நன்னாரி ( மூலிகை ) வேர்
நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.

இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.
இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.