Friday, 8 November 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ர் ( தொடர்… )

நபியே! விரோதிகளின் மீது நீர் (மண்ணை) எறிந்தபோது (அதனை) நீர் எறியவில்லை ; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான் - குர்ஆன் : 8 : 17

யுத்தம் முடிந்ததுமே அருளப்பட்ட இறைவசனங்களில் இதுவும் ஒன்று. அன்றைய தினம் நபிகளாரின் கரங்களிலிருந்து பெருகிய தெய்வீக பலத்தின் அறிகுறி அக்கூழாங்கற்களின் எறிவு மட்டுமல்ல, குறைஷியரின் தாக்குதல் மிக உக்கிரமமாக இருந்த வேளை ஒரு விசுவாசியின் கையிலிருந்த வாள் உடைந்து போயிற்று. வேறோர் ஆயுதத்தைப் பெற்றுக் கொள்வதே சரியெனக் கொண்டு உடைந்த வாளுடன் நபிகளாரிடம் வந்தார் ஜஹ்ஷ் குடும்பத்து உறவினரான உக்காஷ். “ இதைக்கொண்டு யுத்தம் செய்யும் ” எனக் கூறி மரத் தடியொன்றக் கொடுத்தனர் நபிகளார். அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்கினார் அவர். அவரது கையில் அந்தத் தடி நீண்ட, பலமான, ஒளிவீசும் வாளாக மாற்றமுற்றது. யுத்த முடிவு வரை அதைக் கொண்டே போராடிய உக்காஷா நபிகளாரின் பின்னைய யுத்தங்களிலும் அதையே பயன்படுத்தினார். அது அல்-அவ்ன் தெய்வீகத் துணை எனப் பெயர் வழங்கப் பெற்றது.

விசுவாசிகளுக்கு தாக்கும்படி கட்டளையிட்டபோது அவர்கள் மட்டும் தாக்கவில்லை. இதனை நபிகளார் நன்கறிந்திருந்தார்கள். அன்னாருக்கு ஏற்கெனவே ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது : 

அணி அணியாக ( பின்பற்றி வரக்கூடிய ) ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன். குர்ஆன் : 8 : 9
மலக்குகளும் தெய்வீகச் செய்தியொன்றனைப் பெற்றிருந்தனர் : “ உமது இறைவன் மலக்குகளை நோக்கி, ‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கின்றேன். ஆகவே நீங்கள் விசுவாசிகளை உறுதிப்படுத்துங்கள்’. ( என்று கட்டளையிட்டு ) ‘நிராகரிப்போருடைய இதயங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம்’ ( என்று கூறி, விசுவாசிகளை நோக்கி ) ‘நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக் கணுக்காகத் துண்டித்து விடுங்கள்’ என்று கூறி அறிவித்ததை நினைத்துப் பார்ப்பீராக. குர்ஆன் : 8 : 12

வானவர்களின் வருகை அனைவராலும் உணரப்பட்டது. விசுவாசிகளுக்குப் பலத்தையும் எதிரிகளுக்கு அச்சத்தையும் ஊட்டியது அது. எனினும் சிலரது பார்வைக்கே அது தோற்றியது : சிலரது செவிப்புலனையே அது எட்டியது - அதுவும் வெவ்வேறு தரத்தில். பத்ரின் அண்மையிலிருந்த ஒரு அறபு கோத்திரத்தைச் சேர்ந்த இருவர் குன்றொன்றன் மீதேறிக் கீழே நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தனர். அவர்களது நோக்கம் யுத்தத்தின் முடிவில் தாமும் சூறையாடலில் பங்கு பெறுவதாகும். அவர்களைச் சூழ்ந்ததாக ஒரு மேகம் சென்றது. அதில் குதிரைகளின் கனைப்பு ஒலி நிரம்பியிருந்தது. அவர்களில் ஒருவர் உடனே இறந்து வீழ்ந்தார். “ அவரது இதயம் அச்சத்தால் வெடித்தது ” என்றார் அதைச் சொல்வதற்கு தப்பியிருந்த மற்றவர். அவரது இதயத்தின் அனுபவமே அச்சம்பவத்தை விவரிக்க அவருக்குத் துணை நின்றது.

விசுவாசிகளுள் ஒருவர் எதிரிப் படையில் ஒருவரைத் துரத்திச் சென்று கொண்டிருந்தார். அவரை அண்மிக்கு முன்னமே அவ்வெதிரியின் தலை உடம்பிலிருந்து பறந்தது. கண்களுக்குப் புலனாகாக் கரமொன்று அதனைத் துண்டித்து விட்டது. சிலர், சில கணங்கள், நிலத்தில் கால் பதியாக் குதிரைகளில் வானவர் செல்வதைக் கண்ணுற்றனர். அவர்களை வழி நடாத்தி வந்த ஜிப்ரீல் மஞ்சள் நிறத் தலைப்பாகை அணிந்திருக்க, ஏனையோர் வெண்ணிறத் தலைப்பாகை அணிந்திருந்தனர். தலைப்பாகையின் ஒரு முனை தொங்கவிடப்பட்டிருந்தது. வானவர்கள் புகாத சிற்சிறு குழுவினர் தவிர, குறைஷியர் முற்றாக முறியடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டனர். அவ்பின் சகோதரர் முஆத் தன்னைக் கீழே வீழ்த்தும் வரை கடுமையாகப் போராடினார் அபூஜஹ்ல். அப்போது அபூஜஹ்லின் மகன் இக்ரிமா, முஆதைத் தாக்கி ஒரு கையைத் தோளிலிருந்தும் துணித்து விட்டார். பாதிக்கப்படாத கையுடன் தொடர்ந்தும் போராடினார் முஆத். தோல் மட்டுமே இணைப்பாக மறுகரம் தொங்கிக் கொண்டிருந்தது. போராட்டத்துக்கு இடையூறாயிருந்தது மரித்துப் போன அந்தக் கை. எனவே முஆத் குனிந்து அதனைத் தன் காலால் மிதித்து நிமிர்ந்தவராகக் கரத்தை உடம்பினின்றும் பிரித்து விட்டுத் தொடர்ந்தும் எதிரிகளுடன் போராடலானார். வீழ்ந்து கிடந்தாலும் அபூஜஹ்ல் இன்னும் உயிருடனேயே இருந்தார். அவ்பின் இரண்டாம் சகோதரர் முஅவ்வித், அபூஜஹ்லை அடையாளம் கண்டு, மரணத்துக்குள்ளாகும் வகையில் அவரைத் தாக்கினார். பின்னர் அங்கிருந்து அகன்ற முஅவ்வித், அவ்பைப் போலவே தானும் மரணமடையும் வரை போராடினார்.

குறைஷியரில் பெரும்பாலோர் தப்பிச் சென்றனர். எனினும் ஐம்பது பேரளவு படுகாயமுற்றோ, யுத்தத்தில் நேரடியாகவோ இறந்தனர். அல்லது தப்பியோடும் போது துரத்திப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதே அளவு தொகையினர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். நபிகளார் தம் தோழர்களை விழித்துக் கூறியிருந்தார்கள் :
“ ஹாஷிம்களின் மக்களும் மற்றோரும் எமக்கெதிராக யுத்தம் செய்ய விருப்பமில்லாதவர்களாயிருந்தும் வற்புறுத்திக் கூட்டிவரப்பட்டிருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். ” அப்போது, சிறைப்பிடிக்கப்பட்டால் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டிய சிலரது பெயர்களையும் அன்னார் குறிப்பிட்டிருந்தனர். படையினரிலும் பெரும்பாலோர் தம்மால் சிறைப் பிடிக்கப்பட்டோரை வாளுக்கிரையாக்குவதைவிட, பணயக் கைதிகளாக வைத்துக் கொள்வதையே விரும்பியிருந்தனர்.

குறைஷியர் விசுவாசிகளை விட மிகக் கூடிய தொகையினராக இருந்தமையால் அவர்கள் மீண்டும் ஒன்று கூடித் தாக்கலாம் என்ற எண்ணமும் இருந்தது. எனவே அன்ஸாரிகளில் சிலர் காவல் காத்து நிற்க, நபிகளார், அபூபக்ருடன் தமது ஒதுக்கிடத்துக்குத் திரும்பினர். வாசலில் ஸஅத்-இப்னு-முஆத் வாளொன்றினை ஏந்தியவராகக் காவல் காத்து நின்றிருந்தார். சகவீரர்கள் தமது கைதிகளையும் கட்டிக் கொண்டு பாசறையினுள் வந்து கொண்டிருப்பதைக் கண்ட ஸஅத்தின் முகம் கடூரமானது. இதனை அவதானித்த நபிகளார், “ ஓ ஸஅத்! அவர்களது செய்கை உமக்கு வெறுப்பூட்டுவதாய் உள்ளது போல் தெரிகின்றது ” என்றார்கள். மிக்க ஆக்ரோஷத்துடன் ஆமெனச் சைகை செய்த ஸஅத் கூறினார் :
“ அல்லாஹ் சிலை வணக்கஸ்த்தர்கள் மீது ஏற்படுத்திய முதல் தோல்வி இதுவாகும். அவர்களது மக்களை உயிரோடு காண்பதை விடக் கொன்று விட்டிருக்கலாம் ”. உமரும் இதே கருத்தினராகவே இருந்தார். அபூபக்ரோ, அண்மையில் அல்லது சிறிது காலம் கழித்தாவது கைதிகள் விசுவாசிக்கலாம் என்ற நம்பிக்கையில், அவர்களை உயிரோடு விடுவதே உசிதம் எனக் கண்டார். அபூபக்ரின் எண்ணத்துக்குச் சார்பானவர்களாகவே இருந்தனர் நபிகளாரும். எனினும் நாளின் பின்னைய பகுதியில், உமர் ஒதுக்கிடத்துக்குச் சென்றபோது, நபிகளாரும் அபூபக்ரும் அருளப்பட்டிருந்த இறைவசனங்கள் காரணமாக கண்ணீர் விட்டழுது கொண்டிருப்பதனைக் கண்டார் :

( விரோதிகளின் விஷமத்தை ஒடுக்கும் முறையில் அவர்களின் ) இரத்தத்தைப் பூமியில் ஓட்டாத வரையில் ( அவர்களை உயிருடன் ) சிறைப்பிடிப்பது எந்த நபிக்கும் தகுமானதல்ல.* நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகின்றீர்கள். அல்லாஹ்வோ ( உங்களுடைய ) மறுமை ( வாழ்க்கையை ) விரும்புகின்றான். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாக இருக்கின்றான். 

எனினும் இறைவசனங்கள், கைதிகளை உயிரோடு விட்டு விட எடுக்கப்பட்ட தீர்மானம் அல்லாஹ்வால் ஏற்கப்பட்டதென்பதையும், அதை மீண்டும் மாற்றக் கூடாதென்பதையும் தெளிவாக்கின. கைதிகளுக்கான சில செய்திகளும் நபிகளாருக்கே அருளப்பட்டன : 

நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறும் : உங்களுடைய இதயங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைகளை விட மேலானவைகளை உங்களுக்குக் கொடுத்து, உங்களுடைய குற்றங்களையும் அவன் மன்னித்து விடுவான். ஏனென்றால் அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாயிருக்கின்றான். - குர்ஆன் : 8 : 70

என்றாலும், நிச்சயமாக வாழ அனுமதிக்கப்படக் கூடாத ஒரு மனிதரும் இருக்கவே செய்தார் - அபூஜஹ்ல். அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். எனினும் அவரது உடம்பைத் தேடிப் பிடிக்கும்படி நபிகளார் உத்தரவிட்டார்கள். அப்த்-அல்லாஹ்-இப்ன்-மஸ்ஊத் மீண்டும் யுத்த களம் சென்று, மக்காவில் இஸ்லாத்திற்கெதிராக மக்களைத் தூண்டிவிடும் பெரும் பணியை முன்னின்று நடாத்திய அந்த உடம்பைக் கண்டு கொண்டார். தன் உடம்பின் மீது ஏறி நின்ற எதிரியை அடையாளம் காணக் கூடியளவு உயிர் அபூ ஜஹ்லின் உடம்பில் இன்னமும் இருந்தது. கஃபாவின் முன்னால் குர்ஆனை உரத்து ஓதிய முதல் மனிதர் அப்த்-அல்லாஹ். அவ்வேளை அவரைப் பலமாகத் தாக்கி அவரது முகத்தில் காயத்தை ஏற்படுத்தியிருந்தார் அபூ ஜஹ்ல். வெறுமனே ஸுஹ்ராவின் ஒரு கூட்டுறவாளராக, வறியவராக, அடிமையாயிருந்த ஒரு தாயின் மகனாக அப்போதிருந்த அப்த்-அல்லாஹ், இப்போது தனது பாதத்தை உயர்த்தி அபூ ஜஹ்லின் கழுத்தில் வைத்தார். “ நிச்சயமாக அதிக உயரம் ஏறிவிட்டாய் சின்னச்சிறு இடையனே! ” என்ற அபூ ஜஹ்ல், அன்றைய தின யுத்தம் யாருக்குச் சார்பாகச் சென்றதென வினவினார். மறு நாள் அது மறுபக்கத்துக்குச் சார்பாகச் செல்லும் என்ற கருத்து அவரது வினாவில் தொனித்தது. “ அல்லாஹ்வும் அவனது தூதரும் வெற்றி பெற்றார்கள் ” எனப் பதிலிறுத்த அப்த்-அல்லாஹ், அவரது தலையை வெட்டியெடுத்து நபிகளாரிடம் கொண்டு சென்றார். 

இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment