2. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்
உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு அபுபக்கர் (ரலி) அவர்கள் தான் காரணமாக இருந்தார்கள். இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்தவர்கள். உதுமான் (ரலி) அவர்கள் பனூ உமைய்யா குலத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு குலங்களும் மிக நீண்ட காலமாக பரம வைரிகளாக இருந்து வருபவர்கள். எனினும், இவை யாவும் உதுமான் (ரலி) அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதனின்றும் தடுத்து விடவில்லை, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளான ருக்கையா (ரலி) அவர்களை உதுமான் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.
உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, அவர்களது குலத்தவர்களின் கடும் பகையைச் சம்பாதிக்க வேண்டி வந்தது. இவரது மாமாவான ஹகம், உதுமான் (ரலி) அவர்களின் கைகளையும், காலையும் கட்டிப் போட்டு வீட்டில் இருட்டுச் சிறையில் அடைத்து வைத்தார். மற்ற நபித்தோழர்களைப் போலவே உதுமான் (ரலி) அவர்களும் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளான போதிலும், இஸ்லாத்தை விட்டு விடவில்லை. உதுமான் (ரலி) அவர்களை மிகவும் விரும்பிய அந்தக் குறைஷிகள் தான் இப்பொழுது வெறுக்க ஆரம்பித்தார்கள். அவரது சொந்தக் குலத்தவர்களே அவரைக் கைவிட்டு விட்டனர். இது அவர்களை மிகவும் பாதித்தது. இந்த நிலையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்ல, உதுமான் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அந்த முதல் ஹிஜ்ரத் தில் தங்களது வீட்டையும், நாட்டையும், சொந்த பந்தங்களையும் விட்டு விட்டு, புதிய நாட்டுக்கு இடம் பெயர்ந்து, இறைவனுடைய திருப்பொருத்தத்திற்காக நாடு துறந்து சென்ற முஸ்லிம்களின் குழுவில் உதுமான் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
இன்னும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் நடைபெற்ற பொழுதும், மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனாவில் சென்று தங்கினர்.
No comments:
Post a Comment