Tuesday, 5 November 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ரை நோ க் கி

ஸுஹ்ராவின் கூட்டுறவாளராயிருந்த அக்னஸ்-இப்ன்-ஷரீக், ஸுஹ்ராக்களுடனேயே சேர்ந்து வந்திருந்தார். அபூஜஹ்ல் கூறுபவற்றைப் பொருட்படுத்த வேண்டாமென அவர் கூறவே ஸுஹ்ராக்கள் அனைவரும் ஒருவர் தவறாது ஜுஹ்பாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பி விட்டனர். தாலிபும் தனது கோத்திர சகாக்கள் சிலருடன் திரும்பிச் சென்று விட்டார். அவருக்கும் மற்றும் சில குறைஷியருக்குமிடையில் நிகழ்ந்ததோர் உரையாடலின் போது அக்குறைஷியர் கூறினர் : “ ஓ ஹாஷிமின் மக்களே! நீங்கள் எங்களோடு வந்திருந்தாலும் கூட உங்கள் இதயங்கள் முஹம்மதுடன் தான் இருக்கின்றன என நாம் அறிவோம் ”. ஆனால் அப்பாஸ் படையினருடன் பத்ர் நோக்கிச் செல்வதெனத் தீர்மானம் செய்திருந்தார். அவர் தன்னோடு தன் சகோதரர் தம் புதல்வர்கள் மூவரையும் கூட்டிச் சென்றார். ஹாரிதின் மக்களான அபூ ஸுப்யான், நவ்பல் ; அபூதாலிபின் மகன் அகீல் ஆகியோர் அவர்கள்.


மலைக்கு அப்பால் வடகிழக்குப் புறமாக முஸ்லிம்கள் பாசறையமைத்தனர். எதிரிகளை முந்தி பத்ரின் தண்ணீரை அடைந்து கொள்ள வேண்டுவதன் அவசியத்தை உணர்ந்து உடணடியாகவே முன்னேற உத்தரவிட்டார்கள் நபிகளார். படையினர் புறப்பட்ட சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இது இறைவன் செய்ததோர் உபகாரமென்றும் ஆசீர்வாதமும் அனுக்கிரகமும் என்றும் கொண்டு அனைவரும் மகிழ்ந்தனர். அது மக்களுக்குப் புத்துணர்வூட்டியது ; தூசை அடிப்படுத்தியது ; அவர்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த யால்யால் வெளியின் மெதுவான மணற்றரையை திடப்படுத்தியது. மறுபுறம் அகன்லால் மலையை ஏறிக் கடந்து வரவேண்டியிருந்த குறைஷியருக்கு இது தொல்லை தருவதாகவும் அமைந்தது. பத்ர் வெளியின் எதிர்புறமாகவும் முஸ்லிம்களின் இடப்புறமாகவும் அமைந்திருந்தது அகன்லால். அண்மையிலிருந்த பள்ளப்பிரதேசத்திலேயே கிணறுகள் பலவும் காணப்பட்டன. தாம் எதிர் கொண்ட முதலாவது கிணற்றடியில் தங்கும்படி நபிகளார் உத்தரவிட்டார்கள். அவ்வேளை கஸ்ரஜ்களில் ஒருவரான ஹுபாப்-இப்ன்-அல்-முன்திர் நபிகளாரிடம் வந்து,
“ ஓ அல்லாஹ்வின் தூதரே! நாம் இப்போது தங்கியிருக்கும் இந்த இடத்திலிருந்து முன்செல்லவோ பின்வாங்கவோ கூடாதென இறைவன் உங்களுக்கு அறிவித்துள்ளானா? அல்லது நாம் இங்கு தங்குவது யுத்தோபாயமாகவும் ஓர் அபிப்பிராயமாகவும் தான் உள்ளதா? ” என வினவினார். நபிகளார் இது வெறுமனே ஓர் அபிப்பிராயம் மட்டும்தான் எனக் கூறினார்கள். அப்போது ஹுபாப் கூறினார் : 

“ இது தங்குவதற்குரிய இடமல்ல ; நாங்கள் எதிரிகளுக்கு மிக அண்மையிலிருக்கும் பெரிய கிணறுகளில் ஒன்றனை அடையும் வரையில் எங்களை முன் நடாத்திச் செல்லுங்கள் ஓ அல்லாஹ்வின் தூததரே! அங்கு நாம் தங்கி, அதனைச் சூழவுள்ள கிணறுகளையும் அடைத்துப் பெரியதொரு தொட்டியை அமைத்துக் கொள்வோம். பின்னர் நாம் எதிரியை எதிர்கொள்வோம். அப்போது எல்லாத் தண்ணீரும் எங்களுக்கே இருக்கும். அவர்களுக்கு ஒன்றும் இராது ”. நபிகளார் உடனே இணங்கினார்கள். ஹூபாபின் திட்டம் எல்லா வகையிலும் பூரணமாக நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொருவரும், தத்தமது தண்ணீர்ப்பைகளை நிரப்பிக் கொண்டனர்.


அப்போது ஸஅத்-இப்ன்-முஆத் நபிகளாரிடம் வந்து கூறினார் : “ ஓ அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கென ஓர் ஒதுக்கிடத்தை அமைத்து உங்களது பிரயாண ஒட்டகங்களை அதன் அருகில் தயாராக நிறுத்தி வைப்போம். பின்னர் நாங்கள் எம் எதிரியைச் சந்திப்போம். இறைவன் எங்களுக்கு போதிய பலத்தை அருளி எங்களை வெற்றியாளர்களாக ஆக்கக் கூடும். அதனையே நாங்களும் அவாவுகிறோம். அவ்வாறு நிகழாவிடின் நீங்கள் ஒட்டகத்தில் ஏறி நாங்கள் விட்டு வந்தவர்களைச் சென்றடையுங்கள். உங்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பு, ஓ அல்லாஹ்வின் தூதரே! உங்களுடன் வெளிவராது விட்ட அவர்களது அன்பிலும் கூடியதல்ல. நீங்கள் ஒரு யுத்தத்தை எதிர்கொள்வீர்கள் என்று அறிந்திருப்பின் அவர்கள் நிச்சயம் பின் தங்கியிருக்கவும் மாட்டார்கள். அவர்கள் மூலம் நிச்சயமாக அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அவர்கள் உங்களுக்கு நல்லாலோசனைகள் கூறி, உங்களுடனிருந்து யுத்தம் புரிவார்கள் ”. நபிகளார் ஸஅத்தைப் போற்றி ஆசீர்வதித்தார்கள். ஒதுக்கிடம் பேரீச்சங் கொப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.


அன்றைய இரவு இறைவன் அமைதியானதோர் உறக்கத்தை விசுவாசிகளுக்கு அருள் செய்தான். புத்துணர்வுடன் அவர்கள் எழுந்தார்கள்.

(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.

அல் குர்ஆன் : 8 : 11


அது ஒரு வெள்ளிக்கிழமை. கி. பி. 623 மார்ச் மாதம் பதினேழாந்திகதி. அதுவே ஹிஜ்றி* இரண்டாம் ஆண்டின் ரமழான் மாதத்துப் பதினேழாம் நாளும். அன்றைய சூரியோதத்தின் போதே குறைஷியர் அணிவகுப்புச் செய்து அகன்கால் குன்றின் மீது ஏறினர். அதன் உச்சியை அவர்கள் அடைந்தபோது சூரியனும் நன்கு மேலேறியிருந்தது. அவர்களது ஆடம்பர அலங்காரங்கள் மிக்க குதிரைகளும் ஒட்டகங்களும் பத்ரை நோக்கிய யால்யால் வெளிக்கு இறங்கி வரும் காட்சியைக் கண்டதும் நபிகளார் பிரார்த்தனை செய்யலானார்கள் :

“ யா அல்லாஹ்! இதோ குறைஷியர்கள். தமது இருமாப்பினாலும் வீண் பெருமையினாலும் உன்னை எதிர்த்தும் உனது தூதரை மறுத்துரைத்தும் வந்துள்ளார்கள். யா அல்லாஹ்! நீ எமக்கு வாக்களித்த உதவியைத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! இந்தக் காலை நீ அவர்களை அழித்து விடுவாயாக! ”


குன்றின் அடிவாரத்தில் குறைஷிகள் பாசறையமைத்தனர். தாம் எதிர்பார்த்த தொகையினருக்கும் குறைவானோராகவே முஸ்லிம்கள் அவர்களுக்குத் தென்பட்டனர். எனவே முஸ்லிம்களின் தொகையை மதிப்பீடு செய்யவும், அவர்களுக்குப் பின்னால் மேலதிகப் படையுதவிகள் ஏதும் உளவா என அறிந்து வரவுமென ஜுமாஹ்வின் உமைர் என்பாரை ஒரு குதிரை மீதேற்றி அனுப்பினர் மக்கத்தார். வெளியின் எதிர்ப்புறத்தில் காணக் கிடந்த படையினரைத் தவிர வேறு படைப்பிரிவுகள் ஏதும் காணப்படவில்லை என அவர் வந்து கூறினார். தொடர்ந்தும் உமைர் : “ ஓ குறைஷி மக்களே! உங்களில் எவரையும் கொல்லாமல் அவர்களில் எவரும் உயிரிழப்பர் என நான் நினைக்கவில்லை. அவர்களது தொகைக்குச் சமமாக உங்களிலும் ஒரு தொகையினரை அவர்கள் கொல்லக் கூடுமாயின், அதன் பின்னர் எமது வாழ்க்கையில் என்னதான் மீதமிருக்கும்? ” என்றார், உமைர். மக்க நகர் முழுவதும் பின்வரும் விடயங்களை முன்னறிந்து கூறக்கூடியவர் என அறியப்பட்டிருந்தார். அவ்வாறான ஒரு பின்னணி அவரது வார்த்தைகளுக்கு மேலும் உரமூட்டுவதாயிருந்தது. அவர் பேசி முடிந்ததுமே கதீஜாவின் மருமகன், அஸத்தின் ஹகீம் உடன் எழுந்து அப்த் ஷம்ஸின் மக்களை அடையும் வரை பாசறையினூடாக நடந்து சென்றார். உத்பாவை சந்தித்த ஹகீம், “ வலீதின் தந்தையே! நீர் குறைஷிகளிலேயே மிகவும் மேன்மையான ஒருவர். அவர்களது எஜமான். அவர்கள் உமக்கு அடிபணியக் கூடியவர்கள். இறுதிக் காலம் வரையில் அவர்களிடையே நீர் உயர்வானவராகவே மதிக்கப்படுவீராக ” என்றார். “ அது எவ்வாறு ஏற்படக் கூடும்? ” எனக் கேட்டார் உத்பா. “ இவர்களை திருப்பி அழைத்துச் சென்று விடும். அத்தோடு இறந்து போன உமது கூட்டுறவாளர் அம்ரின் இரத்த ஈட்டை நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும் ” என்றார் ஹகீம். யுத்தத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றனைத் தவிர்க்கும்படி வேண்டியதுதான் ஹகீம் செய்தது. நக்லாவில் கொல்லப்பட்ட மனிதனின் உறவினருக்கு அதற்குறிய இரத்த ஈட்டுப் பணத்தைச் செலுத்தி விடும்படி உத்பா வேண்டப்பட்டார். நக்லாவில் இறந்தவரின் சகோதரர் ஆமிர். தனது சகோதரனது மரணத்துக்குப் பழி வாங்கும் நோக்கத்தோடே யுத்த களத்துக்கு வந்திருந்தார். ஹகீம் கூறிய அனைத்தையும் ஏற்றுக் கொண்டார் உத்பா. என்றாலும் யுத்தத்தையே வற்புறுத்தக் கூடிய அபூஜஹ்லைக் கண்டு கதைப்பதே உசிதம் என ஹகீமுக்கு ஆலோசனைக் கூறிய உத்பா தனது துருப்பினரை நோக்கிக் கூறினார் : “ குறைஷி மக்களே! முஹம்மதையும் அவரது தோழர்களையும் எதிர்த்துப் போராடுவதனால் நீங்கள் எவ்வித நன்மையையும் பெறப் போவதில்லை. நீங்கள் அவர்களைத் தோல்வியுறச் செய்து விடுவீர்களாயின் உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர் முகத்தை மிகுந்த கவலையுடனேயே நோக்க வேண்டி வரும். ஏனெனில் ஒவ்வொருவரும் தமது சகோதரனை, மாமனை அல்லது நெருங்கிய ஓர் உறவினனைக் கொன்ற பலிக்காளாகியிருப்பீர்கள். எனவே நீங்கள் திரும்பிச் சென்று, முஹம்மதை ஏனைய அறபியருக்கு விட்டு விடுங்கள். அவர்கள் அவரைக் கொன்று விடுவார்களாயின் அதுவே நீங்கள் வேண்டியதுமாக இருக்கும். அவ்வாறு நடக்காது விடினும் கூட நீங்கள் அவர்மீது சுயமாகவே பொறுமையுடன் நடந்திருக்கின்றீர்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்வார் ”. 

உடனேயே ஆமிர்-அல்-ஹத்ரமீயைச் சந்தித்து அவரது சகோதரருக்கான இரத்த ஈட்டினை செலுத்தும் நோக்குடையவராக உத்பா இருந்த போதும், அபூ ஜஹ்ல் அவரை முந்தி விட்டார். அபூ ஜஹ்ல், உத்பாவை ஒரு கோழையெனவும், தனதும், எதிரிகளின் தரப்பில் உள்ள தனது மகன் அபூஹுதைபாவினதும் மரணத்தை அஞ்சியவர் எனவும் இகழ்ந்து கூறித் தனது சகோதரனுக்காகப் பழி வாங்கக் கிட்டியிருக்கும் சந்தர்ப்பத்தைத் தவற விட்டு விட வேண்டாமென ஆமிரை வற்புறுத்தினார். “ எழும்! எழுந்து அவர்களுக்கு உமது ஒப்பந்தத்தையும், உமது சகோதரனின் கொலையையும் நினைவுபடுத்தும் ” என்றார் அபூஜஹ்ல். ஆமிர் உடனே துள்ளியெழுந்து உரத்த குரலில் பரிதாபகரமாகச் சப்தமிடத் தொடங்மினார் : 
“ ஐயோ அம்ர்! ஐயோ அம்ர்! ” யுத்த நெருப்பு கிளறி விடப்பட்டது. மனித மனங்கள் வன்மையால் நிரம்பின. உத்பாவோ வேறு யாருமோ அவர்களைத் திருப்பியழைத்துச் செல்ல முனைவது விரயமாகுமொரு முயற்சியாகவே தோற்றியது. எல்லோரும் தீவிரமாக இறுதி யுத்த ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தமை காரணமாக நீண்ட காலமாகத் தான் எதிர்ப்பார்த்திருந்ததொரு சந்தர்ப்பத்தை ஒருவர் பெற்றுக் கொண்டார். தான் இல்லாத வேளை தப்பிச் சென்று விடவும் கூடும் என நினைத்து ஸுஹைல், தனது மகன் அப்த்-அல்லாஹ்வையும் கூடவே பத்ருக்கு அழைத்து வந்திருந்தார். ஜுமாஹ்வின் தலைவர் உமையாவும் தனது மகன் அலீயை அவ்வாறே கூட்டி வந்திருந்தார். நிலை தடுமாறக் கூடிய அலீயைப் போலன்றி, அப்த்-அல்லாஹ் தனது விசுவாசத்தில் மிக்க உறுதியாக இருந்தார். பாசறையினின்றும் வெளியேறி, அண்மையிலிருந்த ஒரு குன்றுக்குப் பின்னால் ஒளித்திருந்து, சடுதியாக, மேடுபள்ளமான மணற்றரையை ஓடிக்கடந்து முஸ்லிம் பாசறையைச் சென்றடைந்த அவர், திடீரென நபிகளார் முன் தோற்றினார். இருவர் முகங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. அதே மகிழ்வுடன் தனது இரு மைத்துனர்கள் அபூஸப்ரா, அபூஹுதைபா ஆகியோருக்குச் சோபனம் கூறினார் அப்த்-அல்லாஹ்.



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,


* இஸ்லாமிய வருடக் கணக்கு நபிகளாரின் ஹிஜ்ராவிலிருந்தே ஆரம்பமாகின்றது.

No comments:

Post a Comment