Saturday, 26 November 2011

ஆஷுரா நாள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
 நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர் அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நான் தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)-புகாரி 3145 ,முஸ்லிம்) 


நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்த போது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளை யிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர்கள் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பியவர்கள் விட்டு விடலாம் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரழி)- புகாரி,முஸ்லிம்)



 இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்) 


ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விடார்கள். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)- முஸ்லிம்,அஹ்மத்,அபூதாவூத்) 


“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்த போது எங்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நபி மூஸா(அலை) அவர்கள் வெற்றி பெற்ற தினமாக இருப்பதால்) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்தும் தினமாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டில் முஹர்ரம் 9ம் நாளிலும் நோற்போம் என்று கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத் 2087  


 “ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம் 1977


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்று (மற்ற மக்களையும்) நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)


  “ரமளான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1962 


 எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்) 

ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதன் நோக்கமாவது, பத்தாம் நாள் பத்தாம் நாள் மட்டும் நோன்பு நோற்கும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதுவே. பத்தாம் நாள் நோற்பதன் காரணம் அந்நாளில் நல்ல காரியங்கள் பல நடந்திருக்கின்றன. அதாவது அல்லாஹ் தன் நேசர்களான மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றி, அவர்களின் எதிரிகளான ஃபிர்அவ்னையும் அவனைச் சார்ந்தோரையும் கடலில் மூழ்கடித்தது இந்நாளில் தான். இந்த சிறப்புப் பொருந்திய நாளில் அறியாமையின் காரணமாக பல அனாச்சாரங்கள் நடைபெறுகின்றன. அவைகளை விட்டும் தவிர்ந்து நடப்பது அவசியமாகும். ஏனென்றால் நோன்பைத் தவிர வேறு எந்த விஷேச வணக்க வழிபாடும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரபட வில்லை. ஆனால் மார்க்கத்தின் பெயரால் பல புதிய வணக்கங்களை சிலர் உருவாக்கியுள்ளனர்.


ஆஷுரா தினத்தன்று நடைபெறும் அனாச்சாரங்களில் சில: -
ஆஷுரா தினத்தன்று விஷேசப் பிரார்த்தனைகளை ஏற்படுத்தி, அதை ஓதுபவர்கள் அந்த வருடம் மரணிக்கப்படமாட்டார்கள் என நம்புவது
சாம்பிராணி புகையிட்டு அது பொறாமை, துவேஷம், சூனியம், முதலியவற்றை முறித்து விடும் என உண்ணுவது
வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல்
புத்தாடை அணிதல்
ஆடம்பரமாக செலவழித்தல்
விஷேச தொழுகை ஏற்படுத்துதல்
துக்கம் அனுஷ்டித்தல்
ஆடைகளைக் கிழித்தல்
மண்ணறைகளையும் மஸ்ஜிதுகளையும் தரிசித்தல்
போன்றன இந்நாளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அநாச்சாரங்களாகும். இதுபோன்ற எவற்றிற்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பதால் முற்று முழுதாக இவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
சத்திய பாதையில் வாழ்ந்து சத்தியவான்களாக மரணிக்க வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக! 


புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:

அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.

“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா,
2) துல் ஹிஜ்ஜா,
3) முஹர்ரம்,
4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விஷயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விஷயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)

மனிதன் தடுக்கப்பட்ட விஷயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. 
அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.




‘முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் மாதம்’ என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)

No comments:

Post a Comment