Tuesday, 8 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ரை நோ க் கி


அபூஸுப்யான் ஸிரியாவிலிருந்து திரும்பி வரும் காலம் நெருங்கி வந்தது. நபிகளார் தல்ஹாவையும், உமரின் ஒன்றுவிட்ட சகோதரரும், ஹனீப் ஆன ஸைதின் மகனுமான ஸஈதையும் மதீனாவின் மேற்குப் புறக் கடலோரமாயமைந்திருந்த ஹவ்ரா எனும் இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அபூஸுப்யானின் வர்த்தகக் குழு வந்து சேர்ந்ததும் செய்தி கொண்டு வரும்படி இருவரும் பணிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் நபிகளார் தென்மேற்கு நோக்கி விரைந்து சென்று வர்த்தகக் குழுவை முந்திக் கொள்ள இயலும். உளவாளிகள் இருவரையும் ஜுஹைனாவின் தலைவர் தாராண்மையுடன் வரவேற்று வர்த்தகக் குழு அப்பிரதேசத்தைக் கடந்து செல்லும்வரை அவர்களைத் தனது வீட்டில் ஒளித்து வைத்திருந்தார். அவர்களது சிரமங்கள் அனைத்தும் வீண் விரயமாகவே முடிவுற்றன. மதீனாவில் யாரோ ஒருவர் - ஒரு யூதர் அல்லது வஞ்சகர் என்பதில் ஐயமில்லை - நபிகளாரின் திட்டங்கள் குறித்து அபூஸுப்யானுக்கு செய்தியனுப்பியிருந்தார். உடனே அபூஸுப்யான் கிபாரிக் கோத்திரத்தவரான தம்தம் என்பாரை வேலைக்கமர்த்தி, மக்காவுக்கு ஓர் அவசர செய்தியை அவர் மூலம் அனுப்பி வைத்தார். வர்த்தகக் குழுவைக் காப்பாற்றிக்கொள்ளக் குறைஷியர் உடனடியாக ஒரு படையுடன் கிளம்பி வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்தோடு தானும் கரையோரப் பாதை வழியே இயன்றளவு விரைவாக, இரவும் பகலும் ஓய்வின்றி தன் குழுவினரை வழி நடாத்திச் சென்றார் அபூஸுப்யான்.


அபூஸுப்யானுக்கு மாத்திரம்தான் அவசரம் என்பதல்ல. மதீனாவில் இயன்றளவு தாமதித்துச் செல்ல நபிகளார் விரும்பியமைக்கு தக்க காரணங்களிருந்தன. அன்னாரின் அன்புக்குரிய மகள் ருகையா கடுமையான சுகவீனமுற்றிருந்தார். என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வேளையல்ல இது. காலதாமதம் செய்வது உசிதமல்ல எனக்கருதிய நபிகளார் உளவாளிகள் திரும்பி வரும் வரை கூட காத்திருக்கவில்லை. அவர்கள் மீண்டும் மதீனாவை வந்து சேரும் முன்னமேயே, நபிகளார் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் கொண்டதோரு படையுடன் வெளியேறிவிட்டார்கள். படையில் மொத்தம் முந்நூற்றைந்து பேர் இருந்தனர். அவ்வேளையில் மதீனாவில் வலிமை வாய்ந்தவர்களாயிருந்த எழுபத்தேழு முஹாஜிர்களுள் மூவர் தவிர ஏனையோரனைவரும் படையெடுப்பில் பங்கு பற்றினர். நபிகளார், தமது மருமகன் உத்மானை வீட்டிலேயே தங்கியிருந்து தன் சுகவீனமுற்ற மனைவியை கவனித்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். மற்ற இருவர் தல்ஹாவும் ஸஈதும். உளவாளிகளாகச் சென்றிருந்த அவர்கள் திரும்பி வர முன்னமேயே படை கிளம்பி விட்டது.
மதீனாவின் எல்லைக்குள்ளேயே இருந்த முதலாவது தரிப்பிடத்தில் நபிகளாரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஸுஹ்ராவின் ஸஅத், தனது பதினைந்து வயதே நிரம்பிய சகோதரர் உமைர் குழப்பமுற்றவராகவும் அமைதியிழந்தவராகவும் காணப்பட்டமையை அவதானித்தார். பிரச்சினை என்னவென்று விசாரித்தபோது உமைர் கூறினார் :

“ நான் மிகவும் வயது குறைந்தவன் எனக் கருதி அல்லாஹ்வின் தூதர் என்னைத் திருப்பியனுப்பி விடலாம் என நான் அஞ்சுகின்றேன். எப்படியும் முன் செல்லவே நான் விரும்புகின்றேன். இறைவன் எனக்கு வீரமரணத்தை அருள் செய்யக் கூடும். ” 

அவர் அஞ்சியது போலவே, படைவீரர்களை அணிவகுப்பு செய்தபோது நபிகளார் அவரை அவதானித்து அவர் வயது குறைந்தவரென்றும், வீடு திரும்பும்படியும் கூறினார்கள். கண்ணீர் விடலானார் உமைர். அது, படையினரோடு தானும் செல்ல அனுமதியைப் பெற்றுக் கொடுத்தது. பின்னர் ஸஅத் கூறினார் : 
“ அவர் மிகவும் சிறியவராக இருந்தார். அவரது வாளைத் தொங்கவிடும் இடைவாரை அவருக்காக நானே மாட்டி விட்டேன். ”


எழுபது ஒட்டகங்களே இருந்தன. ஒருவருக்கொருவர் மாறி மாறி அவற்றில் பிரயாணம் செய்தனர். மூவர் அல்லது நால்வருக்கு ஓர் ஒட்டகம். மூன்று குதிரைகளும் காணப்பட்டன. அவற்றில் ஒன்று ஸுபைருடையது. வெண்ணிறக் கொடி முஸ்அப்பிடம் கொடுக்கப்பட்டது. குறைஷியரின் யுத்த நடவடிக்கைகளின் போது கொடி தாங்கிச் செல்லும் பணி, மரபு ரீதியாக அப்த்-அத்-தார் கோத்திரத்தார்க்குறியதாகவே இருந்து வந்தது. முஸ்அப்பும் அதனையே சார்ந்திருந்தார். முன்னணிச் சேனையை அடுத்து நபிகளாரே வந்தார்கள். அன்னாரின் முன்னால் கரு நிறக் கொடிகள் இரண்டு ஏந்திச் செல்லப்பட்டன. ஒன்று முஹாஜிர்களுக்கு, மற்றது அன்ஸாரிகளுக்கு. இவை முறையே அலீ, அவ்ஸ்களைச் சார்ந்த ஸஅத்-இப்ன்-முஆத் ஆகியோரின் கரங்களில் திகழ்ந்தன. மதீனாவில் நபிகளார் இல்லாதிருக்கக் கூடிய காலங்களில் இப்ன்-உம்ம்-மக்தூம் என்பாரே அங்கு தொழுகைகளை நடாத்தும் பொறுப்பளிக்கப்பட்டார். இவரே, ‘அவர் கடு கடுத்தார் : புறக்கணித்தார் ; தன்னிடம் ஓர் அந்தகர் வந்ததற்காக’ என்ற இறைவசனங்களில் குறிக்கப்பட்ட அந்தகர்.


மக்காவில் தம்தம் வந்து சேரச் சற்று முன்னர், நபிகளாரின் மாமியார் ஆதிகா கண்டதொரு கனவு அவரைத் திகிலுறச்செய்து, குறைஷியர் ஒரு பேரழிவை எதிர் நோக்கியிருக்கின்றனர் என்ற எண்ணத்தை அவருள் எழுப்பியது. தன் சகோதரர் அப்பாஸை அழைத்துத் தான் கண்ட கனவை விவரித்தார் ஆதிகா :

“ ஒட்டகமொன்றின் மீது அமர்ந்தவராக ஒரு மனிதர் பரந்த வெளியில் வந்து நின்று உரத்த குரலில் சப்தமிட்டார் : ‘விரைந்து சென்று விடுங்கள் ஓ துரோகத்தின் மக்களே! மூன்றே நாட்களில் முகங் குப்புறக் கவிழச் செய்யும் பேரழிவொன்று உங்களை எதிர் நோக்கியிருக்கின்றது.’ மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். தன்னைத் தொடர்ந்து வந்தவர்களோடு அவர் பள்ளிவாசலினுள் நுழைந்தார். அவர்கள் மத்தியிலிருந்து அவரது ஒட்டகம் அவரைக் கஃபாவின் கூரைக்குத் தூக்கிச் சென்றது. அங்கிருந்தும் அவர் முன்போலவே எச்சரிக்கை விடுத்தார். பின் அவரது ஒட்டகம் அவரை குபைஸ் மலைக்குத் தூக்கிச் சென்றது. முன்போலவே அவர் இப்போதும் மக்களை நோக்கிச் சப்தமிட்டார். பின் அவர் ஒரு பெருங்கல்லைப் பிடுங்கிப் பள்ளத்தில் வீசியெறிந்தார். அது அடிவாரத்தையடைந்ததும் துகள் துகளாய்ப் போயிற்று. மக்காவில் அதனால் தாக்கப்படாத ஒரு வீடோ உறைவிடமோ இருக்கவில்லை. ”


தன் சகோதரியின் கனவை உத்பாவின் மகனும் தனது நண்பருமான வலீதிடம் கூறினார் அப்பாஸ். வலீத் தன் தந்தையிடம் கூறினார். நகர் முழுவதும் இச்செய்தி பரவிவிட்டது. அடுத்த நாள் மிக்க மகிழ்ச்சியுடன் அப்பாஸ் முன் தோற்றிய அபூஜஹ்ல் பரிகாச வார்த்தை பேசலானார் : 

“ ஓ முத்தலிபின் மக்களே! எப்போதிருந்து உங்களிடம் இந்தப் பெண் இறைதூதர் தனது தீர்க்க தரிசனங்களைக் கூறி வருகின்றார்? உங்களது ஆண்கள் இறைதூதுவ நாடகம் ஆடுவது போதாதா? பெண்களும் கூட அதைச் செய்ய வேண்டுமா? ”. 

அப்பாஸினால் அக்கேள்விக்கு உடனடியான பதிலேதும் கொடுக்க முடியவில்லை. ஆனால் அடுத்த நாள் காலை அபூ குபைஸின் பாறைகள் தம்தமின் உரத்த குரலை எதிரொலித்து அபூ ஜஹ்லின் கேள்விக்குப் பதிலளித்தன. பரந்த வெளியில் தம்தம் இருந்த இடம் நோக்கி மக்கள் தத்தம் வீடுகளிலிருந்தும் பள்ளிவாசலிலிருந்தும் ஓடலாயினர். தம்தமுக்குரிய ஊதியத்திலும் அதிகமாகவே அளித்திருந்தார் அபூஸுப்யான். ஆகவே தம்தமும் தனது பாத்திரத்தைச் செவ்வனே செய்து முடிக்கத் தீர்மானம் செய்திருந்தார். சேணத்தை மறுபுறம் வைத்து ஒட்டகத்தின் தலைக்குத் தன் முதுகுப் புறத்தைக் காட்டியவராக அமர்ந்திருந்தார் அவர். பேராபத்தின் மற்றுமொரு அறிகுறியாக ஒட்டகத்தின் அறுக்கப்பட்டிருந்த மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தாறு மாறாகக் கிழிக்கப்பட்டிருந்த மேலங்கியொன்றனை அணிந்திருந்த தம்தம் உரத்த குரல் எழுப்பினார் : 

“ குறைஷி மக்களே! பொதி சுமந்த உங்களது ஒட்டகங்களும் அபூஸுப்யானிடமுள்ள உங்களது பொருட்களும் பேராபத்தில்! முஹம்மதுவும் சகாக்களும் அவற்றைத் தாக்குகின்றார்கள்! உதவி! உதவி!! ”


மக்க நகர் முழுவதுமே பெரும் குழப்பத்துக்குள்ளானது. அபாயத்துக்குள்ளாகியிருக்கும் வர்த்தகக் குழு வருடத்திலேயே மிக்க செல்வம் பொருந்தியது. அது ஆபத்துக்குள்ளாவதனால் கவலைக்குள்ளாவோர் பலர் இருந்தனர். ஆயிரம் பேரளவினதான ஒரு படை உடனே தயார் செய்யப்பட்டது. 

“ இதுவும் இப்ன்-அல்-ஹத்ரமீயின் வர்த்தகக் குழு போன்றதென்று முஹம்மதுவும் அவரது சகாக்களும் நினைத்துக் கொண்டனரோ? ” என்றனர் குறைஷித் தலைவர்கள். 

இது, புனித மாதத்தின் போது நக்லாவில், அம்பினால் கொல்லப்பட்ட அம்ரைக் குறித்தது. அம்ர், அப்த்-ஷம்ஸின் கூட்டுறவாளர். தயாராகி வந்த படையெடுப்பில் கலந்து கொள்ளாது தனித்து நின்ற கோத்திரம் அதீ. ஏனைய எல்லா கோத்திரங்களது தலைவர்களும் தத்தம் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியோராக முன்வந்திருந்தனர் - அபூலஹபைத் தவிர, தனக்குப் பதிலாக அவர், தனது கடனாளியாக இருந்த ஒரு மக்ஸுமியை அனுப்பியிருந்தார். பனீ ஹாஷிம்களும், பனீ அல்-முத்தலிப்களும் கூட அவ்வர்த்தகக் குழுவில் உரிமை கொண்டோராயிருந்தனர். எனவே அதனைப் பாதுகாப்பது ஒரு கெளரவப் பிரச்சினையாயமைந்தது. ஆக, இரு கோத்திரத்தார்களையும் உள்ளடக்கியதொரு படைப்பிரிவின் தலைவராகத் தாலிப் முன் வந்தார். அப்பாஸும் அவர்களுடன் சென்றார். சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது அப்பாஸின் நோக்கமாக இருந்திருக்கலாம். கதீஜாவின் மருமகன், அஸத் கோத்திரத்து ஹகீமும் இதே நோக்கத்தவராகச் சென்றார். அபூலஹபைப் போலவே, ஜுமாஹ்களின் உமையாவும் பின் தங்கி விடவே முடிவு செய்திருந்தார். முதுமையடைந்து, பருத்த உடலினராக இருந்த அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்க, உக்பா ஒரு வாசனைக் கலசத்தை அவர் முன் வைத்து 

“ உம்மை வாசனைப் படுத்திக் கொள்ளும் ஓ அபூ அலீயே! நீர் பெண்களைச் சார்ந்தவராக இருக்கின்றீர் ” என்றார். “ இறைவன் உம்மைச் சபிப்பானாக! ” எனக் கூறி ஏனையோருடன் தானும் செல்வதெற்கென எழுந்தார் உமையா.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment