Thursday, 13 December 2018

நீ திருந்து! உலகம் திருந்தும்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

நீ திருந்து! உலகம் திருந்தும்!
'எந்தச் சமுதாயத்தவரும் தங்களிடம் உள்ள நல்லதை மாற்றிக்கொள்ளாதவரை, நிச்சயமாக இறைவனும் அவர்களுக்கு வழங்கிய எந்தவோர் அருட்கொடை யையும் மாற்றுவதில்லை.'
[குர்ஆன் : 08:53]
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாட்டினர், மொழியினர், இனத்தினர், கூட்டத்தினர், கட்சி யினர், அமைப்பினர் சிலகாலம் சுகவாழ்வின் உச்சத்தில் இருப்பர்.
ஆனால், அடுத்த சில காலகட்டத்தில் மிகக்
கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர். காரணம்? அவர்கள் தங்களது வாழ்க்கையில் முறைதவறி நடந்திருப்பர். அதுவே அவர்களது இழிநிலைக்குக் காரணம்.
ஒருவன் நாடாளும் தகுதி பெற்று மிகப்பெரும் பதவியில் அமர்த்தப்படுவான். மீடியாக்கள் அவனைத் தூக்கோ தூக்கென்று தூக்கி புகழின் உச்சாணிக்கொப்பில் வைக்கும்.
ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் திடீரென கீழே இறக்கப்பட்டுவிடுவான். காரணம்? அவன் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தேசமக்களுக்கு அநீதியிழைத்தி ருப்பான்.
ஒருவன் தனது இனிய வாதத்திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருப்பான். மக்கள் அவனை 'ஓஹோ' என்று புகழ்ந்து மகிழ்வார்கள்.
ஆனால் திடீரென பார்த்தால், அதேமக்களால் தூற்றப்பட்டு தூக்கி எறியப்பட்டிருப்பான். காரணம்? அவன் வெளியே ஒரு வேஷமும் உள்ளே விஷமமும் பண்ணி தனது மரியாதையை இழந்திருப்பான்.
ஃபிர்அவ்னின் சமூகத்தவருக்கு இறைவன் உலகில் யாருக்கும் வழங்கிடாத பல்வேறு வகை அருட்கொடைகளை வழங்கினான். ஆனால், அவர்களது பாவங்கள் காரணமாக அவர்களுக்கு, தான் வழங்கியிருந்த சுக போகங்களை அவர்களிடமிருந்து அவன் பறித்துக்கொண்டான்.
ஆக இறைவன், தான் வழங்கிய ஓர் அருளை அநி யாயமாகப் பறிப்பதில்லை. மனிதர்கள் இறை வனுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வ தன் மூலமே அதை இழந்துவிடுவார்கள்.
இதேபோல்தான் தீயவன் நல்லவனாவதும் உள்ளது. ஒருவன் தனது தவறுகளை உணர்ந்து தன்னைத்தானே திருத்திக்கொள்ளும்போது இறைவனும் அவன்மீது தனது அருளைப் பொழிவான்.

🌸 பாடமும் படிப்பினையும்
தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் இந்த உலகமும் நிச்சயம் சரியாகும்..!
'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரை, நிச்சயமாக இறைவன் அவர்களை மாற்றுவதில்லை.' [குர்ஆன் 13 : 11]

No comments:

Post a Comment