4. ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுதல்
உமர் (ரலி) அவர்கள் தனக்குப் பின் வரக் கூடிய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழுவை சிபாரிசு செய்திருந்ததோடு, இவர்கள் ஆலோசனை செய்து தங்களுக்குள் ஒருவரை ஆட்சியாளராகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவரது உயிலில் எழுதி இருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள் :
அலி (ரலி)
உதுமான் (ரலி)
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)
ஜுபைர் பின் அவ்வாம் (ரலி)
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
உமர் (ரலி) அவர்கள் மரணமடைந்த மூன்று நாட்களுக்குள் இவர்கள் கலந்தாலோசனை செய்து கலீபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என அதில் நிபந்தனையும் விதித்திருந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.
இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் தமது கலீபாவைத் தேர்ந்தெடுக்க அமர்ந்த பொழுது, தல்ஹா (ரலி) அவர்கள் மதீனாவில் இல்லை, அவர் வெளியூரில் இருந்தார். எனவே, அவரால் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த ஆலோசனைக் குழு மிக நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னும் சரியானதொரு ஒருமித்த முடிவுக்க வர இயலவில்லை. எனவே, அங்கு குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு கருத்தை முன் வைக்கின்றார்கள்.
நம்மில் யாராவது ஒருவர் இந்த நியமன உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டால், அவ்வாறு விலகிக் கொள்ளக் கூடிய நபருக்கு கலீபாவை முன் மொழியக் கூடிய உரிமையை அளிப்பது என்று கூறி, யார் நம்மில் நியமன உறுப்பினர் குழுவில் இருந்து விலகிக் கொள்ள சம்மதிப்பது? என்று கேட்டார். அனைவரும் நிசப்தமாக இருந்தர். பின் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கின்றேன் என்று கூறினார்.
அலீ (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய முடிவை ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது, அலீ (ரலி) அவர்களைப் பார்த்து, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
வாக்குறுதி நீதமாக இருக்க வேண்டும்.
இரத்த உறவு முறைகளுக்காக வாக்குறுதிகள் மீறப்படக் கூடாது.
பொதுமக்களின் நலனை முன்னிட்டு, வாக்குறுதிகள் பேணப்பட வேண்டும்.
மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், நானும் உங்களது முடிவுக்கு சம்மதிக்கின்றேன் என்று அலீ (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்களின் நிபந்தனைகளை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்பொழுது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் முடிவு எவ்வாறு அமையப் போகின்றது, யாரைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அனைத்தும் இப்பொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் முடிவில் இருக்கின்றது.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், இந்த கடுமையான பணியைச் சிரமேற் கொண்டு, எடுத்துக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கடுமையாகப் பாடுபட்டார்கள். உமர் (ரலி) அவர்களின் மரணத்தை அடுத்து, முஸ்லிம் ராஜ்யத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் அடுத்து யார் நமது கலீஃபா என்ற எதிர்பார்ப்போடு இருந்தார்கள். இன்னும் அனைத்துத் தலைவர்களும் கருத்தில் கொள்ளப்பட்டு தேர்வு ஆரம்பமாகியது.
இப்பொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், தனிப்பட்ட ஒவ்வொருவரிடமும் சென்று மிக நீண்ட நேர ஆலோசனைகளை நடத்தினார். பனூ ஹாஷிம் குலத்தவர்கள் அலீ (ரலி) அவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள், இவர்களைத் தவிர மற்ற அனைவரும் உதுமான் (ரலி) அவர்களை நியமனம் செய்யுமாறு கூறினார்கள். எனவே, இப்பொழுது வேட்பாளர் குழுவில் மற்ற தலைவர்கள் அனைவரது பெயர்களும் களையப்பட்டு, உதுமான் (ரலி) மற்றும் அலீ (ரலி) ஆகிய இருவரது பெயர்களும் இறுதித் தேர்வுக்கு முன் மொழியப்பட்டன.
இப்பொழுது, இறுதித் தேர்வுக்காக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் களமிறங்கினார்கள்.
உங்களை அடுத்து, யார் இந்த கலீபா பொறுப்புக்கு மிகவும் தகுதி வாய்ந்த நபராக நீங்கள் கருதுகின்றீர்கள் என்று அலீ (ரலி) அவர்களைப் பார்த்து அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
உதுமான் (ரலி) என்று பதிலளித்தார்கள் அலீ (ரலி) அவர்கள்.
இதே கேள்வியை உதுமான் (ரலி) அவர்களிடம் சென்று கேட்ட பொழுது, அவர்கள் அலீ (ரலி) என்று பதிலளித்தார்கள்.
அன்று இரவும் வந்தது. மறுநாள் அதிகாலையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு இறுதி முடிவுக்கு வந்தார்கள். இரவு முழுவதும் உட்கர்ந்து, மற்ற நான்கு நியமன உறுப்பினர்களிடமும் கலந்தாலோசனை செய்தார்கள். இறுதியாக, தனது இறுதி ஏகமனதான முடிவை நியமன உறுப்பினர்களிடம் கொண்டு வருவதில் தோல்வியைக் கண்டார்கள். பனூ ஹாஷிம் மற்றும் பனூ உமைய்யா குலத்தவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் தலைதூக்க, ஏகமனதான முடிவுக்கு வர இயலாமல் போனது. இறுதியாக அதிகாலை பஜ்ர் தொழுகைக்கான அதான் கூறப்பட்டதுடன், அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
தொழுகையும் முடிந்தது, இப்பொழுது முழு மதீனா நகரமுமே தனது கண்களையும், காதுகளையும் கூர்தீட்டிக் கொண்டு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் என்ன கூறப் போகின்றாரோ என்ற ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தது.
அப்துர் ரஹ்மான் இப்பொழுது எழுந்து நின்றார். சில நிமிட நேரங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, தனக்கு நேர்வழி காட்டுமாறு பிரார்த்தனையும் செய்தார். பின் மக்களைப் பார்த்து,
எனதருமைச் சகோதரர்களே..!
மிகச் சிறந்த முடிவொன்றை இப்பொழுது உங்கள் முன் அறிவிக்க இருக்கின்றேன். நான் பல பேர்களிடம் இது குறித்துக் கருத்துக் கேட்டு விட்டுத் தான் இறுதி முடிவுக்கு வந்துள்ளேன். எனது முடிவில் நீங்கள் மாறுபட மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
பின் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபான் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அழைத்தார்கள். ''நீங்கள் குர்ஆனின் கட்டளைப்படியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியும், நேர்வழி பெற்ற முந்தைய கலீபாக்களின் நெறிமுறைப்படியும் ஆட்சி நடத்துவேன்””, என்ற உறுதி மொழியைத் தாருங்கள், என்று கேட்டார்கள்.
என்னால் இயன்ற வரையிலும், என்னுடைய மிகச் சிறந்த கல்வி ஞானத்தாலும் என்னுடைய வாக்குறுதியைப் பேண முயற்சி செய்வேன், என்று உறுதி கூறினார்கள் உதுமான் (ரலி) அவர்கள். அதனை அடுத்து அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களின் கரங்களில் பைஅத் என்ற சத்தியப்பிராமணம் செய்தார்கள். இவ்வாறாக, உதுமான் (ரலி) அவர்கள் மூன்றாம் கலீபாவாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.