Thursday, 29 October 2015

அல் பகரா - பசு மாடு

சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி, "ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொகுத்தளித்த முறைப்படி குர்ஆனைத் தொகு(த்துப் பதிவு செய்யு)ங்கள். (அல்பகரா அத்தியாயம், அந்நிசா அத்தியாயம், ஆலு இம்ரான் அத்தியாயம் என்றெல்லாம் கூறுவதைத் தவிர்த்து) பசுமாட்டைப் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், மகளிர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், இம்ரானின் சந்ததியர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம் (எனப் பெயரிட்டு, குர்ஆன் வசனங்களை ஜிப்ரீல் கொண்டுவந்த வரிசை முறைப்படி பதிவு செய்யுங்கள்)" என்றார்.
நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களைச் சந்ததித்தபோது ஹஜ்ஜாஜ் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜாஜைக் கடிந்துரைத்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் (ஹஜ்ஜின் போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (மினாவில்) "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்று அதனை ஒட்டியுள்ள "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் இறங்கி ஜம்ராவை நோக்கி நின்று அதன் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் நான், "அபூஅப்திர் ரஹ்மான்! மக்கள் இப்பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்றவாறு கல்லை எறிகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல் பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட செய்தி மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஹஜ்ஜாஜ், "அல்பகரா அத்தியாயம் எனச் சொல்லாதீர்கள்" என்று கூறியதைக் கேட்டேன் என அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பு ஆரம்பிக்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

முஸ்லிம் :2493

No comments:

Post a Comment