Thursday, 29 October 2015

அல் பகரா - பசு மாடு

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் "அல்பகரா”” எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் "அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்" என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) "அந்நிசா" எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்.
பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச் செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் "சுப்ஹான ரப்பியல் அஃலா" (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா லக்கல் ஹம்து" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்; எங்கள் இறைவா, உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம்  : 1421



No comments:

Post a Comment