Thursday, 3 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

“ உ ன் பே ர ரு ட் பி ழ ம் பி ன் ஒ ளி யி ல் ”

அபூதாலிபின் விதவை பாத்திமா இஸ்லாத்தை ஏற்றிருந்தார். இது நிகழ்ந்தது அவரது கணவரின் மரணத்துக்கு முன்னரோ பின்னரோ என்பது தெளிவில்லை. அவரது மகள் உம்ம்-ஹானியும் இஸ்லாத்தைத் தழுவினார். இவர் அலீ, ஜஅபர் ஆகியோரின் சகோதரி. இறைவனின் ஏகத்துவம் பற்றிய கருத்துகள் உம்ம்-ஹானியின் கணவர் ஹுபைராவின் மனதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. என்றாலும் நபிகளார் தமது வீட்டுக்கு வரும் வேளைகளில் அவரும் அன்னாரை வரவேற்று நன்கு உபசரிப்பார். நபிகளார் வருகை தரும் சந்தர்ப்பங்களில் தொழுகைக்குறிய நேரம் வந்து விட்டால் அக்குடும்பத்து முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாகத் தொழுவார்கள். ஒரு முறை நபிகளாரின் பின்னின்று அனைவருமாக இரவுத் தொழுகையை முடித்த பின்னர், அன்றைய இரவைத் தமது குடும்பத்தாருடன் நபிகளார் கழிக்க வேண்டுமென உம்ம்-ஹானி வேண்டுகோள் விடுத்தார். அன்னாரும் அதனை ஏற்றனர். உறங்கிச் சிறிது நேரம் கழிந்ததும் நபிகளார் எழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். இரவு வேளைகளில் கஃபாவை தரிசிப்பது அன்னாருக்கு மன மகிழ்ச்சியை அளித்தது. அங்கிருந்த வேளை மீண்டும் உறக்கம் வந்தது. நபிகளார் ஹிஜ்ரின் மேல் சாய்ந்தார்கள்.

“ நான் ஹிஜ்ரில் உறங்கிக் கொண்டிருந்த போது ஜிப்ரீல் என்னிடம் வந்து தனது கால்களால் என்னைத் தட்டினார். உடனே நிமிர்ந்து உட்கார்ந்த நான் எதையும் காணவில்லை. எனவே மீண்டும் நித்திரை கொண்டேன். இரண்டாம் முறை அவர் வந்தார். மூன்றாம் முறையும் வந்தார். பின் அவர் எனது கைகளைப் பிடிக்கவே நான் எழுந்து அவர் அருகில் நின்றேன். அவர் என்னைப் பள்ளிவாசலின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு வெண்ணிற மிருகம் நின்றது. கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட தோற்றம் கொண்ட அம்மிருகத்தின் இரு புறத்தும் சிறகுகள் காணப்பட்டன. அவற்றோடு அதன் கால்களும் அசைந்தன. அதன் ஒவ்வொரு பாத அடியும் அதன் கண்கள் காணும் தூரத்தை நிகர்த்து நின்றன " என்றன நபிகளார். - இ.இ. 264

பின்னர் நபிகளார் தான் ‘புராக்’(அந்த மிருகத்தின் பெயர் இவ்வாறே வழங்கியது)கின் மீது ஏறியமையையும், அவ்விண்ணக மிருகத்துக்குத் திசை காட்டியவராக தம்மருகே ஜிப்ரீல் அமர்ந்திருக்க வட புறமாக யத்ரிபையும் கைபரையும் கடந்து சென்று ஜெரூஸலத்தை அடைந்தமையையும் விவரித்தார்கள். அங்கு அன்னாரை, இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகிய நபிமார்கள் உட்படப் பல இறைதூதர்கள் குழுவாகச் சந்தித்தார்கள். நபிகளார் அங்கே தொழ ஆயத்தமானதும் அவர்கள் அனைவரும் பின்னின்று தொழுதனர். பின்னர் இரு கலசங்களில் அன்னாருக்குப் பானங்கள் கொண்டு வரப்பட்டன. ஒன்றில் பாலும் மற்றதில் திராட்சை ரச மதுவும் இருந்தன. திராட்சை ரச கலசத்தை விட்டு, பாலிருந்த கலசத்திலிருந்து அருந்தினர் நபிகளார். அப்போது ஜிப்ரயீல் கூறினார் :

“ நீர் பண்டைய உன்னத நிலைக்கு வழிகாட்டப்பட்டீர் ; உமது மக்களையும் அந்நிலைக்கே நீர் வழிகாட்டினீர். ஓ முஹம்மதே! திராட்சை ரசம் உமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது ”.


பின்னர், இல்யாஸ், ஈஸா ஆகியோருக்கு முன்னைய காலங்களில் நிகழ்ந்தது போல நபிகளார் சுவனமளவில் உயர்த்திக் கொள்ளப்பட்டார்கள். ஆலயப் பிரதேசத்தின் மத்தியிலிருந்ததொரு குன்றிலிருந்து மீண்டும் புராக்கில் ஏறினார்கள் நபிகளார். இல்யாஸ் நபிக்குக் கிட்டிய தீ ரதம் போல நபிகளாருக்குக் கிட்டிய புராக் தனது சிறகுகளை அசைத்து வானத்தின் மீது பறக்கலாயது. தன்னை இப்போது வானவராகவே காட்டி நின்ற ஜிப்ரீல் முன் செல்ல, லெளகிகத்தின் கால, பிரபஞ்ச, சட பரிமாணங்களையெல்லாம் தாண்டி நபிகளாரும் உயர்ந்தனர். ஏழு வானங்களையும் கடந்து சென்றபோது தம்முடன் ஜெரூஸலத்தில் கூட்டாகத் தொழுத இறைதூதர்களை மீண்டும் சந்தித்தனர். முன்னர் அவ்விறைதூதர்கள் தமது லெளகிக வாழ்க்கையின் போதான சாதாரண மனித உருவினராகவே தோற்றினர். வானலோகத்திலோ விண்ணக யதார்த்த உருவினராயிருந்தனர். நபிகளாரும் அவ்வாறே அவர்களுக்குத் தோற்றினர். மாற்றமுற்ற தோற்றங்கண்டு அதிசயித்து நின்றனர் நபிகளார். பூரண சந்திரனின் பொலிவினைக் கொண்ட முகத்தரான யூஸுப் - ( இ.இ. 270 ) முழு அழகியலதும் அரைவாசிக்குக் குறையாத பங்கினைக் கொண்டிருந்தார்- (ஹ. 3: 286) என்றனர் அன்னார். இதனால் தமது ஏனைய சகோதரர் குறித்த வியப்புணர்வு அன்னாரிடம் குன்றிவிடவில்லை. - இ.இ. 270

தாம் சென்று கண்ட சுவனச் சோலைகள் குறித்துக் கூறும்போது “ சுவனத்தின் ஒரு வில்லின் அளவான பகுதி, உதய முதல் மறைவு வரை சூரியனின் கீழுள்ள அனைத்திலும் மேலானதாயிருக்கும்; இவ்வுலக மானிடர் முன் ஒரு சுவனலோக மங்கை தோற்றம் பெறுவாராயின் அம்மங்கை வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான பரந்த வெளியை ஒளியாலும் சுகந்த மணத்தாலும் நிரப்பி நிற்பார்” - ( புகாரி : 50.6:6 ) என்றார்கள். தாம் கண்டன அனைத்தையும் ஆன்மீகக் கண்கொண்டே நோக்கினர் நபிகளார். உலகத்து இயல்புகள் அனைத்துடனும் தொடர்பு படுத்தித் தமது ஆத்மிக இயல்பு குறித்துப் பேசியபோது அன்னார் கூறினார்கள்:

“ஆதம் தண்ணீருக்கும் களிமண்ணுக்கும் இடைப்பட்ட நிலையிலிருக்க, நான் இறைத்தூதராக இருந்தேன்”.
- திர்மிதீ : 46 : 1 ; ஹ 4:66 

மேலுலகு நோக்கிய பிரயாணத்தின் இறுதியில் அமைந்தது, பரிபூரண முடிவாயமைந்ததோர் இலந்தை மரம் ஆகும். குர்ஆன் இவ்வாறே பெயர் சுட்டுகிறது. நபிகளாரின் வாக்காதாரம் கொண்டதொரு பழைய விளக்கவுரையின்படி, “ அரியாசனத்தில் இலந்தை மரம் வேர் கொண்டிருக்கின்றது. அறிவார்ந்தார்யாவரதும் அறிவின் முடிவாக இது உள்ளது; வானவராயினும் இறைதூதுவ நபியாயினும் சரியே. அதன் பின்னாலுள்ள அனைத்தும் அறியப்படாத மர்மங்களாகவே உள. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியாதவை அவை”. ( த, தப்ஸீர் 53 ) பிரபஞ்சத்தின் இவ்விறுதி நிலையில் ஜிப்ரீல் பூரணப் பொலிவுடன் தான் உருவாக்கப்பட்ட நிலையில் இருந்தது போலவே தோற்றமளித்தார். - (முஸ்லிம் 1, 280; புகாரி : 59:7 ) பின்னர், இறைவசனங்களின் படி, அந்த மரத்தைச் சூழ வேண்டியது (அதன்) முற்றிலும் சூழ்ந்து கொண்டது. (அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவுமில்லை; கடக்கவுமில்லை. அவர் தன் இறைவனின் மிகப் பெரிய அத்தாட்சிகளை(யெல்லாம்) மெய்யாகவே கண்டார். - குர்ஆன் : 53:16-18 விளக்கவுரையின்படி, தெய்வீக ஒளியானது அவ்விலந்தை மரத்தின் மீது அனுமதிக்கப்பட்டு அதனையும் அதனைச் சூழ்ந்திருந்த அனைத்தையும் சூழ்ந்து கொண்டது. நபிகளாரின் பார்வை அதிலிருந்து விலகாமலும் நடுங்காமலும் அதனை நன்கு கண்டது. ( த.தப்ஸீர் 53 ) நபிகளாரின் பிரார்த்தனைகளுக்கான பதில் - அல்லது பதில்களில் ஒன்று - இவ்வாறே கிட்டியது. அன்னாரது பிரார்த்தனைகளின் வாசகங்களிலொன்று -

“ உனது பேரருட் பிழம்பின் ஒளியிலேயே நான் அடைக்கலம் தேடுகின்றேன் ”


இலந்தை மரத்தின் கீழ் நபிகளார் தமது மக்களுக்குத் தினமும் ஐம்பது வேளை தொழுகை பற்றிய ஆணையைப் பெற்றார்கள்( முஸ்லிம் 1.280 ). இஸ்லாத்தின் பிரமாணங்கள் பற்றிய இறைவசனங்களும் அருளப்பட்டன ; 

(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற(வேதத்)தை மெய்யாகவே விசுவாசிக்கின்றார். (அவ்வாறே மற்ற) விசுவாசிகளும் (விசுவாசிக்கின்றனர். இவர்கள்) யாவரும், அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றனர். தவிர ‘அவனுடைய தூதர்களில் ஒருவரையும் ( தூதர் அல்லவென்று ) நாங்கள் பிரித்து ( நிராகரித்து ) விட மாட்டோம்’ மேலும், ‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாம் செவியுற்றோம்! (உன் கட்டளைக்கு) நாங்கள் வழிபட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம்! உன்னிடமேதான் (நாங்கள்) சேர வேண்டியிருக்கிறது' என்றும் கூறுகிறார்கள்.

அல் குர்ஆன் : 2 : 285


அவர்கள் மேலெழுந்தது போல ஏழு வானங்களினுமூடாகவே கீழிறங்கினர். நபிகளார் கூறினார்கள் :


“ நான் திரும்பி வரும்போது மூஸாவைக் கண்டேன். ஓ! எவ்வளவு நல்லதொரு நண்பராக இருந்தார் அவர்! அவர் கேட்டார் : ‘ உம்மீது எத்தனை வேளை தொழுகைகள் விதிக்கப்பட்டுள்ளன? ’ நான் தினமும் ஐம்பது வேளைகள் என்றேன். ‘ கூட்டுத் தொழுகை சிரமமானதொன்று. உமது மக்கள் பலமில்லாதவர்கள். திரும்பி நீர் உமது இறைவனிடம் சென்று உமக்கும் உமது மக்களுக்கும் இந்தப் பளுவைக் குறைத்துத் தரும்படி கேளும் ’ என்றார். எனவே நான் திரும்பிச் சென்று இறைவனிடம் இந்தப் பளுவைக் குறைக்கும்படி வேண்டினேன். அவன் பத்து வேளைகளைக் குறைத்தான். மீண்டும் நான் மூஸாவைக் கடந்தேன். முன்னர் கூறியவற்றையே அவர் மீண்டும் கூற, நான் இறைவனிடம் மீண்டும் செல்ல, மேலும் பத்து வேளைகள் குறைக்கப்பட்டன. ஆனாலும் நான் மூஸாவைக் கடந்து சென்ற வேளைகளிலெல்லாம் அவர் இவ்வாறே கூற இறுதியில் ஒரு நாளைக்கு ஐந்து வேளைத் தொழுகையை நியமமாகப் பெற்று வந்தேன். அப்போதும் மூஸாவைக் கண்டபோது அவர் தொடர்ந்தும் முன் போலவே பேசலானார். நான் கூறினேன் : ‘ நான் வெட்கமுறும் வரை இறைவனிடம் சென்று கேட்டு வந்துள்ளேன். நான் இனிமேலும் போக மாட்டேன் ’. ஆகவே ஐந்து வேளைத் தொழுகைகளை உள்ளச்சத்துடனும் உண்மையான நம்பிக்கையுடனும், அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை கொண்டும் தொழுது வருபவர்களுக்கு தினமும் ஐம்பது வேளை தொழுத பாக்கியம் கிடைக்கும் ”. 
- இ.இ. 271


நபிகளாரும் ஜிப்ரீலும் ஜெரூஸலத்தின் குன்றில் வந்து இறங்கிய பின்னர் தாம் வந்த வழியிலேயே மக்கா நோக்கித் திரும்பினர். வழியில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த பல வர்த்தகக் குழுவினரை அவர்கள் கடந்து சென்றனர். கஃபாவை அவர்கள் வந்து சேர்ந்த பின்னும் கூட பொழுது புலர்ந்திருக்கவில்லை. அங்கிருந்து நபிகளார் தமது ஒன்று விட்ட சகோதரியின் வீட்டுக்கே சென்றனர். அவர் கூறினார் :


“ காலைத் தொழுகைக்கு சிறிது முன்னர் அல்லாஹ்வின் தூதர் எம்மை எழுப்பினார். தொழுகையை முடித்ததும் அவர் கூறினார் : ‘ ஓ உம்ம்ஹானி, நீர் கண்டது போல இந்த வெளியிலேயே நான் முந்திய மாலை நேரத் தொழுகையைத் தொழுதேன். பின்னர் நான் ஜெரூஸலம் சென்று அங்கு தொழுதேன். நீர் காண்பது போல உம்முடன் சேர்ந்து காலைத் தொழுகையைத் தொழுதேன்’. பின் அவர் செல்வதற்காக எழுந்து நின்றார். உடனே நான் அவரது போர்வையைப் பலமாகப் பற்றிப் பிடித்திழுத்தேன். அவரது அடிவயிறு வெளித்தெரியும் வகையில் அது என் கையில் வந்து விட்டது. அவரைச் சுற்றிப் பருத்திப் புடவை சுற்றியது போல் இருந்தது. ‘ஓ அல்லாஹ்வின் தூதரே! இதனை நீங்கள் மக்களிடம் கூறாதீர்கள். உங்களைப் பொய்யரெனக் கூறி அவர்கள் இகழ்வார்கள்’ என்றேன். அவர் கூறினார் : ‘இறைவன் பெயரால், நிச்சயமாக நான் அவர்களிடம் கூறுவேன்’ ”.
இ.இ.267


பள்ளிவாசலுக்குச் சென்ற நபிகளார் அங்கிருந்தவர்களிடம் தமது ஜெரூஸலப் பிரயாணம் பற்றிக் கூறலானார்கள். வெற்றிப் பெருமிதம் கொண்டனர் அன்னாரின் எதிரிகள். ஏனெனில் முஹம்மதை இகழ்ந்து கூறத் தக்கதொரு சான்று கிட்டிவிட்டது. வர்த்தகக் குழுவொன்று மக்காவிலிருந்து ஸிரியாவுக்குச் செல்ல குறைந்தது ஒரு மாதமும் திரும்பி வர இன்னுமொரு மாதமும் செல்லும் என்பது குறைஷியரின் குழந்தைகள் கூட அறிந்ததொரு விடயம். முஹம்மத் தான் ஒரே இரவில் அங்கு சென்று திரும்பி வந்து விட்டதாகக் கூறிக் கொள்கின்றார். 

உடனே ஒரு குழுவினர் அபூபக்ரிடம் சென்றனர் : 
“ இப்போது உமது நண்பர் குறித்து என்ன சொல்கின்றீர்? அவர் எங்களிடம் தான் நேற்றைய இரவில் ஜெரூஸலம் சென்று தொழுது விட்டுத் திரும்பி வந்ததாகக் கூறுகின்றார் ”. 

குழுவினர் பொய்யே உரைக்கின்றனர் எனக் குற்றஞ்சுமத்தினார் அபூபக்ர். தாம் உண்மையே கூறுவதாகவும், தாம் உரையாடிக் கொண்டிருக்கும் அதே வேளை பள்ளிவாசலில் முஹம்மத் தனது ஜெரூஸலப் பிரயாணம் குறித்து மற்றவர்களுக்குக் கூறிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“ அவர் அவ்வாறு கூறுவாரேயானால் அது உண்மையே! இதில் ஆச்சரியப் படுவதற்கு என்ன இருக்கின்றது? இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் வானலோகத்திலிருந்து பூவுலகுக்குத் தனக்கு செய்திகள் வருவதாக அவர் கூறியிருக்கின்றார். அவர் உண்மையே பேசுகின்றார் என்பதனை நான் அறிவேன். உங்களது சிற்சிறு குறை கூறுதல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது அது ” (-இ.இ. 265) எனக் கூறிய அபூபக்ர் தனது உறிதிப் பாட்டை மீளவுரைக்கவென பள்ளிவாசலுக்குச் சென்றார். 

“ அவர் அவ்வாறு கூறுவாராயின் அது உண்மையே ” என்ற உறுதி அவருள் நிலைத்திருந்தது. எனவேதான் ‘சத்தியத்தின் மேன்மையான சாட்சி’ அல்லது ‘சத்தியத்தின் மேன்மையான உறுதியாளர்’ எனப் பொருள்படும் - அஸ்-ஸித்தீக் - எனும் நாமத்தை அபூபக்ருக்குச் சூட்டினர் நபிகளார்.

இது இவ்வாறிருக்க இக்காதையை நம்பமுடியாதெனக் கூறிய பலரும் கூட பின்னர் சிந்திக்க வேண்டியவர்களானார்கள். தாம் வீடு வரும் போது கடந்து வந்த வர்த்தகக் குழுக்கள் பற்றிய விவரணங்கள், அவை காணப்பட்ட இடங்கள், அவை மக்காவை வந்தடையக் கூடிய காலம் என்பன குறித்தெல்லாம் நபிகளார் கூறியிருந்தனர். அன்னார் கூறியபடியே அவை வந்தன. அன்னார் கூறியபடியே அனைத்தும் இருந்தன. பள்ளிவாசலில் இருந்தவர்களுக்கு நபிகளார் ஜெரூஸலப் பிரயாணம் பற்றி மட்டுமே கூறினார்கள். அபூபக்ருடனும் ஏனைய தோழர்களுடனும் தனித்திருந்த வேளைகளில் தாம் ஏழு வானங்களையும் கடந்து சென்றமை குறித்தும் தாம் கண்டவற்றில் சில குறித்தும் கூறினார்கள். பின்னைய காலங்களில் தோழர்களது வினாக்களுக்கான விடைகளின் ரூபத்தில் மேலும் பல அனுபவங்களை விளக்கினார்கள்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment