Tuesday, 1 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

சு வ ன மு ம்  மு டி வி லா வா ழ் வு ம்

தனது சொந்த மக்களிடமிருந்தே பாதுகாப்புத் தேடியவராக திரும்பி வந்த மற்றுமோர் அகதி, உமரின் மைத்துனரான, ஜுமாஹ் கோத்திரத்து உத்மான்-இப்ன்-மஸ்ஊன் ஆவார். தனது ஒன்றுவிட்ட சகோதரர்களான உமையாவும் உபையும் தன்னை வதை செய்வர் என்பதை அவர் நன்கறிந்திருந்தார். இம்முறை ஜுமாஹ் கோத்திரத்தவரான உத்மானுக்குப் பாதுகாப்பளிக்க முன்வந்தவர் வேறொரு கோத்திரத்தவரான ஒரு மக்ஸுமியாகும். உத்மானை வலீத் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். எனினும் தான் பாதுகாப்பாக இருக்கத் தனது சக முஸ்லிம்கள் கொடுமைப்பட்டு வருவதைக் கண்ட உத்மான், வலீதிடம் சென்று அவரது பாதுகாப்பிலிருந்தும் தான் விடுதலை பெற்றுக்கொள்ள விழைவதாகக் கூறினார். 



“ எனது சகோதரன் மகனே! எனது மக்கள் யாரும் உமக்குத் தீங்கிழைத்தனரா? ” என்றார் வலீத்.

“ அவ்வாறேதுமில்லை. நான் அல்லாஹ்வின் பாதுகாப்பை வேண்டி நிற்கின்றேன். அவனுடைய பாதுகாப்பைத் தவிர வேறு எவருடைய பாதுகாப்பையும் நான் தேடவில்லை ” என்றார் உத்மான். 
பின்னர் அவர் வலீதுடன் பள்ளிவாசலுக்குச் சென்று பகிரங்கமாகவே வலீதின் பாதுகாப்பினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டார். தினங்கள் சில கழிய, ஒரு நாள் லபீது எனும் கவிஞர் குறைஷியருக்குக் கவிதைகள் வாசித்துக் கொண்டிருந்தார். அவரது கவிதைகளைக் கேட்கவெனக் குழுமியிருந்த சனத்திரளுள் உத்மானும் அமர்ந்திருந்தார். இயல்பாகவே அறாபியர் கவிதைத்திறன் வாய்க்கப் பெற்றோராய் இருந்தனர். அவர்களுள்ளும், அபூதாலிப், ஹுபைரா, ஹாரிதின் மகனான அபூஸுப்யான் முதலியோர் பெருங்கவிஞர்களாக மதிக்கப் பெற்று வந்தனர். இவர்களுக்கும் மேலாக உன்னதமான கவித்துவம் படைத்தோராகக் கருதப்பட்டவர்கள் வெகு சிலரே. பொது அபிப்பிராயப்படி அச்சிலருள் லபீதும் ஒருவர். அக்காலை அவரே வாழ்ந்து வரும் மிகச் சிறந்த அறபிக்கவிஞராயிருந்தார். அவரைத் தம்மிடையே கொண்டிருப்பதில் குறைஷியர் பெருமை பாராட்டி வந்தனர். அவர் பாடிய கவிதைகள் ஒன்று.

“ இறைவனைத் தவிர அனைத்தும் நிலையற்றன ”

-எனத் தொடங்கியது.

“ உண்மையே பேசினீர் ” என்றார் உத்மான். 

லபீத் தொடர்ந்தார்…

“ மகிழ்வுகள் அனைத்தும் அழிந்தே போவன ”.

“ பொய்யுரைக்கின்றீர் ” என அவரை இடைமறித்த உத்மான் :

“ சுவர்க்க மகிழ்வு ஒரு போதும் அழியாது ” என்றார்.

தன்னை இடையில் யாரும் குறுக்கீடு செய்து பழக்கப்பட்டவரல்ல லபீத். குறைஷியரோ திடுக்கமும் சினமுமுற்றதோடு, கவிஞர் தமது விருந்தினராய் வந்திருந்தமையின் காரணமாக மிகவும் இக்கட்டானதொரு நிலைக்குள்ளாயினர்.

“ ஓ குறைஷி மக்களே! உங்களோடு நண்பர்களாக அமர்ந்தவர்கள் ஒரு போதும் அவமதிக்கப்பட்டவர்களல்லவே! எப்போதிருந்து இப்புது வழக்கம்? ” என்றார் லபீத்.

“ இந்த மனிதர் ஒரு மடையர். எமது மதத்தைக் கைவிட்டுச் சென்று விட்ட மடையர்களுள் இவரும் ஒருவர். அவர் கூறுவதைக் கொண்டு உமது ஆத்மாவை ஆதங்கப்படவிடாதீர் ” என்றார் அவர் உத்மான் அவரையும் எதிர்த்து நிற்கவே, தன் வசமிழந்த அவர், உத்மானைத் தாக்கினார். கண்களுக்கு மேலாக விழுந்த அடியின் காரணமாக உத்மானின் புருவங்களில் ஒன்று நீலம் பாரித்தது. அருகில் அமர்ந்திருந்த வலீத், தனது பாதுகாப்பில் இருந்திருந்தால் அந்தக் கண் இவ்வாறு துயருற்றிருக்காது என்றார். உத்மான் கூறினார் :

“ அவ்வாறன்று அல்லாஹ்வின் பாதையில் தனது சகோதரிக்கு ஏற்பட்ட துயரம் காரணமாக எனது நல்ல கண் வறுமைப்பட்டதாக இருக்கின்றது. உம்மைவிட பலமும் உறுதியும் வாய்ந்த ஒருவனது பாதுகாப்பிலேயே நான் இருக்கின்றேன்.”

“ ஓ என் சகோதரன் மகனே! வாரும். என்னுடன் உமது உடன்படிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளும் ” என்றார் வலீத். உத்மான் ஏற்கவில்லை.


இந்த சம்பவத்தின் போது நபிகளார் பிரசன்னமாயிருக்க வில்லை. எனினும் அன்னார் லபீதின் கவிதை குறித்தும் பின்னர் நிகழ்ந்தன குறித்தும் கூறப்பெற்றார்கள். நபிகளார் இது குறித்துக் கூறியதாகப் பதியப்பட்டுள்ள குறிப்பு ஒன்றே ;

“ அந்தக் கவிஞர் பேசிய வசனங்களுள் உண்மையானது ‘இறைவனைத் தவிர அனைத்தும் நிலையற்றன’ என்பது மட்டுமே ” 
ஸஹீஹ் புகாரி : 63 : 26

-தொடர்ந்துவந்த கவிதையடிகளுக்காக அன்னார் லபீதைக் குறை கூறவில்லை. உலகியல் மகிழ்வுகள் அனைத்தும் அழிந்து போவன எனக் கொண்டு அமைதி கண்டிருக்கலாம். மறுபுறம் எல்லாச் சுவனங்களும், நிலையான தெய்வீக மகிழ்வுகளும் இறைவனோடே இணைத்துக் காணப்பட்டிருக்கலாம். இக்கால அளவிலேயே மற்றுமொரு இறைவசனம் அருளப்பட்டது : 

“ அவனைத் தவிர சகல பொருள்களும் அழிந்து விடக் கூடியனவே ”
குர்ஆன் : 28 : 88

முன்னர் அருளப்பட்டிருந்த ஓர் இறை வாசகம்,

“ மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உமது இறைவன் மட்டும் (அழியாது) நிலைத்திருப்பான் ” 
குர்ஆன் : 55 : 27 - எனக் கூறியிருந்தது. 

நிலையான அருட்கொடைகள் இருக்கும் இடத்தில், அவற்றைப் பெறுவோரும் அவற்றின் மகிழ்வுகளும் இருக்கவே வேண்டும்.

கூடிய விளக்கங்களளிக்கும் ஓர் இறைவசனம் இப்போது அருளப்பட்டது. ஆரம்ப வாசகம் இறுதித் தீர்ப்பு நாள் குறித்துப் பேசியது. 

“ அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் ( அவனுடன் ) பேச முடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர் ; நற்பாக்கியவான்களும் உள்ளனர். துர்ப்பாக்கியவான்கள், நரகத்தில் - ( வீழ்த்தப்படுவார்கள். வேதனையைத் தாங்க முடியாது ) அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டுக் கதறுவார்கள். உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில் அவர்கள் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவற்றை (த்தடையின்றிச்) செய்து முடிப்போன். நற்பாக்கியவான்கள் சுவனபதியில் (நுழைந்து விடுவார்கள்). உமதிறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில்தான் அவர்கள் தங்கிவிடுவார்கள். (அது) முடிவுறாத 
(என்றும் நிலையான) ஓர் அருட்கொடையாகும். ”

அல் குர்ஆன் : 11 : 105-108


இறுதி வாசகங்கள், இறுதித் தீர்ப்பின் பின்னர், அருட்கொடையாய் அமைந்த சுவனத்தை எடுத்து விடுவது இறை நோக்கமல்ல என்பதை வெளிப்படையாக்கி வைக்கின்றன. முதற் சுவனமே எடுக்கப்படலாம். இவ்விறை வாசகங்கள் சம்பந்தமான பல்வேறு வினாக்களும் நபிகளாராலேயே பதிலிறுக்கப் பெற்றன. தம்மைப் பின்பற்றி வந்தோர்க்கு மீள உயிர்ப்பித்தல், இறுதித் தீர்ப்பு, நரகம், சுவர்க்கம் என்பன குறித்து அடிக்கடி போதனைகள் செய்து வந்த நபிகளார் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்கள் :


“ தனது கருணையின், அருளின் பால் தான் விரும்பியோரை ஈர்க்கும் அல்லாஹ், சுவர்க்கத்துக்குறிய மனிதர்களை சுவர்க்கத்துக்கும், நரகத்துக்குறிய மனிதர்களை நரகத்துக்கும் உட்படுத்துவான். அப்போது அவன் (வானவர்களை நோக்கிக்) கூறுவான் : ‘தமது இதயங்களில் கடுகளவேனும் நம்பிக்கையுள்ளவர்களை நரகத்திலிருந்தும் வெளியே எடுங்கள்’ . அவர்கள் பெருந்தொகையினரான மக்களை வெளியே எடுத்து விட்டு, ‘எம் இறைவனே! நீ எமக்கிட்ட கட்டளையின்படியான ஒருவரையாவது நாம் அங்கு விட்டு விடவில்லை’ என்பார்கள். பின்னர் அல்லாஹ், ‘மீண்டும் சென்று யாருடைய உள்ளத்திலேனும் அணுவளவாவது நன்மையிருப்பின் அவர்களையும் வெளியே எடுப்பீர்களாக!’ என்பான். அப்போதும் பெருந்தொகையினரான மக்களை அவர்கள் கூட்டி வந்து, ‘சிறிதளவேனும் நன்மையை நாம் அங்கு விட்டு வைத்தவர்களாக இல்லை’ என்பர். அப்போது வானவர்களும், இறைதூதர்களும், விசுவாசிகளும் பரிந்து பேசத் தொடங்குவார்கள். பின்னர் அல்லாஹ், ‘வானவர்கள் பரிந்துரைத்தனர் ; இறைதூதர்கள் பரிந்துரைத்தனர் ; விசுவாசிகள் பரிந்துரைத்தனர், மீதமிருப்பது அருளாளனது பரிந்துரையே’ எனக் கூறி நன்மைகள் செய்யாதோரையும் நரக நெருப்பிலிருந்து விடுவித்து சுவர்க்கத்தின் வாயிலின் முன்னாலுள்ள ஜீவநதி என வழங்கும் நதியினுள் போடுவான் "

ஸஹீஹ் முஸ்லிம் : 1 : 179, ஸஹீஹ் புகாரி : 97 : 24



சுவனத்து மக்கள் குறித்து நபிகளார் கூறினார்கள் :

“ சுவனத்தின் மக்களை நோக்கி அல்லாஹ் கேட்பான் : ‘நீங்கள் நன்கு திருப்தியுற்றவர்களாக இருக்கின்றீர்களா?’ அவர்கள் கூறுவார்கள் : ‘உனது படைப்புகள் எதற்குமே அளிக்காதவற்றையெல்லாம் எமக்கு நீ அருள் செய்திருக்கும் நிலையில் எவ்வாறு நாங்கள் திருப்தியுறாதவர்களாக இருக்கலாம்?' அப்போது அவன் ‘இதனை விடச் சிறந்ததொன்றனை உங்களுக்கு நான் தரட்டுமா?’ என வினவுவான். அவர்கள், ‘ஓ இறைவா! அத்துணை சிறந்தது எது?' என்பார்கள். அவன் கூறுவான் : நான் எனது ரிழ்வானை உங்கள் மீது அருள் செய்வேன் "

ஸஹீஹ் முஸ்லிம் : 51 : 2

பூரணத்துவமான அழகிய நிலையான ரிழ்வான், சில வேளை தூய்மையே ஆன மகிழ்வு என கூறப்படும். இது, இறைவன் தான் இறுதியாகவும் பூரணமுமாக ஓர் ஆத்மாவை ஏற்றுக் கொள்வதையும், ஏற்றுக் கொண்ட அந்த ஆத்மாவைத் தனக்குள்ளாக்கித் தனது தூய்மையே ஆன மகிழ்வின்பால் ஒன்றிணைத்துக் கொள்வதனையும் குறிப்பதாக விளக்கப்படும். சாதாரணமாகச் சுவனம் எனக் கொள்ளப்படுவதினின்றும் உன்னதமான இச்சுவனம் வேற்பட்டது எனக் கொள்வதல்ல. ஏனெனில் குர்ஆன் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மா ஒவ்வொன்றுக்கும் இரு சுவனங்கள் இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறது. 
- குர்ஆன் : 55 :46 மறுமையில் தமது சுய நிலைமை குறித்துப் பேசிய நபிகளார், இறை வசனங்கள் குறித்தது போலவே, அது இரு தரத்ததானதோர் ஆசீர்வாதம் என்றார்கள் :

“ இறைவனைச் சந்திப்பதும் சுவனமும் ” -இ.இ. 1000


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment