Wednesday, 2 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

து ய ர வ ரு ட ம் ( தொடர்… )

அபூபக்ருக்கும் பனீ ஜூமாஹ்களுக்குமிடையிலான பிரச்சினைகள் சில காலமாக அமைதிக்குள்ளாயின. ஹாஷிம்களின் தலைமைப் பீடம் அபூதாலிபின் பின்னர் அபூலஹப் வசமானது. அபூலஹப் தன் சகோதரன் மகனுக்கு அளித்த பாதுகாப்பு வெறுமனே பெயரளவினதாக மட்டுமே விளங்கியது. 
முன்னொரு போதும் இல்லாத வகையில் நபிகளார் துன்புறுத்தப்பட்டார்கள். ஒரு முறை வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் வீட்டு வாசலை அண்மி, அழுகிய மாமிசத் துண்டொன்றனை அன்னாரின் சமையல் பானைக்குள் போட்டுச் சென்றார். மற்றெரு சந்தர்ப்பத்தில், தமது வீட்டு முற்றத்தில் நபிகளார் தொழுது கொண்டிருக்க, அன்னாரது உடம்பின் மேல், இரத்தமும் மலமும் தோய்ந்திருந்த செம்மறியாட்டுக் குடலொன்றனை வீசினார் ஒருவர். இவ்வாறு செய்தவர் ருகையாவின் கணவர் உத்மானின் சிறிய தந்தையான ஷம்ஸ் கோத்திரத்து உக்பா * என்பதைக் கண்டு கொண்டனர் நபிகளார். ஒரு கம்பினால் அக்குடலைத் தூக்கியெடுத்த நபிகளார் அதனை வீசியெறிய முன்னர் தம் வாசலில் நின்று கூறினார்கள் : 

“ஒ அப்த்-மனாபின் மக்களே! இது என்ன பாதுகாப்பு? ”

பிறிதொரு முறை நபிகளார் கஃபாவிலிருந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குப்பை கூழங்களைக் கையிலெடுத்து அன்னாரின் முகத்திலும் தலையிலும் வீசியெறிந்தார். வீடு வந்து சேர்ந்ததும் நபிகளாரின் புதல்வியருள் ஒருவர் கண்ணீர் விட்டழுதவராக அன்னாரைக் கழுவிச் சுத்திகரித்தார். நபிகளார் கூறினார்கள் :

“ என் சிறு மகளே கண்ணீர் விடாதீர் ; உமது தந்தையாரை அல்லாஹ் காப்பாற்றுவான் ”.


இந்த நிலையில்தான் நபிகளார் ‘தகீப்’களின் உதவியை நாட முடிவு செய்தார்கள். தாயிப் நகர வாசிகளின் உதவியை நாடும் இம்முடிவு, மக்காவில் நபிகளார் அனுபவிக்க வேண்டி வந்த நெருக்கடியான நிலையை மிகத் தத்ரூபமாக விளக்குவதாயமைந்தது. சத்தியமே அனைத்தையும் வெல்லும் என்ற நம்பிக்கையைத் தவிர, வேறு எதைத்தான் தகீப்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்?

அல்-லாத் எனும் பெண்கடவுளின் ஆலயத்துப் பாதுகாவலர்கள் இத்தகீப் கோத்திரத்தார். அதனையே அவர்கள் இறைவனின் பேராலயமாகவும் மதித்து வந்தனர். என்றாலும் மக்காவில் போலவே அங்கும் பொது விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இருக்கக் கூடும். மக்காவின் பாலை நிலப் பரப்பினின்றும், சோலைகளாலும் தோட்டங்களாலும் வயல் வெளிகளாலும் சூழ்ந்திருந்த தாயிப் பிரதேசத்தை நோக்கிப் புறப்பட்டபோது நபிகளார் நம்பிக்கையற்றவர்களாகச் செல்லவில்லை. அந்நகரையடைந்ததும் தகீப்களின் அப்போதைய தலைவர்களாயிருந்த மூன்று சகோதரர்களைச் சந்திக்கவென அவர்களது இருப்பிடம் நோக்கிச் சென்றனர் நபிகளார். இம்மூவரும் அம்ர்-இப்ன்-உமையாவின் புதல்வர்கள். இந்த அம்ர்தான் தாயிபில் தனது சகாவாக இருப்பவர் என முன்னோர் சந்தர்ப்பத்தில் வலீத் கூறிய ‘இரு பெரு நகரங்களின் இரு பெருந்தலைவர்’களுள் இரண்டாமவர்.

இஸ்லாத்தை ஏற்றுத் தமது எதிரிகட்கு எதிராகத் தமக்கு உதவும்படி நபிகளார் அம்மூவரையும் வேண்டியபோது அவர்களுள் ஒருவர் 

“ இறைவன் உம்மைத்தான் அனுப்பியிருந்தால் கஃபாவின் திரைச் சீலைகளை நான் கிழித்தெறிந்து விடுவேன் ” என்றார்.

மற்றொருவர் “ உம்மைவிட வேறெவரும் இறைவனுக்குக் கிடைக்கவில்லையா? ” என்றார்.

மூன்றாமவர் கூறினார் ; “ உம்முடன் நான் பேசுவதில் பயனில்லை. நீர் கூறுவதுபோல நீர் இறைவனது தூதுவராக இருந்தால் உம்முடன் உரையாட நான் அருகதையற்றவன். நீர் கூறுவது பொய்யாயின் உம்முடன் கதைப்பது எனது தகுதிக்குறியதல்ல ”.

வேறு யாரிடமாவது செல்வதே உசிதமெனக் கருதி அவ்விடத்தினின்றும் எழுந்தனர் நபிகளார். எனினும் அங்கிருந்து வெளி வந்ததுமே அம்ரின் புதல்வர் மூவரும் நபிகளாரை அவமதித்துக் கூக்குரலிட்டுத் துரத்தும்படி தமது அடிமைகளையும் பணியாட்களையும் ஏவி விட்டனர். பெருங்கூட்டமொன்றே திரண்டெழுந்து தம்மைத் தூஷித்துத் துரத்தி வந்த நிலையில் தனியார் சோலையொன்றினுள் அன்னார் தஞ்சம் புக வேண்டி நேர்ந்தது. சோலையுள் புகுந்ததும் கூட்டத்தார் கலைந்து சென்றனர். ஒட்டகத்தை ஓர் ஈச்சமரத்தில் கட்டி வைத்து விட்டுத் திராட்சைச் செடியொன்றின் நிழலில் அமர்ந்து கொண்டனர் நபிகளார்.

பாதுகாப்பும் அமைதியும் கிட்டிய பின்னர் நபிகளார் பிரார்த்தனை செய்யலானார்கள் :

“ யா அல்லாஹ்! எனது பலவீனத்தை, நாதியற்ற நிலையை, மக்கள் முன் எனக்குள்ள இழி நிலையை உன்னிடமே முறையிடுகின்றேன். நீயே எனது எஜமான். என்னை யாருடைய கைகளில் நீ ஒப்படைப்பாய்? என்னைத் துயர்ப்படுத்தக்கூடிய தூரத்து அந்நியன் ஒருவனிடமா? அல்லது என்னை எதிர்க்கவென நீ நாடியுள்ள ஒரு பகைவரிடமா? அதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை, நீ மட்டும் என்மீது கோபம் கொண்டு விடாதே! உனது உதவியே எனக்கு அகன்றதொரு பாதையாக விளங்கும். உன் பேரருட் பிழம்பின் ஒளியிலேயே நான் அடைக்கலம் தேடுகின்றேன். அதன் மூலமே அனைத்து இருள்களுக்கும் ஒளி கிட்டுகின்றது. அதன் மூலமே இம்மை, மறுமையின் அம்சங்கள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. உனது கோபத்தை என் மீது இறக்கி விடாதே. உன் சோதனை என்னைப் பீடிக்கச் செய்து விடாதே. நீ திருப்தியடையும் வரையே என்னை நீ கடிந்து கொள்வாய். உன் மூலமேயன்றி எந்த ஓர் அதிகாரமும் இல்லை ; சக்தியும் இல்லை ”. - இ.இ. 280

நபிகளார் அமைதி கண்ட இடம் யாருமில்லாததோர் இடமாக இருக்கவில்லை. மக்காவில் உஷ்ணம் கடூரமாகும் காலங்களின் போது அதனின்றும் தப்பி வாழவெனத் தாயிப் பிரதேசத்தில் ஒரு தோட்டத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்குமளவு செல்வம் சேகரிப்பது ஒவ்வொரு குறைஷியரதும் பேரவாவாக இருந்து வந்தது. நபிகளார் சேர்ந்த இந்தச் சோலை தகீப் கோத்திரத்தார் எவருடையதும் அல்ல. ஷம்ஸியத் தலைவர்களான உத்பா, ஷைபா ஆகியோரின் உடைமைகளது ஒரு பகுதியே இது. இச்சோலையை அடுத்ததொரு தோட்டத்தில் இதே வேளை அவ்விருவரும் கூட அமர்ந்திருந்தனர். நிகழ்ந்தன அனைத்தையும் அவர்கள் கண்டார்கள். அவர்களது உள்ளங்களும் கவலையுற்றன. தகீப்பின் கலகக் கூட்டம் குறைஷியர் ஒருவரை உபசரித்த முறை ; அதற்கும் மேலாகத் தம்மைப் போலவே ஆன அப்த்-மனாபின் மக்களில் ஒருவர் அவமதிக்கப்பட்ட காட்சி என்பன அவர்களையும் வருத்தின. தமக்கும் முகம்மதுவுக்கும் இடையில் பெரும் பிளவுகள் இருக்கத்தான் செய்தன. எனினும் அவைதான் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றனவே. கடைசியாக அவர்கள் நபிகளாரைக் கண்டது அபூதாலிபின் மரணப் படுக்கையின் போதாகும். இப்போது முஹம்மதுக்கு ஒரு பாதுகாவலர் இல்லை. அவர் பெருங் கஷ்டத்தில் இருக்கின்றார் என்பது தெளிவு. இந்நிலையில் தாம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்த உத்பாவும் ஷைபாவும் தமது இளம் கிறிஸ்தவ அடிமையான அத்தாஸ் என்பாரை அழைத்து, 

“ இதிலிருந்து ஒரு திராட்சைக் குலையை எடுத்து ஒரு தட்டில் வைத்து அம்மனிதரிடம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லும் ” எனப் பணித்தனர். அத்தாஸ் அவ்வாறே செய்தார். நபிகளார் திராட்சைப் பழங்களில் கைவைத்ததும் “ அல்லாஹ்வின் திருநாமத்தால் ” என்றார்கள். அத்தாஸ் அன்னாரின் முகத்தைக் கூர்ந்து அவதானித்துவிட்டு “ நீர் கூறிய வசனங்கள் இந்த நாட்டு மக்கள் கூறுவதல்லவே! ” என்றார். “ நீர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? ” என்ற நபிகளார், “ உமது மதம் என்ன? ” என்றும் கேட்டனர். “ நான் கிறிஸ்தவன் ; நினவேயின் மக்களைச் சார்ந்தவன் ” என்றார் அத்தாஸ். “ மாத்தாவின் மகன் யூனூஸின் ஊர் ” என்றனர் நபிகளார். “ மாத்தாவின் மகன் யூனூஸ் குறித்து நீர் எவ்வாறு அறிவீர்? ” என்றார் அத்தாஸ். நபிகளார் கூறினார்கள் ; 
“ அவர் எனது சகோதரர். அவர் ஓர் இறைதூதர் ; நானும் ஓர் இறைதூதன் ”. அத்தாஸ் குனிந்து நபிகளாரின் தலை, கைகள், கால்களை முத்தமிடலானார்.

இதனை அவதானித்துக் கொண்டிருந்த உத்பாவும் ஷைபாவும் ஒருவர்க்கொருவர் ஒரே குரலில் உரத்துக் கூவினர் ; “ உமது அடிமைக்கு என்ன நடந்தது? அவன் ஏற்கெனவே வழிகெட்டு விட்டான் ”. நபிகளாரை அமைதியாகச் சாப்பிட விட்டு அத்தாஸ் திரும்பி வந்ததும், “ உனக்கென்ன நேர்ந்தது அத்தாஸ்? நீ ஏன் அந்த மனிதரின் தலையையும் கைகளையும் கால்களையும் முத்தமிட்டாய்? ” என்றனர்.

“ ஓ என் எஜமானரே! இந்த மனிதரை விட மேலானது உலகில் எதுவுமே இல்லை. ஓர் இறைதூதர் மட்டுமே தெரிந்த விஷயங்களை அவர் எனக்குக் கூறினார் ” என்றார் அத்தாஸ். எஜமானர்கள் கூறினர் : “ எம் முன்னால் நிற்காதே அத்தாஸ்! உனது மதத்தினின்றும் உன்னை அந்த மனிதர் கெடுத்து விடாதிருக்கட்டும். உனது மதம் அந்த மனிதரின் மதத்தை விட மேலானது ”.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

* நபிகளாரின் ஒன்று விட்ட சோதரியும் உத்மானின் தாயாருமான அர்வாவின் இரண்டாவது கணவர். இந்த அர்வாவினதும் நபிகளாரதும் மாமியாரும் துலைபின் தாயாருமான அர்வாவின் பெயர் வழங்கும் வகையிலேயே இவரும் அர்வா எனப் பெயரிடப்பட்டார்.

No comments:

Post a Comment