Tuesday, 5 November 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ரை நோ க் கி

மதீனாவிலிருந்தும் தென்புறம் நோக்கிய நேர்பாதையை விட்டும் பத்ரை நோக்கித் திரும்பினார்கள் நபிகளார். இது ஸிரிய-மக்கக் கரையோரப் பாதையில் படையினர்க்கு மேற்குப் புறமாக அமைந்திருந்தது. அபூஸுப்யானை பத்ரில்தான் மடக்கிப் பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்ட நபிகளார், அப்பிரதேசத்தை நன்கு அறிந்திருந்த ஜுஹைனாவைச் சேர்ந்த இரு கூட்டுறவாளர்களை வர்த்தகக் குழு குறித்த உளவு பார்த்து வரவென அனுப்பினார்கள். பத்ரில் அவர்கள் கிணற்றின் அருகிலிருந்த ஒரு குன்றினை அடைந்தனர். அவர்கள் தண்ணீர் அள்ளச் சென்றபோது, கிராமத்துப் பெண்கள் இருவர் கடன் விவகாரம் ஒன்று குறித்து உரையாடிக் கொண்டிருந்தமையைச் செவியுற்றனர். “ வர்த்தகக் குழு நாளை அல்லது மறு நாள் வரும் ; நான் அவர்களுக்காக வேலை செய்து உனக்குத் தரவேண்டியிருப்பதைத் தந்து விடுகின்றேன் ” என ஒரு பெண் மற்றவளிடம் கூறினாள். உலவாளிகள் இருவரும் இச்செய்தியை எடுத்துக் கொண்டு நபிகளாரிடம் விரைந்தனர். அவர்கள் இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தால் மேற்குப் புறத்திலிருந்து இக்கிணற்றை நோக்கி ஒரு தனித்த உருவம் வந்ததனை அவதானித்திருப்பர். அது - அபூஸுப்யான். குறுக்குப் பாதை வழியாக, பத்ரின் ஊடே மக்கா சென்றடைவது பாதுகாப்பானதாவென்றறிய, தன் குழுவினருக்கு முன்னால் தனியே வந்திருந்தார் அவர். கிணற்றின் அருகே கிராமத்தவர் ஒருவரிடம், புதிய மனிதர்களது நடமாட்டமேதும் அப்பகுதியில் தென்பட்டதா என வினவினார். மேலே இருக்கும் குன்றில் தங்கியிருந்த இருவர் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டு சென்றதைத் தான் கண்டதாகக் கூறினார் அக்கிராமத்தவர். அபூஸுப்யான் உடனே அவர்கள் தங்கியிருந்த குன்றினை அடைந்து அங்கு கிடந்த ஒட்டகச் சாணத்தில் சிறிதை எடுத்து உடைத்துப் பார்த்தார். அதில் சில பேரீச்சம் விதைகளிருந்தன. “ ஓ இறைவா! இது யத்ரிபின் மிருக தானியம்! ” எனக் கூறித் தனது குழுவினரிடம் உடனடியாகத் திரும்பிய அபூஸுப்யான், அவர்களை நேர் பாதையினின்றும் விலக்கிக் கடலோரத்தைச் சார்ந்து மிக வேகமாகக் கொண்டு செல்லலானார்.


இதேவேளை உளவு பார்ப்போர் இருவரும் மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் இவ்வர்த்தகக் குழு பத்ரை அடையும் என்ற செய்தியை நபிகளாருக்குத் தெரியப்படுத்தினர். அவர்கள் நிச்சயமாக பத்ரில் தங்குவார்கள் ; மக்க - ஸிரிய பாதையில் இது முக்கியமானதொரு தரிப்பிடமாக விளங்கியது. அவர்களைத் திகைப்புறுத்தவும் வெற்றி கொள்ளவும் முஸ்லிம்களுக்குப் போதிய கால அவகாசம் இருந்தது.
வர்த்தகக் குழுவைக் காப்பாற்றக் குறைஷியர்கள் ஒரு படையுடன் கிளம்பி வருகின்றார்கள் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது. முன்னமேயே, எதிர்பார்க்கக் கூடியதோர் அம்சமாக இது இருந்த போதிலும், இப்போது அது மெய்ம்மையாகிவிடவே, அது குறித்துத் தன் மக்களுடன் கலந்தாலோசிப்பதே தகும் எனக் கண்டனர் நபிகளார். முன்னேறிச் செல்வது அல்லது பின்வாங்குவது - இவற்றில் ஒன்றை அவர்களே தெரிவு செய்து கொள்ள வேண்டும் என அன்னார் கருதினர். முஹாஜிர்களின் சார்பில் அபூபக்ரும் உமரும் முன்னேறிச் செல்ல வேண்டுமென்பதற்குச் சார்பாகப் பேசினார்கள். அவர்கள் பேசியன அனைத்தையும் உறுதிப்படுத்துவது போல, பனீஸுஹ்ராவின் ஒரு கூட்டுறவாளரும் அண்மையில் தான் மதீனாவுக்கு வந்து சேர்ந்தவருமான மிக்தாத் எழுந்து
“ ஓ அல்லாஹ்வின் தூதரே! இறைவன் உமக்குக் காட்டியவற்றையே நீர் செய்வீராக! மூஸாவுக்கு இஸ்ரவேலின் சந்ததிகள் கூறியது போல் நாம் கூறமாட்டோம் ; நீரும் உம்முடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) யுத்தம் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம். (குர்ஆன் : 5 : 24) மாறாக நாம் கூறுவோம் : ‘நீரும் உமது இறைவனும் சென்று யுத்தம் புரியுங்கள். உங்களுடன் நாங்களும் சேர்ந்து யுத்தம் புரிவோம் - வலப்புறமும் இடப்புறமும் ; முன்னாலும் பின்னாலும். ” 

இதைக் கேட்டதும் நபிகளாரின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் குறித்தும், அன்னார் மிக்தாதை ஆசீர்வதித்தமை குறித்தும் பின்னைய காலங்களில் அப்த்-அல்லாஹ்-இப்ன்-மஸ்ஊத் கூறுவார். நபிகளார் இதனால் ஆச்சரியப்படவில்லை. முஹாஜிர்கள் பூரணமாகவே தம்முடன் தான் இருப்பார்கள் என்ற உறுதி அன்னாரிடமிருந்தது. ஆனால் இதே மாதிரித்தான் அன்ஸாரிகளும் நடந்து கொள்வர் என கூற முடியுமா? வர்த்தகக் குழுவைக் கைப்பற்றும் நோக்குடன் தான் படை மதீனாவிலிருந்தும் கிளம்பியது. இப்போது அதைவிட மிகப் பயங்கரமானதொரு நெருக்கடி நிலையை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அதற்கும் மேலாக அன்ஸாரிகள் அகபாவில் வாக்குறுதியளித்தபோது, தமது எல்லைக்குள் நபிகளார் வரும் வரை அன்னாரின் பாதுகாப்புக்குத் தாம் பொறுப்பாளிகளல்லர் என்றும், அவர்களோடிருக்கும் நிலையிலேயே தம் பெண்களையும் தம் குழந்தைகளையும் காப்பது போல நபிகளாரை காப்பர் என்றும் கூறியிருந்தனர். யத்ரிபின் எல்லைகளைவிட்டும் வெளியேறியிருக்கும் இப்போதைய நிலையில் தமது எதிரிகளுக்கு எதிராக அன்ஸாரிகள் துணை நிற்பார்களா? “ மக்களே! எனக்கு உங்கள் அறிவுரையைக் கூறுங்கள். ” என நபிகளார் பொதுப்பட அனைவரையும் விளித்துக் கூறினார்கள். உண்மையில் அது அன்ஸாரிகளைக் குறித்தே கூறப்பட்டது. அன்ஸாரிகளில் சிலர் நபிகளாரின் சிந்தையை உணர்ந்திருந்தனர். எனினும் எவரும் இதுவரை எதுவும் பேசவில்லை. அப்போது ஸஅத்-இப்ன்-முஆத் எழுந்து நின்றார். “ ஓ அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்கள் எனக் குறித்தது எம்மைத்தான் எனத் தோற்றுகிறது ” என்றார் அவர், நபிகளார் ஆம் எனக் குறிப்புணர்த்தவும் ஸஅத் கூறினார் : 

“ உங்களில் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். நீங்கள் கூறுவனவற்றை நாங்கள் விசுவாசிக்கின்றோம். நீங்கள் எமக்குக் கொண்டுவந்துள்ளது சத்தியமே என நாம் சாட்சி கூறுகின்றோம். நீங்கள் கூறுவனவற்றையே கேட்டு அடிபணிய நாம் வாக்குறுதி அளித்துள்ளோம். எனவே நீங்கள் விரும்புவதையே செய்யுங்கள். நாங்கள் உங்களுடனேயே இருக்கின்றோம். உங்களைச் சத்தியத்தோடு எவன் அனுப்பினானோ அவன் பெயரில் நிச்சயமாக, சமுத்திரத்தைக் கடக்கும்படி நீங்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு, நீங்கள் அதில் பாய்வீர்களாயின் உங்களுடன் நாங்களும் அதனுள் பாய்வோம். எங்களில் ஒரு மனிதனாவது பின்னிற்கப் போவதில்லை. நாளை நமது எதிரியைச் சந்திப்பதனை விரும்பாதவர்களல்ல நாம். யுத்தங்களில் நன்கு பயிற்றப்பட்டவர்கள் நாங்கள். போர்களில் நம்பிக்கைக்குறியவர்கள், கண்களுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய*தான எமது பெரும் பலத்தை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தரக் கூடும். எனவே அல்லாஹ்வின் அருளுடன் எங்களை வழி நடாத்துங்கள். ”

இவ்வார்த்தைகளினால் நபிகளார் மிக்க மனமகிழ்வெய்தினார்கள். அத்தோடு தாம் இப்போது ஒன்றில் குறைஷிப்படையினருடன் அல்லது வர்த்தகக்குழுவுடன் மட்டுமே போராட வேண்டியுள்ளதென்பதையும் நிச்சயப்படுத்திக் கொண்டனர் ; இரண்டுடனுமல்ல. நபிகளார் கூறினார்கள் :

“ முன்னேறுங்கள் ; உற்சாகத்தோடிருங்கள். அனைத்துக்கும் மேலான அல்லாஹ் இரண்டில் ஒரு கூட்டத்தாரை எனக்கு வாக்களித்துள்ளான். இப்போது கூட எதிரி முகங்குப்புற வீழ்ந்து கிடப்பதை நான் காண்பது போலிருக்கின்றது. ” - இ.இ. 435


படையினர் எந்தவொரு மோசமான நிலையையும் எதிர் கொள்ளத் தயாராய் விட்டனர். என்றாலும் கூட குறைஷியப் படைகள் வந்து சேரமுன்னர் தாம் வர்த்தகக் குழுவை அடிப்படுத்தி மிகுந்த செல்வத்துடனும் கைதிகளுடனும் மதீனாவுக்குத் திரும்பி விடலாம் என்ற அவாவுடனானதொரு நம்பிக்கையும் அவர்களிடமிருந்தது. பத்ரிலிருந்து ஒரு நாள் பிரயாண தூரத்துக்கும் குறைவானதொரு தரிப்பிடத்தினை அவர்கள் சேர்ந்ததும் நபிகளார் அபூபக்ருடன் முன்னால் சென்று, ஒரு முதியவரிடமிருந்து பெற்றுக் கொண்ட சில விவரங்கள் மூலம் மக்கத்துப் படைகள் ஏற்கெனவே அருகில் வந்துவிட்டன என அறிந்து கொண்டனர். பாசறைக்கு மீண்டும் வந்து, இரவு வரை காத்திருந்து, தமது ஒன்று விட்ட சகோதரர்கள் அலீ, ஸுபைர், ஸஅத் ஆகியோருடன் மேலும் சிலரையும் பத்ர் கிணற்றடிக்கு அனுப்பி வைத்தார்கள். மக்கத்துப் படை அல்லது வர்த்தகக் குழு அல்லது இவையிரண்டும் கிணற்றிலிருந்து தண்ணீர் பெற்றுளவா என, அல்லது அங்குள்ள எவரும் இவை குறித்து ஏதும் அறிந்துளரா என அறிந்து வரும்படி அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். கிணற்றடியில் அவர்கள், குறைஷிப்படையினருக்கெனத் தமது ஒட்டகங்களில் தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்த இருவரைக் கண்டு, அவர்களைக் கைது செய்து நபிகளாரிடம் கூட்டி வந்தார்கள். அவர்கள் வந்த வேளை அன்னார் தொழுது கொண்டிருந்தனர். நபிகளார் தொழுதுகையை முடித்து வரும் வரை காத்திராது அவர்களே அவ்விருவரையும் விசாரிக்கத் தொடங்கினர். இராணுவத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்பவர்கள் தாம் எனக் கூறினர் இருவரும். என்றாலும் அவர்களை விசாரணை செய்தோரில் சிலர் கைதிகள் இருவரும் பொய்யே கூறுகின்றார்கள் எனக் கொள்ளவே விரும்பினர். தாம் மிக்க ஆர்வத்துடன் எதுர்பார்த்து வந்திருந்த வர்த்தகக் குழுவுக்குத் தண்ணீர் கொண்டு செல்பவர்களாக இவர்கள் இருந்துவிடக் கூடாதா என்ற ஒரு வகை நப்பாசையினால் உந்தப்பட்டவர்களாக, அவர்கள், கைதிகளைத் தாக்கலானார்கள். இறுதியில் “ நாங்கள் அபூஸுப்யானின் ஆட்கள் ” என அவர்கள் கூறியதோடு இம்சை நின்றது. தொழுகையை முடித்து எழுந்த நபிகளார் கூறினார்கள் :

“ அவர்கள் உண்மையே கூறியபோது நீங்கள் அவர்களைத் தாக்கினீர்கள். பொய் சொன்னவுடன் விட்டு விட்டீர்கள். அவர்கள் உண்மையிலேயே குறைஷிய இராணுவத்தினர். ”
பின்னர் கைதிகளை நோக்கி, “ குறைஷியர் இப்போது எங்கே இருக்கிறார்கள்? ” என வினவினர் நபிகளார். அகன்காலைச் சுட்டிக்காட்டிய அவர்கள், “ இந்த மலைக்கு அப்பால் உள்ள வெளியினை அடுத்த பள்ளத்தாக்கில் தங்கியிருக்கின்றார்கள் ” என்றனர். “ அவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? ” எனக் கேட்டனர் நபிகளார். 
“ பலர் ” எனக் கூறுவதைத் தவிர மேலும் நிச்சயமான விவரங்களெதையும் கொடுக்க அவர்களால் முடியவில்லை. தினமும் எத்தனை மிருகங்கள் அறுக்கப்படுகின்றனவென வினவினர் நபிகளார். “ சில நாட்களில் ஒன்பது ; சில நாட்களில் பத்து ” எனப் பதில் வந்தது. “ அப்படியானால் அங்கே தொளாயிரத்துக்கும் ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தொகையினர் இருக்கின்றார்கள் ” எனக் கூறிய நபிகளார், தொடர்ந்தும், “ குறைஷியரின் தலைவர்களில் யாரெல்லாம் அங்குள்ளார்கள்? ” எனக் கேட்டார்கள். கைதிகள் பதினைந்து பெயர்களைச் சொன்னார்கள். அவற்றுள் சில ; அப்த்-ஷம்ஸினின்றும் சகோதரர்களான உத்பா, ஷைபா ; நவ்பலிலிருந்து ஹாரித், நுஐமா ; அப்த்-அத்தாரிலிருந்து நத்ர் - இவரே குரஆனுக்கெதிராக பாரசீக கவிதைகள் கூறியவர் ; மக்ஸுமிலிருந்து அபூஜஹ்ல் ; ஜுமாஹ்விலிருந்து உமையா ; ஆமிரிலிருந்து ஸுஹைல். பிரபல்யம் வாய்ந்த இப்பெயர்களைக் கேட்டு, தமது மக்களிடம் சென்ற நபிகளார் கூறினார்கள் :

“ மக்கா தன் ஈரலின் சிறந்த துண்டுகளை உங்கள் முன் வீசியுள்ளது ”


ஆயிரம் பேரளவு கொண்தொரு படை கிளம்பி வந்துள்ள செய்தி அபூஸுப்யானை விரைவாகவே அடைந்தது. அவ்வேளை அவர் போதிய தூரம் சென்றிருந்தார். அவரது வர்த்தகக் குழுவுக்கும் மதீனத்து எதிரிகளுக்குமிடையில், அவரைக் காப்பாற்ற வந்த மக்கத்துப் படையினர் இருந்தனர். வர்த்தகக் குழு இப்போது ஆபத்துகளைக் கடந்து பாதுகாப்பாக இருக்கின்றதென்பதை உணர்ந்து கொண்ட அபூஸுப்யான் “ உங்களது ஒட்டகங்களையும், மக்களையும், பொருட்களையும் பாதுகாக்கவென நீங்கள் வந்தீர்கள் ; இறைவன் காப்பாற்றி விட்டான். நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் ” எனக் குறைஷியருக்குச் செய்தியனுப்பினார். பத்ருக்குச் சிறிது தெற்கே, ஜுஹ்பா எனும் இடத்தில் படையினர் பாசறையமைத்திருந்த போது இச்செய்தி சென்று சேர்ந்தது. குறைஷியர் இதற்கும் மேலாக முன் செல்லக் கூடாது என்பதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. முத்தலிபைச் சேர்ந்த ஜுஹைம் என்பார் கண்ட கனவு - உண்மையில் ஒரு பிரமை - முழுப்பாசறையிலும் ஒரு வகை விசனத்தை உண்டு பண்ணியிருந்தது :
“ உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்டதொரு நிலையில், குதிரையிலேறியவராக ஒரு மனிதர் ஓர் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு என்னிடம் வந்து கூறினார் : ‘உத்பா, ஷைபா, அபுல்-ஹகம், உமையா எல்லோரும் கொல்லப்பட்டனர்’. ” அக்குதிரை வீரர் கூறிய மேலும் பல குறைஷித் தலைவர்களின் பெயர்களையும் குறித்த ஜுஹைம் தொடர்ந்து, “ பின்னர், அம்மனிதர் தனது ஒட்டகத்தின் நெஞ்சில் கத்தியால் குத்தி அதனைப் பாசறை முழுவதும் ஓட விட்டார். அதன் இரத்தத்தால் மாசுபடாத ஒரு கூடாரமாவது இருக்கவில்லை ” என்றார். இது அபூஜஹ்லை எட்டியபோது அவர் கேலிச் சிரிப்பொன்றனை உதித்தவராக, 
“ இதோ முத்தலிபின் மக்களிலிருந்து மற்றுமோர் இறைதூதர் ” என்றார். ‘மற்றுமோர்’ அவர் குறித்ததற்குக் காரணம், முத்தலிப், ஹாஷிம் கோத்திரத்தவர்கள் பெரும்பாலும் ஒரே கோத்திரத்தவர்களாகவே கருதப்பட்டமையாகும். பின் பாசறையிலிருந்த விசனத்தைக் கலைக்கும் வகையில் அபூஜஹ்ல் கூறினார் : “ இறைவன் பெயரால் நிச்சயமாக நாங்கள் பத்ரை சென்றடையாது திரும்ப மாட்டோம். அங்கு நாம் மூன்று நாட்கள் தங்கியிருப்போம். ஒட்டகங்களை அறுத்து விருந்து செய்வோம். மது ஓடச் செய்வோம். எமக்காகப் பாடகிகள் பாடி விளையாடுவார்கள். நாம் அணிவகுத்து முன் சென்றதையும், எமது பெரிய கூட்டத்தையும் பற்றி அறபிகள் அனைவருமே அறிந்து கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் எம்மைப் பார்த்து வியந்தவர்களாகவே இருப்பார்கள். எல்லோரும் முன்னேறுவோம் பத்ரை நோக்கி! ”


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

* மகிழ்வையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்த அராபியர் பெரிதும் பயன்படுத்தும் தொடர் “ கண்களுக்குக் குளிர்ச்சி தரும் ”

No comments:

Post a Comment