Friday, 10 May 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

அபிஸீனியா

புலம் பெயர்ந்து சென்றோர் அபிஸீனியாவில் நன்கு வரவேற்கப்பட்டனர். பூரண வழிபாட்டுச் சுதந்திரம் அவர்களுக்குக் கிட்டியது. குழந்தைகளைத் தவிர்த்து அவர்கள் சுமார் எண்பது பேர் வரை இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் சென்றவர்களல்லர். மிக இரகசியமாகத் தமது பிரயாணத்தைத் திட்டமிட்டுப் பிறரறியாத வகையில் சிறுசிறு குழுவினராக அவர்கள் சென்றிருந்தனர். அவர்களது குடும்பத்தினர் இது குறித்து அறிந்திருந்தால் அவர்களைத் தடை செய்திருக்கலாம். என்றாலும் இப்புலப்பெயர்வு முற்றிலும் எதிர்பாராத வகையிலேயே நிகழ்ந்தது.


சென்றடைய வேண்டிய இடத்தை விசுவாசிகள் சேர்ந்து கொள்ளும் வரை என்ன நடந்தது என்பதை எவரும் அறிந்திலர். தமது கட்டுப்பாடுகட்கு அப்பால் விசுவாசிகள் பிறிதோரிடத்தில் சென்று குடியேறுவதையும் அங்கு அமைதியான முறையில் வாழ்வதனையும் எவ்வாறேனும் தடுத்து நிறுத்த வேண்டுமென குறைஷித் தலைவர்கள் கங்கணம் கட்டினர். மேலும் விசுவாசிகள் அபிஸீனியாவை சென்றடைந்து, சிறிது காலத்திலேயே அவர்கள் பன்மடங்காகப் பெருகித் தமக்குப் பெரியதோர் அச்சுறுத்தலாக அமைந்து விடலாம் எனவும் அவர்கள் அஞ்சினர். தாமதமேதுமின்றிச் சில திட்டங்கள் தீட்டப்பட்டன. அபிஸீனியர்கள் பெறுமதி வாய்ந்தன எனக்கருதி வந்த பொருட்கள் பல சேகரிக்கப்பட்டன. தோல் பொருட்கள் இவற்றுள் அதிகமாயிருந்தன. நஜ்ஜாஷி மன்னனது பிரதானிகள் அனைவரையும் கவர்ந்து தம் வசமாக்கிக் கொள்ளுமளவு பொருட்கள் சேகரமாயின. இவை தவிர நஜ்ஜாஷி மன்னனுக்கெனத் தனியான அன்பளிப்புகளும் தயாரிக்கப்பட்டன. பின்னர் தீவிரமான ஆலோசனைகளின் பின்னர் மிகக் கவனமாகக் குறைஷியர் இரண்டு தூதுவர்களைத் தெரிந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் ஸஹ்ம் கோத்திரத்தைச் சேர்ந்த அம்ர்-இப்ன்-அல்ஆஸ். அவர்கள் செய்ய வேண்டுவன என்ன என்பதை நன்கு விளக்கினர் குறைஷித் தலைவர்கள். நஜ்ஜாஷின் பிரதானிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து அன்பளிப்புகளைக் கொடுக்க வேண்டும். பின்னர்,

“ முட்டாள்தனமான சில இளைஞர்களும் யுவதிகளும் உங்களது நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளனர். அவர்கள் தமது மதத்தைக் கைவிட்டு விட்டனர். அது உங்களது மதத்துக்காகவல்ல ; அவர்கள் புதிதாக கண்டுபிடுத்துள்ள ஒன்றுக்காக. எங்களுக்கோ உங்களுக்கோ தெரியாத புதியதொரு மதம் அது. அவர்களது மக்களின் தலைவர்கள் எங்களை உங்கள் அரசரிடம் அனுப்பி, இவர்களைத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக் கொண்டுள்ளார்கள். நாம் உங்களது அரசருடன் கதைக்கும் போது, இவர்களை எங்களிடம் ஒப்படைத்து விடும்படி நீங்களும் ஆலோசனை கூறுவீர்களாக! அம்மக்களுடன் எவ்வித உரையாடல்களையும் வைத்துக் கொள்ளாதீர்கள் ” எனக் கூறுமாறு தூதுவர்கள் பணிக்கப்பட்டனர். பிரதாணிகளது இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை. பின்னர் அரசருக்கான அன்பளிப்புகளுடன் நஜ்ஜாஷி மன்னரிடம் சென்ற தூதுவர்கள் பிரதானிகளிடம் கூறிய விஷயங்களையே அவரிடமும் எடுத்துரைத்துப் புலம் பெயர்ந்து வந்தோரைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி வேண்டியவர்களாக, 

“ அவர்களது மக்களில் மேன்மையானோர், அவர்களது தந்தையர், மாமன்மார், உறவினர் அனைவருமே அவர்களைத் திருப்பியனுப்பும்படி உங்களைக் கெஞ்சிக் கேட்கின்றனர் ” எனக் கூறினர். 
சபையில் இருந்த பிரதானிகளும் ஒரு முகமாக அகதிகளைத் தூதுவர்களிடம் ஒப்படைத்து விடும்படி ஆலோசனை கூறினர். உறவினர்கள் தம் பிரச்சினைகள் குறித்துத் தக்க தீர்ப்பு வழங்கக் கூடியவர்கள் உறவினர்களே எனப் பிரதானிகள் எடுத்துரைத்தனர். எனினும் நஜ்ஜாஷி மன்னன் ஒரேயடியாக இதற்கு உடன்படவில்லை.


“ இறைவன் பெயரால், நாம் அவர்களுக்குத் துரோகம் இழைக்க முடியாது. எனது நாட்டை அவர்களது புகலிடமாக்கி, ஏனைய அனைவரிலும் என்னையே தெரிந்து, என்னிடம் வந்து அடைக்கலம் தேடியுள்ள அவர்களை நாம் கைவிட்டு விட முடியாது. அவர்களை இங்கே அழைத்து, இத்தூதுவர்கள் அவர்களைப் பற்றிக் கூறுவன குறித்து அவர்களிடமும் விசாரித்தறிந்து உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களை நான் ஒப்படைக்கமாட்டேன். இந்தத் தூதுவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின், அவர்களை அவர்களது மக்களிடம் சேர்ப்பிக்கவென இவர்களிடம் ஒப்படைத்து விடுவேன். அவ்வாறில்லாவிடின், அவர்கள் எனது பாதுகாப்பை நாடியிருக்கும் வரை அவர்களுக்கு நல்லதொரு பாதுகாவலனாக நான் இருப்பேன் ”, என்றார் அவர்.


நபிகளாரின் தோழர்கள் அரசவைக்கு அழைக்கப்பட்டனர். தமது புனித கிரந்தங்களைப் பிரித்து வைத்தவர்களாக மதகுருமார் சிம்மாசனத்தைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அரசனுக்கும் அகதிகளுக்குமிடையிலான இச்சந்திப்பை எவ்வாறேனும் தடுத்து விடவே அம்ரும் அவருடைய சகாவும் விரும்பினர். அதுவே தமக்கு நன்மை பயக்கும் என அவர்கள் எண்ணினர். உண்மையில் அச்சந்திப்பு நிகழாது போகுமாயின் அவர்கள் அறியாதிருந்த சில நன்மைகளும் அவர்களுக்குக் கிட்டியிருக்கும். வர்த்தக, அரசியல் காரணங்கள் நிமித்தம் அபிஸீனியர்கள் குறைஷியருடன் நல்லுறவு பாராட்டி வந்தாலும் கூட பெரு மதங்கள் எதனையும் பின்பற்றாதவர்கள் என்ற காரணத்தால் அவர்களைத் தாழ்ந்தோராகவே கருதி வந்தனர். தமக்கிடையில் பெரியதொரு தடுப்பு இருந்து வருவதனையும் அபிஸீனியர்கள் உணர்ந்திருந்தனர். ஞான ஸ்நானம் பெற்று, ஏக தெய்வ வணக்கஸ்தர்களாக, நேர்மையுடன் தமது மதத்தைப் பின்பற்றி வந்த கிருஸ்தவர்களாயிருந்தனர் அபிஸீனியர்கள். எனவே புனிதம், புனிதமின்மை என்பன குறித்த தெளிவான உணர்வு அவர்களிடமிருந்தது. அம்ர் ஆகியோரின் அவைதிகத் தன்மை குறித்து அவர்கள் நன்கு தெரிந்திருந்தனர். அவைக்குக் கூட்டி வரப்பட்ட அகதிகளின் உண்மையான புனிதத்துவம் குறித்து, அது தம் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து உளம் பூரித்தனர் மதகுருமார். அவர்களுக்கும் மேலாக நஜ்ஜாஷி மனமகிழ்ந்தார். இதுவரை தாம் அறிந்திருந்த குறைஷியரிலிருந்தும் முற்றும் வேறுபட்டவர்களாக, தம்மையே பெரிதும் ஒத்தவர்களாக விளங்கும் அந்த ஆண்களையும் பெண்களையும் கண்டதும், மகிழ்ச்சியையும் வியப்பையும் குறிக்கும் சிற்றொலிகள் அவை முழுதும் எழுந்தன. அத்தோடு அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருந்தனர். அவர்களது நடத்தையிலும் தோற்றத்திலும் காணப்பட்ட புனிதத்துவம் அவர்களது இயற்கை அழகால் மெருகூட்டப் பெற்றிருந்தது.



அவர்களுள் அனைவருமே புலம் பெயர்ந்து வரவேண்டிய அவசியம் இருக்கவில்லை. புதிய மதத்தைக் கைவிட்டு விடும்படி தாம் வற்புறுத்தி வந்தமையை உத்மானின் குடும்பத்தார் நிறுத்தி விட்டிருந்தனர். எனினும் அபிஸீனியா செல்ல அவரை அனுமதித்திருந்தனர் நபிகளார். ருகையாவும் கூடவே சென்றார்.

உத்மான் - ருகையா தம்பதியினரின் வருகை, அகதிகள் அனைவருக்கும் உற்சாகமும் தைரியமும் ஊட்டுவதாயிருந்தது. மனதுக்கு இதமூட்டி நின்ற மற்றுமொரு தம்பதியினர் ஜஅபரும் அவர் மனைவி அஸ்மாவும், இவர்கள் அபூதாலிபால் பாதுகாப்பளிக்கப்பட்டிருந்தவர்கள். என்றாலும் அகதிகளாகச் சென்றோர்க்கு ஒரு பேச்சாளர் தேவையாயிருந்தார். எவரையும் கவரும் இயல்பான தன்மைகளோடு சிறந்த நாவன்மையும் பெற்றிருந்தவர் ஜஅபர். இவர் குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் நபிகளார் கூறினார்கள் : 

“ தோற்றத்திலும் நடத்தையிலும் நீர் என்னைப் போலவே இருக்கின்றீர் ” - இ.ஸா. 4/1:24

அபிஸீனியா சென்றவர்களுக்குத் தலைமை தாங்க நபிகளார் ஜஅபரையே தெரிந்து கொண்டனர். அவருக்குத் துணையாக இருந்தவர், அவரைப் போலவே அறிவிலும் ஆளுமையிலும் சிறந்து விளங்கிய முஸ்அப். 

அப்த்-அத்தார் கோத்திரத்தவர் முஸ்அப். பின்னைய காலங்களில் இவரது இயல்பான திறமைகளின் காரணமாகப் பாரியதொரு பணியினை இவருக்குப் பொறுப்புக் கொடுத்தனர் நபிகளார். 

சிறப்பிடம் பெரும் மற்றும் ஒருவர் மக்ஸுமிய இளைஞரான ஷம்மாஸ். இவரது தாயார் உத்பாவின் சகோதரியாவார். ஷம்மாஸ் - உபகுரு எனப் பொருள்படுவது - என்ற இவரது பெயர் வழங்கியமைக்கும் ஒரு காரணம் உண்டு.

ஒரு முறை மக்காவுக்குக் கிறிஸ்தவ மத ஷம்மாஸ் ( உப குரு ) ஒருவர் வந்திருந்தார். எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து நிற்கும் ஆண்மையழகு நிரம்பப் பெற்றிருந்தார் அவர். அப்போது உத்பா, “ நான் உங்களுக்கு இவரைவிட அழகான ஒரு ஷம்மாஸைக் காட்டுகிறேன் ” எனக் கூறித் தனது சகோதரியின் மகனை அழைத்து வந்தார். 
ஸபிய்யாவின் மகன் ஸுபைரும் அகதிகளுள் ஒருவர். நபிகளாரின் ஏனைய ஒன்றுவிட்ட சகோதரர்களும் சென்றிருந்தனர் : அர்வாவின் மகன் துலைப் : உமைமாவின் இரு மக்களான அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ், உபைத்-அல்லாஹ் ஆகியோர். உபைத்-அல்லாஹ்வின் மனைவி, உமையாக் கிளையின் உம்ம் ஹபீபாவும் சென்றிருந்தார். பர்ராவின் இரு புதல்வர்கள் அபூஸலாமாவும் அபூஸப்ராவும் தமது மனைவியருடன் சென்றிருந்தனர். இம்முதல் புலப்பெயர்வு குறித்த விவரணங்களில் பெரும்பாலான அழகிற் சிறந்த உம்ம்-ஸலாமா மூலமே பெறப்பட்டன.



அனைவரும் ஒன்று சேர்ந்ததும் நஜ்ஜாஷி அகதிகளை நோக்கி,

“ உங்களது மக்களிலிருந்து நீங்கள் பிரிந்து நிற்கக் காரணமாயிருந்த மதம் என்ன? நீங்கள் எனது மதத்தில் சேரவுமில்லை ; உங்களைச் சூழவரவுள்ள ஏனைய மக்களின் மதங்களைக் கூட நீங்கள் சாரவில்லை ” என்றார்.

முஸ்லிம்களின் சார்பில் ஜஅபரே பதிலிறுத்தார் : 

“ ஓ அரசரே! நாங்கள் அறியாமையில் மூழ்கிய மனிதர்களாக இருந்தோம் ; சிலைகளை வணங்கி வந்தோம் ; பலியிடப்படாத அழுகிய மாமிசங்களை உட்கொண்டு வந்தோம் ; வெறுக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம் ; எம்மில் வலியவர்கள் எளியோரை வருத்தி வந்தோம். இறைவன் எங்களிலிருந்தே ஓர் இறைதூதரை அனுப்பி வைக்கும் வரை இவ்வாறே எமது வாழ்க்கை கழிந்து வந்தது. அன்னாரின் வம்சாவழியை நாம் அறிவோம் ; அவரது நேர்மையை, நம்பிக்கைக்குப் பாத்திரமான தன்மையை அறிவோம். அவர் எம்மை இறைவன் பால் அழைத்தார். இறைவன் ஒருவனே எனச் சாட்சியங் கூறி, அவனை மட்டுமே வழிபட வேண்டுமென்றும், நாமும் நம் முன்னோரும் இதுவரை செய்து வந்த கற்களையும் சிலைகளையும் வழிபடுதலை விட்டு விட வேண்டும் என்றும் அவர் கூறினார். உண்மையே பேசவும், வாக்குறுதிகளைக் காப்பாற்றவும், உற்றார் உறவினருடனான உறவுகள் சூழவிருப்போரின் உரிமைகள் ஆகியனவற்றை மதிக்கவும், தீமைகளினின்றும் ஒதுங்கவும், இரத்தம் சிந்தலைத் தவிர்க்கவும் ஆணையிட்டார் அவர். எனவே நாங்கள் ஒரே இறைவனையே வணங்குகின்றோம் ; அவனுக்கு எந்தவிதமான இணையும் வைப்பதில்லை. இறைவன் தடுத்தவற்றைத் தவிர்க்கிறோம் ; அனுமதித்தவற்றையே ஏற்கிறோம். இக்காரணங்களினாலேயே எமது மக்கள் எமக்கெதிராக எழுந்துள்ளார்கள். எமது மதத்தைக் கைவிட்டு விடும்படி எம்மைத் துயருறுத்துகின்றார்கள் ; இறைவனை வணங்குவதினின்றும் நீங்கிச் சிலைகளை வணங்கும்படி வற்புறுத்துகின்றார்கள். அதனாலேயே நாம் உங்களது நாட்டுக்கு வந்துள்ளோம். ஏனைய அனைவரிலும் உங்களையே நாம் தெரிந்து கொண்டோம் ; உங்களது பாதுகாப்பால் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ஓ அரசரே! உங்களது நாட்டில், உங்களது பாதுகாப்பில் நிச்சயம் அநீதியிழைக்கப்பட மாட்டோம் என நாம் உறுதியாக நம்புகிறோம் ”


அரசவை மொழி பெயர்ப்பாளர்கள் அனைத்தையும் மொழி பெயர்த்தனர்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment