Friday, 4 August 2023

உதுமான் பின் அஃப்பான் (ரலி) வாழ்க்கை வரலாறு

 


1. ஆரம்ப கால வாழ்க்கை

''இந்தத் தம்பதிகளுக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்கட்டும்!”” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வாழ்த்துப் பெற்றவர்கள் உதுமான் (ரலி) அவர்கள். தம்பதியர்களிலேயே, இஸ்லாத்திற்காக தங்களது வாழ்வின் சுகங்களை அற்பணித்தவர்களுள், உதுமான் (ரலி) அவர்கள் பெருமைக்குரியவர்கள்.

மக்காவில் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது, அவர்களது கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக உதுமான் (ரலி) அவர்களும், அவர்களது மனைவியும் அபீஸீனியாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மருமகனாரான உதுமான் (ரலி) அவர்களைப் பார்த்து, மேற்கூறிய வார்த்தைகளைக் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் 6 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் தான் உதுமான் (ரலி) அவர்கள். இவரது தந்தையின் பெயர் அஃப்பான். தாயாரின் பெயர் அர்வா. இவர்களது பேத்தி, பைஸா, அப்துல் முத்தலிப்பின் மகளாவார், எனவே, இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மாமி முறையாக வந்தவர். உதுமான் (ரலி) அவர்கள் உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்தவர், இது குறைஷிகளின் ஒரு கிளைக் கோத்திரமாகும். இவர்கள் பனூ ஹாஷிம் கோத்திரத்தவர்களுக்கு இணையான அந்தஸ்துப் பெற்றவர்கள். குரைஷிகளின் கொடி இவர்களது வசம் தான் இருந்து வந்தது.

உதுமான் (ரலி) அவர்கள் ஒரு துணி வியாபாரியாக இருந்தார்கள். இவர்களது வியாபாரம் நல்ல முறையில் செழிப்போடு வளர்ந்த காரணத்தால், நகரிலேயே வெற்றிகரமான வியாபாரி என்ற அந்தஸ்துப் பெற்றவரானார். அவர் அடிக்கடி வியாபார விஷயமாக சிரியாவுக்கு போய் வரக் கூடியவராகவும் இருந்தார். நல்ல சிறப்பான வியாபார முன்னேற்றம், செல்வத்தை அதிகரித்ததோடு, மக்கள் மத்தியில் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்தது. இருப்பினும், அவர் இளகிய மனம் படைத்தவராக இருந்தார். அவர் தனது பொருளாதார வளத்தை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே தேடினார். பணம் ஒருவரது துன்பத்தைப் போக்குமென்று சொன்னால், உதுமான் (ரலி) அவர்கள் அவ்வாறான உதவிகளுக்கு எப்பொழுதும் தயாரகவே இருந்தார்கள்.

No comments:

Post a Comment