Saturday, 5 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ஹி ஜ் றா ( தொடர்… )


ஒரு நாள் காலை எதிர்ப்புறத்திருந்து வந்து கொண்டிருந்த ஒரு சிறு வர்த்தகக் குழு இவர்களைக் கலக்கமுறச் செய்தது. என்றாலும் அது அபூபக்ரின் ஒன்று விட்ட சகோதரர் தல்ஹாவின் குழுவே என்பதனை அறிந்து கொண்டதும் இவர்கள் மகிழ்ந்தனர். ஸிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த அவர் தனது ஒட்டகங்களை அங்கு வாங்கி இருந்த ஆடையணிகளாலும் வேறும் பல வர்த்தகப் பொருட்களாலும் நிரப்பியிருந்தார். வரும் வழியில் யத்ரிபில் தங்கியிருந்த அவர், மக்கா சென்று பொருட்களை விற்றுத் தீர்த்ததும் உடனடியாக யத்ரிபுக்குத் திரும்பி செல்லும் நோக்குடையவராக விளங்கினார். நபிகளாரின் வரவை அப்பாலை வனச்சோலையின் மக்கள் மிக்க ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்திருப்பதாகக் கூறிய அவர் விடைபெற்றுக் கொள்ளுமுன்னர், தான் குறைஷியரின் பெரும் செல்வந்தர் யாருக்கேனும் விற்றுக் கொள்ளலாம் என வைத்திருந்த சிறந்த வெண்ணிற ஸிரிய மேலாடைகளில் இருவருக்குமென ஒவ்வொன்றைக் கொடுத்தார்.

தல்ஹாவைப் பிரிந்து சிறிது தூரம் சென்ற பின்னர், அவர்கள் வடக்கு நோக்கித் திரும்பினார்கள். கடலோரத்திலிருந்து சிறிது உட்புறமாகச் சென்று பின்னர் வடகிழக்காக யத்ரிபை நோக்கி நேரே செல்லலானார்கள். தமது பிரயாணத்தின் ஒரு கட்டத்தில் நபிகளார் ஓர் இறைவசனம் அருளப்பெற்றார்கள் :

( நபியே! ) நிச்சயமாக எவன் ( இறவனின் கட்டளைகள் பொதிந்த ) இந்தக் குர்ஆனை உம்மீது விதித்திருக்கின்றானோ அவன், நிச்சயமாக உம்மை ( மக்காவாகிய உம்முடைய இல்லத்தில் ) திரும்பச் சேர்த்து வைப்பான்.

குர்ஆன் : 28 : 85


தவ்ர் குகையை விட்டு வெளியேறிய பன்னிரண்டாம் நாள் சூரியோதயத்துக்குச் சிறிது முன்னர் அவர்கள் அகீக் சமவெளியை அடைந்தார்கள். சமவெளியைக் கடந்து மறுபுறம் இருந்த கரடு முரடான கருநிறக் குன்றின் மீது ஏறினர். அவர்கள் அதன் முகட்டை அடையுமுன்னர் சூரியன் நன்கு மேலெழுந்து உஷ்ணம் கடுமையாக இருந்தது. வேறு நாட்களிலாயின் பகல்போதின் உஷ்ணம் தணியும் வரை அவர்கள் சிறிது ஓய்வெடுத்திருப்பார்கள். எனினும் இப்போது உச்சிக்கு ஏறுவதென்றே அவர்கள் முடிவெடுத்தனர். குன்றின் மறு புறம் அடிவாரத்திலிருந்த சமவெளியைக் கண்ணுற்ற அவர்களை எதுவும் தடுத்து நிறுத்துவதாக இல்லை. நபிகளார் தன் கனவில் கண்ட ‘நன்கு நீர் பாய்ச்சப்பட்ட, இரு கருங்குன்றுகளுக்கு இடைப்பட்ட பிரதேசம்’ அவர்கள் முன்னால் தெரிந்தது. தாம் இப்போது கீழிறங்க வேண்டியிருந்த சரிவின் அடிவாரத்திலிருந்து சுமார் மூன்று மைல்களளவு தூரம் பேரீச்ச மரத் தோட்டங்களும் சோலைகளும் பசுமை நிறை வனங்களும் பரந்திருந்தன.



பசுமையான நிலப்பரப்பில் மிக அண்மையான இடமாக இருந்தது கூபா. இங்கு தான் மக்காவிலிருந்து முதன்முதல் புலம் பெயர்ந்து சென்றோரில் பலர் முன்னர் தங்கியிருந்தனர். சிலர் இன்னமும் அங்கேயே இருந்தனர். நபிகளார் தமது வழிகாட்டி யிடம், “ கூபாவின் பனீ அம்ரிடம் எம்மை நேராக அழைத்துச் செல்லும். நகரத்துக்குள் இப்போதே கூட்டிச் செல்லாதீர் ” என்றார்கள். யத்ரிபின் மக்கள் செறிந்த பகுதி நகரமாக விளங்கியது. அந்த நகரமே சிறிது காலத்துள் முழு அறேபியாவினதும் ஒரே ‘நகரம்’ ஆக, அல்-மதீனா என வழங்கப்படலாயிற்று.


மக்காவிலிருந்து நபிகளார் கானாமற் போனமை. அன்னாரைப் பிடித்துக் கொடுப்போருக்கென அளிக்கப்படவிருந்த பரிசு என்பன பற்றிய செய்திகள் பல நாட்களுக்கு முன்னமேயே மதீனாவை வந்தடைந்திருந்தன. கூபாவின் மக்கள் ஒவ்வொரு நாளும் அன்னாரை எதிர்ப்பார்த்தவர்களாயிருந்தார்கள். அன்னார் வந்து சேர வேண்டிய காலம் ஏற்கெனவே கடந்து விட்டது. தினமும் காலையில் தொழுகை முடிந்ததும் பனீ அம்ரின் சில அங்கத்தவர்கள் நபிகளாரைக் காணவென வெளியே செல்வர். அக்கிராமத்தில் வாழ்ந்து வந்த ஏனைய கோத்திரத்தாரும் அவர்களை இணைந்து கொள்வர். புலம் பெயர்ந்து வந்த குறைஷியருள் மதீனாவை இன்னும் அடையாது கூபாவிலேயே தங்கியிருந்தோரும் கூடச் செல்வர். வயல் வெளிகளையும் ஈச்சமரத் தோட்டங்களையும் கடந்து லாவா நிலப்பரப்பில் சிறிது தூரம் சென்று உஷ்ணம் கடூரமாகும் வரை காத்திருந்து தத்தம் வீடு திரும்புவது அவர்களது வழக்கமாகி வந்தது. அன்றைய காலையும் அவர்கள் சென்றிருந்தனர். எனினும் பிரயாணிகள் நால்வரும் மலையின் சரிவில் இறங்கத் தொடங்கு முன்னமேயே அவர்கள் வீடு திரும்பிவிட்டனர். எதிர்ப்பார்ப்புடனான பார்வைகளேதும் அத்திசை நோக்கிப் பதியாதிருந்த வேளை ; சூரியனின் கதிர்கள் நபிகளாரதும் அபூபக்ரினதும் தூய வெண்ணிற மேலாடைகளில் பட்டுத் தெறித்தன. கருநீலமாயிருந்த தீக்குழம்புப் பாறைகளின் பின்னணியில் இது மிகத் தெளிவாகத் தெரிந்தது. தனது வீட்டின் கூறையிலிருந்த ஒரு யூதர் தற்செயலாக இதனைக் கண்டார். அவர்கள் யாராயிருப்பர் என்பதனை அவர் உடனே ஊகித்துக் கொண்டார். ஒவ்வொரு நாள் கலையிலும் தமது அயலாரில் பலர் கூட்டங்கூட்டமாகப் பாலை வெளி நோக்கிச் செல்வதன் காரணத்தை யூதர்கள் கேட்டுத் தெரிந்திருந்தனர். “ கைலாவின் மக்களே! அவர் வந்து விட்டார், அவர் வந்து விட்டார்! ” எனக் கூறினார் அந்த யூதர். இவ்வழைப்பு உடனேயே பலவிடங்களிலும் எதிரொலி செய்தது. ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவருமாகத் தத்தம் வீடுகளிலிருந்து வெளியேறிப் பெருங் கூட்டமாக வயல்வெளிகளைக் கடந்து ஓடலானார்கள். அவர்கள் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கவில்லை. ஏனெனில் பிரயாணிகள் இப்போது கிராமத்தின் ஒரு முனையில் அமைந்திருந்த ஈச்ச மரத்தோட்டப் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தனர். அனைவருக்கும் பெருமகிழ்ச்சி தரும் ஓர் உச்சி வேளையாக இருந்தது அது. நபிகளார் அப்போது உரையாற்றினார்கள் :

“ ஓ மக்களே! ஒருவருக்கொருவர் சாந்தியும் சமாதானமும் கொண்டு சோபனம் கூறுங்கள். பசித்தவர்களுக்கு ஆகாரமளியுங்கள். உறவினர்களுடனான பந்தங்களை கெளரவியுங்கள். மனிதர்கள் உறங்கும் வேளைகளில் இறைவனை வழிபடுங்கள் ; நீங்கள் சாந்தியுடன் சுவர்க்கம் புக அவை உதவும் ”
இ.ஸா. 1/1. 159


நபிகளார் குல்தூமுடன் தங்க வேண்டுமென ஏற்பாடாகியது. முதியவரான குல்தூம், முன்னர் மக்காவிலிருந்து ஹம்ஸாவும் ஸைதும் வந்தபோது வரவேற்று உபசரித்தவர். குல்தூமின் கிளைக் கோத்திரமான பனீ அம்ர். அவ்ஸ்களைச் சார்ந்ததாயிருந்தது. தமக்குக் கிட்டிய உபசரிப்பில் இரு சாராருக்கும் பங்கிருக்க வேண்டுமென்ற காரணத்தை மனதிற் கொண்டு அபூபக்ர், மதீனாவை அண்மிய ஸுன்ஹ் எனும் கிராமத்தில் கஸ்ரஜ் கோத்திரத்தவர் ஒருவருடன் தங்கினார். ஓரிரு தினங்களில் மக்காவிலிருந்து வந்து சேர்ந்த அலீ, நபிகளார் தங்கியிருந்த வீட்டிலேயே தானும் தங்கலானார். நபிகளாரிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அலீக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டிருந்தன.


நபிகளாரை வரவேற்கவென வந்தோர் பலர். மதீனாவின் யூதர்கள் பலரும் அவர்களுள் இருந்தனர். யூதர்கள் பெரிதும் ஆவலினால் வந்தவர்களேயொழிய நல்லெண்ணத்தால் வந்தவர்களல்லர். இரண்டாம் அல்லது மூன்றாம் நாள் மாலை வேளை, ஏனையோரிலும் வேறுபட்டதொரு தோற்றம் கொண்ட ஒருவர் வந்திருந்தார். நிச்சயமாக அவர் யூதரோ அறபியரோ அல்லர். ஸல்மான் - அவ்வாறுதான் அவர் பெயரிடப்பட்டிருந்தார் - பாரசிகத்தில் ஸோராஸ்த்திரியான பெற்றோருக்கு இஸ்பஹானை அண்மிய ஜெய்ய் எனும் கிராமத்தில் பிறந்தவர். எனினும் அவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இளமையிலேயே ஸிரியாவுக்குச் சென்றிருந்தார். அங்கு பக்திமானான ஒரு கிறிஸ்தவ மதகுருவோடு வாழ்ந்து வந்தார். அம்மதகுரு தன் மரணத் தறுவாயில் ஸல்மானை தான் அறிந்திருந்தவரும் தன்னைப் போலவே முதியவராகவுமிருந்த மோஸுலின் மதகுரு ஒருவரிடம் அனுப்பி வைத்தார். ஈராக்கின் வடபுறம் நோக்கிச் செல்லலானார் ஸல்மான். முதியவர்களான கிறிஸ்தவ மதகுருமார்களுடனான ஸல்மானின் பல்வேறு தொடர்புகளதும் ஆரம்பமாக இது அமைந்தது. இறுதியாக அவர் சந்தித்த மதகுரு ஒருவர் தனது மரணவேளை நெருங்கிய நிலையில், ஓர் இறைதூதர் தோற்றும் காலம் நெருங்கிவிட்டதெனக் கூறினார் :

“ அவர் இப்றாஹீமின் மதத்துடன் அனுப்பப்படுவார். அறேபியாவில் தோற்றம் பெறும் அவர் தனது ஊரிலிருந்து இரு தீக்குழம்புப் பாறைகட்கிடைப்பட்ட, பேரீச்ச மரங்கள் நிரம்பிய ஊரொன்றுக்கு இடம் பெயர்வார். அவரது அடையாளங்கள் தெளிவானவை. அன்பளிப்புகளை உட்கொண்டாலும் தானமாகக் கொடுப்பவற்றை உண்ணமாட்டார். அவரது இரு தோல்களுக்கிடையில் இறை தூதுவ முத்திரை காணப்படும் ”.

அந்த இறைதூதரை சேர்ந்து கொள்ளும் ஆவலினால் உந்தப்பட்டு, கல்ப் கோத்திரத்து வர்த்தகர்கள் சிலருக்குப் பொருள் கொடுத்துத் தன்னை அறேபியாவுக்குக் கூட்டிச் செல்லும்படி வேண்டினார் ஸல்மான். எனினும் செங்கடலின் வடக்கே அகபாக் குடாவுக்கு அண்மையில் வாதி-அல்-குராஅ எனும் இடத்தை அண்மியதும் அவர்கள் ஸல்மானை ஒரு யூதருக்கு அடிமையாக விற்று விட்டார்கள். அங்கு அவர் கண்ட ஈச்ச மரச் சோலைகள், இதுதான் தான் நாடி வந்த இடமோ என்ற ஐயத்தை அவருள் எழுப்பின. அந்த ஐயமோ தொடர்ந்துமிருந்தது. சில காலம் செல்ல அந்த யூதர் இவரை, மதீனாவின் பனீ குரைஸா கோத்திரத்தவரான தனது ஒன்று விட்ட சகோதரர் ஒருவருக்கு விற்றுவிட்டார். தனது புதிய பிரதேசத்தை வந்து கண்டதுமே இதுதான் அந்த இறைதூதர் இடம்பெயர்ந்து வரக்கூடிய புலம் என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டார் ஸல்மான்.


ஸல்மானின் புதிய எஜமானது ஒன்று விட்ட சகோதரர் ஒருவர் கூபாவில் இருந்தார். நபிகளார் கூபாவை வந்து சேர்ந்துள்ள செய்திகளுடன் அவர் மதீனாவுக்கு வந்தார். ஓர் ஈச்சமரத்தடியில் தனது உறவினர் அமர்ந்திருப்பதைக் கண்டார் அவர். மரத்தின் மீதிருந்த ஸல்மானுக்கு இவர்களது உரையாடல் தெளிவாகக் கேட்டது. “ கைலாவின் மக்களுக்கு இறைவன் சாபமிட வேண்டும். மக்காவிலிருந்து வந்த ஒரு மனிதனைச் சுற்றி இவர்களனைவரும் கூபாவில் கூடியிருக்கின்றார்கள். அந்த மனிதன் ஒரு இறைதூதர் என இவர்கள் பாத்யதை கொண்டாடுகிறார்கள். ” என்றார் அந்த கூபாவின் யூதர். தனது நம்பிக்கைகள் நிறைவேறும் என்ற உறுதியை இறுதி வசனம் ஸல்மானுக்கு ஊட்டியது.
தான் கேட்ட விஷயத்தின் தாக்கத்தினால் அவரது உடம்பு முழுதும் நடுங்கலாயிற்று. மரத்திலிருந்து விழுந்து விடுவோமோ என்றஞ்சிய அவர் கீழிறங்கி வந்து, விருந்தினராய் வந்தவரிடம் கேள்விகள் பல கேட்கலானார். சினங்கொண்ட அவரது எஜமான் தனது வேலையைத் தொடரும்படி ஸல்மானை ஏவினார். எவ்வாறாயினும் அன்று மாலையே மெதுவாக நழுவிச் சென்று விட்டார் அவர். தான் சேகரித்து வைத்திருந்த உணவுப் பண்டங்கள் சிலவற்றுடன் கூபா சென்று, அங்கு நபிகளார் தமது புதிய, பழய தோழர்கள் சூழ அமர்ந்திருப்பதைக் கண்டார். நபிகளாரை அண்மி, தான் கொண்டு வந்திருந்த உணவுப் பண்டங்கள் சிலவற்றைக் கொடுத்து அவற்றைத் தான் தானமாக அளிப்பதாகக் கூறினார் ஸல்மான். நபிகளார் அவற்றை உண்ணும்படி தமது தோழர்களை உசாவினார்கள். அன்னார் உண்ணாது விட்டனர். நபிகளாரின் இறைதூதுவ முத்திரையை என்றிருந்தும் கண்டு கொள்ள வேண்டுமென ஆவலுற்றார் ஸல்மான். எனினும் முதல் சந்திப்பில் நபிகளாரின் முன்னிலையில் இருக்கக் கிட்டியமையும், அன்னார் பேசுவதைக் கேட்டமையும் அளித்த மகிழ்ச்சியோடு அவர் மதீனா திரும்பிச்சென்றார்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment