Thursday, 13 December 2018

எண்ணிக்கையை விட தரமே முக்கியம்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

🌸 அறிஞர் சஅதியின் ஒரு குட்டிக்கதை!
ஒருமுறை இரு நண்பர்கள் ஒன்றாகப் பயணித்தனர். இருவரில் ஒருவர் குறைவாக உணவருந்தி மெலிந்திருந்தார். இன்னொருவர் அதிகமாக உணவருந்தி கொழுத்திருந்தார்.
பயண இடையில் அவர்கள் 'உளவாளிகள்' என்று குற்றம் சுமத்தப்பட்டு, கைதாகி வெவ்வேறு சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, விடுதலைக்கான உத்தரவு வந்தது.
சிறைக்கதவு திறக்கப்பட்டபோது, மெலிந்தவர் உயிரோடிருந்தார். கொழுத்தவர் இறந்து கிடந்தார். இது கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். மக்கள் ஆச்சர்யம் குறித்து கேள்விப்பட்ட அறிஞர் ஒருவர், 'சரியாகவே நடந்துள்ளது. மாறி நடந்திருந்தால்
தான் ஆச்சரியம்' என்று சுருக்கமாகக் கூறினார். மக்களுக்கு விளங்கவில்லை. அறிஞர் விளக்கினார் இப்படி :
'அதிகம் உண்டு பழகியவன் பசி தாங்காமல் இறந்துவிட்டான். அளவோடு உண்டு பழகியவன் பசியைச் சமாளிக்கும் திறன்பெற்று உயிர் பிழைத்தான்.'
🌸 குர்ஆன் கூறும் ஒரு பழங்கால வரலாறு!
இஸ்ரவேலர்களது மன்னர் தாலூத் பல்லாயிரக் கணக்கான படை வீரர்களுடன் பைத்துல் முகத்திலிருந்து போருக்கு ஆள் திரட்டும்போது முதியோர், நோயாளிகள் தவிர எல்லாரும் படையில் இணைந்தனர்.
அப்போது தாலூத் அவர்களை நோக்கி, 'நீங்கள் எல்லாரும் புறப்பட வேண்டாம்.
• புதுவீடு கட்டிக்கொண்டிருப்பவர்
• புதிதாக திருமணமுடித்தவர்
• தொழிலே கதியென்று கிடப்பவர்
• கடன் சுமையால் சிரமப்படுபவர்
இவர்கள் என்னுடன் வரவேண்டாம். நிதானமானச் செயல்படும் உள உறுதி கொண்ட இளைஞர்கள் என்னுடன் வரட்டும்.' என்றார்.
அது கடுமையான வெயில்காலம். தண்ணீர் தேவை குறித்து படைவீரர்கள் தாலூத்திடம் முறையிட்டபோது, வழியில் ஓர் ஆறு வரும். அந்த ஆற்றின் மூலம் இறைவன் உங்களைச் சோதிப்பான்.
அதில் குறைவாக நீர் அருந்தி, மன நிறைவு பெற்றவர் என்னைப் பின்பற்றியவர். அளவுக்கு அதிகமாக நீர் அருந்தி பேராசை கொண்டவர் என்னைப் பின்பற்றியவர் அல்லர் என்று கூறினார்.
ஆனால், ஆற்றருகே படையினர் வந்தபோது எண்பதாயிரம் பேர்களில் வெறும் முன்னூற்றுப் பதி மூன்று பேர்தான் தாலூத்தின் சொல்படி குறைவாக நீரருந்தினர். ஏனையோர் அதை மீறி நடந்தனர்.
பத்ரில் கலந்துகொண்ட வீரர்களின் எண்ணிக்கையான முன்னூற்றுப் பதிமூன்று பேரே, தாலூத்துடன் ஆற்றைக் கடந்தோரின் எண்ணிக்கையும் என்று பராஉ பின் ஆஜிப் (ரளி) அறிவிக்கிறார். [புகாரி]
இறை கட்டளைக்கு மாற்றமாக அதிகளவு நீரருந்தியோர் உதடுகள் காய்ந்து அதிக தாகத் துக்குள்ளாகி தளர்ச்சியடைந்தனர். அவர்களால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. எதிரிப் படையினரின் எண்ணிக்கையைக் கண்டு பயந்து 'எங்களால் போரில் கலந்துகொள்ள முடியாது' என்று கூறி ஒதுங்கிக்கொண்டனர்.
ஆனால், குறைந்த அளவு நீர் அருந்தியோருக்கு அதுவே அவர்களது தாகம் தீர்க்கப் போதுமான தாக இருந்தது. அதன்மூலம் அவர்கள் சக்தி பெற்றனர்; நம்பிக்கை பலம் பெற்றனர். எனவே உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் ஆற்றைக் கடந்தனர்.
அப்போது குறைந்த எண்ணிக்கையுடையோர் அந்த பெரும்பான்மையோரைப் பார்த்துக் கூறிய மந்திர வார்த்தைதான் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம்.
'எத்தனையோ சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை இறைவன் உதவியால் வென்றெடுத்துள்ளது. இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கி றான்.' [02 : 249]

நீ திருந்து! உலகம் திருந்தும்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

நீ திருந்து! உலகம் திருந்தும்!
'எந்தச் சமுதாயத்தவரும் தங்களிடம் உள்ள நல்லதை மாற்றிக்கொள்ளாதவரை, நிச்சயமாக இறைவனும் அவர்களுக்கு வழங்கிய எந்தவோர் அருட்கொடை யையும் மாற்றுவதில்லை.'
[குர்ஆன் : 08:53]
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாட்டினர், மொழியினர், இனத்தினர், கூட்டத்தினர், கட்சி யினர், அமைப்பினர் சிலகாலம் சுகவாழ்வின் உச்சத்தில் இருப்பர்.
ஆனால், அடுத்த சில காலகட்டத்தில் மிகக்
கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர். காரணம்? அவர்கள் தங்களது வாழ்க்கையில் முறைதவறி நடந்திருப்பர். அதுவே அவர்களது இழிநிலைக்குக் காரணம்.
ஒருவன் நாடாளும் தகுதி பெற்று மிகப்பெரும் பதவியில் அமர்த்தப்படுவான். மீடியாக்கள் அவனைத் தூக்கோ தூக்கென்று தூக்கி புகழின் உச்சாணிக்கொப்பில் வைக்கும்.
ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் திடீரென கீழே இறக்கப்பட்டுவிடுவான். காரணம்? அவன் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தேசமக்களுக்கு அநீதியிழைத்தி ருப்பான்.
ஒருவன் தனது இனிய வாதத்திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருப்பான். மக்கள் அவனை 'ஓஹோ' என்று புகழ்ந்து மகிழ்வார்கள்.
ஆனால் திடீரென பார்த்தால், அதேமக்களால் தூற்றப்பட்டு தூக்கி எறியப்பட்டிருப்பான். காரணம்? அவன் வெளியே ஒரு வேஷமும் உள்ளே விஷமமும் பண்ணி தனது மரியாதையை இழந்திருப்பான்.
ஃபிர்அவ்னின் சமூகத்தவருக்கு இறைவன் உலகில் யாருக்கும் வழங்கிடாத பல்வேறு வகை அருட்கொடைகளை வழங்கினான். ஆனால், அவர்களது பாவங்கள் காரணமாக அவர்களுக்கு, தான் வழங்கியிருந்த சுக போகங்களை அவர்களிடமிருந்து அவன் பறித்துக்கொண்டான்.
ஆக இறைவன், தான் வழங்கிய ஓர் அருளை அநி யாயமாகப் பறிப்பதில்லை. மனிதர்கள் இறை வனுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வ தன் மூலமே அதை இழந்துவிடுவார்கள்.
இதேபோல்தான் தீயவன் நல்லவனாவதும் உள்ளது. ஒருவன் தனது தவறுகளை உணர்ந்து தன்னைத்தானே திருத்திக்கொள்ளும்போது இறைவனும் அவன்மீது தனது அருளைப் பொழிவான்.

🌸 பாடமும் படிப்பினையும்
தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் இந்த உலகமும் நிச்சயம் சரியாகும்..!
'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரை, நிச்சயமாக இறைவன் அவர்களை மாற்றுவதில்லை.' [குர்ஆன் 13 : 11]

🌸 செலவின்றி சிறுநீர் பிரிதல்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

அளவற்ற அருட்கொடைகள்!
மனிதர்களாகிய நமக்கு இறைவன் வழங்கியுள்ள அருட்கொடைகள் எண்ணிலடங்காதவை. இதோ சில உதாரணங்கள் :
🌸 செலவின்றி சிறுநீர் பிரிதல்!
சரியாக சிறுநீர் வெளியேறாமல் வயதான ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேறுவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு சிறுநீர் வெளியேற்றப் படுகிறது.
சில நாட்களுக்குப்பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப் படுகிறார். அவருக்கு செய்யப்பட மருத்துவத்துக் காக பில் தரப்படுகிறது. அதைப் பார்த்துவிட்டு முதியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள். இதைக் கண்ட மருத்துவர்கள், 'ஏன் பெரியவரே அழுகிறீர்கள்' என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார்.
அருகிலிருந்த உறவினர்கள் மீண்டும் கேட்க, கண் களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார் : 'நான் என்னிடம் தரப்பட்ட மருத்துவ செலவைப் பார்த்து அழுகின்றேன் என்று யாரும் தவறாக எண்ணி விடவேண்டாம்,
இரு நாள்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு தொகை பணம் கேட்கின்றீர் களே! ஆனால், அருளும் அன்புமுடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறிதும் சிரமமின்றி சிறுநீர் வெளியாக்கியதற்காக இதுவரை என்னிடம் ஒரு நயா பைசாகூட கேட்டு பில் அனுப்பவில்லையே, என்று எனது இறைவ னின் அருளை நினைத்து அழுகின்றேன்!' என்றார்.

வாழ்க்கை - தேர்வு

Life
A little hard test
Many have failed because of Copying People someone                                                                           Does not know the unique question.