’ என பகீர் கேள்விகளை எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராணுவத்தினர் அப்புறப் படுத்தப்படும் வரை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற மாட்டேன் வெளியேற மாட்டேன் எனக் கூறி, 30 மணி நேரம் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்திய மம்தா, வியாழன் இரவு முழுவதும் மாநில தலைமைச் செயலகத்திலேயே தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘முர்ஷிதாபாத், ஜல்பாய்குரி, டார்ஜிலிங், வடக்கு 24 பர்கானாஸ், புர்துவான், ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட இடங்களில் மொத்தம், 19 சோதனைச் சாவடி களில் ராணுவத்தினர் நிறுத்தப்பட் டுள்ளனர்.

மாநில அரசின் அனுமதி பெறாமல் ராணுவம் எப்படி அங்கு நிறுத்தப்பட முடியும்? இதற்கு முன் இப்படியொரு சம்பவம் நடந்த தில்லை. இது மிக தீவிரமான பிரச்சினை. இதென்ன ராணுவப் புரட்சியா? இங்கிருந்து ராணுவம் அகற்றப்படும் வரை, தலைமைச் செயலகத்தில் இருந்து நான் வெளியே வர மாட்டேன்’ எனக் கூறினார்.

இதற்கு ராணுவம் தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப் பட்டது. ‘எதிர்பாராத நெருக்கடி சமயங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவத் துக்கு சரக்கு வாகனங்களை அனுப் புவதற்காக, நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து தொடர்பான புள்ளியியல் விவரங்களைச் சேகரிக்கும் பணியை ராணுவம் மேற்கொள்கிறது.

இது, மேற்கு வங்க மாநிலத் தில் மட்டும் நடக்கும் விஷயமோ, இந்தாண்டு புதிதாக தொடங்கிய வழக்கமோ அல்ல. ஆண்டுக்கு இருமுறை என, 10 ஆண்டுக்கும் மேலாக நடக்கிறது. கடந்த ஆண்டு கூட, நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. மேற்கு வங்கம் மட்டுமின்றி மேலும்சில மாநிலங் களிலும் இந்த பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கமான ராணுவப் பயிற்சி நடவடிக்கை தான் இது. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. முறை யான அரசு உத்தரவுப்படி, மேற்கு வங்க மாநில போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ஒத்துழைப்புடனே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இதனை திரிணமூல் காங்கிரஸ் மறுத்தது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் கூறும்போது, ‘‘போலீஸுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறுவது தவறான தகவல். புள்ளிவிவரம் ஏற்கெனவே கைவசம் உள்ளது. வாகன சோதனையை மேற் கொள்ள ராணுவத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பல மாவட்டங்களில் நள்ளிரவுக்குப் பிறகும் ராணுவம் நகர்த்தப்பட்டது’’ என்றார்.

மம்தா பானர்ஜியின் போராட்டம் காரணமாக, மேற்குவங்க தலை மைச் செயலகம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் இருந்து ராணுவத்தினர் அகற்றப்பட்டனர். எனினும், நேற்றைய தினமும் தலை மைச் செயலகத்தில் இருந்து மம்தா வெளியேறாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து இவ்விவகாரத்தைக் கையாள திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இதுகுறித்து புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச் சினை எழுப்பினர். அதோடு, கொல் கத்தாவில் ஆளுநர் மாளிகைக்கு வெளியேயும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்துக்குப் பிறகு நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய மம்தா, ‘மத்திய அரசு எங்களை நசுக்கப் பார்க்கிறது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்’ என்றார்.

பண மதிப்பு நீக்க உத்தரவால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பு: கோவை தொழில் துறையினர் கவலை

பண மதிப்பு நீக்கத்தால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிக்கிறோம். எனவே, பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் வனிதா மோகன், கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத் தலைவர் வி.சுந்தரம் மற்றும் 51 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஏறத் தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு பெரும்பாலும் மாத மற்றும் வாரச் சம்பளம் ரொக்கமாகத்தான் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவால், கடந்த மாதமே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் பரிதவித்தோம். இந்த மாதம் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. மேலும், தொழிலுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப் பாகங்களை வாங்கக் கூட பணமில்லை. இதனால், உற்பத்தி 30 முதல் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொழில் துறை நிலைகுலைந்துள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாணாவிட்டால், தொழில் துறை முற்றிலுமாக நசிந்துவிடும் சூழல் உருவாகும். எனவே, வங்கிகளுக்கு போதுமான அளவுக்கு பணம் விநியோகித்து, தொழில் துறையினருக்கு வழங்கவும், ஏடிஎம்-களில் போதுமான அளவு பணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் இருந்து பணம் பெறும் அளவை உயர்த்த வேண்டும்.

மேலும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்க ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதேபோல, அனைவருக்கும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் கிடைக்க, வங்கிகள் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றனர்.

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய 27 வங்கி அதிகாரிகள் பணி இடைநீக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியதாக பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய நிதிய மைச்சகம் நேற்று உறுதி செய்தது.

நாடு முழுவதும் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை யடுத்து தொழில் அதிபர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தங்களிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை குறுக்கு வழியில் மாற்ற முயன்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது.

அண்மையில் சென்னை பெசன்ட் நகரில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி கிளை மேலாளர் லோகேஷ்வர ராவ், ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் முகேஷ் உள்ளிட்ட 5 பேர் கமிஷன் தொகை பெறுவதற்காக தொழில் அதிபர்களின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கறுப்புப் பணத்தை சட்டவிரோதமாக மாற்ற முயன்றதாக கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவில் ரூ.5.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை இரு தொழிலதிபர்களிடம் இருந்து வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்காக ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆந்திராவின் ஏலூரில் ரூ.19 லட்சமும் கிருஷ்ணா மாவட்டம் பெத்தனபல்லியில் ரூ.18 லட்சமும், திருப்பதியில் ரூ.1.5 கோடியும் என புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன.

தெலங்கானாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஹைதராபாத்தின் ஹிமாயத் நகரில் ரூ.94 லட்சமும், மேதக்கில் ரூ.10 லட்சமும் பிடிபட்டன. இவை அனைத்தும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டு களாக இருந்தன. இது தொடர்பாக இரு மாநிலங்களிலும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் சிலர் உதவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதே போல் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகள் வழங்கிய வங்கி மேலாளர் மற்றும் காசாளரை போலீஸார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் நடந்த இந்த மோசடிகளைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகளை களையெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இதுவரை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கறுப்புப் பணத்தை வெள்ளை யாக மாற்ற உதவிய குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் பட்டது.

பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இதுவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அதிகாரிகள் வேறு பதவி களுக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். நேர்மையான பணப் பரிவர்த்தனை நடப்பதற் கான அனைத்து நடவடிக்கை களும் முழுவீச்சில் முடுக்கிவிடப் பட்டுள்ளன. எந்த வகையிலும் மோசடி பணப் பரிமாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. இத்தகைய மோசடியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம்: விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம்

வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம்.

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பு 4.70 லட்சம் கோடி.

ஆக வெளியே இருந்தது 10.74 லட்சம் கோடி. இதில்தான் பெரும்பகுதி கருப்புப்பணம் இருக்கிறது என்று மோடியும், மோடியின் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி கருப்புப்பணம் என கணக்கிடப்பட்டது

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த 3 லட்சம் கோடியில் ஒரு லட்சம் கோடி வங்கியின் கணக்குகளுக்குள் வரும். அது குறித்து ஆராய வேண்டும். மீதி இரண்டு லட்சம் கோடியை புதைத்து விடுவார்கள், எரித்து விடுவார்கள், எதோ செய்து விடுவார்கள், வங்கிக்குள் வராது என்று உறுதியாக நம்பினார்கள். அந்த இரண்டு லட்சம் கோடியை மீட்டதாக அறிவித்து 1 கோடி குடும்பங்களுக்கு தலா இருபதாயிரமாகவோ அல்லது 2 கோடி குடும்பங்களுக்கு தலா பத்தாயிரமாகவோ கொடுத்து, பணக்காரர்களிடம் இருந்து பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்ததாய் ஒரு சினிமா காட்டலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது.

ஆனால் மக்கள் இந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று வரை, வங்கிகளுக்குள் 500 , 1000 ருபாய் நோட்டுகளின் மூலமாக வந்தது 8.5 லட்சம் கோடி. அதாவது வரவேண்டியிருந்த 10.74 லட்சம் கோடியில் இன்னும் 2.24 லட்சம் கோடிதான் வர வேண்டும். இன்னும் முழுசாக 28 நாட்கள் இருக்கின்றன. அதுவும் வந்து விடும். அதற்கு மேலும் வந்து விடும்.

கணக்கிடப்பட்டு இருக்கும் புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம் வந்தால் என்ன அர்த்தம். கண்டுபிடிக்க முடியாதபடி கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. அது அரசுக்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் மோடியின் திட்டம் அம்பேலாகிறது. எனவே தான், ஜந்தன் கணக்குகளில் பணம் கட்டப்படுவதற்கும் எடுப்பதற்கும் இப்போது கெடுபிடிகள் விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பே exchange கிடையாது என்று சொல்லப்படுகிறது. இன்று முதல் 500 ருபாய் நோட்டுகள் பெட்ரோல் பம்ப்பிலும் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. மோடியின் திட்டத்தை காப்பாற்ற ரிசர்வ் வங்கி நாளெல்லாம் மூளையைக் கசக்கிக் கொண்டு இருக்கிறது. கருப்புப்பணம் மட்டும் நோக்கமல்ல, cashless economy தான் எதிர்காலம் என போகாத ஊருக்கு வழி காட்டி திசை திருப்பும் நாடகமும் அரங்கேறுகிறது.

ஒரு பாசிச கோமாளியின் முட்டாள்தனத்தால் மொத்த நாட்டிற்கும் பைத்தியம் பிடித்ததும், மக்களை பிச்சைக்காரர்களை போல ரோட்டில் நிறுத்தியதும் தான் மிச்சம். இதனால் ஏற்படும் பாதிப்புகளை யோசித்தால் அது பெரும் பயங்கரமாய் இருக்கிறது.

மாதவராஜ், எழுத்தாளர்;  தொழிற்சங்க செயல்பாட்டாளர்.