Wednesday, 2 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

து ய ர வ ரு ட ம் ( தொடர்… )

மக்காவுக்கு திரும்பி வரும் வழியில் தகீப் கோத்திரத்தாரிடமிருந்து எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை என்பதை நபிகளார் நன்குணர்ந்து கொண்டனர். தம்மை நிராகரித்துவிட்ட இரு நகரங்களுக்கும் இடைப்பட்டிருந்த நக்லாஹ் வெளியைப் பிந்திய இரவில் வந்து சேர்ந்தார்கள் நபிகளார். தாம் நிராகரிக்கப்பட்டுள்ளமை அன்னாருக்கு தெளிவாகியிருந்த இந்த நிலையில்தான் தூரத்து நினவேயின் மனிதரொருவர் அன்னாரின் இறைதூதுவத்தை அங்கீகரித்திருந்தார். இப்போது நக்லாஹ்வில் தொழுவதற்காக நபிகளார் எழுந்து நின்ற வேளை ஜின்களின் கூட்டமொன்று அவ்விடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

நபிகளார் ஓதிக் கொண்டிருந்த குர்ஆன் வாசகங்களைக் கேட்டு நஸீபீனிலிருந்து வந்த அந்த ஏழு ஜின்களும் மெய்மறந்து நின்றன. தாம் மானிட லோகத்துக்கு மாத்திரம் அனுப்பப்பட்டவரல்ல என்பதை நபிகளார் அறிந்திருந்தனர். இறை வசனங்கள் அண்மையில்தான்…

நபியே! நாம் உம்மை உலகங்கள் யாவைக்கும் ஒரு அருளாகவே அனுப்பியிருக்கின்றோம் ( - குர்ஆன்: 21 :107 ) எனப் பிரகடனப்படுத்தியிருந்தன.

முன்னைய ஒரு ஸூறா (குர்ஆன் : 55) ஜின்களுக்கும் மனிதர்களுக்குமாக அருளப்பட்டிருந்தது. இரு சாராருக்கும் தீமைகள் புரிந்தால் தண்டனையாக நரகமும், இறை பக்தியுடன் நன்மைகள் செய்தால் சுவர்க்கமும் கிட்டும் நன்மாராயமும் கூறப்பட்டிருந்தது. இப்போது மற்றுமோர் இறைவசனம் அருளப்பட்டது :

( நபியே! ) நீர் கூறும். வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ; மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று (த் தங்கள் இனத்தார்களிடம் சென்று, அவர்களை நோக்கி) ‘நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் ; அது நேரான வழியை அறிவிக்கின்றது ; ஆகவே அதனை நாங்கள் விசுவாசித்தோம்… என்று கூறினார்கள்.
குர்ஆன் : 72 : 1 - 2



பிறிதோர் இறைவசனம் (ஜின்கள்) கூறினார்கள்: 


எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.

எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.

குர்ஆன் : 46 : 30-31


ஜின்கள் தமது இனத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களை அல்லாஹ்வின் பால் அழைப்பவர் ( இவ்வாறுதான் ஜின்கள் நபிகளாரைக் குறித்தன ) கூறுபவற்றை ஏற்கச் சொன்னமையை விளக்கியது.


இரண்டு நாட்களுக்கு முன்னர் தம்மை வீட்டை விட்டு வெளியேறத் தூண்டிய அதே நிலையிலேயே இருக்கும் இடத்துக்கு மீண்டும் வந்து சேர விருப்பமில்லாதவராக இருந்தனர் நபிகளார். என்றாலும் தமக்கு ஒரு பாதுகாவலர் இருந்தால் தமது தூதை பூர்த்தி செய்யும் பணியைத் தொடரலாம். பனீ ஹாஷிம்கள் அன்னாரை கைவிட்டு விட்டனர். எனவே நபிகளாரின் சிந்தனை தமது தாயாரின் கோத்திரத்தார் வசம் திரும்பியது. அங்கு நிலைமை சிறிது மாற்றமாகவே காணப்பட்டது. அன்றைய நிலையில் மிக்க பிரசித்தமும் செல்வாக்கும் உடையவராக ஸுஹ்ராக் கோத்திரத்தாருள் விளங்கியவர் அக்னஸ்-இப்ன்-ஷரீக். ஆழ்ந்து நோக்கின் அவர் அக்கோத்திரத்து அங்கத்தவரல்ல என்பது புலனாகும். உண்மையில் அவர் தகீப் கோத்திரத்தவரே. எனினும் நீண்ட காலமாக ஸுஹ்ராவின் கூட்டுறவாளர்களுள் ஒருவராக இருந்து, அவர்களால் தமது தலைவராகவும் ஏற்கப்பட்டிருந்தார் அவர். அக்னஸின் உதவியை நாடுவதென தீர்மானம் செய்தனர் நபிகளார். அப்போது நபிகளாரை விட வேகமாக மக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு குதிரைப் பிரயாணி அன்னாரை முந்தினார். அவரை நிறுத்தி உதவி வேண்டிய நபிகளார், மக்காவில் அக்னஸிடம் சென்று ‘ நான் இறைவனின் தூதை நிறைவேற்ற வேண்டி நீர் எனக்குப் பாதுகாப்புத்தருவீரா? என முஹம்மத் கேட்கின்றார் ’ எனக் கூறும்படி கேட்டனர். நன் மனம் படைத்தவராயிருந்த அப்பிரயாணி கிட்டும் பதிலையும் கொண்டு வருவதாகச் சென்றார். பதில் ஏமாற்றத்தையே விளைத்தது. கூட்டு அங்கத்தவராக சேர்ந்து கொண்ட ஒருவருக்குத் தான் கூட்டில் சேர்ந்துள்ள கோத்திரத்தின் சார்பில் பேச அருகதையில்லையெனக் கூறிய அக்னஸ், பாதுகாப்புப் பொறுப்பொன்றனுக்கு முழுக்கோத்திதின் சார்பில் பேச அருகதையில்லையெனக் கூறிய அக்னஸ், பாதுகாப்புப் பொறுப்பொன்றனுக்கு முழுக் கோத்திரத்தையும் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கத்தன்னால் முடியாதென்றும் கூறி விட்டார். 

நபிகளார் மக்காவிலிருந்தும் அதிக தூரத்தில் இருக்கவில்லை. முன்னைய வேண்டுகோளை இப்போது ஸுஹைலுக்கு அனுப்பினர். அவரது பதிலும் ஏமாற்றத்தையே விளைத்தது. எனினும் அவர் காட்டிய காரணங்கள் அவரது இஸ்லாமிய எதிர்ப்பு நிலையோடு சம்பந்தப்பட்டிருக்கவில்லை.மீண்டும் கோத்திர நியதிகளே தலையெடுத்தன. மக்காவின் குழிவுப் பிரதேசத்தில் ஸுஹைலின் கோத்திரத்தார் தனித்துவம் பெற்று விளங்கினர். லுஅய்யின் மகன் ஆமிரின் வம்சாவளியில் வந்தவர்கள் அவர்கள். ஏனையோர் அனைவரும் ஆமிரின் சகோதரன் கஅப்பின் வழிவந்தவர்கள். ஆமிரின் மக்கள் கஅபின் மக்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குபவர்களல்ல எனக் கூறி விட்டார் ஸுஹைல்.

நகரத்தை நோக்கிய தம் வழியினின்றும் திரும்பி தமக்கு முதல் இறைவசனங்கள் அருளப்பட்ட ஹிறா மலையின் குகைக்குச் சென்றனர் நபிகளார். அங்கிருந்து தமது வேண்டுகோளைத் தம்மை நெருங்கியிருந்த முத்இம்முக்கு அனுப்பினார்கள். நவ்பல் கோத்திரத்துத் தலைவரான இந்த முத்இம், முன்னர் தடையுத்தரவு இருந்த காலங்களில் அதனை ரத்துச் செய்யத் திட்டமிட்டவர்களில் ஒருவர். முத்இம் உடனே சம்மதம் தெரிவித்து “ அவர் நகரினுள் நுழையட்டும் ” எனப் பதிலனுப்பினார்.

அடுத்த நாள் காலை பூரண ஆயுதபாணியராக, தனது மக்களும் மருமக்களும் புடைசூழ நபிகளாரை கஃபாவுக்கு அழைத்து சென்றார் முத்இம்.

அபூஜஹ்ல் இவர்களை நோக்கி இவர்களும் முஹம்மதைப் பின்பற்றுபவர்களாகி விட்டார்களா என்றார்.

“ நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளிக்கின்றோம் ” எனக் கூறினர் நவ்பல் கோத்திரத்தார்.

மக்ஸுமியால் கூற முடிந்தது ஒன்று மட்டுமே :

“ நீங்கள் யாரைப் பாதுகாக்கின்றீர்களோ அவருக்கு நாங்கள் பாதுகாப்பளிப்போம் ”.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment