Saturday, 9 November 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ர் ( தொடர்… )

குறைஷியத் தலைவர்களுள் யுத்தம் முடிந்த பின்னர் கொல்லப்பட்டவர் அபூ ஜஹ்ல் மட்டுமல்ல. தனக்கு யுத்தப் பொருட்களாய்க் கிடைத்த கவசங்கள் சிலவற்றை மிகுந்த சிரமத்துடன் தூக்கிச் சென்று கொண்டிருந்தார் அப்த்-அல்லாஹ்-பின்-அவ்ப். அவ்வேளை, தன் ஒட்டகத்தை இழந்து விட்டதனால் தப்பிச் சென்று விட முடியாதவராயிருந்த பெருத்த உடம்பினரான உமையாவைக் கண்டார் அவர். உமையாவின் மகன் அலீயும் அவருடனிருந்தார். உமையா தனது முன்னை நாள் நண்பரை நோக்கி, “ என்னைக் கைதியாக எடுத்துக் கொள்ளும்; யுத்த கவசங்களைவிடப் பெறுமதியானவன் நான் ” என்றார். அப்த்-அர்ரஹ்மான் இதற்கிணங்கி, கவசங்களை எறிந்து விட்டு, உமையாவையும், மகனையும் இரண்டு கைகளில் பிடித்தவராகப் பாசறை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் எதிர்ப்பட்ட பிலால், தனது முன்னைய எஜமானரும், தனக்கு சொல்லொணாத் துயரங்கள் இழைத்தவருமான உமையாவை அடையாளம் கண்டு நின்றார். “ உமையா! ” என சப்தமிட்ட அவர், “ அவிசுவாசிகளின் தலைவன்! அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும். ” எனக் குரலெழுப்பினார். சினங்கொண்ட அப்த்-அர்ரஹ்மான், “ இவர்கள் எனது கைதிகள் ” எனக் கூறி, பிலாலை எதிர்த்து நின்றார். பிலால் விடுவதாயில்லை : “ அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும். ” தன் வசமிழந்த அப்த்-அர்ரஹ்மான், “ நான் கூறுவதை நீ கேட்க மாட்டாயா ஓ! கறுப்புத் தாயின் மகனே! ” என்றார். இதைக் கேட்ட பிலால், தனக்கு முஅஸ்ஸின் என்ற கெளரவத்தை ஈட்டித் தந்த பலம் வாய்ந்த குரலில், “ ஓ அல்லாஹ்வின் துணையாளர்களே! அவிசுவாசத்தின் தந்தை உமையா! அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும் ” எனச் சப்தமிட்டார். பல புறத்திலிருந்தும் ஓடி வந்த மக்கள் அப்த்-அர்ரஹ்மானையும் அவரது இரு கைதிகளையும் சூழ்ந்து கொண்டனர். அப்போது வீசப்பட்டதொரு வாள் அலீயைக் கீழே வீழ்த்தியது. ஆனாலும் அவர் இறந்து விடவில்லை. அப்த்-அர்ரஹ்மான், உமையாவின் கையை விடுத்து, “ நீரே தப்பித்துக் கொள்ளும் ; அப்படியும் நீர் எப்படித்தான் தப்ப முடியும்? இறைவன் பெயரால் என்னால் உமக்கு எதையும் தர முடியாதிருக்கின்றது ” என்றார். அவரை ஒரு புறம் தள்ளி விட்டு வாட்களை உயர்த்திய பலரும் இரு கைதிகளையும் கொன்று போட்டனர். பின்னைய காலங்களில் அப்த்-அர்ரஹ்மான் கூறுவார் : “ பிலால் மீது இறைவன் கருணை காட்டுவானாக! எனது யுத்த கவசங்களை நான் இழந்தேன் ; அவர் எனது கைதிகள் இருவரையும் சூறையாடிக் கொண்டார் ” - இ.இ. 448-9


யுத்தத்தில் மரணத்துக்குள்ளான அவிசுவாசிகளின் உடல்களெல்லாம் ஒரு கிடங்கினுள் தள்ளப்படவேண்டும் எனப் பணித்தனர் நபிகளார். உத்பாவின் உடம்பு கிடங்கை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது அவரது மகன் அபூஹுதைபாவின் முகம் வெளுத்துவிட்டது. கவலை நிரம்பியவரானார் அவர். அவருக்காக இரங்கி, அனுதாபத்துடன் அவரை நோக்கினர் நபிகளார். அப்போது அபூஹுதைபா கூறினார்: “ ஓ அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையார் குறித்தும், அவர் வீசியெறியப்பட்டுள்ள இடம் குறித்துமான உங்களது கட்டளைகளை நான் வினவவில்லை. சிறந்த அறிவுரைகள் கூறுபவராக, ஒழுக்க சீலராக, தன்னடக்கமுள்ளவராக அவரை நான் அறிந்திருந்தேன். இந்த நல்லொழுக்கங்களும் சீரிய தன்மைகளும் அவரை நிச்சயம் இஸ்லாத்தினுள் நுழையச் செய்யும் என நான் நம்பியிருந்தேன். அவர் குறித்த எனது நம்பிக்கைகளின் மத்தியிலும் அவர். அவிசுவாசியாகவே மரணித்துள்ளமையையும், அவருக்கு நடந்திருப்பவற்றையும் கண்டதும் என்னுள் கவலை எழுந்தது. ” நபிகளார் அபூஹுதைபாவை ஆசீர்வதித்து அன்புடன் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள்.
பாசறையில் காணப்பட்ட சாந்தியும் அமைதியும் சினங்கொண்ட குரல்களினால் குலைந்தன. நபிகளாரைப் பாதுகாக்கவென ஒதுக்கிடத்தில் பின்தங்கியிருந்தோர், யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் தமக்கும் பங்கு வேண்டினர். யுத்தத்தில் நேரடியாகப் பங்கு கொண்டோரோ, எதிரிகளையும் தொடர்ந்து சென்று தாக்கித் தம் கரங்களால் தாமே கைப்பற்றிக் கொண்ட மக்களையும், ஆயுதங்களையும், கவசங்களையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. கைப்பற்றப்பட்டன அனைத்தையும் சமபங்கீடு செய்யக் கட்டளையிட்டு நபிகளார் அமைதியை நிலை நாட்டு முன்னமேயே, அன்னார் அவாவிய முடிவு உடனடியாக இறைவசனங்கள் மூலம் அருள் செய்யப்படலாயது : 

அன்ஃபால் (எனும் போர் முனையில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறும் : அன்ஃபால் அல்லாஹ்வுக்கும் (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ( - குர்ஆன் : 8 : 1 ) எனவே நபிகளார் கைதிகள் உட்பட, கிட்டிய பொருட்கள் அனைத்தும் ஒன்று கூட்டப்பட வேண்டுமென்றும், அவற்றில் எதுவும் எவரதும் தனிப்பட்ட சொத்துகளாகக் கருதப்படக் கூடாதென்றும் உத்தரவிட்டார்கள். எவ்வித கேள்வியுமின்றி அனைவரும் இவ்வுத்தரவுக்கு அடிபணிந்தனர்.


சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் மிகவும் மேன்மையானவராயிருந்தவர் ஆமிரின் தலைவர் ஸுஹைல். இவர் ஸவ்தாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ; அவரது முதல் கணவரின் சகோதரரும் கூட, நபிகளாருடன் மிகவும் நெருங்கியவர்களாயிருந்த ஏனையோர், அன்னாரது சிறிய தந்தையார் அப்பாஸ் ; மருமகன் - ஸைனபின் கணவரான - அபுல் ஆஸ் ; ஒன்று விட்ட சகோதரர்கள் அகீல், நவ்பல் ஆகியோர். கைதிகள் அனைவரும் நன்முறையில் நடாத்தப்படவேண்டுமென்றும், எனினும் அனைவரும் கட்டியே வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் நபிகளார் ஒரு பொது உத்தரவைப் பிறப்பித்தனர். என்றாலுங் கூட, தமது சிறிய தந்தையார் இவ்வளவு சிரமங்களுடன் துயரப்பட வேண்டியிருந்த நிலைமை குறித்த சிந்தனைகள் அன்னாரை உறங்க விடாது துயருறுத்தின. எனவே நபிகளார் அவரது கட்டுக்கள் தளர்த்தப்படவேண்டுமெனப் பணித்தார்கள். ஏனைய கைதிகள் தமது உறவினரால் கூட ஈடுபாடு குன்றிய வகையிலேயே நடாத்தப்பட்டனர். அபூ அஸீஸ், தன்னைக் கைப்பற்றிய அன்ஸாரியால் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அவரது சகோதரர் முஸ்அப் கூறினார் ; “ அவரை உறுதியாகக் கட்டும். அவரது தாயார் நல்ல செல்வம் படைத்தவர்; உம்மிடமிருந்து அவரை அவரது தாயார் மீட்டுக் கொள்ளக் கூடும். ” உடனே அபூ அஸீஸ் “ சகோதரரே! இப்படித்தான் நீர் என்னைக் குறித்து மற்றவர்களுக்குக் கூறுவீரோ? ” என்றார். “ உமக்குப் பிரதியாக இவர்தான் இப்போது என் சகோதரர் ” என அன்ஸாரியைச் சுட்டிக் காட்டினார் முஸ்அப். எவ்வாறாயினும் பின்னைய காலங்களில் அபூ அஸீஸ், தான் அன்ஸாரிகளால் நடாத்தப்பட்ட முறையை மிகவும் புகழ்ந்து கூறினார். மதீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், தன் தாயாரால் நாலாயிரம் திர்ஹம்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். 


மீண்டும் ஒன்று சேர்வதற்கியலாத வகையில் மீதமிருந்த எண்ணூற்றுக்கும் அதிகமான மக்கத்துத் துருப்பினர்கள் முற்றாகவே தோற்கடிக்கப்பட்டுள்ளமை தெளிவாகி விட்டது. நபிகளார், அப்த்-அல்லாஹ்-இப்ன்-ரவாஹாவை வெற்றி பற்றிய மகிழ்ச்சியான செய்தியை மேலை மதீனாவுக்கு, அதாவது மதீனாவின் தென் புறக் கோடிக்குக் கொண்டு செல்லும்படி அனுப்பி வைத்தார்கள். ஸைத் கீழை மதீன மக்களிடம் அனுப்பப்பட்டார். நபிகளார் தம் படையினருடன் பத்ரிலேயே தங்கியிருந்தார்கள். அன்று இரவு அன்னார், இஸ்லாத்தின் எதிரிகள் எறியப்பட்டிருந்த கிடங்கின் அருகில் சென்று நின்று, “ ஓ கிடங்கின் மக்களே! உங்கள் இறைதூதரின் உறவினர்களே! அவருக்கு நீங்கள் காட்டிய உறவு மோசமானது. பிறர் என்னை ஏற்றபோது, நீங்கள் என்னைப் பொய்யன் என்றீர்கள்; பிறர் எனது வெற்றிக்கு உதவியபோது, நீங்கள் என்னை எதிர்த்துப் போராடினீர்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் உண்மயோ என நீங்கள் கண்டு கொண்டீர்களா? எனது இறைவன் எனக்களித்த வாக்குறுதிகள் உண்மையென நான் கண்டு கொண்டேன் ” என்றார்கள். தோழர்கள் சிலர் இதனைச் செவியுற்றுச் செத்த உடல்களுடன் அன்னார் பேசுவது குறித்து வியப்புற்றார்கள். நபிகளார் கூறினார்கள் :
“ நீங்கள் நான் கூறுவனவற்றைச் செவியுறுவது, அவர்கள் செவியுறுவதிலும் மாற்றமானதல்ல ; ஆனால் அவர்களால் பதிலளிக்க முடியாது ” - இ.இ. 454 


அடுத்த நாள் அதிகாலை, தமது படையினரோடும், யுத்தப் பொருட்களோடும் நபிகளார் மதீனாவுக்குப் புறப்பட்டார்கள். மிகப் பெறுமதியான கைதிகள் இருவர் இருந்தனர். அதாவது முழு ஈட்டுப் பணமான நாலாயிரம் திர்ஹம்களைச் செலுத்தக் கூடிய குடும்பங்களைச் சார்ந்தோர். அவர்கள், அப்த்-அத்-தாரின் நத்ர். அப்த்-ஷம்ஸின் உக்பா ஆகியோர். இருவருமே இஸ்லாத்தின் பரம வைரிகளாயிருந்தனர். பத்ரில் பெரும் எதிர்ப்புகளின் மத்தியில் முஸ்லிம்கள் கண்ட வெற்றியினால் அவர்கள் சிந்திக்கத் தொடங்கியிராவிடின், அவர்களை மீண்டு செல்ல அனுமதிப்பது, அவர்களது தீய காரியங்களைத் தொடர்ந்தும் கொண்டு நடாத்தத் துணை செய்வதாகவே முடியும். நபிகளாரின் கண்கள் அவ்விருவர் மீதுமே இருந்தன. அவர்களது உள்ளங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதற்குறிய அடையாளங்கள் ஏதும் காணப்படவில்லை. அவர்களை உயிரோடு விட்டுவைப்பதென்பது இறைவனுக்குப் பொருத்தமானதொரு செயலாக இருக்க முடியாதென்பது நபிகளாருக்குத் தெளிவாகியது. முதல் தரிப்பிடங்களிலொன்றில் தங்கியபோது, நத்ர் கொல்லப்பட வேண்டுமெனப் பணித்தனர் அன்னார். அலீ அதனை நிறைவேற்றினார். மற்றுமொரு தரிப்பில் அதே முடிவுக்குள்ளானார் உக்பா. அவ்ஸ்களில் ஒருவர் அதனைச் செய்து முடித்தார். மதீனாவிலிருந்து மூன்று நாள் பிரயாணத்தூரத்திலிருந்த ஒரு தரிப்பிடத்தில் வைத்து, நபிகளார் மீதமிருந்த கைதிகளையும் யுத்தப் பொருட்களையும் பங்கீடு செய்து கொடுத்தார்கள். படையெடுப்பில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் இயன்றளவு சமமாகப் பங்கீடுகள் செய்யப்பட்டன.


இவ்வேளை ஸைதும், அப்த்-அல்லாஹ்-இப்ன்-ரவாஹாவும் மதீனாவை அடைந்திருந்தனர். யூதர்களும் வஞ்சகர்களும் தவிர்ந்த அனைவரும் மகிழ்ச்சியில் மிதக்கலாயினர். தான் கொண்டு சென்ற மகிழ்ச்சிகரமான செய்திக்குப் பதிலாக ஸைதுக்குக் கிட்டியது துயரூட்டும் செய்தியே. ருகையா உயிரிழந்திருந்தார். உத்மானும் உஸாமாவும் அப்போதுதான் ருகையாவை அடக்கம் செய்து விட்டு வந்திருந்தனர். கீழை மதீனத்தில் படர்ந்திருந்த கவலை, அவ்பும் முஅவ்விதும் மாண்ட செய்தியை அவர்களது தாயார் அப்ராவிடம் ஸைத் கூறியதோடு மேலும் அதிகரித்தது. ஸவ்தா, இரண்டு இல்லங்களதும் துயரத்தில் பங்கு கொண்டவராகத் தனது வீட்டுக்கும் அப்ராவின் வீட்டுக்கும் போய் வந்து கொண்டிருந்தார். அப்ரா, தனது புதல்வர்கள் இருவரும் மரணமுற்ற உயரிய பாங்கினையறிந்து கவலையும் மகிழ்ச்சியும் கொண்டவரானார். ஸைத், ருபைய்யிடம் அவரது வாலிப மகன் ஹாரிதா-இப்ன்-ஸுராகாவின் மரணத்தைப் பற்றியும் கூறவேண்டியவரானார். தொட்டியில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தபோது தனது கழுத்தைத் துளைத்துச் சென்ற அம்பினால் மரணமுற்றிருந்தார் ஹாரிதா. எனினும் நபிகளார் திரும்பி வந்து சில நாள் கழிய, ருபைய்யி அன்னாரிடம் சென்று தன் மகன் குறித்து விசாரித்தார். இஸ்லாத்துக்காக ஓர் அடியாவது அடிக்கத் தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கு முன், யுத்தம் ஆரம்பமாவதன் முன்னமேயே அவர் இறந்து பட்டமை அத்தாயாரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. “ ஓ அல்லாஹ்வின் தூதரே! ஹாரிதா பற்றி நீங்கள் எனக்குக் கூறமாட்டீர்களா? அவர் சுவர்க்கத்தில் இருப்பாராயின் நான் எனது இழப்பைப் பொறுத்துக் கொள்வேன். அவ்வாறில்லாவிடின் கண்ணீர் வடித்து நான் பிராயச்சித்தம் தேடுவேன் ” என்றார் ருபைய்யி. நபிகளார் ஏற்கெனவே இவ்வாறான கேள்விகளுக்குப் பொதுவான பதில் அளித்திருந்தார்கள். விசுவாசி தனது நோக்கத்திற்கேற்பவே பரிசளிக்கப்படுவார் - அதனை அவர் செய்து முடிக்காத போதும் கூட, என அன்னார் வாக்களித்திருந்தனர் : 

“ நோக்கங்களைப் பொறுத்தே செயல்கள் மதிக்கப்படும் ”
- ஸஹீஹ் புகாரி : 1 : 1

ஆனாலும் இப்போது நபிகளார் தனியாக ருபைய்யிக்குப் பதிலளித்தார்கள் :

“ ஹாரிதாவின் தாயே! சுவர்க்கத்தில் பல சோலைகள் இருக்கின்றன ; நிச்சயமாக உமது மகன் மிக உயர்வான சோலையை அடைந்து விட்டார். அது - பிர்தெளஸ் ” 
- ஸஹீஹ் புகாரி : 56 : 14



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment