Sunday, 14 October 2018

தக்வா எனும் ஆடை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்று வழக்கமாக ஓதும் போது இரண்டு வசனத் தொடர் கண்கல்ங்கச் செய்தது. அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

நாம் நன்றி செலுத்துவது குறைவு என்று முதல் பத்து வசனங்களில் சொல்லிவிட்டு அது நமது தந்தை ஆதம் (அலை) அவர்கள் காலத்திலிருந்து இருக்கிறது என்கிறான்,

ஆதமைப் படைத்து வானவர்களைச் சிரம் பணியுங்கள் என்று கட்டளையிட்ட போது; இப்லீஸைத் தவிர என்று ஆரம்பித்து இப்லீஸ் இறைவனிடம் உறையாடி வாசகம் தொடர்கிறது அடுத்த 5 வசனங்களில்.. இறுதியில் இறைவன் அவகாசம் அளிக்கப்பட்டதாகச் சொல்கிறான்.

அத்தியாயம் 7 : குகைவாசிகள்

வசனம் 15

அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான்.

قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ‏ 

இந்த அவகாசம் இப்லீஸுக்கு மட்டும்தானா அல்லது மனித இனத்திற்கும் தான்.  இதோ இந்த உலக வாழ்க்கையில் நம்முடைய நடைமுறைகளை நாம் தனித்திருந்து சிந்திப்போமானால் அத்தனை தவறுகளும் கண் முன்னால் வந்து செல்லும். எவ்வளவு நன்றி கொன்றவர்களாக நாம் வாழ்கிறோம் என்று புரியும்.

இந்த வசனத்திலிருந்து தொடர்ந்து கனக்கும் எமது இதயம் இறைவன் மன்னிப்பளித்தாக கூறும் 23 வசனம் வரை மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லியது.  ஒரு சம்பவம் அத்தனை அழகாக வேறு எந்த ஒரு சொல்லாடலால் இவ்வளவு எளிமையாக நம்மை உருகச் செய்யுமா என்று கண் குத்தி மீள்கிறேன்.

வசனம் 23

“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.”

 رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏ 


இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்

மன்னித்த இறைவன் அடுத்த வசனத்தில் மிகப் பெரிய சங்கதியைத் தருகிறான்.  நாம் உண்மையிலேயே ஒருவருக்கு ஒருவர் பகைவர் ஆவோம் என்பது தான்; 

 عَدُوٌّ‌

எதற்காக நாம் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று தெளியாமலே இன்னும் வாதிடுகிறோம்.  இறைவன் தொடர்ந்து சொல்லும் போது  உங்களின் உடலுக்குப் பாதுகாப்பகவும் அலங்காரமாகவும் ஆடையைத் தந்துள்ளதாகக் கூறிவிட்டு  தக்வா எனும் இறையச்சம் தான் சிறந்த ஆடை என்கிறான்.

لِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ‌

ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.

இறைவனின் கட்டளைகளில் நமக்கு சஞ்சலங்களை ஏற்படுத்தி நமது ஆடைகளைக் களைந்து நமது இவ்வுலக நிலையையும்  மறுமையிலும் தோல்வி பெறச் செய்வதுதான். நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.

இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.

இவ்வாறு தொடரும் இந்த வசனம் மிகப் பெரும் தொடர் நிகழ்வாக வசனம்  43 ல் சுவனவாசிகளிடம் அந்த பகைவராவீர்கள் என்பதினை  தெளிவு படுத்துகிறான்.

وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ

மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம்.

 இந்தக் காழ்ப்புணர்வு நம்மிடையே இருந்தாலும் அதை பொறுத்துக் கொள்ளுதல் சகிப்புத்தன்மையுடன் இறைவன் ஏற்பாடு என்றிருந்தால் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிதான்.
அதை அந்த சுவனவாசிகள் இவ்வாறு சொல்வார்கள்.

“எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

தொடர்ந்து  50, 51 வசனத்தில் ஒரு முறை இதயம் உலுக்கியது மீண்டும் மீண்டும் வசனத்தினை வாசிக்கிறேன். 


மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”

இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.


யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.

வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.


இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.



No comments:

Post a Comment