Wednesday, 8 May 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

மூன்று கேள்விகள் ( தொடர்… )

ஜுமாஹ் கோத்திரத் தலைவர் உமையாவிடம் பிலால் என்ற பெயருடைய ஓர் ஆபிரிக்க அடிமை இருந்தார். ஆழ்ந்த இறை விசுவாசம் கொண்டவர் அவர். உமையா அவரை உச்சி வெயிலின் போது வெளியே கொண்டு வந்து, நிலத்தில் படுக்க வைத்து, அவர் அசைய முடியாதவாறு மார்பில் பெரியதொரு பாறாங்கல்லை வைத்து விடுவார். ஒன்றில் பிலால் அவ்வாறே இறந்து போக வேண்டும். அல்லது முஹம்மதைப் பின்பற்றுவதைக் கைவிட்டு, அல்-லாத்தையும் அல்-உஸ்ஸாவையும் வணங்க வேண்டும். 


கொடூரமான இத்தகு துயரத்தின் போதும் கூட பிலால், ‘ஒருவன், ஒருவன்’ என்றே கூறி வந்தார். அவரது பரிதாபகரமான நிலையை அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த முதியவரான வரகாஹ் அவதானித்து, 
“ நிச்சயமாக அவன் ஒருவன் தான். ஒருவன்தான் ஓ பிலாலே! ” என்றார். பின்னர் உமையாவை நோக்கி வரகாஹ் கூறினார் :

“ நீர் இப்படியே இவரைக் கொன்று விடுவீராயின், இறைவன் மீது சத்தியமாக நீர் அவரைப் புதைக்குமிடத்தை நான் புனிதமானதோர் அடக்க ஸ்தலமாக்குவேன் ”.


எல்லாக் குறைஷியருமே தத்தமது சொந்தக் கோத்திரத்தாருடன் வாழ்ந்து வரவில்லை. அபூ பக்ர், பனீ ஜுமாஹ்களின் குடியிருப்பு பிரதேசத்தில் தனக்கென ஒரு வீட்டைக் கொண்டிருந்தார். இதனால் பனீ ஜுமாஹ்கள் வேறெந்தக் கோத்திரத்தாரையும் விட, நபிகளாரை அடிக்கடி காணும் வாய்ப்பினை பெற்றிருந்தனர். ஒவ்வோர் அந்தி வேளையிலும் அபூபக்ரைக் காணச் செல்வது நபிகளாரின் வழக்கமாயிருந்தது. இறைதூதின் ஓர் அங்கம் எப்போதும் அவர் வதனத்தில் துலங்கும் என பலரும் கூறினர். அபூபக்ரின் முகமும் ஒரு நூலினை ஒத்ததாக இருந்தது. பனீ ஜுமாஹ்களின் பிரதேசத்தில் அபூபக்ரின் வருகை முன்னர் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டிருந்தாலும், இப்போது அதுவே அதன் தலைவர்களுக்குச் சஞ்சலத்தை மூட்டுவதாக இருந்தது. அவர் மூலமாகவே பிலால் இஸ்லாத்தினுள் இணைந்தார். பிலால் வதைப்படுவதைக் கண்ணுற்ற அவர் உமையாவிடம் “ துணையேதுமற்ற இந்த மனிதனை இவ்வாறு துயருறுத்த உமக்கு சிறிதேனும் இறையச்சம் கிடையாதா? ” என வினவினார். “ நீர்தான் அவரை வழி கெடுத்து விட்டீர் ; எனவே நீர் காண்பதிலிருந்தும் அவரை நீரே விடுவிப்பீராக ” என்றார் உமையா. “ இவரை விட உறுதியான ஆரோக்கியமானதோர் அடிமை என்னிடம் உள்ளான் ; உமது மதத்தையே பின்பற்றும் அவனை நான் பிலாலுக்காகத் தருவேன் ” என்றார் அபூபக்ர். உமையா இதனை ஏற்றுக் கொள்ளவே, அபூபக்ர் பிலாலைப் பெற்று விடுதலை செய்து விட்டார்.


அபூபக்ர் ஏற்கெனவே மேலும் ஆறு பேரை விடுவித்திருந்தார். அவர்களுள் முதலாமவர் ஆமிர்-இப்ன்-புஹைரா. ஆன்ம வலிமை நிரம்பப் பெற்றிருந்த இவர் ஆரம்பத்திலேயே இஸ்லாத்தைத் தழுவியவர்களுள் ஒருவர். ஓர் இடையனாகவிருந்த ஆமிர், விடுதலை செய்யப்பட்ட பின்னர் அபூபக்ரின் மந்தைகளைக் கண்காணித்து வரலானார். உமரின் அடிமைப் பெண்களில் ஒருவரும் அபூபக்ரால் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அப்பெண் இஸ்லாத்தைத் தழுவியதை அறிந்து கொண்ட உமர், அதனைக் கைவிட்டு விடும்படி அவளைத் துன்புறுத்தி வந்தார். ஒரு முறை அவ்வழியாகச் சென்ற அபூபக்ர் இதனைக் கண்டு அவளை விற்று விட உமர் தயாரா என வினவினார். உமர் ஏற்கவே, அவளையும் வாங்கி விடுதலை செய்து விட்டார் அவர். 



மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம்களை வதை செய்து வந்தோருள் முதன்மையானவராக விளங்கினார் அபூஜஹ்ல். வலிமை வாய்ந்த குடும்பமொன்றன் பாதுகாப்பைப் புதிதாக மதம் மாறிய ஒருவர் கொண்டிருந்தால், அபூஜஹ்ல் அவரை வெறுமனே அவமதித்து, அவர் மக்களிடையே கொண்டிருக்கக் கூடிய நன்மதிப்பை தகர்த்து அவரை நகைப்புக்குள்ளாக்கி விடுவார். மதம் மாறியவர் ஒரு வர்த்தகராயிருந்தால், அவரது பொருட்களை பிறர் வாங்குவதினின்றும் தடைகளையேற்படுத்தி அவரது வர்த்தகத்தை சிதைத்து விடுவார். அம்முஸ்லிம் தனது கோத்திரத்தையே சார்ந்து, பாதுகாப்பும் வலிமையும் அற்ற ஒருவராயிருப்பின் நேரடியாகவே துன்புறுத்துவார். வேறும் பல கோத்திரத்தவரிடமும் தனக்கிருந்த செல்வாக்கின் காரணமாக அவர்களிடையிருந்த விசுவாசிகளுக்கும் இவ்வாறான துயரங்களையே இழைக்கச் செய்வதில் பெரும் வெற்றி கண்டார் அபூஜஹ்ல்.

அபூஜஹ்ல் மூலமாகவே அவரது கோத்திரத்தார், தம்மவருள் மிக்க வலியிழந்தோராயிருந்த யாஸிர், ஸுமையா, அவ்விருவரினதும் மகன் அம்மார் ஆகியோரை துன்புறுத்தி வந்தனர். அம்மூவரும் இஸ்லாத்தை கைவிட மறுத்து அதில் உறுதியாக நின்றனர். ஸுமையா தனக்கிழைக்கப்பட்ட துன்புறுத்தல்களின் காரணமாக மரணத்தைத் தழுவினார். மக்ஸும்களதும் மற்றும் சில கோத்திரத்தாரதும் துயரங்களைத் தாங்க முடியாத விசுவாசிகள் சிலர், தம்மைத் துயருறுத்துவோர் கூறக்கூடிய எதனையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். “ அல்-லாத்தும், அல்-உஸ்ஸாவும் அல்லாஹ்வைப் போலவே உங்கள் கடவுளர்தானே? ” என்றால் அவர்கள் ஆம் என்பர். வண்டுகள் ஏதும் அருகில் செல்ல “ இந்த வண்டும் அல்லாஹ்வைப் போல உமது இறைவன்தானே? ” என்றால் அதற்கும் ஆமென்பர். தாம் பட்டு வந்த துயரங்களை இனிமேலும் தாங்க முடியாத நிலையில் விசுவாசிகள் இவ்வாறெல்லாம் கூறவேண்டியதாயிற்று.


இவ்வாறான மறுதலிப்புகள் எல்லாம் நாவில் இருந்தே எழுந்தன; உள்ளத்திலிருந்தல்ல, எனினும் இவ்வாறு கூறியவர்கள் மிக இரகசியமாகவே இஸ்லாத்தைப் பின்பற்றியொழுக வேண்டியிருந்தது. பலருக்கு இரகசியம் என்பதே இருக்கவில்லை. அண்மையில் அருளப்பட்டிருந்த இளைஞர்களது சரிதையில் அவர்களுக்கு நல்லதொரு படிப்பினை இருந்தது. ஏனையோரைப் போல பல தெய்வ வணக்கங்களில் ஈடுபடாது ஏக இறைவனிடமே அடைக்கலம் தேடிச்சென்ற அவ்விளைஞர்களின் சரிதை அப்போதைய சூழலில் விசுவாசிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவே அமைந்தது. தாம் அதிக துயரங்களுக்குள்ளாகாவிடினும் தம்மைத் தொடர்ந்தோர் அளவிளா துயரங்களுக்குள்ளாக்கப்பட்டு வந்தமையைக் கண்ட நபிகளார் கூறினார்கள் :

“ இப்போது நீங்கள் அனுபவித்து வரும் துயரங்களிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வரை நீங்கள் அபிஸீனியாவுக்கு செல்லக் கூடுமாயின், அநீதியால் துயருறாத மக்களைக் கொண்டதொரு நாட்டின் அரசனை அங்கு காண்பீர்கள். அது மதங்களில் நேர்மை கொண்டதொரு நாடு ” - இ.இ.208

விசுவாசிகளில் சிலர் அபிஸீனியா நோக்கிச் சென்றனர். இதுவே இஸ்லாத்தில் முதல் புலப்பெயர்வு ஆகும்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்

No comments:

Post a Comment