Monday, 7 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

அ மை தி யு ம்
பி ரி வி னை யு ம் ( தொடர்… )


பாலை நிலச் சோலையில் இனிமேலும் உள் நாட்டு யுத்தங்கள் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு ஒரு முற்றுப் புள்ளியிடுவதாக அமையுமென்ற எண்ணத்தில் புதிய நிலையைப் பல யூதர்கள் வரவேற்றனர். என்றாலும் அவ்வாறான ஆபத்துகள் மூலமும் சில நன்மைகள் விளையவே செய்தன. அறபிகளிடையே காணப்படக் கூடிய பிரிவினைகள் அறபிகளல்லாதோரின் நிலையை உயர்த்தி வைத்தன. அவர்கள் யுத்த சகாக்களாக நாடப்பட்டு வந்தனர். அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தார்களது ஒற்றுமை பழைய யுத்த உடன்பாடுகளைப் பெறுமதியிழக்கச் செய்து விட்டது. அதேவேளை யத்ரிபின் அறபிகளை மிகப் பலம் வாய்ந்தோராகவும் அது ஆக்கி வைத்தது. நபிகளாரிடம் தாம் செய்து கொண்ட ஒப்பந்தம் அறபிகளின் பலத்தில் தாமும் பங்கு பெற்றுக்கொள்ள யூதர்களுக்குத் துணையாயிருந்தது. பாலைச் சோலையின் வெளியில் வாழும் பரந்த அறாபிய சமுகத்தவர்களுடன் யுத்தங்கள் மூளக் கூடுமாயின் தாமும் பங்கு பெற வேண்டியிருக்குமென்பதையும் அவர்கள் உணராதிருக்கவில்லை. இன்னும் பரீட்சிக்கப்படாத புதிய ஏற்பாடுகள் மூலம் பெரு நட்டங்கள் கூட விளையலாம். பழய அமைப்பு முறை அவர்களுக்கு நன்கு பரிச்சயமானதாயிருந்ததோடு, அது குறித்துப் போதிய அறிவும் அவர்களுக்கிருந்தது. எனவே பழய அமைப்பு முறைக்கே மீண்டு கொள்ளும் ஆவலும் யூதர்கள் பலரிடை உதித்திருந்தது. இவ்வாறான தெளிவற்றதொரு பின்னணியிலேயே, அறாபியரிடையே காணப்பட்ட பிரிவினைகளைக் கொண்டு லாபமீட்டுவதில் பெருந்திரன் வாய்ந்திருந்தவரும் பனீகைனுகாவைச் சார்ந்தவருமான ஒரு யூத அரசியல்வாதி, அவ்ஸ்-கஸ்ரஜ் ஒருமைப்பாடு காரணமாக மிகவும் மனமுடைந்து போனவராகக் காணப்பட்டார். எனவே அவர் தனது கோத்திரத்தில் நல்ல குரல் வளம் வாய்க்கப்பெற்றிருந்ததோர் இளைஞரை அழைத்து, அவரை, அன்ஸாரிகள் அமருமிடம் நோக்கிச் சென்று, கடைசியாக நடந்த உள்நாட்டு யுத்தமான புஆத் யுத்தத்தின் சிறிது முன்னும் பின்னும் இரு கோத்திரத்தாராலும் இயற்றப்பட்டுப் பாடப்பட்டு வந்த கவிதைகளை அவர்கள் மத்தியில் பாடும்படி வேண்டினார். அக்கவிதைகள் எதிரிகளை இகழ்ந்தன; வீரர்களின் பிரதாபங்களைப் போற்றின ; - வீரமரணம் அடைந்தவர்களைப் புகழ்ந்துரைத்தன ; பழி வாங்கும் அச்சுறுத்தல்களளித்தன. தன்னைச் சூழவிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்து நின்ற அந்த இளைஞர் நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்துக்கு இவர்களைக் கொண்டு செல்வதில் பெருவெற்றி கண்டார். அவ்ஸ்களைச் சார்ந்தோர் அப் பாடல்களை உற்சாகமாக வரவேற்றனர். கஸ்ரஜ் கோத்திரத்தாரும் தமது பாடல்களை அவ்வாறே வரவேற்றனர். இது பின்னர் இரு சாராரையும் வாதாட்டங்களுக்குள்ளாக்கவே, அவர்கள் பெருமைகள் பாராட்டத் தொடங்கி, ஒருவரையொருவர் இகழ்ந்துரைத்து இறுதியில் 
“ போர்! போர்! ” எனக் கோஷமிடலாயினர். தீக்குழம்புப் பாறைப் பகுதிக்குச் சென்று யுத்தத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் செய்தி நபிகளாரை எட்டியதும், உடனிருந்த முஹாஜிர்களையும் அழைத்துக் கொண்டு, தமது இரு உபசரிப்பாளர்களும் ஏற்கெனவே யுத்தத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த இடம் நோக்கி அன்னார் மிக வேகமாகச் சென்றார்கள்.

“ ஓ முஸ்லிம்களே! ” என அவர்களை உரத்து விளித்து தெய்வீக நாமத்தை இரு முறை மொழிந்தார்கள் ; 
அல்லாஹ்! அல்லாஹ்! பின்னர் 

“ நான் உங்களுடன் இருக்க ; அல்லாஹ் உங்களை இஸ்லாத்தின் பால் வழிகாட்டியிருக்க ; அதன் மூலம் உங்களைக் கெளரவித்து, அதன் மூலமே மூடவழக்கங்களிலிருந்தும் உங்களை விடுவித்து, நம்பிக்கையீனத்தினின்றும் உங்களைப் பாதுகாத்து, உங்களது இதயங்களையெல்லாம் ஒன்றுபடச் செய்துள்ள நிலையிலும், நீங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தவர்கள் போல் தான் நடந்து கொள்வீர்களா? ” என வினவினர் நபிகளார்.
உடனே அன்ஸாரிகள் அனைவரும் தாம் வழிகெடுக்கப் பட்டமையை உணர்ந்து கொண்டனர்.

அழுதனர்…

ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.

நபிகளாரின் வார்த்தைகட்குச் செவிமடுத்தும் அடிபணிந்தும் நகர் நோக்கித் திரும்பிச் சென்றனர். இ.இ. 386

விசுவாசிகளின் சமுகத்தை மேலும் ஒற்றுமைக்குள்ளாக்கும் வகையில் நபிகளார் அன்ஸாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றனை உருவாக்கினார்கள். அதன் மூலம் ஒவ்வோர் அன்ஸாரியும், புலம் பெயர்ந்து வந்தோர்க்கிடையில் தமக்கு நெருங்கியவரான ஒரு முஹாஜிரைச் சகோதரராக அமைத்துக் கொள்வார். இவ்வாறே ஒவ்வொரு முஹாஜிரும் அன்ஸாரிகளுள் தமக்கு நெருக்கமானதோர் அன்ஸாரியைச் சகோதரராகக் கொள்வார். எனினும் தம்மையும் தமது குடும்பத்தோரையும் இவ்வேற்பாட்டினின்றும் விலக்கிக்கொண்டனர் நபிகளார். அன்ஸாரிகளுள் ஒருவரை விட்டு மற்றொருவரைத் தமது சகோதரராகக் கொள்வது பேதங்களை வளர்த்து விடக் கூடும். நபிகளார் அலீயின் கையைப் பிடித்துயர்த்தி “இவரே என் சகோதரர்” என்றார்கள். ஹம்ஸா ஸைதின் சகோதரராயமைக்கப்பட்டார்.



இஸ்லாத்தின் மீது பெரும் பகைமை பாராட்டி வந்தவர்களுள் ஒன்றுவிட்ட சகோதரர்களான இருவர் சிறப்பிடம் பெற்று விளங்கினர். இருவரும் இரு சகோதரியின் புதல்வர்கள். தந்தை வழியிலோ ஒருவர் கஸ்ரஜ்களையும் மற்றவர் அவ்ஸ்களையும் சார்ந்திருந்தனர். இருவருமே தத்தமது கோத்திரங்களில் பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அவ்ஸ்களின் அபூஆமிர் சில போது ‘துறவி’ என்றே வழங்கப்பட்டு வந்தார். இவர் நீண்டகாலமாகத் துறவு வாழ்க்கையைக் கைக்கொண்டவர் ; மயிரால் இழைக்கப்பட்ட ஆடையணிபவரெனக் கருதப்பட்டவர். இப்றாஹீமிய மதத்தைக் கொண்டவராகத் தன்னைக் கூறிக் கொண்ட அபூஆமிர் யத்ரிபின் மக்களிடையே ஆன்மீக அதிகாரம் கொண்டு விளங்கினார். புதிய மதம் குறித்து விசாரிக்கவென நபிகளாரிடம் சென்றார் அவர். இறைவசனங்கள் பன்முறை உறுதிப்படுத்தியபடி ‘இப்றாஹீமின் மதமே இது’ * என அவருக்கு விளக்கப்பட்டது. அபூஆமிரோ, ‘நான் அம்மதத்தவன்’ எனக் கூறியவராக நபிகளாரின் கூற்றை எதிர்த்து, இப்றாஹீமிய நம்பிக்கைகளை அன்னார் பொய்ப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டலானார். 

“ அவ்வாறு செய்தவனல்ல நான் ; அதனையே தெளிவானதாக, தூய்மையானதாகக் கொண்டு வந்துள்ளேன் ” என்றனர் நபிகளார். 

அபூஆமிர் சினங்கொண்டு, “ இறைவன் பொய்யுரைப்பவரைப் பிரஷ்டம் செய்து, தனிமையில் வாடி இறக்கச் செய்வானாக ” என்றார். 

நபிகளார் கூறினார்கள் : “ அப்படியே ஆகட்டும் ; இறைவன் பொய்யுரைப்பவருக்கு அவ்வாறே செய்வானாக! ”
இ.இ. 411-12


தனது அதிகாரமும் செல்வாக்கும் வேகமாகப் பலமிழந்து செல்வதனை அபூஆமிர் சிறிது காலத்துள்ளேயே உணர்ந்து கொண்டார். தனது சொந்த மகன் ஹன்ஸலா, 
நபிகளார் மீது கொண்டிருந்த பற்றுதல் அவரை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கியது.எஞ்சியிருந்த சுமார் பத்து சீடர்களையும் கூட்டிக்கொண்டு மக்கா நோக்கிப் புறப்பட்டார் அவர். தானே உருவாக்கிக் கொண்ட தனது சுயபிரஷ்டத்தின் ஆரம்பம் இது என்பதை அவர் உணரவில்லை.


நபிகளாரின் வருகையினால் விரக்திக்குள்ளான மற்றவர், அபூஆமிரின் ஒன்று விட்ட சகோதரரும் கஸ்ரஜ்களைச் சார்ந்தவருமான அப்த்-அல்லாஹ்-இப்ன்-உபை. அவருக்கேற்பட்டது ஆன்மீக நட்டமேதுமல்ல, யத்ரிப் சோலையில் அவருக்கிருந்த லெளகிக மேன்மைக்கானதோர் அச்சுறுத்தலே நபிகளாரின் உருவில் வந்திருந்தது. இவரதும் சொந்த மகன் அப்த்-அல்லாஹ் மட்டுமன்றி, மகள் ஜமீலாவும் நபிகளாரைச் சார்ந்திருந்தார். எனினும் அபூஆமிரைப் போலல்லாது, இப்னு உபை பொறுத்திருந்து முடிவு செய்தார். புதிதாக வந்தவரது அபிரிமிதமான செல்வாக்கு அண்மையில் அல்லது சேய்மையில் நிச்சயம் குன்றத் தொடங்கும். அதுவரை எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது என முடிவு செய்திருந்தார் அவர். எனினும் தன் சுய உணர்வுகளையே துரோகிக்கும் வகையில் இப்ன்-உபை நடக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் பல உருவாகத் தொடங்கின.

இவ்வாறானதொரு சந்தர்ப்பம் விரைவாகவே உருவாகியது. கஸ்ரஜின் மற்றுமொரு தலைவரான ஸஅத்-இப்ன்-உபாதா சுகவீனமுற்றிருந்தமையைக் கேள்விப்பட்டு அவரைக் காணவென நபிகளார் சென்று கொண்டிருந்தார்கள் மதீனாவின் பெரும் தனவந்தர்கள் அனைவரும் தமது இல்லங்களை கோட்டைகளின் அமைப்பிலேயே கட்டியிருந்தனர். நபிகளார் இப்ன்-உபையின் கோட்டையான முஸாஹமைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. கோட்டைச் சுவரின் நிழலில் அமர்ந்து தனது கோத்திரத்தாருடனும் ஏனைய சில கஸ்ரஜ்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தார் இப்ன்-உபை, தலைவரொருவருக்கான மரியாதை செய்யும் எண்ணத்துடன் நபிகளார் தம் கழுதையினின்றும் இறங்கி, இப்ன்-உபைக்குச் சோபனம் கூறியவர்களாக, தாமும் கூடியிருந்தோருடன் அமர்ந்து உரையாடலில் பங்கு கொண்டனர். பின்னர், குர்ஆனின் சில வாசகங்களை ஓதிக்காட்டி இப்ன்-உபையை இஸ்லாத்தின்பால் அழைத்தார்கள். அன்னார் தாம் கூறத் தூண்டப்பட்டவற்றைக் கூறி முடித்ததும் இப்ன் உபை நபிகளாரை நோக்கி,

“ நீர் கூறியவற்றை விட வேறெதுவும் சிறந்ததாக இருக்க முடியாது - அவை மட்டும் உண்மையாக இருக்கக் கூடுமாயின்! ஆகவே உமது வீட்டிலேயே நீர் இருந்து கொள்ளும் ; உம்மை நாடி யாரும் வருவராயின் அவர்களுக்கு உமது போதனையைக் கூறும் ; உம்மை நாடி வராதோருக்கு உமது போதனைகளைக் கொண்டு சுமைகளை ஏற்றாதீர். அவர்கள் விரும்பாத விடயங்களை எடுத்துக் கொண்டு அவர்களது சபைகளில் சென்று பேசாதீர். ” என்றார்.

உடனேயே மற்றுமொரு குரல் எழுந்தது : “ இல்லை. அவற்றுடன் நீர் எம்மிடம் வாரும் ; எமது சபைகளுக்கு, எமது உறைவிடங்களுக்கு, எமது வீடுகளுக்கு நீர் வாரும். அதனையே நாம் விரும்புகிறோம். இறைவன் தனது அருட்கொடைகளில் எமக்குத் தந்தது அது. அதை நோக்கியே அவன் எம்மை வழி நடாத்தியிருக்கின்றான். ” - குரலுக்குறியவராயிருந்தவர் அப்த்-அல்லாஹ்-இப்ன்-ரவாஹா. 

தனது நடவடிக்கைகள் அத்தனைக்கும் இப்ன்-ரவாஹா ஆதரவாயிருப்பார் என இப்ன்-உபை நம்பியிருந்தார். மனமுடைந்த அவர், துக்கித்தவராக ‘தன் நண்பர்களால் கைவிடப்பட்ட ஒருவன் எவ்வித துணையுமற்றவனாய் விடுவான்’ என்ற கருத்துடனான ஒரு கவிதை வரியைப் பாடலானார். அப்போதைய நிலையில் மேலும் எதிர்த்து நிற்பது உசிதமானதல்ல என்பதை உணர்ந்து அமைதியுற்றார் இப்ன்-உபை.

இப்ன்-ரவாஹாவின் ஆதரவான உற்சாக வார்த்தைகளின் மத்தியிலும் நபிகளார் சோகத்துடனேயே எழுந்து சென்றார்கள். நோயாளியின் வீட்டை அடைந்த பின்னரும் கூட, அன்னாருடைய மனத்தாங்கல், முகத்தில் நன்கு பிரதிபலித்துக் கொண்டிருந்தது. நபிகளாரின் சிந்தையைக் குழப்பி நிற்கும் விடயம் என்னவென்று ஸஅத் வினவினார். இப்ன்-உபையின் ஊடுருவ முடியாத அவிசுவாச நிலை பற்றிக் கூறியதும் ஸஅத் கூறினார் :

“ அல்லாஹ்வின் தூதரே! அவருடன் சாந்தமாக நடந்து கொள்ளுங்கள். இறைவன் உங்களை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்தபோது, அவரை முடிசூட்டவென நாம் ஒரு கிரீடத்தைச் சமைத்துக் கொண்டிருந்தோம். அவரது அரசை நீங்கள் கொள்ளை அடித்து விட்டீகள் என அவர் நினைக்கின்றார். ”


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,


* “ நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள் ” என்று அவர்கள் கூறுகிறார்கள். 
“அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

அல் குர்ஆன் : 2 : 135

No comments:

Post a Comment