Saturday, 9 November 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ர் ( தொடர்… )

குறைஷியத் தலைவர்களுள் யுத்தம் முடிந்த பின்னர் கொல்லப்பட்டவர் அபூ ஜஹ்ல் மட்டுமல்ல. தனக்கு யுத்தப் பொருட்களாய்க் கிடைத்த கவசங்கள் சிலவற்றை மிகுந்த சிரமத்துடன் தூக்கிச் சென்று கொண்டிருந்தார் அப்த்-அல்லாஹ்-பின்-அவ்ப். அவ்வேளை, தன் ஒட்டகத்தை இழந்து விட்டதனால் தப்பிச் சென்று விட முடியாதவராயிருந்த பெருத்த உடம்பினரான உமையாவைக் கண்டார் அவர். உமையாவின் மகன் அலீயும் அவருடனிருந்தார். உமையா தனது முன்னை நாள் நண்பரை நோக்கி, “ என்னைக் கைதியாக எடுத்துக் கொள்ளும்; யுத்த கவசங்களைவிடப் பெறுமதியானவன் நான் ” என்றார். அப்த்-அர்ரஹ்மான் இதற்கிணங்கி, கவசங்களை எறிந்து விட்டு, உமையாவையும், மகனையும் இரண்டு கைகளில் பிடித்தவராகப் பாசறை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் எதிர்ப்பட்ட பிலால், தனது முன்னைய எஜமானரும், தனக்கு சொல்லொணாத் துயரங்கள் இழைத்தவருமான உமையாவை அடையாளம் கண்டு நின்றார். “ உமையா! ” என சப்தமிட்ட அவர், “ அவிசுவாசிகளின் தலைவன்! அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும். ” எனக் குரலெழுப்பினார். சினங்கொண்ட அப்த்-அர்ரஹ்மான், “ இவர்கள் எனது கைதிகள் ” எனக் கூறி, பிலாலை எதிர்த்து நின்றார். பிலால் விடுவதாயில்லை : “ அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும். ” தன் வசமிழந்த அப்த்-அர்ரஹ்மான், “ நான் கூறுவதை நீ கேட்க மாட்டாயா ஓ! கறுப்புத் தாயின் மகனே! ” என்றார். இதைக் கேட்ட பிலால், தனக்கு முஅஸ்ஸின் என்ற கெளரவத்தை ஈட்டித் தந்த பலம் வாய்ந்த குரலில், “ ஓ அல்லாஹ்வின் துணையாளர்களே! அவிசுவாசத்தின் தந்தை உமையா! அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும் ” எனச் சப்தமிட்டார். பல புறத்திலிருந்தும் ஓடி வந்த மக்கள் அப்த்-அர்ரஹ்மானையும் அவரது இரு கைதிகளையும் சூழ்ந்து கொண்டனர். அப்போது வீசப்பட்டதொரு வாள் அலீயைக் கீழே வீழ்த்தியது. ஆனாலும் அவர் இறந்து விடவில்லை. அப்த்-அர்ரஹ்மான், உமையாவின் கையை விடுத்து, “ நீரே தப்பித்துக் கொள்ளும் ; அப்படியும் நீர் எப்படித்தான் தப்ப முடியும்? இறைவன் பெயரால் என்னால் உமக்கு எதையும் தர முடியாதிருக்கின்றது ” என்றார். அவரை ஒரு புறம் தள்ளி விட்டு வாட்களை உயர்த்திய பலரும் இரு கைதிகளையும் கொன்று போட்டனர். பின்னைய காலங்களில் அப்த்-அர்ரஹ்மான் கூறுவார் : “ பிலால் மீது இறைவன் கருணை காட்டுவானாக! எனது யுத்த கவசங்களை நான் இழந்தேன் ; அவர் எனது கைதிகள் இருவரையும் சூறையாடிக் கொண்டார் ” - இ.இ. 448-9


யுத்தத்தில் மரணத்துக்குள்ளான அவிசுவாசிகளின் உடல்களெல்லாம் ஒரு கிடங்கினுள் தள்ளப்படவேண்டும் எனப் பணித்தனர் நபிகளார். உத்பாவின் உடம்பு கிடங்கை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது அவரது மகன் அபூஹுதைபாவின் முகம் வெளுத்துவிட்டது. கவலை நிரம்பியவரானார் அவர். அவருக்காக இரங்கி, அனுதாபத்துடன் அவரை நோக்கினர் நபிகளார். அப்போது அபூஹுதைபா கூறினார்: “ ஓ அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையார் குறித்தும், அவர் வீசியெறியப்பட்டுள்ள இடம் குறித்துமான உங்களது கட்டளைகளை நான் வினவவில்லை. சிறந்த அறிவுரைகள் கூறுபவராக, ஒழுக்க சீலராக, தன்னடக்கமுள்ளவராக அவரை நான் அறிந்திருந்தேன். இந்த நல்லொழுக்கங்களும் சீரிய தன்மைகளும் அவரை நிச்சயம் இஸ்லாத்தினுள் நுழையச் செய்யும் என நான் நம்பியிருந்தேன். அவர் குறித்த எனது நம்பிக்கைகளின் மத்தியிலும் அவர். அவிசுவாசியாகவே மரணித்துள்ளமையையும், அவருக்கு நடந்திருப்பவற்றையும் கண்டதும் என்னுள் கவலை எழுந்தது. ” நபிகளார் அபூஹுதைபாவை ஆசீர்வதித்து அன்புடன் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள்.

Friday, 8 November 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ர் ( தொடர்… )

நபியே! விரோதிகளின் மீது நீர் (மண்ணை) எறிந்தபோது (அதனை) நீர் எறியவில்லை ; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான் - குர்ஆன் : 8 : 17

யுத்தம் முடிந்ததுமே அருளப்பட்ட இறைவசனங்களில் இதுவும் ஒன்று. அன்றைய தினம் நபிகளாரின் கரங்களிலிருந்து பெருகிய தெய்வீக பலத்தின் அறிகுறி அக்கூழாங்கற்களின் எறிவு மட்டுமல்ல, குறைஷியரின் தாக்குதல் மிக உக்கிரமமாக இருந்த வேளை ஒரு விசுவாசியின் கையிலிருந்த வாள் உடைந்து போயிற்று. வேறோர் ஆயுதத்தைப் பெற்றுக் கொள்வதே சரியெனக் கொண்டு உடைந்த வாளுடன் நபிகளாரிடம் வந்தார் ஜஹ்ஷ் குடும்பத்து உறவினரான உக்காஷ். “ இதைக்கொண்டு யுத்தம் செய்யும் ” எனக் கூறி மரத் தடியொன்றக் கொடுத்தனர் நபிகளார். அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்கினார் அவர். அவரது கையில் அந்தத் தடி நீண்ட, பலமான, ஒளிவீசும் வாளாக மாற்றமுற்றது. யுத்த முடிவு வரை அதைக் கொண்டே போராடிய உக்காஷா நபிகளாரின் பின்னைய யுத்தங்களிலும் அதையே பயன்படுத்தினார். அது அல்-அவ்ன் தெய்வீகத் துணை எனப் பெயர் வழங்கப் பெற்றது.

விசுவாசிகளுக்கு தாக்கும்படி கட்டளையிட்டபோது அவர்கள் மட்டும் தாக்கவில்லை. இதனை நபிகளார் நன்கறிந்திருந்தார்கள். அன்னாருக்கு ஏற்கெனவே ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது : 

அணி அணியாக ( பின்பற்றி வரக்கூடிய ) ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன். குர்ஆன் : 8 : 9

Wednesday, 6 November 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ர்

படையினரை ஒழுங்கு படுத்தத் தொடங்கினர் நபிகளார். கையில் ஓர் அம்புடன் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தவும் அணியை நேர்படுத்தவுமென வந்து கொண்டிருந்தார்கள். “ வரிசையில் நில்லும் ஓ ஸவாத்! ” எனக் கூறி, வரிசையை விட்டும் முன்னால் நின்றிருந்த ஓர் அன்ஸாரியின் வயிற்றில் தன் அம்பால் சிறிதே குத்தினர் அன்னார். “ ஓ அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் வலியுண்டாக்கிவிட்டீர்கள் ” எனக் குரலெழுப்பிய ஸவாத், “ இறைவன் உங்களை நீதியுடனும் சாந்தியுடனும் அனுப்பியிருக்கின்றான், எனவே எனக்குரிய கைம்மாற்றைத் தாருங்கள் ” என வேண்டினார். “ எடுத்துக் கொள்ளும் ” எனக் கூறிய நபிகளார், தனது மேலங்கியத் திறந்து வயிற்றைக் காட்டி, அம்பை ஸவாதின் கையில் கொடுத்தார்கள். ஸவாத் உடனே குனிந்து, தான் மீட்டுக் குத்த வேண்டிய இடத்தை முத்தமிட்டார். “ உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியதென்ன? ” என்றனர் நபிகளார். ஸவாத் கூறினார் : “ ஓ அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இப்போது நீங்கள் காண்பதனை எதிர்நோக்கியிருக்கின்றோம். இதுவே உங்களுடனான எனது இறுதி சந்திப்பாக இருக்கவும் கூடும். எனவே உங்களது உடலை என்னுடல் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும் என நான் விரும்பினேன் ” . நபிகளார் அவருக்காகப் பிரார்த்தித்து ஆசீர்வாதம் செய்தார்கள். 

குறைஷியர் முன்னேறத் தொடங்கினர். கிரமமில்லாத பாலை வெளியினூடாகப் பார்க்கும் போது மக்கத்துப்படை உண்மையில் அதன் அளவைவிடச் சிறியதாகவே தோற்றமளித்தது. ஆனாலும் நபிகளார், அவர்களது உண்மையான தொகை குறித்தும், இரு படைகளுக்குமிடையிலான அதீத சமமின்மை குறித்தும் நன்கறிந்திருந்தார்கள். இந்நிலையில் அன்னார் தமக்கென அமைக்கப் பட்டிருந்த ஒதுக்கிடத்துக்கு அபூபக்ருடன் திரும்பிச் சென்று இறைவன் அளித்திருந்த உதவி பற்றிய வாக்குறுதிக்காகப் பிரார்த்திக்கலானார்கள். சிறு கண்ணுறக்கமொன்று நபிகளாரை அணைத்தது. எழுந்ததும் அன்னார் கூறினார்கள் : 

“ உற்சாகத்துடன் இரும் ஓ அபூபக்ர். உமக்கு இறைவனின் உதவி வந்து விட்டது. இதோ ஜிப்ரீல் தான் வழி நடாத்தும் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து, யுத்தத்துக்கான ஆயுதங்கள் தரித்தவராக இருக்கின்றார் ” . 

புகாரி : 64:10 ; இ.இ. 444 

Tuesday, 5 November 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ரை நோ க் கி

ஸுஹ்ராவின் கூட்டுறவாளராயிருந்த அக்னஸ்-இப்ன்-ஷரீக், ஸுஹ்ராக்களுடனேயே சேர்ந்து வந்திருந்தார். அபூஜஹ்ல் கூறுபவற்றைப் பொருட்படுத்த வேண்டாமென அவர் கூறவே ஸுஹ்ராக்கள் அனைவரும் ஒருவர் தவறாது ஜுஹ்பாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பி விட்டனர். தாலிபும் தனது கோத்திர சகாக்கள் சிலருடன் திரும்பிச் சென்று விட்டார். அவருக்கும் மற்றும் சில குறைஷியருக்குமிடையில் நிகழ்ந்ததோர் உரையாடலின் போது அக்குறைஷியர் கூறினர் : “ ஓ ஹாஷிமின் மக்களே! நீங்கள் எங்களோடு வந்திருந்தாலும் கூட உங்கள் இதயங்கள் முஹம்மதுடன் தான் இருக்கின்றன என நாம் அறிவோம் ”. ஆனால் அப்பாஸ் படையினருடன் பத்ர் நோக்கிச் செல்வதெனத் தீர்மானம் செய்திருந்தார். அவர் தன்னோடு தன் சகோதரர் தம் புதல்வர்கள் மூவரையும் கூட்டிச் சென்றார். ஹாரிதின் மக்களான அபூ ஸுப்யான், நவ்பல் ; அபூதாலிபின் மகன் அகீல் ஆகியோர் அவர்கள்.


மலைக்கு அப்பால் வடகிழக்குப் புறமாக முஸ்லிம்கள் பாசறையமைத்தனர். எதிரிகளை முந்தி பத்ரின் தண்ணீரை அடைந்து கொள்ள வேண்டுவதன் அவசியத்தை உணர்ந்து உடணடியாகவே முன்னேற உத்தரவிட்டார்கள் நபிகளார். படையினர் புறப்பட்ட சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இது இறைவன் செய்ததோர் உபகாரமென்றும் ஆசீர்வாதமும் அனுக்கிரகமும் என்றும் கொண்டு அனைவரும் மகிழ்ந்தனர். அது மக்களுக்குப் புத்துணர்வூட்டியது ; தூசை அடிப்படுத்தியது ; அவர்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த யால்யால் வெளியின் மெதுவான மணற்றரையை திடப்படுத்தியது. மறுபுறம் அகன்லால் மலையை ஏறிக் கடந்து வரவேண்டியிருந்த குறைஷியருக்கு இது தொல்லை தருவதாகவும் அமைந்தது. பத்ர் வெளியின் எதிர்புறமாகவும் முஸ்லிம்களின் இடப்புறமாகவும் அமைந்திருந்தது அகன்லால். அண்மையிலிருந்த பள்ளப்பிரதேசத்திலேயே கிணறுகள் பலவும் காணப்பட்டன. தாம் எதிர் கொண்ட முதலாவது கிணற்றடியில் தங்கும்படி நபிகளார் உத்தரவிட்டார்கள். அவ்வேளை கஸ்ரஜ்களில் ஒருவரான ஹுபாப்-இப்ன்-அல்-முன்திர் நபிகளாரிடம் வந்து,

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ரை நோ க் கி

மதீனாவிலிருந்தும் தென்புறம் நோக்கிய நேர்பாதையை விட்டும் பத்ரை நோக்கித் திரும்பினார்கள் நபிகளார். இது ஸிரிய-மக்கக் கரையோரப் பாதையில் படையினர்க்கு மேற்குப் புறமாக அமைந்திருந்தது. அபூஸுப்யானை பத்ரில்தான் மடக்கிப் பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்ட நபிகளார், அப்பிரதேசத்தை நன்கு அறிந்திருந்த ஜுஹைனாவைச் சேர்ந்த இரு கூட்டுறவாளர்களை வர்த்தகக் குழு குறித்த உளவு பார்த்து வரவென அனுப்பினார்கள். பத்ரில் அவர்கள் கிணற்றின் அருகிலிருந்த ஒரு குன்றினை அடைந்தனர். அவர்கள் தண்ணீர் அள்ளச் சென்றபோது, கிராமத்துப் பெண்கள் இருவர் கடன் விவகாரம் ஒன்று குறித்து உரையாடிக் கொண்டிருந்தமையைச் செவியுற்றனர். “ வர்த்தகக் குழு நாளை அல்லது மறு நாள் வரும் ; நான் அவர்களுக்காக வேலை செய்து உனக்குத் தரவேண்டியிருப்பதைத் தந்து விடுகின்றேன் ” என ஒரு பெண் மற்றவளிடம் கூறினாள். உலவாளிகள் இருவரும் இச்செய்தியை எடுத்துக் கொண்டு நபிகளாரிடம் விரைந்தனர். அவர்கள் இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தால் மேற்குப் புறத்திலிருந்து இக்கிணற்றை நோக்கி ஒரு தனித்த உருவம் வந்ததனை அவதானித்திருப்பர். அது - அபூஸுப்யான். குறுக்குப் பாதை வழியாக, பத்ரின் ஊடே மக்கா சென்றடைவது பாதுகாப்பானதாவென்றறிய, தன் குழுவினருக்கு முன்னால் தனியே வந்திருந்தார் அவர். கிணற்றின் அருகே கிராமத்தவர் ஒருவரிடம், புதிய மனிதர்களது நடமாட்டமேதும் அப்பகுதியில் தென்பட்டதா என வினவினார். மேலே இருக்கும் குன்றில் தங்கியிருந்த இருவர் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டு சென்றதைத் தான் கண்டதாகக் கூறினார் அக்கிராமத்தவர். அபூஸுப்யான் உடனே அவர்கள் தங்கியிருந்த குன்றினை அடைந்து அங்கு கிடந்த ஒட்டகச் சாணத்தில் சிறிதை எடுத்து உடைத்துப் பார்த்தார். அதில் சில பேரீச்சம் விதைகளிருந்தன. “ ஓ இறைவா! இது யத்ரிபின் மிருக தானியம்! ” எனக் கூறித் தனது குழுவினரிடம் உடனடியாகத் திரும்பிய அபூஸுப்யான், அவர்களை நேர் பாதையினின்றும் விலக்கிக் கடலோரத்தைச் சார்ந்து மிக வேகமாகக் கொண்டு செல்லலானார்.


இதேவேளை உளவு பார்ப்போர் இருவரும் மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் இவ்வர்த்தகக் குழு பத்ரை அடையும் என்ற செய்தியை நபிகளாருக்குத் தெரியப்படுத்தினர். அவர்கள் நிச்சயமாக பத்ரில் தங்குவார்கள் ; மக்க - ஸிரிய பாதையில் இது முக்கியமானதொரு தரிப்பிடமாக விளங்கியது. அவர்களைத் திகைப்புறுத்தவும் வெற்றி கொள்ளவும் முஸ்லிம்களுக்குப் போதிய கால அவகாசம் இருந்தது.