Saturday, 5 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ஹி ஜ் றா


இதேவேளை நபிகளார் அபூபக்ரிடம் சென்றிருந்தார்கள். கால தாமதமேதும் செய்யாமல், அபூபக்ரின் வீட்டின் பின்புறம் இருந்த ஜன்னல் ஒன்றன் வழியாக அவர்கள் வெளியேறி, சேணம் பூட்டப்பட்டு இவர்களுக்கெனத் தயாராக வைக்கப்பட்டிருந்த இரு ஒட்டகங்களும் இருந்த இடத்தை அடைந்தனர். நபிகளார் ஒன்றன் மீது ஏறிக் கொண்டார்கள். அபூபக்ரும் அவருடைய மகன் அப்த்-அல்லாஹ்வும் அடுத்ததில் ஏறிக் கொண்டனர். அவர்கள் திட்டமிட்டிருந்தபடி தென் புறத்திருந்த தவ்ர் மலையின் ஒரு குகையை அடைந்தனர். இது யெமனுக்குச் செல்லும் வழியில் இருந்தது.

நபிகளார் காணாமற் போய் விட்டமை தெரிய வந்ததுமே நகரின் வட பகுதிச் சுற்றுப்புறம் முழுவதும் தேடுதல் குழுக்கள் அனுப்பப்படும் என்பதனை உணர்ந்திருந்தமையாலேயே அவர்கள் தென்புறமாகச் சென்றனர். மக்காவிலிருந்தும் வெளியேறிச் சென்றதும் நபிகளார் தனது ஒட்டகத்தை நிறுத்திப் பின்னால் திரும்பி மக்காவை நோக்கிக் கூறினார்கள் :

“ இறவனின் உலக முழுவதிலும் நீயே எனக்கு மிகவும் விருப்பமான இடம் ; இறைவனுக்கும் மிக விருப்பமான இடம். எனது மக்கள் என்னை விரட்டி விடாதிருந்தால் நான் ஒரு போதும் உன்னை விட்டு நீங்கி இருக்க மாட்டேன் ”.

அபூபக்ரால் வாங்கி விடுதலை செய்யப்பட்டு இப்போது அபூபக்ரின் மந்தைகளுக்குப் பொறுப்பாக இருந்த ஆமிர்-இப்ன்-புஹைரா இவர்களைப் பின் தொடர்ந்து வந்தார். பிரயாண அடையாளங்களை மறைத்து விடுவது அவரது நோக்கமாயிருந்தது. அபூபக்ர் தன் மகனை ஒட்டகங்களுடன் வீட்டுக்குத் திருப்பியனுப்பி, நபிகளார் மக்காவில் இல்லாமை தெரிய வந்ததும் நகரில் என்ன பேசப்படுகின்றது என்பதை அவதானித்து அடுத்த நாள் இரவு வந்து கூறும்படி வேண்டினார். ஆமிர் வழக்கம் போல் தனது செம்மறியாடுகளை ஏனைய இடையர்களுடன் சேர்ந்து மேயவிட்டு இரவில் குகையருகே கொண்டு வரவேண்டும். மக்காவுக்கும் தவ்ருக்கும் இடையிலான அப்த்-அல்லாஹ்வின் பிரயாண அடையாளங்களை ஆடுகளின் பாத அடையாளங்களால் மறைத்து விடலாம் என்ற எண்ணம் இதற்குக் காரணமாயிருந்தது.

அடுத்த நாள் இரவு அப்த்-அல்லாஹ் குகைக்கு வந்தார். அவரோடு அவர் சகோதரி அஸ்மா உணவு எடுத்து வந்திருந்தார். மீண்டும் மக்காவுக்கு முஹம்மதைக் கொண்டு வருபவர்க்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள செய்தியையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர். அபூபக்ரும் காணாமல் போய்விட்டார் என்பது தெரிய வந்திருந்தது. எப்படியும் இருவரையும் முந்தி விட வேண்டுமென்ற நோக்கத்துடன் மக்காவுக்கும் யத்ரிபுக்கும் இடையிலான எல்லா மார்க்கங்களிலும் குதிரை வீரர்கள் தேடுதல் நடாத்திக் கொண்டிருந்தனர்.


அப்த்-அல்லாஹ் அறியாத வகையில் மற்றொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறைஷியருள் சிலர், இவ்விருவரும் மக்காவைச் சூழவுள்ள ஏராளமான குகைகளில் ஏதாவதொன்றில் ஒளிந்திருப்பர் என நம்பியிருந்தனர். அடிச்சுவடுகள் கொண்டு வழி கண்டுபிடிப்பதில் அறாபியர் மிகத் திறமை வாய்ந்தோர். இரண்டு அல்லது மூன்று ஒட்டகங்களின் பின்னால் பெரும் செம்மறியாட்டுக் கூட்டம் ஒன்று சென்றிருந்தாலும் இச்சின்னஞ்சிறு பாதவடிகளால் சீர் குலைக்கப்பட்ட பெரும் ஒட்டகப் பாதச் சுவடுகளின் எச்சங்களைக் கண்டு கொள்ளும் அசாத்தியப் பார்வைத் திறன் ஒரு சாதாரண நாடோடி அறபி கூடக் கொண்டிருந்ததே. தப்பிச் சென்றவர்கள் நகரின் தென் புறத்தில் இருப்பார்கள் என எதிர்ப்பார்க்க முடியாதுதான். என்றாலும் இவ்வளவு பெறுமதியான ஒரு பரிசு காத்திருக்கும் போது வழி முறைகள் அத்தனையும் பரிசீலிக்கப்படவே வேண்டும். தவ்ர் மலைக்குச் செல்லும் வழியில் நிச்சயமாக செம்மறியாடுகளின் முன்னால் ஒட்டகங்கள் சென்றிருந்தன.


மூன்றாம் நாள் மலைவாசப் பிரதேசத்தின் அமைதி, பறவைகளின் ஒலியால் குலைந்தது. குகையின் வெளியே மலைப்புறா ஜோடியொன்று சிறகடித்து கொஞ்சு மொழிக் கூவுதல்கள் செய்கின்றது என அவர்கள் நினைத்தனர். சிறிது நேரத்தின் பின்னர் மனித குரல்களின் மெல்லிய ஒலி கேட்டது. கீழே சிறிது தூரத்தில் கேட்ட குரல்கள் வரவரப் பெரிதாகி, அதற்குறியவர்கள் மலைமீதேறி நெருங்கி வருவதனை உணர்த்தி நின்றன. இரவாகும் வரை அப்த்-அல்லாஹ் வரமாட்டார். சூரியன் மறைய இன்னும் சில மணி நேரம் இருந்தது. தாம் நினைத்திருந்த நேரத்தினதை விட, மிக்க அதிசயமான முறையில் மிகக் குறைந்தளவு வெளிச்சமே குகையினுள்ளும் காணப்பட்டது. குரல்கள் அதிக தூரத்திலில்லை. குறைந்தது ஐந்து அல்லது ஆறுபேர் இருந்திருக்க வேண்டும். இன்னும் இன்னும் அவர்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். நபிகளார் அபூபக்ரை நோக்கி, ‘நீர் கவலைப் படாதீர் ; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்’ (குர்ஆன் : 9 : 40) எனக் கூறினார்கள். பின்னர் தொடர்ந்தும் “ அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கும்போது இருவர் குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? ” எனக் கேட்டார்கள். (புகாரி. 57:5) இப்போது காலடி ஓசைகளும் கேட்கலாயின. அருகில் வந்த அவை திடீரென நின்றன. வந்தோர் அனைவரும் குகையினுள் செல்லவேண்டிய அவசியம் இல்லையென்றும் அதனுள் எவரும் இருக்க முடியாதென்றும் ஒரு மனத்தராய்ப் பேசிக் கொண்டு திரும்பிச் செல்வோராயினர்.


அவர்கள் திரும்பிச் செல்லும் காலடியோசையும் குரலோசைகளும் முற்றும் தணிந்த பின்னர் நபிகளாரும் அபூபக்ரும் குகையின் வாசலுக்கு வந்தனர். அங்கு வாசலை அடைத்ததுபோல ஒரு சாதாரண மனித உயரத்தில் ஒரு வேல மரம் நின்றது. காலையில் அது காணப்படவில்லை. மரத்துக்கும் குகைச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு சிலந்தி, வலையொன்றனைப் பின்னியிருந்தது. சிலந்தி வலையூடாகப் பார்த்த போது குகையினுள் நுழைபவர் எவரும் கால் வைக்கக் கூடிய கற்குழியொன்றனுள் ஒரு மலைப் புறா தான் முட்டையிட்டுள்ளது போல அமர்ந்திருந்தது. சிறிது உயரத்தில் அதன் ஜோடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.


அப்த்-அல்லாஹ்வும் சகோதரியும் குறிப்பிட்ட நேரத்தில் வரும் ஓசை கேட்டதும் தமக்குப் பாதுகாவலாயிருந்த சிலந்தி வலையை ஒதுக்கி, புறாக்களைக் குழப்பி விடாதவாறு நடந்து அவர்களை சந்திக்கவென வெளியே வந்தனர் நபிகளாரும் அபூபக்ரும். ஆமிரும் வந்திருந்தார். இம்முறை அவர் மந்தைகளைக் கொண்டு வரவில்லை. நீண்ட பிரயாணத்துக்கென இரு ஒட்டகங்களைத் தயார்படுத்தும் பொறுப்பளிக்கப்பட்டிருந்த நாடோடி அறபியையும் கூட்டி வந்திருந்தார் ஆமிர். அந்த நாடோடி மனிதர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. எனினும் அவர் நம்பிக்கை வாய்ந்தவராக, இரகசியங்களைக் காப்பாற்றக் கூடியவராக இருந்தார். அத்தோடு பாலைவெளியினூடாக வழக்கத்துக்கு மாறான மார்க்கங்களிலும் வழி நடாத்திச் செல்லக்கூடிய திறம் பெற்ற பாலையின் மகனாக விளங்கினார் அவர். மலைகளின் கீழேயுள்ள சமவெளியில் அந்த இரு ஒட்டகங்களுடன் தனக்கும் ஓர் ஒட்டகையைக் கொண்டவராக அவர் காத்திருந்தார். அபூபக்ர் தனது ஒட்டகத்தில் தமது தேவைகளைக் கவனிக்கவென ஆமிரையும் ஏற்றிச் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஐவரும் குகையைவிட்டு மலைச்சரிவில் இறங்கி வந்தனர். உணவுப் பொருட்களைக் கொண்டதொரு மூடையைக் கொண்டு வந்திருந்த அஸ்மா கயிறொன்றனைக் கொண்டு வர மறந்து விட்டார். எனவே தனது இடைவாரினைக் கழற்றி அதனை இரு சம அளவினவாகக் கிழித்து, ஒன்றைத் தனது தந்தையின் ஒட்டகச் சேணத்தோடு உணவு மூட்டையைச் சேர்த்துக் கட்டப் பயன்படுத்தி மற்றதை தனக்காக வைத்துக் கொண்டார். இதன் மூலம் அஸ்மாவுக்கு ஒரு பட்டமும் கிடைத்தது:
‘இரட்டை வார் கொண்ட பெண்’.

இரண்டு ஒட்டகங்களிலும் சிறந்ததை அபூபக்கர் நபிகளாருக்குக் கொடுத்தபோது நபிகளார் “ எனது சொந்தமல்லாத ஓர் ஒட்டகத்தில் நான் பயணம் செய்யமாட்டேன்” என்றார்கள்.
“ அல்லாஹ்வின் தூதரே இது உங்களுடையது” என்றார் அபூபக்ர். “அவ்வாறன்று. நீர் அதற்கு எவ்வளவு கொடுத்தீர்? ” என வினவினர் நபிகளார். அபூபக்ர் பதிலளித்தார். உடனே நபிகளார் அதே “அதே விலைக்கு நான் நான் இதை எடுத்துக் கொள்கின்றேன்” என்றார்கள். முன்னர் பல சந்தர்பங்களில் நபிகளார் தன்னிடமிருந்து பல அன்பளிப்புகளைப் பெற்றிருந்தார்கள். எனினும் இப்போது இந்த ஒட்டகத்தை அன்பளிப்பாகக் கொடுத்து விட அபூபக்ர் மேலதிக பிரயத்தனம் ஏதும் மேற்கொள்ளவில்லை. ஏனென்றால் இது மிகவும் புனிதமானதொரு சந்தர்ப்பம். இது நபிகளாரின் ஹிஜ்றா. தம் வீடு, நாடு என்பவற்றுடனான எல்லா உறவுகளையும் அல்லாஹ்வுக்காகவே துண்டித்துச் செல்லும் தியாகத் திருவேளை இது. அர்ப்பணமாக அமையும் இப்புலப்பெயர்வு முற்றும் அவருடையதாகவே அமைய வேண்டும். எவ்வகையிலும் வேறொருவரின் பங்கு இதில் கலந்து விடக் கூடாது. தாம் ஏறிச் செல்லும் வாகனமும் அன்னாருடையதாகவே இருக்க வேண்டும்; அதுவும் அர்பணத்தின் ஓர் அங்கமே. அந்த ஒட்டகத்தின் பெயர் கஸ்வா. அதுவே நபிகளாரின் விருப்புக்குரிய ஒட்டகமாகவும் விளங்கலாயது.

அவர்களது வழிக்காட்டி மக்காவிலிருந்து அவர்களை மேற்கேயும் சிறிது தெற்கேயும் கூட்டிச்சென்று செங்கடலுக்கருகில் அழைத்து வந்திருந்தார். யத்ரிப் மக்காவின் வடக்கே இருந்தது. எனினும் இப்போதுதான் அவர்கள் வடபுறம் நோக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். கடலோரப் பாதை வடமேற்காகவே சென்றது. அவ்வழியையே இவர்களும் சில நாட்களாகத் தொடர்ந்தனர். முதல் மாலைகளில் ஒன்றன் போது, தண்ணீர்ப் பரப்புக்கு அப்பால், நூபியப் பாலைவனப் புறத்தில் ரபியுல் அவ்வலின் புதுப்பிறையைக் கண்டனர்:

“ நன்மையையும் வழிக்காட்டலையும் கொண்ட புதுப்பிறையே! உன்னைப் படைத்தவனுக்கே என் விசுவாசம்”. ஹ. 5: 329



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment