Monday, 7 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


பு தி ய இ ல் ல த் தா ர்

பள்ளிவாசல் கட்டட வேலைகள் பூரணமாகி வந்த வேளை, நபிகளார் அதன் கிழக்குச் சுவரோடு இணைந்ததாக இரண்டு சிறு உறைவிடங்களை அமைக்கும்படி வேண்டினார்கள். ஒன்று அன்னாரின் மனைவி ஸவ்தாவுக்கு. மற்றது அன்னாருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஆயிஷாவுக்கு. கட்டட வேலைகள் ஏழு மாத காலமளவு தொடர்ந்தன. இக்கால இடைவெளியில் நபிகளார் அபூ ஐயூபுடனேயே தங்கியிருந்தார்கள். ஸவ்தாவின் இருப்பிடம் தயாரானதும் அவரை அழைத்து வரவென ஸைத் மக்காவுக்கு அனுப்பப்பட்டார். அவர், உம்ம் குல்தூமையும் பாத்திமாவையும் கூட அழைத்து வரவேண்டியவராயிருந்தார். உம்ம் ரூமான், அஸ்மா, ஆயிஷா ஆகியோரை அழைத்து வரும்படி அபூபக்ர், தன் மகன் அப்த்-அல்லாஹ்வுக்கு செய்தியனுப்பினார். மக்காவிலிருந்து திரும்பி வரும்போது ஸைத் தனது மனைவி உம்ம் அய்மனையும் மகன் உஸாமாவையும் கூடக் கூட்டி வந்தார். அவர்களோடு தல்ஹாவும் பயணம் செய்தார். அசையும் ஆதனங்கள் அனைத்தையும் விற்றுத் தனது ஹிஜ்றாவை மேற்கொண்டிருந்தார் அவர். அனைவரும் வந்து சேர்ந்த சில காலத்துள் அபூபக்ர், அஸ்மாவை ஸுபைருக்கு மனைவியாகக் கொடுத்தார். ஸுபைர் ஏற்கெனவே சில மாதங்கள் தனது தாயார் ஸபிய்யாவுடன் மதீனாவில் இருந்து வந்தவர். அபூபக்ரின் சகோதரி குரைபா, வயது முதிர்ந்து அந்தகராய் விட்ட தமது தந்தையார் அபூகுஹாபாவைக் கவனித்துக் கொள்ளவென மக்காவிலேயே தங்கி விட்டார். குரைபாவைப் போலன்றி குஹாபா இன்னும் இஸ்லாத்தை ஏற்காதவராகவே இருந்தார்.


நபிகளார் இப்போது உம்ம் அய்மனுக்கும் மேலாக ஸைத், தனது வயதையொத்த இன்னும் ஒருவரை மணம் செய்து கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தார்கள். எனவே தமது ஒன்றுவிட்ட சகோதரரும் ஜஹ்ஷின் மகனுமான அப்த்-அல்லாஹ்விடம் அவரது சகோதரி ஸைனபைத் தரும்படி கேட்டார்கள். முதலில் ஸைனப் இதற்கு இணக்கம் காட்டவில்லை. அதற்குக் காரணங்களும் இருந்தன. பின்னரே அவை தெரிய வருவனவாயின. எனினும் அப்போதைய நிலையில் அவர் கூறிய காரணம் தக்கதொன்றாக அமையவில்லை. தான் குறைஷிக் குலத்திலுள்ள ஒரு பெண் எனக் காரணங்காட்டி நின்றார் அவர். ஸைனபின் தாயார் இரு வழிகளிலும் தூய்மையான குறைஷிய இரத்த பந்தம் கொண்டவராயிருந்தும் அஸத் கோத்திரத்தவர் ஒருவரை மணந்திருந்தார். குறைஷியருக்கிடையில் வளர்ப்பு மகன் என்ற வகையில் ஸைதின் நிலை எவ்வாறிருந்தாலும் அவரது பெற்றோரின் கோத்திரங்களான பனீ-கல்ப், பனீ-தாயி என்பன எவ்வகையிலும் பனீ-அஸத்துக்கு குறைந்ததெனக் கூறுவதற்கில்லை. அவர் ஸைதை மணக்க வேண்டுமென்பது நபிகளாரே தெரிவித்ததோர் ஆலோசனை என அறிந்து கொண்டதும் ஸைனப் சம்மதம் தெரிவித்தார். திருமணமும் நடந்தேறியது. அதே கால அளவில் அவரது சகோதரி ஹம்னா, முஸ்அபுக்கு மணஞ்செய்து கொடுக்கப்பட்டார். சில காலம் சென்ற பின்னர் உமைமா மதீனாவுக்கு வந்து நபிகளாரை ஏற்று விசுவாசங் கூறினார்.

நபிகளாரும் அன்னாரின் புதல்வியரும் ஸவ்தாவின் புதிய இருப்பிடத்தில் வாழச் சென்றனர். ஓரிரு மாதங்கள் கழிய, ஆயிஷாவின் திருமணம் நடைபெற வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஆயிஷாவுக்கு அப்போது வயது ஒன்பது மட்டுமே. அவரது பெற்றோர் மூலம் எதிர்பார்க்கக் கூடிய வகையில் அவர் பேரழகியாக விளங்கினார். குறைஷியர், அவரது தந்தையாருக்கு அதீக் எனும் நாமத்தைச் சூட்டியிருந்தனர். அபூபக்ரின் அழகிய முகத்தை உத்தேசித்தே இந்நாமம் வழங்கியதென்பர் சிலர். ( இ.ஹி. 161 ) ஆயிஷாவின் தாயார் குறித்து நபிகளார் கூறினார்கள் : 

“ நீண்ட கண்களையுடைய சுவனத்துக் கன்னியொருத்தியைக் காண விரும்புபவர் உம்ம்-ரூமானைக் காணவும் ” ( இ.ஸா. 7 : 202 ) .

ஆயிஷாவுக்கு மிகவும் நெருங்கியவராகவும் அன்புடையவராகவும் விளங்கினர் நபிகளார். அன்னாரும் தன் தந்தையாரும் மதீனாவுக்குச் சென்று விடத் தானும் தாயாரும் மக்காவில் இருந்து வந்த ஒரு சில மாதங்கள் தவிர்த்து ஒவ்வொரு நாளும் நபிகளாரை ஆயிஷா கண்டு வந்திருந்தார். தனது தாயாரும் தந்தையாரும் வேறு யார் மீதும் செலுத்தாத அளவு அன்பையும் கெளரவத்தையும் நபிகளார் மீது சொரிந்து வந்தமையை அவர் கண்டு வந்தார். இதற்கான காரணங்களையும் அவர்கள் ஆயிஷாவுக்குக் கூறாதிருக்கவில்லை. அன்னார் அல்லாஹ்வின் தூதர் என்பதை ; தொடர்பறாது வானவ தூதர் ஜிப்ரீலுடன் அன்னார் உரையாடுகின்றார் என்பதை ; மனிதர்களிலேயே மிக்க தனித்துவம் வாய்ந்தவராக வானலோகம் சென்று மீண்டு வந்துள்ளார் என்பதையெல்லாம் ஆயிஷா நன்கறிந்திருந்தார். நபிகளாரது தோற்றமே அன்னார் விண்ணுலகு சென்றமையை உணர்த்தியதோடு சுவனத்து மகிழ்வையும் காட்டி நின்றது. அம்மகிழ்வை உய்த்துணரச் செய்தது அன்னாரின் ஸ்பரிசம். பிறர் உஷ்ணத்தால் களைத்திருக்கும் வேலைகளில் நபிகளாரின் கைகள் ‘பனியை விடக் குளிர்ந்ததாகவும் கஸ்தூரியை விடச் சுகந்தமானதாகவும்’ இருக்கும். (புகாரி : 61 :22) அன்னார் மூப்பே அடையாதவராகத் தோற்றமளித்தனர் - மரணத்தை வெற்றி கொண்டவர் போல. அன்னாரின் கண்கள் தமது அதீத பிரகாசத்தை கொஞ்சமேனும் இழந்து விடவில்லை. அன்னாரது கன்னங்கருநிற மயிரும் தாடியும் இளமையின் சோதியாய் விளங்கின. யானை வருடத்திலிருந்து ஐம்பத்து மூன்று வருடங்களைக் கழித்து விட்ட அந்த உடம்பின் கம்பீரம் அதிலும் இரண்டிலொரு வருடங்களே ஆன ஓர் இளைஞனுடையது போல் விளங்கியது. திருமணத்துக்குச் சிற்சிறு ஏற்பாடுகளே செய்யப்பட்டன. மறக்கவியலா மகிழ்ச்சி பொங்கியதொரு தினமாக ஆயிஷா உணர்ந்து கொள்ளுமளவு பெரிதாக அவை அமையவில்லை. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறச் சிறிது முன்னர், தன் தோழியர் ஒருவருடன் விளையாடுவதற்காக ஓடிவிட்டார் ஆயிஷா. அவரே கூறினார் : 

“ நான் ஒரு கட்டையில் அமர்ந்து மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தேன். எனது நீண்ட தலைமயிர் அவிழ்ந்து குலைந்து போயிருந்தது. அவர்கள் வந்து விளையாடிக் கொண்டிருந்த என்னைக் கூட்டிச் சென்று தயார்படுத்தினார்கள் ” - இ.ஸா. 8 : 40-1


பஹ்ரைனிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த அருமையான, செந்நிறக் கோடுகள் இடப்பட்டிருந்த புடவையொன்றனை அபூபக்ர் வாங்கியிருந்தார். அதுவே ஆயிஷாவுக்குத் திருமண ஆடையாக மாற்றப்பட்டது. பின் அவரது தாயார், ஆயிஷாவை அவருக்கெனப் புதிதாகக் கட்டப்பட்டிருந்த இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். அதன் வாசலில் சில அன்ஸாரிப் பெண்கள் புதுமணப் பெண்ணின் வரவை எதிர் நோக்கியோராக நின்றிருந்தனர். அவர்கள் ‘நலமும் மகிழ்வும் பெருக! அனைத்தும் நல்லபடியேயாகுக!’ என வாழ்த்துக் கூறி ஆயிஷாவை நபிகளார் முன் கூட்டிச் சென்றனர். அங்கு அவர்கள் மணவாளியின் கூந்தலைப் பின்னி, ஆபரணங்கள் பூட்ட, நபிகளார் புன்னகை சிந்தியவாறு நின்றிருந்தார்கள். அன்னாரின் ஏனைய திருமணங்களின் போலன்றி, இதில் விருந்துகள் ஏதும் இருக்கவில்லை. மிக்க எளிமையானதொரு வைபவமாகவே இது விளங்கியது. ஒரு கலசத்தில் பால் கொண்டு வரப்பட, அதிலிருந்து சிறிது தாம் குடித்துவிட்டு ஆயிஷாவுக்குக் கொடுத்தனர் நபிகளார். வெட்கத்தினால் அவர் மறுத்தார். பின் வற்புறுத்தலினால் சிறிது அருந்தி தனக்கு அடுத்து அமர்ந்திருந்த சகோதரி அஸ்மாவுக்குக் கொடுத்தார். ஏனையோரும் அக்கலசத்திலிருந்து அருந்தினர். பின்னர் வந்திருந்தோர் அனைவரும் தத்தம் வழியில் செல்ல தம்பதியினர் தனியே விடப்பட்டனர்.


தனது தந்தையாரின் வீட்டையடுத்த முற்றத்தில் தோழியர் வந்து சேர, அவர்களுடன் விளையாடாத நாட்களே இல்லாதவாறு கடந்த மூன்று வருடங்களையும் கழித்திருந்தார் ஆயிஷா. நபிகளாரின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தமை, இதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. இப்போது ஆயிஷாவின் சொந்த இருப்பிடத்துக்கே தோழியர் வரலாயினர். மதீனாவுக்கு வந்த பின்னரமைந்த புதிய நண்பர்களோடு, தனது பெற்றோரைப் போலவே புலம் பெயர்ந்து வந்தோரின் குழந்தைகளான பழய நண்பர்களும் இருந்தனர். ஆயிஷா கூறினார் : 

“ நான் எனது பொம்மைகளை வைத்து எனது தோழியருடன் விளையாடிக் கொண்டிருப்பேன். நபிகளார் வரும்போது அவர்கள் மெதுவாக நழுவிச் சென்று விடுவார்கள். உடனே அன்னார் பின்னால் சென்று அவர்களை மீண்டும் அழைத்து வருவார். எனக்காக அவர்களை அங்கு வைத்துக் கொள்வதன் மூலம் அவர் மகிழ்ச்சியுற்றார் ”.
இ.ஸா. 8 : 42 

சில வேளைகளில் தோழியர் எழு முன்பாகவே “ நீங்கள் அப்படியே இருந்து கொள்ளுங்கள் ” என்பர் நபிகளார். (மு.கு 41) சில சந்தர்ப்பங்களில் அன்னாரும் சேர்ந்து அவர்களுடன் விளையாடுவார்கள். முன்னரும் தம் புதல்வியரோடிருந்து விளையாடி வந்துள்ள நபிகளார் குழந்தைகளை அன்புடன் நேசித்தார்கள். பொம்மைகள் பல வகையினவாகப் பயன்பட்டன. ஆயிஷா கூறினார் :

“ ஒரு நாள் நான் எனது பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் அப்போது வந்தார். ‘ஓ ஆயிஷா! என்ன விளையாட்டு இது?’ என்றார். ‘இதுதான் ஸுலைமானின் குதிரைகள்’ என்றேன் நான். அவர் சிரித்தார்.(மு.கு 42) 

விளையாடிக் கொண்டிருப்பவர்கள், தாம் உள்ளே வரும்போது கண்டு கொள்ளாதவாறு சில வேளைகளில் தம்மைப் போர்வையால் மறைத்துக் கொள்வர் நபிகளார்.



ஆயிஷாவின் வாழ்க்கை துயர அனுபவங்களையும் கொண்டதாகவே விளங்கியது. சில குறிப்பிட்ட காலங்களின்போது மிக மோசமான காய்ச்சல்கள் ஏற்படக் கூடியதொரு பிரதேசமாக முழு அறேபியாவிலும் பிரசித்தம் பெற்றிருந்தது மதீனம். மதீனத்து மக்களல்லாதோரே இதனால் பெரிதும் தாக்கமுற்றனர். நபிகளார் தப்பியிருந்தாலும், அன்னாரின் நெருங்கிய நண்பர்கள் பலர் இதன் தாக்கத்துக்குள்ளாயினர். அபூபக்ரும், அவர் மூலம் விடுதலை பெற்று அவருடனேயே வாழ்ந்து வந்த ஆமிர், பிலால் ஆகியோரும் கூட இக்காய்ச்சலால் துயருழந்தனர். ஒரு நாள் காலை தன் தந்தையாரை காணவெனச் சென்றிருந்த ஆயிஷா, இம்மூவரும் பலவீனத்தின் எல்லையில் இருந்தோராய் முகங்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டு கலக்கங் கொண்டார். 

“ நீங்கள் எப்படியிருக்கின்றீர்கள் தந்தையாரே! ” என்றார் ஆயிஷா. ஒன்பது வயதே நிரம்பியதொரு சிறுமிக்குத் தக்க பதில் தரும் நிலையில் அவர் இல்லை. கவிதை வாசகமொன்றையே அவர் பிதற்றினார் :

நல்லாசி கூறுவர் உறவினர் தினமும்

எனினும் காலணி வாரிணும் அண்மியது மரணம்

அவர் கூறுவதென்னவென்று அவருக்கே விளங்கவில்லை எனக் கருதிய ஆயிஷா, ஆமிரை நோக்கித் திரும்பினார். அவரும் கவிதையொன்றனையே பாடினார். மரணமடையாது, மரணத்தையண்மி, மரணமென்றாலென்னவென்று தான் அறிந்து கொண்டாரென்ற கருத்திலமைந்தது அது. பிலாலை விட்டும் காய்ச்சல் நீங்கியிருந்தது. என்றாலும் முற்றத்தில் படுத்திருப்பதைத் தவிர வேறெதுவும் செய்யக் கூடாதவராக இருந்தார் அவர். எனினும் அவரது குரலில் உரத்துப் பாடப் போதியளவு சக்தியிருந்தது :

மக்காவின் வெளியே வளரும் பசுஞ் செடிகளின்

மத்தியில் மீண்டும் இரவில் நான் உறங்குவனோ?

மஜன்னாஹ்*வின் தண்ணீரை நான் அருந்துவனோ?

ஷாமாவை, தபீலை,** கண்முண்ணால் காண்பனோ?

ஆயிஷா மணங் குழம்பியவராக வீடு திரும்பினார். “ காய்ச்சலின் கொடூரத்தால் அவர்கள் மூளை குழம்பிப் பிதற்றுகின்றார்கள் ” என்றார் ஆயிஷா. எனினும் தான் கேட்டு விளங்கிக் கொள்ளாத வாசகங்களை அவர் திருப்பிக் கூறியபோது நபிகளார் சிறிது ஊக்கங் கொண்டார்கள். அப்போதுதான் நபிகளார் பிரார்த்தித்தார்கள் :

“ யா அல்லாஹ்! நீ மக்காவை அமைத்தது போல, அல்லது அதற்கும் மேலாக மதீனாவை எமக்கு அருமையானதாக்கி வைப்பாயாக! அதன் நீரையும், தானியங்களையும் எமக்கு ஆசீர்வாதம் செய்வாயாக! அதனை விட்டும் அதன் காய்ச்சலை மஹ்யாஆஹ்*** அளவு நீக்கி வைப்பாயாக! ” - இ.இ. 414

அன்னாரின் பிரார்த்தனையை இறைவன் அங்கீகரித்தான்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,


* மக்காவை அண்மியதோர் இடம்.

** மக்காவின் இரு குன்றுகள்.

*** மதீனாவின் தெற்கே ஏழு ஒட்டகைப் பிரயாண நாட்களின் தூரத்திலுள்ளதோர் இடம்.

No comments:

Post a Comment