Thursday, 29 October 2015

அல் பகரா - பசு மாடு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான "அல்பகரா" மற்றும் "ஆலு இம்ரான்" ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். "அல்பகரா" அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்.
இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
)இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) "அல் பத்தலா" எனும் சொல்லுக்கு "சூனியக்காரர்கள்" என்று பொருள் என எனக்குத் தகவல் கிட்டியது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (அவை மேகங்களைப் போன்று அல்லது பறவைக் கூட்டங்களைப் போன்று என்பதற்கு பதிலாக) "அவை மேகங்களைப் போன்றும் பறவைக் கூட்டங்களைப் போன்றும் வந்து வாதாடும்" என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் தமக்குக் கிட்டியதாகக் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.

முஸ்லிம் : 1470

அல் பகரா - பசு மாடு

நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவர். அப்போது "அல்பகரா"அத்தியாயமும் "ஆலு இம்ரான்" அத்தியாயமும் முன்னே வரும்" என்று கூறிவிட்டு, இ(வ்விரு அத்தியாயங்களும் முன்னே வருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று, அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று, அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும். 

முஸ்லிம் : 1471

அல் பகரா - பசு மாடு

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் பனுந் நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) "அல்பகரா", "ஆலு இம்ரான்" ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (வேதஅறிவிப்பை) எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய்,வேதக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர். "இவர் முஹம்மதுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார்" என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
இதே நிலையில், (ஒரு நாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். (அவர் இறந்து விட்டார்.) ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்துவிட்டனர். காலை நேரமானபோது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர்.
மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.

முஸ்லிம் : 5366

அல் பகரா - பசு மாடு

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்பகரா" அத்தியாயத்தின் (வட்டி தொடர்பான) இறுதி வசனங்கள் (2:275 - 281) அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று அவற்றை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் :3221

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275 - 281) வட்டி தொடர்பாக அருளப்பெற்ற சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, (அவற்றை ஓதிக்காட்டி,) மதுபான வியாபாரத்தை(யும்) தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் :3222

அல் பகரா - பசு மாடு

சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி, "ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொகுத்தளித்த முறைப்படி குர்ஆனைத் தொகு(த்துப் பதிவு செய்யு)ங்கள். (அல்பகரா அத்தியாயம், அந்நிசா அத்தியாயம், ஆலு இம்ரான் அத்தியாயம் என்றெல்லாம் கூறுவதைத் தவிர்த்து) பசுமாட்டைப் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், மகளிர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், இம்ரானின் சந்ததியர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம் (எனப் பெயரிட்டு, குர்ஆன் வசனங்களை ஜிப்ரீல் கொண்டுவந்த வரிசை முறைப்படி பதிவு செய்யுங்கள்)" என்றார்.
நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களைச் சந்ததித்தபோது ஹஜ்ஜாஜ் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜாஜைக் கடிந்துரைத்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் (ஹஜ்ஜின் போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (மினாவில்) "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்று அதனை ஒட்டியுள்ள "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் இறங்கி ஜம்ராவை நோக்கி நின்று அதன் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் நான், "அபூஅப்திர் ரஹ்மான்! மக்கள் இப்பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்றவாறு கல்லை எறிகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல் பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட செய்தி மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஹஜ்ஜாஜ், "அல்பகரா அத்தியாயம் எனச் சொல்லாதீர்கள்" என்று கூறியதைக் கேட்டேன் என அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பு ஆரம்பிக்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

முஸ்லிம் :2493

அல் பகரா - பசு மாடு

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தில் நின்று "ஜம்ரத்துல் அகபா"வின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், "மக்கள் மேற்பரப்பில் நின்றல்லவா கல்லை எறிகின்றனர்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது ஆணையாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ (அந்த அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் : 2492

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் இறையில்லம் கஅபா தமக்கு இடப்பக்கமாகவும், மினா தமக்கு வலப்பக்கமாகவும் இருக்கும்படி (பத்னுல் வாதி பள்ளத்தாக்கில்) நின்று ஜம்ராவின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். மேலும், "அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் : 2494

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின்போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் நின்று (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் "மக்கள் பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்று ஜம்ராவின் மீது கல்லை எறிகின்றனரே? (ஆனால் தாங்கள் பள்ளத்தில் நின்று கல்லை எறிகின்றீர்களே?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் இங்கிருந்ததுதான் (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்தார்கள்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் : 2496

அல் பகரா - பசு மாடு

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் முஸ்தலிஃபாவில் இருந்தபோது, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "அல் பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பெற்றதோ அவர் (முஹம்மத் - ஸல்) இந்த இடத்தில் "லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்" என்று (தல்பியா) கூறியதை நான் செவியுற்றேன்" என்றார்கள்.

முஸ்லிம்  :2456

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும்போது தல்பியாச் சொன்னார்கள். அப்போது "இவர் ஒரு கிராமவாசியா?" என்று கேட்கப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "மக்கள் மறந்துவிட்டனரா,அல்லது வழிதவறிவிட்டனரா? "அல்பகரா" அத்தியாயம் யாருக்கு அருளப்பெற்றதோ அவர் (முஹம்மத் - ஸல்) இந்த இடத்தில் "லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்" என (தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

முஸ்லிம் : 2457

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், முஸ்தலிஃபாவில் "அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பெற்றதோ அவர் (முஹம்மத் - ஸல்) இந்த இடத்தில் "லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்" என (தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் தல்பியாச் சொன்னார்கள்; அவர்களுடன் நாங்களும் தல்பியாச் சொன்னோம். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் : 2458

அல் பகரா - பசு மாடு

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமஸ்ஊத் (உக்பா பின் ஆமிர் - ரலி) அவர்களை இறையில்லம் (கஅபா) அருகில் சந்தித்தேன். அவர்களிடம் "அல்பகரா அத்தியாயத்தின் இரு வசனங்கள் குறித்துத் தாங்கள் அறிவித்த ஹதீஸ் எனக்கு எட்டியது" என்று கூறினேன். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எவர் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்" எனக் கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.


அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எவர் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி இவ்விரு
(285, 286ஆவது) வசனங்களை இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அவ்விரண்டுமே போதும்" என்று கூறினார்கள் என அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்த போது அன்னாரை நான் சந்தித்தேன். அவர்களிடம் இந்த ஹதீஸ் குறித்து வினவினேன். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இந்த நபிமொழியை எனக்கு அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.


முஸ்லிம் : 1473 & 1474

அல் பகரா - பசு மாடு

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். அவர்களுடன் மக்களும் தொழுதனர். அப்போது (குர்ஆனில்) ஏறக்குறைய "அல்பகரா" (எனும் இரண்டாவது) அத்தியாயத்தை ஓதும் அளவிற்கு நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முந்தைய நிலையைவிடக் குறைவாக இருந்தது. பிறகு (மீண்டும்) நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முந்தைய ருகூஉவை விடக் குறைவாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையைவிடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையை விடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉ வான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவோ எவரது பிறப்புக்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் (தொழும்போது) இந்த இடத்தில் நின்றுகொண்டு எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியை) கைவிட்டதையும் கண்டோமே (அது ஏன்?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் (தொழுதுகொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிலிருந்து) பழக்குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால், இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதைப் புசித்திருப்பீர்கள். மேலும், நான் நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்" என்று கூறினார்கள். மக்கள் "ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்களின் நிராகரிப்பே காரணம்" என்றார்கள். அப்போது "இறைவனையா நிராகரிக்கிறார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "கணவர்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் அவர்களில் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை ஒன்றைக்) கண்டால் "உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை" என்று சொல்லிவிடுவாள்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பிறகு நீங்கள் பின்வாங்கி வந்ததையும் கண்டோமே (ஏன்?)" என்று மக்கள் வினவியதாக இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் : 1659

அல் பகரா - பசு மாடு

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)" என்று கூறினார்கள்.
அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை" என்று கூறினார்கள்.
அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்ஃபாத்திஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை"என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம்  : 1472

அல் பகரா - பசு மாடு

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் முதலாவது ரக்அத்தில் "அல்பகரா" அத்தியாயத்திலுள்ள "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா...’ (என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும்,இரண்டாவது ரக்அத்தில் "ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்" (என்று முடியும் 3:52ஆவது வசனத்தையும்) ஓதுவார்கள்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் (முதல் ரக்அத்தில் அல்பகரா அத்தியாயத்திலுள்ள) "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா..."(என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) "ஆலு இம்ரான்" அத்தியாயத்திலுள்ள "தஆலவ் இலா கலிமதின் சவாயிம் பைனனா வ பைனக்கும்..." (என்று தொடங்கும் 3:64ஆவது) வசனத்தையும் ஓதுவார்கள்.
- மேற்கண்ட (1317ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.


முஸ்லிம் : 1317& 1318

அல் பகரா - பசு மாடு

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதேன். "அல்பகரா"அத்தியாயத்திலுள்ள "நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது) அதன் (-கஅபாவின்) பக்கமே திருப்புங்கள்" எனும் (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (இவ்வாறே நாங்கள் செய்தோம்). நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப்பெற்றது. (நபி (ஸல்) அவர்களுடன் தொழுது முடித்த) மக்களில் ஒருவர் அன்சாரிகளில் சிலரைக் கடந்துசென்றார். அவர்கள் (பைத்துல் மக்திஸை நோக்கித்) தொழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் (தொழும் திசை மாற்றப்பட்டுவிட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக்கொண்டனர்.

முஸ்லிம்  : 913

அல் பகரா - பசு மாடு

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு (தம் கூட்டத்தாரிடம்) திரும்பிச் சென்று (நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுத தொழுகையை மீண்டும்) தம் கூட்டத்தாருக்குத் தொழுவிப்பார்கள்.
ஒரு நாள் இரவில் முஆத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுது விட்டுத் தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு (அதே இஷாவை)த் தொழுவித்தார்கள்.அதில் (பெரிய அத்தியாயமான) அல்பகராஎனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகி சலாம் கொடுத்தார். பின்னர் தனியாகத் தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். மக்கள் அவரிடம், இன்னாரே, நீர் நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிவிட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (நான் நயவஞ்சகன் அல்லன்). நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது குறித்து) தெரிவிப்பேன் எனக் கூறினார்.
அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பகல் வேளைகளில் வேலைவெட்டிகளில் ஈடுபடுகின்றவர்கள். நாங்கள் ஒட்டகங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் பின் ஜபல் அவர்கள் (நேற்றிரவு) உங்களுடன் இஷாத் தொழுதுவிட்டு வந்து (எங்களுக்குத் தொழுவித்தார். அதில் பெரிய அத்தியாயமான) அல்பகரா அத்தியாயத்தை ஓதலானார். (எனவேதான் விலகிச் சென்று தனியாகத் தொழுதேன்) என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா? என்று கேட்டுவிட்டு, (நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் போது சற்று சிறிய அத்தியாயமான) இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக; இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், (நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) வஷ்ஷம்ஸி வ ளுஹாஹா, வள்ளுஹா வல்லைலி, வல்லைலி இதா யஃக்ஷா, சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா ஆகிய (முறையே 91, 93,92,87ஆவது) அத்தியாயங்களை ஓதுவிராக என்று கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்தார்களே? என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், (ஆம்) இது போன்றுதான் (அறிவித்தார்கள்) என்றார்கள்.

முஸ்லிம் : 795

அல் பகரா - பசு மாடு

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூஹர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக)இரவில் அழைத்துச் செல்லப்பட்ட போது (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா” வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அ(ந்த மரத்தில் வேர்பகுதியான)து ஆறாம் வானத்தில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் (உயிர்கள், மனிதர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகள்) யாவும் அங்கு தான் சென்று சேர்கின்றன; அங்கே அவை கையகப்படுத்தப்படுகின்றன.அதற்கு மேலேயிருந்து கிழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்குதான் வந்து சேர்கின்றன; அங்கே (வானவர்களால்) அவை பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
“சித்ரத்துல் முன்தஹா எனும் அம்மரத்தை ஏதோ (பிரமாண்டமான) ஒன்று சூழ்ந்து கொண்டிருக்கிறது” எனும் (53:16 ஆவது) வசனம் தங்கத்தாலான விட்டில் பூச்சிகளையே குறிக்கிறது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்று(கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத்தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசன்ங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் :279

அல் பகரா - பசு மாடு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா" எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் : 1430

அல் பகரா - பசு மாடு

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் "அல்பகரா”” எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் "அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்" என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) "அந்நிசா" எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்.
பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச் செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் "சுப்ஹான ரப்பியல் அஃலா" (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா லக்கல் ஹம்து" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்; எங்கள் இறைவா, உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம்  : 1421



அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக்கொண்ட நன்மை அவைகளுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவைகளுக்கே (கேடு விளைவிக்கும்). "எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!) எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்லவென்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து) விடமாட்டோம் என்றும், "(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமேதான் நாங்கள் சேர வேண்டியதிருக்கின்றது" என்றும் கூறுகிறார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். அன்றி, அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்றி, நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமான வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுத(ôமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியான தாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டபோதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றி (தவறாக எழுதுமாறு) எழுத்தாளனையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன்னுடைய விதிகளை) உங்களுக்கு (இவ்வாறெல்லாம்) கற்றுக் கொடுக்கின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


மேலும், ஒரு நாளை பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகள் செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். அன்றி, அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


அன்றி, (கடன் வாங்கியவன் அதனைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் கஷ்டத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்துவிடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்!

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப்பிடித்து, மார்க்க வரியையும் (ஜக்காத்து) கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அன்றி அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: "வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டுவிட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

Saturday, 17 October 2015

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்களது கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்களது கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர் களையே நேரான வழியில் செலுத்துகின்றான். (நம்பிக்கை யாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கன்றி, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதை செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டக்கூடும்.) ஆயினும், அதனை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்.) மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் மிகவும் நன்கறிவான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அன்றி (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக் காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே "ஹிக்மா" (இறைஞானம், நுண்ணறி)வை கொடுக்கின்றான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, இறைஞானத்தைக் கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெறமாட்டார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கின்றான். அன்றி, அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வைகளிலிருந்தும் நல்லவைகளையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாக அன்றி வாங்கிக் கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
உங்களில் யார்தான் (இதனை) விரும்புவார்: ஒருத்தருக்கு பேரீச்சை மற்றும் திராட்சையின் ஒரு தோப்பு இருக்கின்றது. அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து எல்லா வகை கனிவர்க்கங்களும் அவருக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. (சம்பாதிக்க) இயலாத பல சிறு குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். (இந்த நிலைமையில்) நெருப்புடன் கூடிய புயற்காற்று அடித்து அதனை எரித்துவிட்டது. (இத்தகைய நிலைமையை எவர்தான் விரும்புவார்?) நீங்கள் ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக, அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு இவ்வாறு (உதாரணங்களைக் கொண்டு) தெளிவுபடுத்துகின்றான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

எவர்கள் தங்களுடைய பொருளை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்களுடைய உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கின்றது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகின்றது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. அன்றி, அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இத்தகையவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்திற்கு (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

எவர்கள் தங்களுடைய பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக இகழ்ச்சியையும், துன்பத்தையும் (அதனோடு) சேர்க்கவில்லையோ அவர்களுக்குரிய கூலி அவர் களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய பொருளைச் செலவு செய்கின்றவர்களுடைய (பொருளின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து உற்பத்தியாயின.) அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை பின்னும்) இரட்டிப்பாக்குகின்றான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனுமாகவும் இருக்கின்றான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அன்றி, இப்ராஹீம் (இறைவனை நோக்கி) "என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய். (அதை) நீ எனக்குக் காண்பி" எனக் கூறியபோது, அவன் (இதை) "நீங்கள் நம்பவில்லையா?" என்று கேட்டான். (அதற்கு) அவர் "நான் நம்பியே இருக்கின்றேன். ஆயினும், (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய உள்ளம் திருப்தியடைவதற்காக (அதனைக் காண்பி)" எனக் கூறினார். (அதற்கவன்) "நான்கு பறவைகளைப் பிடித்து நீங்கள் அவைகளைப் பழக்கி, பின்னர் (அவைகளைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள். அவை உங்களிடம் பறந்துவந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) "நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், மிக்க நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்" என்றான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்



(நபியே!) அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நீங்கள் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) "இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்தபின் அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?" என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி "இந்நிலையில்) நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள்" எனக் கேட்க "ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்" எனக் கூறினார். (அதற்கு அவன்) "அல்ல! நீங்கள் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர்கள். (இதோ!) உங்களுடைய உணவையும், உங்களுடைய பானத்தையும் பாருங்கள். (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உங்களுடைய கழுதையைப் பாருங்கள். (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கின்றது.) இன்னும் உங்களை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர் களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்பு களையும் நீங்கள் பாருங்கள். எவ்வாறு அவைகளைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கின்றோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது (அவர்) "நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்துகொண்டேன்" என்று கூறினார்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


(நபியே!) நீங்கள் ஒருவனை கவனித்தீர்களா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்ராஹீம் "எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கின்றானோ அவன்தான் என்னுடைய இறைவன்" என்று கூறியதற்கு, அவன் "நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்" என்று கூறினான். (அதற்கு) இப்ராஹீம் "(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத் திசையில் உதயமாக்குகின்றான். நீ அதை மேற்குத் திசையில் உதயமாக்கு" எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(அன்றி) அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவைகள் அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின்பால் செலுத்துகின்றன. அன்றி அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Sunday, 11 October 2015

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ் நித்திய ஜீவன், (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை; மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை; வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர, அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான்.

அல் பகரா - பசு மாடு


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்களல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரை (சிலரைவிட) பதவியில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர, மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரயீல் என்னும்) "பரிசுத்த ஆத்மா"வைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். (ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாதென்று) அல்லாஹ் நாடியிருந்தால் (அவன் அனுப்பிய தூதர்களான) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களோ தங்களுக்குள் வேறுபாடு கொண்டு (பிரிந்து) விட்டனர். அவர்களில் (நம்மையும், நம்முடைய வசனங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. அவர்களில் (அதை) நிராகரிப்பவர்களும் உண்டு. ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவைகளையே செய்வான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவைகளை உங்களுக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீங்களும் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவைகளை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் சிலரைக் கொண்டே அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவனாக இருக்கின்றான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது "எங்கள் இறைவனே! நீ எங்கள்மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! அன்றி, நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!" என்றும் பிரார்த்தனை செய்தார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

 பின்னும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி "அவருடைய அரசுரிமைக்கு அறிகுறியாவது: உங்கள் இறைவனிடமிருந்து மலக்குகள் சுமந்த வண்ணமாக ஒரு பேழை திண்ணமாக உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதும், மூஸாவின் சந்ததிகள் மற்றும் ஹாரூனுடைய சந்ததிகள் விட்டுச் சென்றதில் மீதமுள்ளதும் இருக்கும். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு" என்று கூறினார்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


 (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு) அழகான முறையில் அல்லாஹ்விற்காகக் கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். அன்றி அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் பிரார்த்தனையை) செவியுறுபவனாகவும், (உங்கள் கஷ்டத்தை) அறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

 (நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

நீங்கள் அறிந்துகொள்வதற்காக தன்னுடைய வசனங்களை அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கின்றான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.


அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்



தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.