Abdurrahman Umari
.இல்ம் என்றால் என்ன?
ஒரு பொருளை, ஒரு கருத்தை, ஒரு விஷயத்தை உள்ளது உள்ளவாறு கற்றோ உணர்ந்தோ அதன் மெய்யியல்பை அறிவது ‘இல்ம்’ எனப்படுகின்றது
.
அவ்வகையில் இஸ்லாமிய நன்னெறியை இயன்றளவு (ஆம், இயன்றளவு) கற்றறிந்து, இந்நன்னெறியின் முழுமூலமான பேரருளாளனோடு நெருங்கிய தொடர்பை அரும்பாடுபட்டுப் பெற்று, சிந்தையிலும் உள்ளத்திலும் ஈமானியப் பேரொளியை நிரப்பிக்கொள்ளும் நற்செயலில் அயராது ஈடுபட்டு, அதன் பிரதிபலிப்பாய் தம் புறச்செயல்களை சீராக்கிக் கொள்ளும் மேன்மரபினரே இஸ்லாமியப் பெருவழக்கில் ‘ஆலிம்’ என்றுரைக்கப்படுவர்
.
இத்தகைய சீர்மிகு உலமாக்களின் பணி முன்மாதிரி இஸ்லாமிய உம்மத்தை உருவாக்குவதிலும் முழுமையானதோர் அழைப்பியல் சமூகமான அதனைப் பரிணமிக்கச் செய்வதிலும் பெரும் பங்காற்றுகின்றது
.
முன்னெப்போதையும் விட மிகுதியாக இக்காலத்தில் சான்றோர்களாக தம்மை வார்ப்படுத்திக் கொள்ளும் சீர்மிகு உலமாக்களின் தேவை இன்றைய உம்மத்திற்கு குறிப்பாக தமிழக முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது என்றெண்ணுகின்றேன்
.
ஆற்றலும் யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய அல்லாஹ்வால் தேர்வாகி அறிவமுதம் வழங்கப்பட்ட அறிஞர் பெருந்தகைகள் ஒவ்வொருவராக உலகுபிரிந்து செல்லும்போதும் இக்கவலை மிகுந்து இருளாய் உள்ளத்தை கவ்வுகின்றது
.
இவ்வழியாகத்தான் அறிவு அகற்றப்படும் என இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்
.
அறிவைப் போற்றுவதற்காக அல்ல, அறிவை பாதுகாத்து உம்மத்திற்கு உரிய முறையில் ஊட்டி, உய்வடையச் செய்து தன் முழுப்பொருளில் ஓர் இஸ்லாமிய உம்மத்தாக - முற்றிலும் அடிபணிந்தும் அவ்வடிபணிதலை நோக்கி உலக மாந்தரை அழைத்தும் தான் தோன்றிய கடமையை - சிறப்புமிகு உம்மத்தாக நிறைவேற்ற வல்ல ஓர் உம்மத்தாக உருவாக்க அறிவுமரபினர் தேவை எனும் இக்கவலை எத்தனை பேர் உள்ளத்தில் நீங்காதுநிறைந்து துயில்மறந்து இறைவனிடம் மன்றாட வைத்துக்கொண்டுள்ளது என்பதை நானறியேன்
.
ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாய் செய்யத்தக்கதன்று, இப்பணி!!. ஒவ்வொரு மொஹல்லாவிலும் தவறாமல் செய்தேயாக வேண்டிய திருப்பணி இது
.
அறிவுக்கலைகளும் தெளிஞானமும் மார்க்கப் புலமையும் வான்மறை மற்றும் வழிகாட்டும் நபிமொழிகளின் நுண்ணறிவும் சிறுகச்சிறுக சன்னம் சன்னமாக மறைந்து கொண்டுள்ளது என்பதை ஈமானிய கண்ணோட்டத்தோடு உம்மத்தை உற்றுநோக்குகின்ற ஒவ்வொருவராலும் அறியமுடிகின்றது
.
என்னதான் இதற்கு தீர்வு? இந்த உம்மத் இப்படியே கவனிப்பாரற்று கீழ்நிலையில் - சிரஞ்சீவி மூலிகைகள் கைக்கொண்டவாறே - மடிந்து போகவேண்டுமா?
.
வானுயர எழுகின்ற சுனாமிப் பெருங்காற்றால் சூறையாடப்பட்டு இப்பெரும் கலம் அழிந்தே போகும் என்றே விதியிருந்தபோதிலும் கடைசி மூச்சை நிறுத்தும் வரை இழுத்துப்பிடித்து காப்பாற்றும் பணியில் இறங்கக்கூடாதா?
.
உலமாக்களால் மட்டுமே இந்த உம்மத் சீர்பெறும் சிறப்படையும் என வான்மறை ஆய்வாளரான இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள்
.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போன்று தமது பெயருக்கேற்ப உண்மையிலேயே அறிஞர்களாக திகழும் பெருமான்கள் பலரை நானறிவேன்
.
அவர்களின் உள்ளத்திலுமா இல்லாமற் போயிற்று இக்கவலை? என்றொரு ஏக்கத்தையே எடுத்துரைக்கின்றேன்
.
வல்லதீன ஜாஹதூ ஃபீனா லநஹ்தியன்னஹும் ஸுபுலனா - என்பது திருமறை அருள்வாக்கு அல்லவா? வாக்கல்ல அது, உத்தரவாதம்!
.
நம் கண்முன்னால் ஏன் இக்கலம் மூழ்கவேண்டும்? சாகும்வரை மூழ்காது காப்பாற்ற முயற்சிப்போமே? செத்தபிறகு ஏதாவது ஆனாலும் நாம் அறியமாட்டோம், அல்லவா?
.
குறைந்தபட்சம் விசாரணைக் கொடுநாளில் தயங்கி தயங்கி சொல்வதற்காவது நம்மிடம் சாக்கொன்று இருக்குமில்லையா?
.
(தொடரும்)
No comments:
Post a Comment