அ பி ஸீ னி யா ( தொடர்… )
அரசவை மொழி பெயர்ப்பாளார்கள் அனைத்தையும் மொழி பெயர்த்தனர். அவர்களது நபிகளார் இறைவனிடமிருந்து கொண்டு வந்த செய்திகள் ஏதும் உளவா என வினவினார் நஜ்ஜாஷி. ஜஅபர் ஆம் என, “ எனக்கு அவற்றைக் கூறுவீராக ” என்றார் மன்னர். அப்போது, தாம் மக்காவிலிருந்தும் வெளியேறி வருவதற்குச் சிறிது முன்னர் அருளப்பட்ட ஸூரா மர்யமிலிருந்து சில வசனங்களை ஓதலானார் ஜஅபர்:

இவ்வேதத்தில் ( ஈஸா நபியின் தாயாராகிய ) மர்யமைப் பற்றியும் ( சிறிது ) கூறும். அவர் தன் குடும்மத்தினரை விட்டு விலகி, கிழக்குத் திசையிலுள்ள ( தன் ) அறைக்குச் சென்று ( குளிப்பதற்காகத் ) தன் ஜனங்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் ( ஜிப்ரீல் எனும்) நம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் சரியான ஒரு மனிதருடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார். ( மர்யம் அவரைக் கண்டதும் ) “ நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுமாறு ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் நன்னடத்தையுடையவராக இருந்தால்… ( இங்கிருந்து அப்புறப்பட்டு விடும் ) ” என்றார். அதற்கவர், “ பரிசுத்தமான ஒரு மகனை உமக்களி (க்கப் படும் என்பதை உமக்கு அறிவி ) ப்பதற்காக நான் உம் இறைவனால் அனுப்பப்பெற்ற ( மலக்காகிய ) ஒரு தூதன்தான்” என்றார். அதற்கவர், “ எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே! நான் கெட்ட நடத்தையுள்ளவளுமல்லவே! ” என்று கூறினார். அதற்கவர், ‘அவ்வாறே ( நடைபெறும் ) - அது எனக்கு எளிது ; அவரை மனிதர்களுக்கு ஒரு திருஷ்டாந்தமாகவும் நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம். இது முடிவாகக் கற்பனை செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயம் ’ என்று உமதிறைவனே கூறுகின்றான்” என்றார்.அல் குர்ஆன் : 19:16-21
ஜஅபர் இறைவாசகங்களை ஓதிக் கொண்டிருக்கும்போதே நஜ்ஜாஷி கண்ணீர் விடலானார். மதகுருமாரும் கண் கலங்கினர். வாசகங்கள் மொழி பெயர்க்கப்பட்டபோது மீண்டும் அழுதார்கள். பின்னர் நஜ்ஜாஷி, “ ஈஸா செய்திகள் கொண்டு வந்த அதே மூலத்திலிருந்தே இந்த செய்தியும் வந்திருகின்றது ” என்றார். குறைஷியரின் இரு தூதுவர்களையும் விளித்து அவர் கூறினார் : “ நீங்கள் போகலாம். இறைவன் பெயரால் நிச்சயமாக நான் அவர்களை உங்களிடம் ஒப்படைக்க மாட்டேன். அவர்கள் துரோகமிழைக்கப்படமாட்டார்கள
அரசவையிலிருந்து விலகிச் சென்றதும் அம்ர் தன் சகாவிடம், “ நாளை நான் அரசரிடம் கூறப்போகும் விஷயம், பசுமை நிறைந்ததாயிருக்கும் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களது எதிர்காலத்தை வேரோடு களைந்தெறியச் செய்யும். மர்யமின் மகன் ஈஸா ஓர் அடிமை என இவர்கள் உறுதி கூறுவதாகச் சொல்வேன் ” என்றார். அடுத்த நாள் காலை நஜ்ஜாஷியிடம் சென்ற அம்ர்,
“ ஓ அரசரே! அவர்கள் மர்யமின் மகன் ஈஸா குறித்து அப்பட்டமான பொய்யுரைக்கின்றார்கள். அவர்களை வரவழைத்து ஈஸா குறித்து அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என வினவிப் பார்ப்பீர்களாக! ” என்றார்.
ஈஸா குறித்து அகதிகள் கூறுவதென்ன என்பதை விளக்க, அரசவைக்குச் சமுகமளிக்கும்படி அவர்களுக்குச் செய்தியனுப்பினார் நஜ்ஜாஷி. அகதிகள் சஞ்சலங்கொண்டனர். இதுவரையும் இப்படியானதொரு நிலையை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ; அனுபவித்ததுமில்லை. என்ன பதில் அளிக்கலாம் எனக் கலந்தாலோசித்த அவர்கள், இறைவன் இது குறித்துக் கூறியது போக தாம் கூறக் கூடியது எதுவுமில்லையென உணர்ந்தனர். அவர்கள் அரசவையுள் சென்றதும்
“ மர்யமின் மகன் ஈஸா குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? ” என வினவப்படவே மீண்டும் ஜஅபரே பதிலளிக்கலானார் :
“ எங்கள் நபிகளார் அவர்கள் ஈஸா குறித்துக் கூறியதையே நாம் கூறுகின்றோம். அவர் இறைவனின் அடிமையும், அவனது தூதரும், அவனது ஆவியும், தூய கன்னியுமான மர்யத்துள் உதிப்பான அவனுடைய சொல்லும் ஆவார் ” . நஜ்ஜாஷி சிறு கம்பொன்றனைக் கையிலெடுத்து “ நீங்கள் கூறியவற்றை இந்தக் கம்பின் நீளத்திலும் சிறிதும் விஞ்சாதவராகவே ஈஸா விளங்குகின்றார் ” என்றார்.
சூழவிருந்த பிரதானிகள் தமது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் பெருமூச்சு விடலாயினர். “ உங்களது பெருமூச்சுகளிருக்கட்டும் ” எனக் கூறிய நஜ்ஜாஷி, ஜஅபரை நோக்கி “ உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள் ; எனது நாட்டில் நீங்கள் பாதுகாப்பாயிருக்கலாம். மலையளவு தங்கத்துக்கும் உங்களில் ஒருவரையும் நான் துயருக்குள்ளாக்க மாட்டேன் ” பின் குறைஷியத் தூதுவர்களைச் சுட்டிக் காட்டித் தன் பணியாளியிடம் கூறினார் : “ அவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விடும். அவற்றால் எனக்கு எவ்வித பயனுமில்லை ”. அம்ரும் சகாவும் மனமொடிந்தவர்களாகத் திரும்பிச் சென்றனர்.
இதே வேளை நஜ்ஜாஷி ஈஸா குறித்துக் கூறியது அவரது மக்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் கலக்கமுற்று வந்து அரசரை எதிர்த்து விளக்கம் கேட்டு நின்றனர். தமது மதத்தை விட்டும் அவர் வெளியேறிவிட்டார் எனக் குற்றம் சாட்டினர். நஜ்ஜாஷி உடனடியாக ஜஅபரை அழைத்து, அகதிகள் அனைவருக்கும் ஓடங்கள் தயாரித்துத் தேவையேற்படின் அபிஸீனியாவை விட்டு நீங்கத் தயாராக இருக்கும்படி கூறினார். பின்னர் அவர் தோல்பட்டையொன்றை எடுத்து, “ வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லையென்றும், முஹம்மத் அவனது அடிமையும் தூதருமாவார் என்றும், மர்யத்தின் மகன் ஈஸாவும் அவனது அடிமையும் தூதரும், ஆவியும் மர்யத்தினுள் உதிப்பான அவனது சொல்லுமாவார் என உறுதி கூறுகிறேன் ” என எழுதி தனது மேலங்கிக்குள் வைத்துக் கொண்டு தன் மக்களிடம் சென்றார்.
“ ஓ அபிஸீனியர்களே! உங்களது மன்னனாக இருக்கும் தகுதிகள் கொண்டவனாக நான் இல்லையா? ” என்றார் அவர். எல்லாத் தகுதிகளும் உள என்றனர் மக்கள். “ உங்கள் மத்தியில் எனது வாழ்க்கை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? ”. “ அது சிறந்ததொரு வாழ்க்கையாக அமைந்துளது ”. “ அப்படியானால் உங்களைக் கலக்கமுறச் செய்திருப்பதுதான் என்ன? ” என்றார் நஜ்ஜாஷி.
“ நீர் எங்களது மதத்தைத் துறந்து விட்டீர் ; ஈஸாவை ஓர் அடிமை என்று கூறிவிட்டீர் ” என்றனர் மக்கள்.
“ அப்படியானால் ஈஸா குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? ” என்றார் மன்னர். “ ஈஸா இறைவனது குமாரன் என்றே நாம் நம்புகிறோம் ” என்றனர் குடிகள். உடனே நஜ்ஜாஷி, தோல்பட்டையை வைத்திருந்த மார்புப் புறத்தில் கை வைத்தவராக,
“ இதற்கு நான் சாட்சி கூறுகின்றேன் ” என்றார். - இ.இ. 224
தமது வார்த்தைகளையே மன்னர் சாட்சி கூறுகின்றார் எனக் கொண்ட மக்கள் திருப்தியுற்றவர்களாகத் திரும்பிச் சென்றனர். நஜ்ஜாஷியின் ஆட்சியின் கீழ் மகிழ்ந்திருந்த அவர்களுக்கு அவரது உறுதியே தேவையாயிருந்தது.
ஓடங்களை விட்டுத் தமது உறைவிடங்களுக்கு திரும்பிச் சென்று வாழும்படி ஜஅபருக்குச் செய்தியனுப்பப்பட்டது.
அகதிகளும் அபிஸீனியாவிலேயே வசதியாகவும் பாதுகாப்பாகவும் தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்
No comments:
Post a Comment