Friday, 4 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ய த் ரி ப் ஆ த ர வு ( தொடர்… )

உஸைத் தன் கோத்திரத்தாரிடம் திரும்பிச் சென்றார். அவர்களைச் சென்றடையுமுன்னரே அவருள் ஏற்பட்டிருந்த மாற்றத்தினை அவர்களால் அவதானிக்க முடிந்தது.

“ நீர் என்ன செய்தீர்? ” என்றார் ஸஅத்.

“ நான் அவர்கள் இருவரிடமும் பேசினேன். இறைவன் பெயரால், அவர்களில் எவ்வித தீங்கையும் நான் காணவில்லை. ”

“ உம்மால் ஒரு பிரயோசனமும் இல்லை ” எனக் கூறிய ஸஅத், ஈட்டியை தானே கையிலேந்தி விசுவாசிகள் இன்னமும் அமைதியாக அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றார். தனது ஒன்றுவிட்ட சகோதரர் அஸ்அத்திடம் தனது ஆட்சேபணையைத் தெரிவித்த ஸஅத், தமது உறவு முறையை அவர் தவறாகப் பயன்படுத்துகின்றார் எனக் குற்றம் சாட்டி நின்றார். எனினும் முஸ்அப் தலையிட்டு முன்னம் உஸைதிடம் பேசியது போலவே பேசினார். ஸஅத்தும் அவர் கூறுவதைச் செவிமடுக்கத் தன்னை இயைபு படுத்திக் கொண்டார். இப்போதைய முடிவும் முன்னையது போலவே அமைந்தது.

ஸஅத் தொழுத பின்னர், உஸைதும் மற்றும் சிலரும் அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பிவர, அனைவருமாக அவ்ஸ் கோத்திரத்தார் கூடும் இடத்திற்குச் சென்றனர். ஸஅத் தன் மக்களை நோக்கி,

“ உங்களிடையே எனது நிலைமைக் குறித்து நீங்கள் கருதுவதென்ன? ” எனக் கேட்டார். 

மக்கள் கூறினர் : “ நீரே எமது பெரும் எஜமான் ; நீதியில் எம்மிடையே சிறந்தவர் ; மிக்க நலம் பயக்கும் தலைவர் ”.

பின்னர் ஸஅத் கூறினார் : “ அப்படியானால், இறைவனிலும் அவனது தூதரிலும் விசுவாசம் கொள்ளாத வரை உங்களில் எந்த ஓர் ஆணுடனும் எந்த ஓர் பெண்ணிடமும் வார்த்தையாட மாட்டேன் என நான் சத்தியம் செய்கின்றேன் ”.

இரவு வேளை வந்தபோது அவரது கோத்திரத்தாருள், இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ளாத ஒருவரையும் காண முடியவில்லை.

முஸ்அப் சுமார் பதினொரு மாதங்களளவு அஸ்அத்துடன் தங்கியிருந்தார். அக்கால இடைவெளியில் இஸ்லாத்தைத் தழுவியோர் பலர். அடுத்த புனித யாத்திரைக் காலம் ஆரம்பமான போது அவ்ஸ், கஸ்ரஜ் மக்களிடம் தான் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நபிகளாருக்கு தெரிவிக்கவென முஸ்அப் மக்கா திரும்பினார்.

தாம் கண்ட ‘ நன்கு நீர் பாய்ச்சப்பட்ட இரு கருங்குன்றுகளுக்கிடைப்பட்ட பிரதேசம் ’ யத்ரிப் என்பதை நபிகளார் அறிந்திருந்தார்கள். அத்தோடு இம்முறை தாமும் புலம் பெயர்ந்து செல்வோரில் ஒருவராயிருப்பர் எனவும் அன்னார் உணர்ந்திருந்தனர். இப்போது மக்காவில் நபிகளார் நம்பக் கூடியவர்களாயிருந்தோர் வெகு சிலரே. அவர்களுள் ஒருவர் திருமண உறவு மூலம் தமது சிறிய தாயாராயிருந்த உம்-அல்-பத்ல், மட்டுமன்றி தமது சிறிய தந்தையார் அப்பாஸ், இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் கூட அவர் தம்மைக் கைவிட்டு விடவோ, இரகசியங்களெவற்றையும் வெளியிடவோ மாட்டார் என்ற நம்பிக்கையும் நபிகளாருக்கிருந்தது. எனவே நபிகளார், இருவரிடமும், தாம் யத்ரிபில் சென்று வாழ எண்ணியிருப்பதனையும், அடுத்த புனித யாத்திரைக் காலத்தின் போது யத்ரிபிலிருந்து வரக்கூடிய தூதுக் குழுவினருடனான பேச்சுவார்த்தைகளிலேயே அனைத்து முடிவும் உளதென்பதையும் கூறினார்கள். இதைக் கேட்ட அப்பாஸ், அத்தூதுக் குழுவினரைச் சந்திக்கவும் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவும் தனது சகோதரன் மகனுடன் தானும் செல்வது தனது கடமையாகுமெனக் கூறி நின்றார். நபிகளாரும் இதனை ஏற்றுக் கொண்டனர்.


முஸ்அப் யத்ரிபை விட்டும் நீங்கிய சில காலத்துள், அவரும் தாமும் ஏற்பாடு செய்து கொண்டபடி யத்ரிபிலிருந்து எழுபத்து மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் புனித யாத்திரைக்காகவும், நபிகளாரைக் காணவுமாகப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களது தலைவர்களுள் ஒருவர் கஸ்ரஜைச் சார்ந்த பராஅ. பிரயாணத்தின் முதல் சில நாட்களில் பெரும் பிரச்சினையொன்று அவரது சிந்தையை ஆட்கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் இறைவனது இல்லமான கஃபா அமைந்திருந்த மக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் ; கஃபாவே முழு அறாபியரதும் புனித யாத்திரைத் தளமாக இருந்தது ; அங்குதான் தாம் நாடிச் செல்லும் இறைதூதரும் இருந்தார் ; அங்குதான் குர்ஆனும் அருளப்பட்டது ; அதனை நோக்கித்தான் தம்மையும் முந்தி ஆவலினால் உந்தப்பட்டு தம் ஆன்மாக்களும் சென்று கொண்டிருந்தன. இவை இவ்வாறிருக்க, தொழுகை நேரம் வந்ததும் இப்பெரும் புன்னியஸ்தலத்துக்கு முதுகைக் காட்டியவர்களாக, ஸிரியாவை முன்னோக்கி வழிபாடு செய்வது எவ்வளவு தூரம் பொருந்தும்? இது சரியானதொரு முறைதானா? மரணம் நெருங்கி வரும் வேளை சிலருக்கு முன்னறிவிப்புகள் சில எழுவதுண்டு. பராஅவும் இன்னும் சில காலங்களே வாழக்கூடியவராயிருந்தார். எனவே இவ்வாறான எண்ணங்கள் வெறும் சிந்தனைச் சிதறல்களாகவன்றி, ஆழ்ந்த தாத்பரியங்கள் கொண்டனவாக அவருக்குத் தோற்றின. தன் சிந்தையில் எழுந்தவற்றை தன் சகாக்களிடம் கூறினார். அவர்களோ தாம் அறிந்த மட்டில் நபிகளார், ஸிரியாவை நோக்கி ஜெரூஸலத்தை முன்னோக்கியவர்களாகவே தொழுது வருவதாகவும் அதிலிருந்து மாறத் தாம் விரும்பவில்லை என்றும் கூறினார்கள். “ நான் கஃபாவை முன்னோக்கியே தொழுவேன் ” என்றார் ; பராஅ. பிரயாணம் முழுவதும் அவர் அவ்வாறே தொழுது வந்தார். ஏனையோர் ஜெரூஸலத்தை முன்னோக்கியே தொழுதனர். பராஅ மீதான வற்புறுத்தல்கள் எவையும் பலனளிக்கவில்லை. எவ்வாறாயினும் மக்காவைச் சேர்ந்ததும் பராவின் மனதில் தன் நடவடிக்கை குறித்த ஐயங்கள் எழலாயின. எனவே தனது கோத்திரத்தாருள் மிக்க இளையவரும், யத்ரிபின் சிறந்த கவிஞர்களுள் ஒருவருமான கஅப்-இப்ன்-மாலிக் என்பாரிடம் அவர் கூறினார் : 

“ எனது சகோதரன் மகனே! நாம் நபிகளாரிடம் சென்று, பிரயாணத்தின் போது நான் செய்தவை குறித்துக் கேட்போம். நீங்கள் என்னை மறுத்துரைத்ததன் காரணமாக எனது இதயத்துள் சந்தேகங்கள் எழத் தொடங்கிவிட்டன. ”

இருவரும் இதுவரை நபிகளாரைக் கண்டதில்லை. எனவே அவர்கள் மக்காவின் மனிதர் ஒருவரிடம் நபிகளாரை எங்கு காணலாம் எனக் கேட்டனர். 

“ அவரது மாமனார் அப்பாஸை நீங்கள் அறிவீர்களா? ” எனக் கேட்டார் அம் மக்காவாசி. நாம் அறிவோம் என்றனர் அவர்கள். அப்பாஸ் யத்ரிபுக்கு அடிக்கடி வருகைத் தருபவராகவும் அங்கு நன்கு அறியப்பட்டவராகவும் இருந்தார்.

“ பள்ளிவாசலினுள் அப்பாஸின் அருகே அமர்ந்திருப்பவர்தான் அவர் ” என்றார் அவர். 

பராஅவின் கேள்விக்கு பதிலாக நபிகளார்,

“ உமக்கு ஒரு திசை கொடுக்கப்பட்டுள்ளது. அதனையே நீர் அமைத்துக் கொள்வீராக ” என்று கூறினார்கள். 

மீண்டும் பராஅ நபிகளாரைப் போலவே தானும் ஜெரூஸலம் நோக்கித் தொழுது வரலானார். 

நபிகளாரின் பதிலோ ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களைப் பொதிந்திருந்தது.


மக்கா நோக்கிய அவர்களது பிரயாணம் ஒரு பிரயாணக் குழுவுடனானதகவே இருந்தது. அதில் பல்தெய்வ வணக்கஸ்த்தர்களும் கூட இருந்தனர். மினா வெளியில் அவர்களுள் ஒருவர் இஸ்லாத்தினுள் நுழைந்தார். அவர் கஸ்ரஜ்களுள் முக்கியத்துவம் வாய்ந்திருந்த அபூ-ஜாபிர்-அப்த்-அல்லாஹ்-இப்ன்-அம்ர். பனீ-ஸலீமாவின் தலைவர்களுள் ஒருவராகவும் பெரும் செல்வாக்குப் படைத்தவராகவும் விளங்கினார் அவர். புனித யாத்திரை முடிந்த இரண்டாவது இரவின்போது அகபாவில் நபிகளாரை இரகசியமாகச் சந்திப்பதென அவர்கள் அனைவரும் ஏற்பாடு செய்து கொண்டனர். 

அவர்களுள் ஒருவர் கூறினார் : 

“ எமது மக்களுடன் அன்று இரவு நாம் உறங்கிக் கொண்டிருந்தோம். இரவின் மூன்றிலொரு பாகம் கழிந்ததும் நபிகளாரைச் சந்திக்கும் ஏற்பாட்டின்படி உறங்கிக் கொண்டிருந்தவர்களிடையே இருந்து நாம் எழுந்து மிகவும் அவதானமாக ஒரு மணற்பறவை போல நடந்து சென்று அகபாவின் பள்ளத்தாக்கை அடைந்தோம். அங்கு நபிகளார் வரும் வரை நாம் காத்திருந்தோம். அவருடன் சிறிய தந்தையார் அப்பாஸும் இருந்தார். அப்பாஸ் தனது மக்களின் மதத்தையே இன்னும் பின்பற்றுபவராக இருந்தும் தன் சகோதரன் மகனது பேச்சுவார்த்தைகளில் கலந்து, வாக்குறுதிகள் காப்பாற்றப்படக் கூடியனவா என உறுதிப்படுத்திக் கொள்ளவென வந்திருந்தார். நபிகளார் அமர்ந்து கொண்டதும் அப்பாஸ் எழுந்து, ‘கஸ்ரஜ் மக்களே! (அறபிகள் இவ்வாறுதான் யத்ரிபின் அறபிகளை விளிப்பர்) நாங்கள் முகம்மதுக்கு அளித்திருக்கும் உன்னதத்துவம் நீங்கள் அறிந்ததே. அவரது மக்களிடமிருந்து நாம் அவரைப் பாதுகாத்து வருகின்றோம். அதனால் அவர் தனது குலத்தில் கெளரவத்துடனும் தனது நாட்டில் பாதுகாப்புடனும் வாழ்ந்து வருகின்றார். இருந்தும் அவர் உங்களைச் சார்ந்து தன்னை உங்களுடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். எனவே நீங்கள் அளிக்கும் வாக்குறுதியை நீங்கள் காப்பாற்றக் கூடுமாயின், எதிர்ப்புகளையெல்லாம் தடைசெய்து நீங்கள் அவரைப் பாதுகாக்கக் கூடுமாயின், நீங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டதொரு பெரும் பொறுப்பாக அது இருக்கும். மாறாக அவர் உங்களை வந்தடைந்த பின்னர் நீங்கள் அவரைக் கைவிட்டு அவரைத் தோல்வியுறச் செய்யக் கூடுமாயின் இப்போதே அவரைக் கைவிட்டு விடுங்கள். ” என்றார்.

அவர்கள் பதிலிறுத்தார்கள் : “ நீர் கூறுவதை நாங்கள் கேட்டோம். ஆனாலும் அல்லாஹ்வின் தூதரே! நீர் பேசுவீராக! உமக்கும் உமது இறைவனுக்குமாக நீர் விரும்புவதை நீரே தெரிந்து கொள்வீராக. ”


ஏக இறையோனையும் இஸ்லாத்தையும் ஏற்கப் பணிக்கும் குர்ஆனின் வாசகங்கள் சிலவற்றை ஓதிய பின்னர் நபிகளார் கூறினார்கள் : 

“ நான் உங்களோடு செய்து கொள்ளும் ஒப்பந்தம் மூலம் நீங்கள் என் மீது கொள்ளும் விசுவாசம், உங்களது பெண்களையும் உங்களது குழந்தைகளையும் பாதுகாப்பது போல என்னைப் பாதுகாக்கும் உறுதியாக அமைய வேண்டும். ”.

பராஅ உடனே எழுந்து நபிகளாரின் கைகளைப் பிடித்து. “ உம்மைச் சத்தியத்துடன் அனுப்பியவன் பேரில் ஆணையாக, நாங்கள் அவர்களைக் காப்பது போல உம்மைக் காப்போம். நாங்கள் யுத்தத்தின் மக்களாக இருக்கின்றோம் ; தந்தையரிடமிருந்து புதல்வர்களுக்கு வழி வழியாக வந்த ஆயுதங்களை உடையவர்கள் நாம். எனவே அல்லாஹ்வின் தூதரே! எமது விசுவாசம் பற்றிய உறுதியை நீர் ஏற்றுக் கொள்ளும் ” என்றார்.

அப்போது அவ்ஸ் கோத்திரத்தவர் ஒருவர் எழுந்து. “ ஓ அல்லாஹ்வின் தூதரே! எமக்கும் பிற மக்களுக்குமிடையே - யூதர்களையே அவர் குறித்தார் - சில உறவுகள் இருக்கின்றன. அவற்றை முறித்து விட நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் இவ்வாறு செய்து, இறைவன் உமக்கு வெற்றியையும் தந்துவிட்டால் நீர் எங்களை விட்டு உமது மக்களிடம் சென்றுவிடக் கூடுமல்லவா? ” என வினவினார்.

நபிகளார் புன்னகை பூத்தவர்களாகக் கூறினார்கள் :

“ அவ்வாறல்ல, நான் உங்களவன் ; நீங்கள் என்னுடையவர்கள். நீங்கள் யாருடன் யுத்தம் புரிவீர்களோ அவர்களுடன் நானும் யுத்தம் செய்வேன். நீங்கள் யாருடன் சமாதானம் செய்வீர்களோ அவர்களுடன் நானும் சமாதானம் செய்வேன். ”

பின்னர் நபிகளார், “ உங்களது மக்களிலிருந்து தலைவர்களாகப் பன்னிரண்டு பேரை என்னிடம் கூட்டி வாருங்கள். உங்களது அலுவல்களை அவர்கள் கவனித்துக் கொள்ளக் கூடியதாயிருக்கும் ” என்றார்கள்.

அவர்கள் பன்னிரண்டு பேரைக் கூட்டி வந்தார்கள். கஸ்ரஜிலிருந்து ஒன்பது பேர். அவ்ஸ்களிலிருந்து மூவர். ஏனெனில் வந்திருந்தோரில் அறுபத்திரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கஸ்ரஜைச் சேர்ந்தவர்களாகவும் பதினொரு பேரே அவ்ஸ்களாகவும் இருந்தனர். கஸ்ரஜின் ஒன்பது தலைவர்களுள் பராஅவும், அஸ்அத்தும் இருந்தனர். அவ்ஸ்களின் மூவருள் ஸஅத்-இப்ன்- முஆதைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருந்த உஸைதும் இருந்தார். 


தமது விசுவாசத்தை உறுதி கூற ஒவ்வொருவராக நபிகளாரிடம் செல்லலாயினர். அப்போது முன்னைய வருடமே உறுதி கூறிய பன்னிரண்டு பேரில் ஒரு கஸ்ரஜி, அனைவரையும் சிறிது நிற்கும்படி சைகை செய்து, 

“கஸ்ரஜ் மக்களே! இந்த மனிதருக்கு நீங்கள் அளிக்கக்கூடிய வாக்குறுதியின் பொருளை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார். 

“நாம் அறிவோம்” என்றனர் அவர்கள். எனினும் அவர்களது பதிலைப் பொருட்படுத்தாது அவர் தொடர்ந்தும் 

“நீங்கள் சிவப்பர் கறுப்பர் அனைவருக்கும் எதிராக யுத்தம் புரியத் தயாரென உறுதி கூறுகின்றீர்கள்.* எனவே நீங்கள் உங்கள் உடமைகளையெல்லாம் இழந்து, உங்கள் தலைவர்களில் சிலர் இறந்து போகும் நிலையில் இவரைக் கைவிடக்கூடுமாயின் இப்போதே கைவிட்டு விடுங்கள். அல்லாது பின்னர் நீங்கள் கைவிடுவீர்களாயின் அது உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெட்கக்கேட்டை உண்டு பண்ணுவதாயிருக்கும். உங்கள் வாக்குறுதியை நீங்கள் காப்பாற்றுவீர்கள் எனக் கருதினால் மட்டும் அவரை எடுத்துக் கொள்ளுங்கள். இறைவன் பெயரால், நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் சிறந்தன அதிலேயே இருக்கின்றன” எனக் கூறினார். 

அவர்கள் கூறினார்கள்: “எமது உடமைகளை இழப்பதாயினும், எமது தலைவர்கள் மாள்வதாயினும் கூட நாம் உம்மை ஏற்கின்றோம். நாங்கள் எமது வாக்குறுதியை நிறைவேற்றினால் ஓ அல்லாஹ்வின் தூதரே! எம்முடையதாகா அமையக் கூடியது எது?” 

“சுவர்க்கம்” என்றனர் நபிகளார்.

“உமது கையை நீட்டுவீராக! ” என ஏகோபித்த குரல் எழுந்தது. நபிகளார் தம் கையை நீட்டினர். அனைவரும் உறுதி கூறினர். அகபாவின் உச்சியிலிருந்து ஸைத்தான் இவற்றை அவதானித்துக் கொண்டிருந்தான். பொறுமையின் எல்லையைத் தாண்டியதும் உரத்த குரலில் “முதம்மம்!” எனச் சப்தமிட்டான் அவன். குரலெழுப்பியது யாரென அறிந்து கொண்ட நபிகளார் கூறினார்கள்:

“ ஓ அல்லாஹ்வின் எதிரியே! உனக்கு நான் ஆறுதல் தரமாட்டேன்”.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,


* அதாவது எல்லா மக்களுக்கும் எதிராக, அகபாவின் இந்த இரண்டாம் வாக்குறுதியின் பின், முதலாவது அகபா வாக்குறுதி “ பெண்களின் வாக்குறுதி ” என வழங்கலாயது. அதே வாக்குறுதி பின்னரும் பெண்களுக்காக மட்டும் எனப் பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் அது யுத்தக் கடமைகள் எதனையும் உள்ளடக்கியிருக்கவில்லை.

No comments:

Post a Comment