Tuesday, 29 November 2011

தாயின் உபதேசம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

Almowilath Islamiclibrary முக நூலில் கிடைத்த நல்ல கட்டுரையை இங்கு பதிவு செய்கின்றேன். 

மணமுடிக்க இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த உபதேசங்கள், பொருத்தமான வாழ்க்கை வழிகாட்டிகளாக இருக்கின்றன.

அவ்ஃப் இப்னு முஹல்லிம் ஷைபானி என்ற பிரசித்தி பெற்ற ஓர் அரபுத் தலைவர் தமது மகள் உம்மு இயாஸ் என்பவரை ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். உம்மு இயாஸ் அலங்கரிக்கப்பட்டு கணவன் வீட்டிற்கு அவர் வழியனுப்பப்படும்போது, அந்தப் பெண்ணின் தாய் உமாமா பின்த் ஹாரிஸ்வந்தார்.
இலக்கிய நயத்துடன் பேசுகிற அறிவும், சீரிய சிந்தனையும் கொண்ட அவர், தம் மகளுக்கு அப்போது உபதேசித்தவை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை.
இதோஅவரது,உபதேசம்:

என் அருமை மகளே! ஒழுக்கத்தில் சிறந்தவருக்கும் உயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவருக்கும் உபதேசம் தேவையில்லை என்றால், அது உனக்கும் தேவையில்லை தான். இருப்பினும் உபதேசம் என்பது, மறதி உள்ளவர்களுக்கு ஒரு நினைவூட்டல் அறிவுள்ளவர்களுக்கு ஓர் உதவி!

என் அருமை மகளே! தகப்பனது செல்வம், அன்பு, பிரியம் ஒரு பெண்ணுக்குப் போதுமானது என்றால், அவை உனக்கும் போதுமானதுதான்.இருப்பினும் பெண், ஆணுக்காகப் படைக்கப்பட்டவள் ஆண், பெண்ணுக்காகப் படைக்கப்பட்டவன்.

என் அருமை மகளே! எந்தச் சூழ்நிலைகளில் நீ இதுவரை வளர்ந்து வந்தாயோ, அந்தச் சூழ்நிலைகளிலிருந்து இனி பிரியப் போகிறாய்.எந்தக் கூட்டிற்குள் நீ வளர்ந்து வந்தாயோ, அந்தக் கூட்டை விட்டு வெளியேறி, இதுவரை அறியாத ஒரு கூட்டிற்குச் செல்லப் போகிறாய்.
நீ பழகாத ஒரு நண்பனிடம் செல்லப் போகிறாய். அந்த நண்பன் உன் மீது உரிமை பெற்றிருப்பதால் உனக்கு அரசனாக ஆகிறான் நீ அவனுக்கு அடிமையாக இருந்தால், அவனும் உனக்கு அடிமையாக மாறி விடுவான்.
நான் உனக்கு பத்து நற்பண்புகளைச் சொல்லுகிறேன். அவற்றை நன்றாக நினைவில் பதித்துக் கொள்.

முதலாவது, உன் கணவரிடம் போதுமென்ற தன்மையுடன் நீ பழகிக் கொள். போதுமென்ற தன்மையில்தான், மனதிற்கு அமைதி இருக்கிறது.

இரண்டாவது, அவன் பேச்சுக்குச் செவிதாழ்த்திக் கட்டுப்பட்டு நடந்து கொள். அதில்தான் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கின்றது.

மூன்றாவது, உன் கணவன் மூக்கு எதை நுகர்கிறது என்பதைத் தெரிந்து கொள். நல்ல நறுமணத்தையே தவிர வேறு எதையும் அவர் உன்னிடம் நுகர்ந்துவிட வேண்டாம்.

நான்காவது, உன் கணவன் கண் எதைப் பார்க்கிறது என்பதைக் கவனித்துக் கொள். அருவருப்பான எதையும் உன்னிடத்தில் அவர் பார்த்துவிட வேண்டாம்.

சுர்மா இட்டுக் கொள் அது கண்களுக்கு கவர்ச்சி தரும் குளித்துச் சுத்தமாக இரு; தண்ணீரும் நறுமணங்களில் ஒன்றாகும்.

ஐந்தாவது, கணவர் உணவு உண்ணும் நேரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்! பசி கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.

ஆறாவது, அவர் தூங்கும் பொழுது அமைதி காத்துக் கொள்! தூக்கத்தைக் கெடுப்பது எரிச்சலூட்டக் கூடிய செயல்.

ஏழாவது, அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினரைப் பேணிக் கொள்! அதன் மூலம்தான் குடும்பத்தை அழகிய முறையில் நிர்வகிக்க முடியும்.

எட்டாவது, கணவன் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்! அதன் மூலம்தான் குடும்பத்தை அழகிய முறையில் சீர்படுத்த முடியும்.

ஒன்பதாவது, கணவன் இரகசியத்தைப் பகிரங்கப்படுத்தாதே. அதனால், அவரது வஞ்சகத்திற்கு ஆளாக நேரிடும்.

பத்தாவது, அவரது கட்டளைகளுக்கு மாறு செய்யாதே. அதனால் அவருக்கு கோபமூட்டியவளாக ஆகிவிடுவாய்!

என்னருமை மகளே! கணவர் துயரத்தில் இருக்கும் போது மகிழ்ந்திருப்பதைத் தவிர்த்துக் கொள்! இது ஒழுக்கக் குறையாகும். அவர் மகிழ்ச்சியுற்று இருக்கும் போது கவலையில் இருப்பதையும் தவிர்த்துக் கொள்! அது (உங்கள் இருவரது) மகிழ்ச்சியை(யும்) கெடுப்பதாகும்.

எந்த அளவிற்குக் கணவரைக் கண்ணியப்படுத்தி, மதிக்க முடியுமோ, அந்த அளவிற்கு மதித்து வாழ்ந்து கொள்! அவரும் உனக்கு அதே அளவிற்குச் சங்கை செய்வார் உன்னைக் கண்ணியப்படுத்துவார்.மேலும், எந்த அளவிற்கு அவருக்கு கீழ்ப்படிந்தவளாக, கட்டுப்பட்டவளாக இருக்க முடியுமோ, அந்த அளவிற்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து கொள்! அவர் உன்னை விட்டுப் பிரிய மாட்டார் உன்னுடன் வாழ்வதையும் சேர்ந்திருப்பதையுமே விரும்புவார்.

என் அருமை மகளே! நீ விரும்பியதை உன் கணவரிடம் அடைய வேண்டுமென்றால், உன் விருப்பத்தை விட அவர் விருப்பத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடு! உன் மகிழ்ச்சியை விட அவர் மகிழ்ச்சிக்கே அதிக முன்னுரிமை கொடு! அது உனக்கு விருப்பமாகவோ வெறுப்பாகவோ இருந்தாலும் சரியே!

அல்லாஹ் உனக்கு நன்மையே நாடட்டும் அல்லாஹ் உன்னைப் பாதுகாக்கட்டும்.

இந்த உபதேசங்கள் கூறப்பட்டே அந்த மகள் தம் கணவரிடம் அனுப்பி வைக்கப்பட்டாள். தனது தாயின் வார்த்தைகளுக்கு இணங்க அவள் வாழ்ந்ததால், கணவரிடம் கண்ணியம் அடைந்தாள். அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள், பிற்காலத்தில் அரபுலகத்தின் பிரசித்தி பெற்ற அரசர்களாக இருந்தார்கள் என வரலாறு கூறுகிறது.

உண்மையில், மேற்கூறப்பட்ட நல்லுபதேசங்கள் மிக ஆழமானவை; விசாலமான கருத்துடையவை; நுட்பமான ஞானமிக்கவை. ஒரு வாலிபப் பெண் தமது கணவருடன் வாழத் தேவையான எல்லா நற்பண்புகளையும், நல்ல நடத்தைகளையும், நுண்ணறிவையும் அந்த உபதேசங்கள் உள்ளடக்கியுள்ளன. எனவேதான், மணமுடிக்க இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த உபதேசங்கள், பொருத்தமான வாழ்க்கை வழிகாட்டிகளாக இருக்கின்றன.

jazakallah:islamkural.com

No comments:

Post a Comment