Saturday, 3 December 2016

பண மதிப்பு நீக்க உத்தரவால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பு: கோவை தொழில் துறையினர் கவலை

பண மதிப்பு நீக்கத்தால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிக்கிறோம். எனவே, பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் வனிதா மோகன், கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத் தலைவர் வி.சுந்தரம் மற்றும் 51 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஏறத் தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு பெரும்பாலும் மாத மற்றும் வாரச் சம்பளம் ரொக்கமாகத்தான் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவால், கடந்த மாதமே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் பரிதவித்தோம். இந்த மாதம் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. மேலும், தொழிலுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப் பாகங்களை வாங்கக் கூட பணமில்லை. இதனால், உற்பத்தி 30 முதல் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொழில் துறை நிலைகுலைந்துள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாணாவிட்டால், தொழில் துறை முற்றிலுமாக நசிந்துவிடும் சூழல் உருவாகும். எனவே, வங்கிகளுக்கு போதுமான அளவுக்கு பணம் விநியோகித்து, தொழில் துறையினருக்கு வழங்கவும், ஏடிஎம்-களில் போதுமான அளவு பணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் இருந்து பணம் பெறும் அளவை உயர்த்த வேண்டும்.

மேலும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்க ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதேபோல, அனைவருக்கும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் கிடைக்க, வங்கிகள் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment