Thursday, 20 October 2011

அபுபக்கர் (ரலி)



நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபர்களில் முதல் நபர் அபூபக்கர் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லிக்கொண்டிருந்த ஆரம்ப கால கட்டத்தில் பலரும் தயங்கும்போது தைரியமாக இஸ்லாத்தை ஏற்று தன்னுடைய செல்வங்களையெல்லாம் அதை செலவழித்தவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். இதை இந்த ஹதீஸின் மூலம் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களை அல்லாஹ்வின் நேசராக்கி வைக்கிறார்கள்.


நம்மிடம் எவருடைய எந்த உதவியும் அதற்குரிய பிரதி அளிக்கப் பெறாமலில்லை. அபூபக்கர் (ரலி) அவர்களின் உதவியைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக அவர்களின் ஓர் உதவி நம்மீது இருக்கிறது. அதற்குரிய பிரதியை மறுமை நாளின்போது அல்லாஹ் அவர்களுக்கு நல்குவான். அன்றி எவருடைய பொருளும் எனக்கு அவ்வளவு பலன் தரவில்லை. அபூபக்கர்(ரலி) அவர்களுடைய பொருள் பலன் அளித்ததைப்போல, மேலும் நான் இஸ்லாத்தை தழுவுமாறு எடுத்துரைத்த பொழுது எல்லோரும் தயங்கவே செய்தனர். அபூபக்கர்(ரலி) அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்ததைத் தவிர நிச்சயமாக அவர் தயங்கவில்லை. ஒருவேளை நான் எனக்கு ஓர் ஆருயிர்த் தோழரைத் தேர்ந்தெடுப்பதானால் அபூபக்கர்(ரலி) அவர்களையே தேர்ந்தெடுப்பேன்.

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களின் தோழர் அல்லாஹ்வின் நேசராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதீ

ஒருவேளை நான் என் இறைவனைத்தவிர வேரொருவரைத் தோழராகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அபூபக்கர்(ரலி) அவர்களை தேர்ந்தெடுத்திருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதாவூத்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அபூபக்ர் (ரலி) ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஜகாத்தை கடமையை மறுத்ததன் மூலம்) இறை நிராகரிப்பாளர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர்(ரலி) தயாரானார்கள்) அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும்வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே அதனைக் கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார். அவர்களில் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர (அவருக்கு அதற்குரிய தண்டனை நிறைவேற்றப்படும்). அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஜகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்று பதிலளித்தார்கள். இதனைச் செவியுற்ற உமர் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்! அவர் கூறியதே சரியானது! என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி-1400, முஸ்லிம் 29)

இஸ்லாமிய ஆட்சியின் முதற்கலீபா ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாமியப்படை வீரர்களை போர்க் களத்திற்கு வழி அனுப்புவதற்கு முன்னால் அவ்வீரப் பெருமக்களை ஒன்று கூட்டி பின்வருமாறு உபதேசிப்பார்கள்.
1. தளபதிக்கு அடிபணியுங்கள்.

2. நீதிநெறியிலிருந்து பிறழாதீர்கள்.

3. பிறரை ஏமாற்றாதீர்கள், கொடுத்த வாக்கை மீறாதீர்கள்.

4. பெண்கள், வயோதிகர், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள், சித்திரவதை செய்யாதீர்கள்.

5. பயன்தரும் பழமரங்களை வெட்டாதீர்கள், அவற்றை எரிக்காதீர்கள், விளைநிலங்களைப் பாழ்படுத்தாதீர்கள்.

6. ஆடு, மாடு, ஒட்டகைகள் முதலான கால்நடைகளை உணவுக்கன்றி வேறு எந்த நோக்கோடும் கொல்லாதீர்கள், வதைக்காதீர்கள்.

7. லஞ்சம் வாங்கி உங்கள் கரங்களையும்,
சமுதாயத்தையும் கறைபடுத்தாதீர்கள்.

8. கோழைத்தனத்திற்கும், தோல்விமனப்பான்மைக்கும் என்றும் இரையாகாதீர்கள்.

9. ‘பிஸ்மில்லாஹ்’கூறி உங்கள் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

10. மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அன்பாலும் மென்மையான மொழிகளாலும். அழையுங்கள். காபிர்கள் மீது கருணைக் காட்டுங்கள்.





நன்றி : சகோ அப்துல் ரஹீம். திருச்சி 

No comments:

Post a Comment