Tuesday, 8 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

யு த் த த் தி ன்

வி ளி ம் பி ல்


அநியாயத்திற்குள்ளானவர்களுக்கு யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ், இவர்களுக்கு உதவி செய்யப் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். இவர்கள் ( எத்தகையோரென்றால் ) நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து ( விரோதிகளால் ) துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம்! குர்ஆன் : 22 : 39-40

மதீனாவுக்கு வந்து சேர்ந்த சிறிது காலத்துள்ளேயே நபிகளார்க்கு இந்த இறைவசனங்கள் அருளப்பட்டன. இங்கு அனுமதி எனக் குறிக்கப்பட்டது ஒரு கட்டளையே என்பதனையும், யூதர்களுடனான ஒப்பந்தத்தில் யுத்தக் கடமைப்பாடுகள் அழுத்தமாகக் குறிக்கப்பட்டமையையும் உணர்ந்தார்கள் நபிகளார். ஆரம்ப இறைவசனங்களில் ஒன்று, 

இந்நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளியும் ; ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளியும்
குர்ஆன் : 86 : 17 

- எனக் கூறியிருந்தது. எனினும் அந்த அவகாசம் முன்னேற்பாடான ஓர் அறிவிப்பு மட்டுமே. இறைவன் இப்போது குறைஷியர் மீதான படையெடுப்பைக் கட்டளையிட்டுள்ளான். எனவே தமது சக்திக்குட்பட்ட அனைத்தையும் கொண்டு அவர்களை எதிர்த்துப் போராடி, அல்லாஹ்வின் ஆணைகட்கு அடிபணியும் வரை குறைஷியருக்கு அறேபியாவில் அமைதி கிட்டாதென்பதை உணர்த்த வேண்டுவது நபிகளாரின் கடமையாகிவிட்டது. குறைஷியரை அமைதியிழக்கச் செய்வது, தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் அமைதியிழக்கச் செய்யும் என்பதையும் அன்னார் உணராதிருக்கவில்லை. இவ்வாறான முன்னெண்ணங்கள் மற்றுமோர் இறைவசனத்தாலும் உறிதிப் படுத்தப்பட்டன :

( இந்நிராகரிப்போரின் ) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முற்றிலும் நிலைபெரும் வரையில் அவர்களுடன் யுத்தம் புரியுங்கள் குர்ஆன் : 8 : 39

- எனினும் இப்போதைய நிலையில் திடீர்த்தாக்குதல்கள் மேற்கொள்வதனைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாது. குறைஷியர் தமது வர்த்தகப் பிரயாணங்களின் போது இலகுவாகத் தாக்குதலுக்குள்ளாகக் கூடியவர்கள். சிறப்பாகக் கோடை கால ஆரம்ப மாதங்களில் ஸிரியாவுடனான வர்த்தகம் மிக மும்முரமாக இருக்கும்போது மதீனாவிலிருந்து அவர்கள் தாக்குதலுக்குள்ளாவது இலகு. குளிர் காலப் பருவங்களின் போது தமது வர்த்தகக் குழுக்களை அவர்கள் தெற்கே பெரிதும் யெமன், அபிஸீனியா நோக்கியே அனுப்பி வந்தனர்.

வர்த்தகக் குழுக்களின் நடமாட்டம் பற்றி மதீனாவுக்கு வந்து சேரும் செய்திகள் எப்போதுமே சரியானவையாக இருப்பதில்லை. அத்தோடு திட்டங்களில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்படுவதும் இயல்பு. மதீனாவிலிருந்து திட்டமிடப்பட்ட ஆரம்ப தாக்குதல்களிலிருந்து மக்கத்து வர்த்தகக் குழுக்கள் இலகுவாகத் தப்பிக் கொண்டன. இருந்தாலும் கூட, செங்கடல் கரையோரமாக இருந்த முக்கிய ஸ்தானங்களின் நாடோடி கோத்திரத்தவர்களோடு பரஸ்பர உடன்படிக்கைகள் செய்து கொள்வதில் வெற்றி கண்டனர் நபிகளார்.


நபிகளார் மதீனாவிலிருந்து வெளிச் செல்லக் கூடிய சந்தர்ப்பங்களில் நகரின் பொறுப்பாளராத் தமது நெருங்கிய தோழர்களில் ஒருவரை நியமித்துச் செல்வது வழக்கம். முதன் முதல் இக்கெளரவத்தைப் பெற்றுக் கொண்டவர் கஸ்ரஜ் தலைவராயிருந்த ஸஅத்-இப்ன்-உபாதா. இது நடந்தது ஹிஜ்றாவின் பதினோராம் மாதத்திலாகும். அதுவரை நபிகளார் எந்த ஒரு தாக்குதலிலும் நேரடியாகப் பங்கு பற்றவில்லை. தாம் பின்தங்கி நின்ற வேளைகளிலெல்லாம் தாக்குதல்களுக்குத் தலைமைத்தாங்கி செல்பவருக்கு வெண்ணிறக் கொடியொன்றனை அன்னார் அளித்து வந்தார்கள். ஈட்டி முனையொன்றில் அக்கொடி கொழுவப்பட்டிருக்கும். முதல் வருடம் தாக்குதல் முயற்சிகளுக்காக அனுப்பப்பட்டவர்கள் முஹாஜிர்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்டனர். கி.பி.623 செப்டம்பரில் வடக்கேயிருந்து மிகுந்த செல்வத்துடன் மக்கத்து வர்த்தகக் குழுவொன்று ஜுமாஹ் கோத்திரத்துத் தலைவர் உமையாவின் தலைமையில் திரும்பி வந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது. ஆயுதபாணியினரான நூறு பேர் அதனுடன் வருவதும் தெரிந்தது. உமையா எப்போதுமே இஸ்லாத்தின் மிகக் கொடூரமானதோர் எதிரியாக விளங்கி வந்துள்ளார். தாகுதலுக்குரிய மற்றுமொரு காரணியாக அமைந்தது கிடைக்கக் கூடிய பொருட் செல்வம். மொத்தம் 2500 ஒட்டகங்கள் மீது பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன எனக் கூறப்பட்டது. எவ்வாறாயினும் முஹாஜிர்கள் மாத்திரம் நூறு குறைஷியரை எதிர்த்து நிற்க இயலாது. எனவே இம்முறை நபிகளார் இருநூறு பேருடன் புறப்பட்டார்கள். அவர்களுள் பாதிப்பேருக்கும் மேலானோர் அன்ஸாரிகள். இம்முறையும் கிடைத்த செய்திகள் போதியனவாக இல்லை. எனவே மோதல்களேதும் இடம் பெறாது போயின. சுமார் மூன்று மாதங்களின் பின்னர், ஷம்ஸிய அபூஸுப்யான் ஸிரியாவுக்கு நடாத்திச் சென்ற செல்வமிக்கதும் பாதுகாப்புக் குன்றியதுமான ஒரு வர்த்தகக் குழுவையும் தவற விட்டு விட்டனர் மதீனத்தார். அது பற்றிய செய்தி தாமதமாகவே வந்து சேர்ந்தது. நபிகளாரும் தோழர்களும் மதீனாவின் தென் மேற்கே செங்கடலை நோக்கி விரியும் யான்பூ வெளியின் உஷைராவை அடைந்தபோது அக்குழு ஏற்கெனவே அப்பிரதேசத்தைக் கடந்து சென்றிருந்தது. என்றாலுமென்ன? அபூஸுப்யான் ஸிரியாவிலிருந்து சீக்கிரமே திரும்பி வருவார். சில வேளை மேலும் கூடிய செல்வங்களுடன் அவர் வரக் கூடும். அப்போது, இறைவன் நாடினால், அவரை மடக்க மதீனத்தார் தவற மாட்டார்கள்.


இதுவரை எந்தவொரு மோதலும் இடம்பெற்றிராவிடினும் கூட, யத்ரிபில் தமது எதிரிகள் நிலைபெற்றிருப்பது குறித்த அச்சம் குறைஷியரிடையே இருக்கத்தான் செய்தது. எவ்வாறாயினும் தனது தென்புறம் நோக்கிய நடவடிக்கைகளுக்கு இது ஒரு தடையாக இருக்கப் போவதில்லை என அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையும் பொய்த்து விடலாயது. யெமனிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு மக்கத்து வர்த்தகக் குழு பற்றிய செய்தி மதீனாவை எட்டியது. நபிகளார் தமது ஒன்று விட்ட சகோதரர் அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ் என்பாருடன் மேலும் எண்மரை அனுப்பி, நக்லாவில் அவ்வர்த்தகக் குழுவை எதிர்நோக்கி நிற்கும்படி வேண்டினார்கள். நக்லா, தாயிபுக்கும் மக்காவுக்கும் இடையில் அமைந்திருந்தது. அது ரஜப், வருடத்தின் நான்கு புனித மாதங்களில் ஒன்று. தாக்குதல்கள் மேற்கொள்ள அப்த்-அல்லாஹ் கட்டளையிடப்படவில்லை. வெறுமனே அக்குழு பற்றிய விவரங்களைக் கொண்டுவர மட்டுமே பணிக்கப்பட்டிருந்தார். தென்புல வர்த்தகக் குழுக்கள் எவ்வளவு பாதுகாப்புடன் செல்கின்றன என்பதை அறிந்து கொள்ளவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதென்பதில் ஐயமில்லை. எதிர்கால நடவடிக்கைகட்கு இவ்விவரங்கள் துணையாயமையும்.


முஹாஜிர்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடத்தையடைந்ததும், முக்கியமான வழியினின்றும் ஒதுங்கி, மேட்டு நிலமொன்றில் கூடாரமடித்துத் தங்கி அவதானித்து நின்றனர். அப்போது ஒரு சிறிய குறைஷிய வர்த்தகக் குழுவொன்று அவ்விடத்தினூடாக வந்து மதீனத்தார் இருப்பதை அவதானிக்காது அண்மையிலேயே கூடாரமடித்துத் தங்கியது. உலர்ந்த திராட்சைப் பழம், தோற்பொருட்கள் உட்பட பல்வேறு வர்த்தகப் பொருட்களை ஒட்டகங்கள் சுமந்து வந்திருந்தன. அப்த்-அல்லாஹ்வும் சகாக்களும் பிரச்சினைக்குள்ளாயினர். நபிகளாரின் ஒரே கட்டளையாக இருந்தது. செய்திகள் கொண்டு வருவது மட்டுமே. தாக்குதல் நடாத்துவதை அன்னார் தடுத்துக் கூறவில்லை. புனித மாதக் கடப்பாடுகள் குறித்தும் எதுவும் கூறவில்லை. இஸ்லாத்துக்கு முன்னைய கால வழக்கங்கள் இன்னும் கூட வலுவுள்ளனவா என அவர்கள் தம்மைத் தாம் வினவிக் கொண்டனர். அருளப்பட்ட இறைவசனங்கள் அவர்களது சிந்தையைக் கிளரின : 

“ அநியாயத்திற்குள்ளானவர்களுக்கு யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுவிட்டது…… இவர்கள் ( எத்தகையோரென்றால் ) நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து (விரோதிகளால்) துரத்தப்பட்டார்கள்.” குர்ஆன் : 22 : 39

தாம் குறைஷியருடன் இப்போது யுத்தத்திலேயே இருந்தனர். இஸ்லாத்திற்கு மிகவும் கொடூரமான எதிரிகளாக விளங்கிய மக்ஸும் கோத்திரத்தவர்களுள் இருவரும் அக்குழுவில் காணப்பட்டனர். அது ரஜப் மாதத்தின் கடைசித் தினத்துக் காலையாக இருந்தது. கதிரவனின் மறைவு ஷஃபான் மாதத்தைக் கொண்டு வந்து விடும். அது ஒரு புனித மாதமல்ல. எனினும் அதுவரை காத்திருந்தால் தமது எதிரிகள் காலத்தால் அல்லாவிடினும் தூரத்தால் பாதுகாக்கப்பட்டு விடுவர். ஏனெனில் அவ்வேளை அவர்கள் புனித பிரதேசத்தினுள் நுழைந்திருப்பர். மிகவும் தயங்கிய பின்னர் முஹாஜிர்கள் தாக்குவற்கு முடிவு செய்தனர். அப்த்-ஷம்ஸ் கோத்திரத்துடன் உடன்படிக்கை செய்திருந்த ‘கிந்தா’க்களில் ஒருவரை முதலாவது அம்பு கொன்றது. பின்னர் மக்ஸுமியான உத்மானும் அடிமையான ஹகம் என்பாரும் சரணடைந்தார்கள். உத்மானின் சகோதரர் நவ்பல் தாக்குதலிலிருந்தும் தப்பி மக்காவைச் சென்றடைந்தார்.


அப்த்-அல்லாஹ்வும் சகாக்களும் கைதிகளுடன் ஒட்டகங்களையும் வர்த்தகப் பொருட்களையும் கொண்டு மதீனா சென்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஐந்திலொரு பங்கை நபிகளாருக்கு வைத்து விட்டு மீதியை அவர்கள் பங்கிட்டுக் கொண்டனர். ஆனாலும் நபிகளார் அவற்றை ஏற்க மறுத்து, “ புனித மாதத்தில் யுத்தம் செய்ய நான் உங்களை ஏவவில்லை ” என்றார்கள். யுத்தம் செய்தவர்களோ நாம் இத்தோடு அழிந்து போனோம் என நினைத்தனர். மதீனாவில் இருந்த அவர்களது சகோதரர்கள் ரஜப் மாதத்துப் புனிதத்துவத்தைக் குலைத்தமைக்காக அவர்களைக் குறை கூறினர். நபிகளார்க்கு இது ஒரு துர்ச்சகுனம் என்றனர் யூதர்கள். முஹம்மத் சமய விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றச்சாட்டைப் பல்வேறு இடங்களிலும் பறை சாற்றினர் குறைஷியர். அவ்வேளை அருளப்பட்ட இறைவசனங்கள் கூறின :

சிறப்புற்ற மாதங்களில் யுத்தம் செய்வதைப் பற்றி உம்மிடம் இ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். நீர் கூறும் : அவைகளில் யுத்தம் புரிவது பெரும்பாபம் (தான்)! ஆனால் ( மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்(கத்தில் சேருவ)தை ( நீங்கள் ) தடுப்பதும், அதனை நீங்கள் நிராகரிப்பதும், ( ஹஜ்ஜுக்கு வருபவர்களை ) மஸ்ஜிதுல் ஹராமுக்கு(வரவிடாது தடுப்பது)ம், அதில் வசிப்போ(ரில் விசுவாசங் கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் ( அதை விட ) மிகப் பெரும் பாபங்களாக இருக்கின்றன. தவிர, ( விசுவாசிகளுக்கு நீங்கள் செய்து வரும் ) விஷமம், கொலையை விட மிகக் கொடியது.

குர்ஆன் : 2 : 217


மரபு ரீதியாகப் புனித மாதங்களில் யுத்தம் புரிவது தடை செய்யப்பட்டுள்ள வழக்கம் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகவும், ஆனால் இக்குறிப்பிட்ட நிகழ்வில் மாத்திரம் ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கொண்டனர் நபிகளார். அப்த்-அல்லாஹ்வினதும் அவரது சகாக்களதும் உள்ளங்களிலிருந்த மாபெரும் பளு இதன் மூலம் நீக்கப்பட்டது. தமக்களிக்கப்பட்ட யுத்தப் பொருட்களின் பங்கினை நபிகளார் முழு சமுகத்துக்கும் பொதுவானதாக ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் கைதிகளனைவரையும் விடுவிக்கவென மக்ஸுமிகள் பணய ஈட்டுப் பணம் அனுப்பி வைத்திருந்தனர். எனினும் அடிமையான ஹகம் இஸ்லாத்தை ஏற்று மதீனாவிலேயே தங்கிவிட முடிவு செய்திருந்தார். உத்மான் தனியே மக்கா திரும்பினார்.


இதே ஷஃபான் மாதப் பிறைக் காலத்தில் மற்றுமோர் அனுஷ்டான முக்கியத்துவம் வாய்ந்ததோர் இறைவசனம் அருளப்பட்டது. அதன் ஆரம்பம், சரியான திக்கினை முன்னோக்கித் தொழுவதில் நபிகளார் காட்டிய தீவிர கவனத்தைக் குறித்து நின்றது. பள்ளிவாசலில் தொழுகைக்கான திக்கு ஜெரூஸலச் சுவரில் அமைக்கப்பட்டிருந்த மிஹ்ராப் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தாம் வெளிச் சென்றிருந்த வேளைகளில் பகல் வேளையாயின் சூரியனின் நிலை கொண்டும். இரவு வேளையாயின் நட்சத்திரங்களின் நிலை கொண்டும் தொழுகைக்கான தமது திக்கினை நிர்ணயம் செய்து வந்தனர் நபிகளார்.


( நபியே! ) உம்முடைய முகம் ( பிரார்த்தனை செய்து ) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே, நீர் ( தொழும்போது, மக்காவிலுள்ள ) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே உம்முடைய முகத்தை திருப்புவீராக! 
( விசுவாசிகளே! ) நீங்களும் எங்கிருந்த போதிலும் ( தொழுகையில் ) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக! ”. குர்ஆன் : 2 : 144


உடனடியாகவே பள்ளிவாசலின் தென்புறச் சுவரில் ஒரு மிஹ்ராப் அமைக்கப்பட்டது. மக்காவை முன்னோக்கியதாக அமைந்த இதனை நபிகளாரும் தோழர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அன்று முதல் முஸ்லிம்கள் தமது தொழுகையின் போது கஃபாவையே முன்னோக்கலாயினர். ஏனைய ஆசாரங்களுக்கும் அதுவே மத்தியத்தானமாயது.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment