Friday, 4 August 2023

உதுமான் பின் அஃப்பான் (ரலி) வாழ்க்கை வரலாறு

 3. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நெருக்கம்


இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த நபித்தோழர்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போர் தவிர மற்ற அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள். உதுமான் (ரலி) அவர்களின் மனைவியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளுமான ருக்கையா (ரலி) அவர்கள் சுகவீனமாக இருந்த காரணத்தால், பத்ருப் போருக்கு வர வேண்டாம் என்றும், அவர்களை இருந்து கவனித்துக் கொள்ளுமாறும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதால், பத்ருப் போரில் உதுமான் (ரலி) அவர்கள் கலந்து இயலாமல் போய் விட்டது. சுகவீனத்தில் இருந்த மீள முடியாது போகவே, ருக்கையா (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். தனது மனைவியின் பிரிவால் உதுமான் (ரலி) அவர்கள் மிகவும் சோகமாகவும், வேதனையின் உச்சத்திலும் இருந்தார்கள். மனைவியை இழந்தது போக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மருமகன் என்ற அந்தஸ்தும் பறிபோய் விட்டதே என்றும் உதுமான் (ரலி) அவர்கள் மிகவும் கவலை அடைந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் சோகத்தைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது இன்னொரு மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை இரண்டாம் தாரமாக உதுமான் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். இதன் காரணமாக, ''துன்னூரைன் - இரு ஒளி விளக்குகளைப் பெற்றுக் கொண்டவர்”” என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு நடந்த ஹுதைப்பிய்யா உடன்படிக்கையின் பொழுது, அதன் அமைதி நடவடிக்கைகளில் சிறப்புப் பங்காற்றிய பெருமைக்குரியவர் உதுமான் (ரலி) ஆவார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உதுமான் (ரலி) அவர்களைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் குறைஷிகளோ..!

உதுமான் அவர்களே..! நீங்கள் வேண்டுமானால் கஃபாவைத் தரிசித்து விட்டுச் செல்லுங்கள், உங்களது இறைத்தூதரை நாங்கள் மக்காவிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

உதுமான் (ரலி) கூறினார்கள் :

இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. முஹம்மது (ஸல்) அவர்களால் இறைவனது ஆலயத்தை தரிசிக்க முடியாது போனால், என்னாலும் அது முடியாது என்று கூறி விட்டார்கள். உதுமான் (ரலி) அவர்களது இந்த வார்த்தை அவர்களை மிகவும் பாதித்து விட்டது, கோபங் கொள்ளச் செய்தது.

இதற்கிடையில் உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி காட்டுத் தீ போல கால் முளைத்து, மக்காவையும் தாண்டி இறைத்தூதர் (ஸல்) அவர்களை வந்தடைந்தது. உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடும் கோபத்திற்கு ஆளானதோடு, நிலமையின் விபரிதத்தைப் புரிந்து கொண்ட அவர்கள், இதற்குப் பழிக்குப் பழி எடுப்பது என்று முடிவெடுத்து, எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டோம், உறுதியோடு எதிரிகளைச் சந்திப்போம் என்று தனது தோழர்களிடம் பைஅத் என்ற உறுதிப் பிரமாணத்தை வாங்கிக் கொண்டார்கள். அந்த வரலாற்று நிகழ்ச்சியைத் தான் இன்றும் நாம் பைஅத்துர் ரிழ்வான் என்று போற்றி அழைக்கின்றோம். பின் அந்த வதந்தி பொய் என்று தெரிந்தது, உதுமான் (ரலி) அவர்களும் எந்தவித ஆபத்துமின்றி முஸ்லிம்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்து சேர்ந்த பொழுது, அங்கு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடியது. தண்ணீருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பொழுது மதீனாவில் ஒரே ஒரு தண்ணீர்க் கிணறு தான் இருந்தது. அதுவும் ஒரு யூதனுக்குச் சொந்தமாக இருந்தது. அவர் முஸ்லிம்களை தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மறுத்தார்.

எனவே, தனது தோழர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களில் யார் அந்தக் கிணற்றை வாங்குகின்றார்களோ, அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் ஒரு ஊற்றையே பரிசாக வழங்குவான்”” என்று வாக்குறுதி அளித்தார்கள். அப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் தான் வாங்குவதாகப் பதிலளித்தார்கள். அதனை 20 ஆயிரம் திர்ஹம்களுக்கு வாங்கி, அதனை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தானாமாகவும் வழங்கி விட்டார்கள்.

மதினாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் முதலில் கட்டிய பள்ளிவாசல் போதாத நிலையில் இருந்தது. இதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலை விரிவாக்க எண்ணியவர்களாக, உங்களில் யார் இந்தப் பள்ளிவாசலின் விரிவாக்கத்திற்காகச் செலவு செய்யத் தயாராக இருக்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அப்பொழுதும் உதுமான் (ரலி) அவர்கள் ''நான்”” என்று முன்வந்தார்கள். அந்தப் பள்ளிக்குப் பக்கத்தில் இருந்து நிலத்தை வாங்கி பள்ளிவாசல் விரிவாக்கப்பணிக்கு தானமாக வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 9 ம் ஆண்டு பைஸாந்தியப் பேரரசன் மதீனாவைத் தாக்குதவற்கு தயாராகி வருகின்றான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முஸ்லிம்கள் தயாராகும்படி கட்டளையிட்டு விட்டு, அதற்கான தயாரிப்புகளுக்கு பொருளாதார உதவியை வழங்கும்படி தனது தோழர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட உதுமான் (ரலி) அவர்கள், ஆயிரம் ஒட்டகங்களையும், 50 குதிரைகளையும், ஆயிரம் தங்கக் கட்டிகளையும் அந்தப் போருக்காக வழங்கினார்கள். இன்றைக்கு உதுமான் (ரலி) அவர்கள் என்ன செய்திருக்கின்றார்களோ, இன்றைய நாளிலிருந்து, அவர்களை என்றைக்கும் கெடுதிகள் அணுகாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைத்தூதை எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராக உதுமான் (ரலி) அவர்கள் இருந்தார்கள். திருமறைக் குர்ஆனின் ஒரு பகுதியை எழுதிய நற்பேற்றுக்குரியவரும் ஆவார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால், சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் உதுமான் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நெருக்கமாக இருந்த காரணத்தால், நபித்தோழர்களிலே மிகவும் மதிக்கப்பட்ட தோழராக உதுமான் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, நேர்வழி காட்டப்பட்ட கலீபாக்களின் ஆட்சியில், அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் பொழுது, இரண்டு கலீபாக்களுக்கும் ஆலோசகராகவும் இருந்த பெருமைக்குரியவர் உதுமான் (ரலி) ஆவார்கள்.

No comments:

Post a Comment