Monday, 7 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

அ மை தி யு ம்
பி ரி வி னை யு ம் ( தொடர்… )

ஸஅத்தின் வார்த்தைகளை நபிகளார் ஒரு போதும் மறந்து விடவில்லை. இப்ன்-உபையோ தனது செல்வாக்கு வெகு உயரிய நிலையிலிருந்து மிக வேகமாகக் குன்றிச் செல்வதை உணர்ந்து கொண்டார். தான் இஸ்லாத்தினுள் நுழையாது விடின் எஞ்சியிருக்கும் சிறிதளவு செல்வாக்கும் முற்றாகவே இல்லாது போய் விடலாம். பெயரளவிலாவது இஸ்லாத்தைத் தழுவிக் கொள்வது, தன்னைத் தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்துக் கொள்ளத் துணை புரியவும் கூடும். ஏனெனில், பாரிய காரணங்களேதுமின்றிப் பழய வாக்குறுதிகளை முறியடிப்பதனை அறாபியர் ஒரு போதும் விரும்புவதில்லை. எனவே இப்ன்-உபை இஸ்லாத்தில் நுழைந்து கொள்வதில் காலதாமதம் செய்யவில்லை. அவர் நபிகளாரை ஏற்று, வாக்குறுதியளித்து, தொழுகையையும் கடைப்பிடித்தொழுகி வந்த நிலையிலும் விசுவாசிகள் அவர் குறித்து நம்பிக்கையற்றவர்களாகவே இருந்தனர். நேர்மையில் குன்றிய, ஐயத்துக்குறியவர்களான வேறு பலரும் இருக்கவே செய்தனர். எனினும் இப்ன்-உபை தான் கொண்டிருந்த செல்வாக்குகளின் காரணமாக அவர்களிலிருந்தும் முற்றும் வேறுபட்டவராகவே விளங்கினார். அதனாலேயே அவர் மிகவும் அபாயகரமானவராகவும் தோற்றினார்.


பள்ளிவாசல் உருப்பெற்று வந்த ஆரம்ப மாதங்களிலேயே அஸ்அத்தின் மறைவினால் முஸ்லிம் சமுகம் பேரிழப்புக்குள்ளாயது. அவரே யத்ரிபிலிருந்தும் நபிகளாருக்கு விசுவாச வாக்குறுதியளித்த முதலாமவர். அவரே முஸ்அப்பின் உபசரிப்பாளராக இருந்து இரு அகபாக்களுக்குமிடையில் அவருடன் நெருங்கிக் கருமமாற்றி வந்தவர். நபிகளார் கூறினார்கள் :

“யூதர்களும் அறாபியருள் வஞ்சகர்களும் இப்போது நிச்சயமாகக் கூறுவார்கள், ‘இவர் ஓர் இறை தூதராக இருந்தால் இவரது தோழர் மாண்டிருக்க மாட்டார்’ என்று. நிச்சயமாக இறைவனின் விருப்புக்கு மாறாக நான் எனக்காகவோ எனது தோழர்களுக்காகவோ எதனையும் விரும்பவில்லை.” - இ.இ. 346


அஸ்அத்தின் மரணத்தின் போதுதான் பாரஸிகரான ஸல்மான் இரண்டாம் முறையாக நபிகளாரைச் சந்தித்திருக்க வேண்டும். ஸல்மான் பின்னைய காலங்களில் அப்பாஸின் மகனிடம் இச்சந்திப்புக் குறித்து விளக்கினார் :

“ அல்லாஹ்வின் தூதர் பகீ-அல்-கர்கத்தில்* இருந்தபோது அவரைக் காண நான் சென்றேன். மரணித்து விட்ட அவரது தோழர்களில் ஒருவரது உடம்பைத் தொடர்ந்து அவர் சென்றிருந்தார் ”.

நபிகளார் அங்கு இருப்பார்கள் என்பதனை ஸல்மான் அறிந்து, மரண அடக்கத்தின் பின்னர் அடக்கஸ்த்தலத்தை அடைந்து கொள்ள வசதியாகத் தனது வேலைத்தளத்தினின்றும் ஒருவாரு தப்பி வந்திருந்தார். நபிகளார் இன்னமும் அங்கேயே சில அன்ஸாரிகளுடனும், முஹாஜிர்களுடனும் அமர்ந்திருந்தார்கள். ஸல்மான் தொடர்ந்தார் :

“ அவருக்கு நான் சோபனம் கூறினேன். பின்னர் அவரது இறைதூதுவ முத்திரையைக் கண்டு
கொள்ளும் ஆவலுடன் அவரின் பின்னால் நான் சுற்றி வந்தேன். எனது எண்ணத்தை அறிந்து கொண்ட அவர், தனது மேலங்கியை உயர்த்தி முதுகுக்கு மேலாக வீசினார். எனது குருவானவர் கூறியபடியே முத்திரை அமைந்திருக்கக் கண்டேன். நான் குனிந்து அதனை முத்தமிட்டுக் கண்ணீர் விட்டேன். அல்லாஹ்வின் தூதர் என்னை முன்னால் வரும்படி சைகை செய்தார்கள். நான் அவர் முன் சென்று அமர்ந்து என் சரிதையைக் கூறினேன். அவர் மகிழ்ந்து தனது தோழர்களும் அதனை கேட்க வேண்டுமெனக் கூறினார். பின் நான் இஸ்லாத்துள் நுழைந்தேன்.
இ.இ. 141 ; இ.ஸா. 4 : 56

எனினும் ஸல்மான் பனீ-குரைஸாக்களிடையே கடுமையாக உழைக்கச் செய்யப்பட்டார். அடுத்த நான்கு வருடங்களுக்கு முஸ்லிம்களுடனான அவரது தொடர்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.


வேதத்தையுடைய மக்களுள் இவ்வேளை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர் பனீ கைனுகாவின் ரப்பியாயிருந்த ஹுஸைன்-இப்ன்-ஸல்லாம். அவர் நபிகளாரிடம் இரகசியமாக வந்து தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். நபிகளார் அவருக்கு அப்த்-அல்லாஹ் எனும் நாமத்தைச் சூட்டினார்கள். தனது மதமாற்றம் பகிரங்கப்படுத்தப்படுமுன்னர் தனது சமுகத்தில் தனது நிலைமை குறித்துத் தனது மக்கள் வினவப்படவேண்டும் என்றார் இப்ன்-ஸல்லாம். அவரை நபிகளார் தமது வீட்டினுள் மறைத்து வைத்து கைனுகாவின் சில முக்கியஸ்தர்களை வரவழைத்து விசாரித்தார்கள். “ அவர் எங்களது தலைவர் ; எமது தலைவனின் மகன் ; எமது ரப்பி ; எம்மிடையே கல்வியிலும் அறிவிலும் மிகுந்தவர் ” என்றனர் அவர்கள். அப்போது அப்த்-அல்லாஹ் வெளியே வந்து, அவர்களை நோக்கி,

“ ஓ யூதர்களே! இறைவனை அஞ்சுங்கள். அவன் உங்களுக்கு அனுப்பியுள்ளவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். இவர் இறைவனது தூதர் என்பதனை நீங்கள் நன்கறிவீர்கள் ” என்றார். பின் தன் இஸ்லாத்தையும் தனது குடும்பத்தாரது இஸ்லாத்தையும் அவர் உறுதி கூறினார். அவரது மக்கள் அவரை இகழ்ந்துரைத்தனர். சற்று முன்னர் தாம் உறுதிப்படுத்திய அவரது உன்னத நிலைமையையும் மறுத்துரைத்தனர்.


மதீன மண்ணில் இஸ்லாம் நன்கு வேரூன்றி விட்டது. இறைவசனங்கள், தர்மம் கொடுப்பதனையும், ரமழான் மாதம் நோன்பு பிடிப்பதையும், மற்றும் பொதுப்பட்ட ஏவல்களையும் விலக்கல்களையும் தெளிவு படுத்தி வைத்தன. தினமும் ஐவேளைத் தொழுகை ஒழுங்காகவும் கூட்டாகவும் தொழப்பட்டது. தொழுகைக்கான நேரம் வந்ததும் அனைவரும் பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்த இடத்தில் ஒன்று கூடுவர். ஆகாயத்தில் சூரியனின் நிலையை, அல்லது கிழக்கு வானில் உதயக் காலக் கதிர்கள் தோற்றுவதை, அல்லது மேற்கு வானில் கதிரவனின் மறைவின் பின் மங்கிச் செல்லும் ஒளியைக் கொண்டே அவர்கள் நேரத்தைக் கணித்து வந்தனர். இவ்வாறான கணிப்புகள் வித்தியாசப்படலாம். எனவே தொழுகைக்கான நேரம் வந்ததும் எல்லோரையும் ஒரே வேளையில் கூட்டிக் கொள்ள ஒரு முறையை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. முதலில், யூதர்களைப் போல ஓர் ஊது கூழலைப் பயன்படுத்தலாம் என நினைத்தனர் நபிகளார். பின்னர், கீழத்தேய கிறிஸ்தவர்கள் அப்போது பாவித்து வந்தது போன்று இரு பலகைகளைக் கொண்டு தட்டுவதன் மூலம் அழைப்பு விடுக்கலாம் எனக் கருதவே, அதற்கென இரு பலகைகளும் தயாரிக்கப்பட்டன. இது ‘நாகூஸ்’ என வழங்கியது. எனினும் அவை பாவிக்கப்பட நியமம் இருக்கவில்லை. ஓர் இரவு கஸ்ரஜ்களில் ஒருவரும் இரண்டாம் அகபாவில் சமுகமளித்திருந்தவருமான அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஸைத் என்பார் ஒரு கனவு கண்டு, அடுத்த நாள் அதை நபிகளாரிடம் கூறினார் :

“ என் முன்னால் பச்சை நிறப் போர்வைகள் இரண்டை உடுத்தியிருந்த ஒரு மனிதர் தன் கைகளில் நாகூஸ் ஒன்றனை ஏந்தியவராகச் சென்று கொண்டிருந்தார். நான் அவரிடம் கேட்டேன் ‘ஓ இறைவனின் அடிமையே! அந்த நாகூஸை எனக்கு விற்பீரா?’ என, ‘அதைக் கொண்டு நீர் என்ன செய்வீர்?’ என அவர் கேட்டார். ‘அதைக் கொண்டு நாம் மக்களை தொழுகைக்காக அழைப்போம்’ என்றேன். ‘உமக்கு அதைவிடச் சிறந்ததொரு வழியை நான் சொல்லித் தரட்டுமா?’ என்றார் அவர். ‘அது என்ன வழி?’ என்றேன். அவர் கூறினார் : ‘நீங்கள் கூற வேண்டும் அல்லாஹு அக்பர் அல்லாஹ்வே பெரியவன்’. பச்சைப் போர்வை அணிந்த அம்மனிதர் அதனை நான்கு முறை கூறினார். பிறகு பின்வருவனவற்றை ஈரிரண்டு முறை கூறினார் : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குறிய நாயன் யாருமில்லை எனச் சாட்சி கூறுகின்றேன் : முஹம்மத் அல்லாஹ்வின் தூதராயிருப்பார் என சாட்சி கூறுகின்றேன் ; தொழுகைக்காக வாருங்கள் ; வெற்றிக்காக வாருங்கள் ; அல்லாஹ்வே பெரியவன் ; அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை ”.

இது மெய்யான ஒரு தோற்றமே என்றனர் நபிகளார். நல்ல குரல் வளம். கொண்டிருந்தவரான பிலாலிடம் சென்று தான் உறக்கத்தில் கேட்டது போலவே அனைத்து வார்த்தைகளையும் அவருக்குக் கற்பித்துக் கொடுக்கும்படி அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஸைத் வேண்டிக்கொள்ளப்பட்டார். அண்டையில் இருந்த வீடுகளில் மிக்க உயரமானதாயிருந்தது நஜ்ஜார் கோத்திரத்தவரான ஒரு பெண்ணுடைய வீடாகும். ஒவ்வொரு நாளும் காலை சூரியோதத்தின் முன்னர் பிலால் அங்கு வந்து சேர்ந்து தொழுகைக்கான வேளை வரைக் காத்திருப்பார். குறிப்பிட்ட வேளை வந்ததும் அவர் தன் கரங்களை நீட்டி, பணிவுடன் ;

“ ஓ இறைவா! உன்னையே நான் புகழ்கிறேன் ; குறைஷிகளுக்காக நான் உன் உதவியை நாடுகிறேன். உனது மதத்தை அவர்கள் ஏற்கச் செய்வாயாக! ” எனப் பிரார்த்தித்து விட்டு எழுந்து நின்று தொழுகைக்கான அழைப்பை விடுப்பார்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,


* மதீனாவின் தென் கிழக்கு முனையிலுள்ள அடக்கஸ்த்தலம்.

No comments:

Post a Comment