Friday, 10 May 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

உ ம ர்

தமது முயற்சியில் தோல்வியடைந்தவர்களாகத் திரும்பி வந்த தூதுவர்கள் நஜ்ஜாஷியின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக முஸ்லிம்கள் அபிஸீனியாவில் நிலைப்பெற்றிருப்பதனைக் கூறியதும், குறைஷியர் சினமும் கலக்கமுமுற்றனர். இது, விசுவாசிகளை அடக்கியொடுக்குவதிலும் துயருறுத்துவதிலும் அவர்களைத் தீவிரமாக இயங்க மேலும் தூண்டுதலளிப்பதாயது. இவை பெரிதும் அபூஜஹ்லின் மேற்பார்வையிலேயே அமுல் நடாத்தப்பட்டன. அபூஜஹ்லின் ஆணைகளைச் சரிவர நிறைவேற்றி வைப்பதில் அவரது மருமகன் உமர் சிறப்பிடம் பெற்றிருந்தார்.

அப்போது சுமார் இருபத்தாறு வயது நிரம்பிய இளைஞராக இருந்த உமர், தலைக்கனம் மிக்க, இலகுவில் விட்டுக்கொடுக்காத பிடிவாத குணமும், நடவடிக்கைகளில் வன்மையும் கொண்டவராக விளங்கினார். ஆனாலும் தன் மாமனாரைப் போலன்றி, அவர் பக்தியுணர்வு மிக்கவராகவும் காணப்பட்டார். இதில்தான் புதிய மதத்துக்கு அவர் காட்டி வந்த எதிர்ப்பின் அடிப்படையே தங்கியிருந்தது. கஃபாவை அதனோடு பிரிக்க முடியாத வகையில் இணைந்திருந்த ஆண் பெண் கடவுளரையும் வணங்குவதற்கு கத்தாப், தன் மகன் உமரைச் சிறு வயதிலிருந்தே பயிற்றிருந்தார். உமரைப் பொறுத்தமட்டில் இவையனைத்தும் புனிதமானதோர் ஒருமைப் பாட்டைக் கொண்டவனாயிருந்தன. எனவே இவை குறித்துக் கேள்விகள் எழுப்புவதோ அவற்றில் தலையீடு செய்வதோ புனிதத்துவத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் களங்கம் கற்பிப்பதாய் முடியும். இதுவரைக் காலமும் குறைஷியர் அனைவரும் தனியொரு குலத்தவராகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போதோ - மக்கா இரு மதங்களின் நகரமாக, இரு சமுகத்தவரின் நகரமாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதற்கு மூலமாயமைந்த மனிதனை அகற்றி விட்டால் அனைத்தும் பழைய நிலைமைக்குத் திரும்பி விடும். வேறு எந்தவிதமான மாற்றும் இதற்கில்லை. என்றாலும் அதற்கும் ஒரு வேளை வரவேண்டும்.

அபிஸீனியா சென்ற தூதுவர்கள் தோல்வியுடன் திரும்பி வந்ததைத் தொடர்ந்து அந்த வேளையும் வந்தது. சினம் மீதூரப் பெற்றவராய் வாளைக் கையிலேந்தியவராக வீட்டை விட்டுக் கிளம்பினார் உமர். சிறிது தூரம் சென்றதுமே சககோத்திரத்தவரான நுஐம்-இப்ன்-அப்த்-அல்லாஹ் எதிர்ப்பட்டார். நுஐம் ஏற்கெனவே இஸ்லாத்தைத் தழுவியிருந்தாலும், உமருக்கும் சக கோத்திரத்தாருக்கும் அஞ்சி அதனை இரகசியமாகவே வைத்திருந்தார். கோபாவேச முகத்தவராய் உமர் வருவதைக் கணட நுஐம், அவர் எங்கே செல்கின்றார் என அறிந்து கொள்ளத் தூண்டப்பட்டார். “ குறைஷியரை இரண்டாகப் பிரித்து விட்ட அந்தத் துரோகி முஹம்மதிடம் போகின்றேன் ” என்ற உமர், “ நான் அவரைக் கொன்று விடுவேன் ” என ஆக்ரோஷமாகக் கூறி நின்றார். அவரைத் தடுத்து நிறுத்த முனைந்தார் நுஐம். இம்முயற்சியில் உமரே கொல்லப்படலாம் என்றார் அவர். எனினும் அவ்வாறான வாதங்களுக்கெல்லாம் உமர் செவிடாகிவிட்டிருந்தார். அவரை சிறிது காலதாமதம் செய்யத் தூண்டக்கூடுமாயின் அதற்கிடையில் இவ்வபாயகரமான நிலைமை குறித்து நபிகளாருக்கு எச்சரிக்கை செய்து விடலாம் என நுஐம் கருதினார். அப்படியானால் வேறொரு வாதமொன்றனைக் கிளப்பி உமரின் கவனத்தை திசை திருப்ப வேண்டும். தன் மனதில் எழுந்ததைச் செய்வதாயின், அது தன்னைப் போலவே தமது இஸ்லாத்தை இரகசியமாக வைத்திருக்கும் சக முஸ்லிம்கள் சிலரைக் காட்டிக் கொடுப்பதாக முடியும். என்றாலும் அவர்கள் தன்னை மன்னித்து விடுவர். இந்தச் சூழ்நிலையில் தன்னை அவர்கள் பாராட்டவும் கூடும் என உணர்ந்த நுஐம் கூறினார் : 

“ ஓ உமர்! நீர் ஏன் முதலில் உமது சொந்த வீட்டுக்குச் சென்று அவர்களைத் திருத்தக் கூடாது? ”

“ என் வீட்டில் யார்? ” என்றார் உமர்.

“ உமது மைத்துனர் ஸஈதும் உம் சகோதரி பாத்திமாவும். அவர்கள் இருவரும் முஹம்மதைப் பின்பற்றுவோர். அவர்களை அப்படியே விட்டு விட்டால் உமது தலைதான் போகும் ” என நுஐம் கூறியதும் ஒரு வார்த்தையும் பேசாதவராக உமர் தன் சகோதரியின் வீடு நோக்கிச் சென்றார். 

ஸுஹ்ரா கோத்திரத்தின் ஓர் எளிய குடியானவரான கப்பாப் என்பார் ஸஈத்-பாத்திமா தம்பதியருக்கு குர்ஆன் ஓதிக் கொடுக்கவென அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அச்சந்தர்ப்பத்தில் அண்மையில் அருளப்பட்டிருந்த ஸுறா தாஹா( - குர்ஆன் : 20 )வின் எழுத்துப் பிரதியினை அவர் கொண்டு வந்திருக்க, மூவருமாக அதனை வாசித்துக் கொண்டிருந்தனர்.

மிகுந்த கோபத்துடன் தனது சகோதரியை சப்தமிட்டு அழைத்தவாறே உமர் வருவதைச் செவியுற்றதும் கப்பாப் வீட்டின் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டார். பாத்திமா எழுத்துப் பிரதியைத் தன் அங்கிக்குள் மறைத்துக் கொண்டார். வரும்போதே இவர்கள் ஓதிக் கொண்டிருந்ததை உமர் கேட்டிருந்ததனால், “ என்ன உளறல்களை நான் கேட்டேன்? ” என்றார். அவர் எதனையும் கேட்கவில்லையென இருவரும் அவரை அமைதிப்படுத்த முனைந்தும் உமர் விடுவதாயில்லை.

“ நிச்சயமாக நான் கேட்டேன் ; நீங்கள் இருவரும் முஹம்மதைப் பின்தொடர்வதாகவும் நான் கேள்விப்பட்டுள்ளேன் ” எனக் கூறியவராக உமர், தன் மைத்துனர் ஸஈத்தைத் தாக்க முனைந்து இருவரும் கட்டிப் பிடித்துப் போராடலாயினர். கணவரைக் காக்க முயற்சித்த போது உமர் அடித்த அடியில் பாத்திமாவின் தோலில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. 
“ நீர் கேள்விப்பட்ட மாதிரியேதான். நாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறோம் ; நீர் விரும்பியதைச் செய்யும் ” என்றனர் இருவரும்.

பாத்திமாவின் உடம்பில் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தன் செய்கைக்காக உமரைக் கவலை கொள்ளச் செய்தது ரணம். மனத்தில் சிறியதொரு மாற்றம் விளைந்தவராக “ நீங்கள் ஓதிக் கொண்டிருந்து நான் கேட்டதைக் கொண்டு வாருங்கள் ; முஹம்மத் என்ன கொண்டு வந்திருக்கின்றார் என்பதை நான் பார்க்க வேண்டும் ” என்றார். 

அவ்விருவரையும் போலவே உமரும் வாசிக்கக் கூடியவராயிருந்தார்.
“ உம்மை நம்பி அதனைத் தர அஞ்சுகின்றோம் ” என்றார் பாத்திமா.
“ நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை ” என்ற உமர், தனது வாளையும் அதன ஏந்தும் இடை வாரையும் கழற்றி வைத்தவராகத் தன் கடவுளர் மீது சத்தியம் செய்து அதனை வாசித்து விட்டுத் தந்து விடுவதாகக் கூறி நின்றார்.
உமரின் மனம் இளகி விட்டிருந்தமையை அவதானித்த பாத்திமா, அவர் எப்படியும் இஸ்லாத்தின் பாலாகி விடவேண்டும் என உள்ளூரப் பிரார்த்தனை செய்யலானார். என்றாலும், “ ஓ என் சகோதரரே! சிலை வணக்கஸ்தரான நீர் தூய்மையில்லாதவராய் இருக்கின்றீர். தூய்மையானவர்கள் மட்டுமே இதனைத் தொடலாம் ” என்றார். உடனே உமர் வெளிச்சென்று தன்னைச் சுத்தி செய்து கொண்டு வந்தார். ஸுறா தாஹாவின் ஆரம்ப வசனங்கள் பொதிந்திருந்த பிரதி அவரிடம் கொடுக்கப்பட்டது. சில வசனங்களை வாசித்ததுமே “ இந்த வசனங்கள் எவ்வளவு அழகும் மேன்மையும் வாய்ந்தனவாக இருக்கின்றன ” என்றார் உமர். 

இதனைச் செவியுற்றதும் கப்பாப் தான் ஒளிந்திருந்த மூலையினின்றும் வெளிவந்து கூறினார் : 

“ ஓ உமரே! தனது தூதுவரின் பிரார்த்தனையினால் இறவன் உம்மையே தெரிந்து கொண்டான் என நான் நம்புகிறேன். ‘ ஓ அல்லாஹ்! ஹிஷாமின் மகன் அபுல் ஹகம் அல்லது கத்தாபின் மகன் உமரைக் கொண்டு இஸ்லாத்தைப் பலப்படுத்துவாயாக! ’ என அன்னார் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நேற்று நான் கேட்டேன் ”.

“ ஓ கப்பாப்! முஹம்மத் இப்போது எங்கே இருப்பார்? நான் இப்போதே அவரிடம் சென்று இஸ்லாத்தில் நுழைய வேண்டும் ” என்றார் உமர். நபிகளார் ஸபா வாயிலின் அருகே அர்கமின் இல்லத்தில் தோழர்களுடன் இருப்பார்கள் என்றார் கப்பாப்.

தன் வாளையெடுத்துக் கொண்டு ஸபாவுக்குச் சென்று, அர்கமின் வீட்டுக் கதவைத் தட்டித் தான் யாரெனக் கூறி நின்றார் உமர். ஏற்கெனவே நுஐம் எச்சரிக்கை விடுத்திருந்ததால் உமரின் வருகை எதிர்பாராததொன்றாக இருக்கவில்லை. எனினும் உமரின் குரலில் காணப்பட்ட தன்மை அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. கதவின் ஓர் இடையூடாக அவதானித்த ஒரு தோழர் திகைப்புற்றவராக நபிகளாரிடம் சென்று, “ ஓ அல்லாஹ்வின் தூதரே! அவர் உமரேதான். அவர் வாளையும் கொண்டவராக இருக்கின்றார் ” என்றார்.

ஹம்ஸா கூறினார் : “ அவர் உள்ளே வரட்டும். அவர் நல்ல நோக்கத்துடன் வந்திருந்தால் அவருக்கு நன்மைகள் பல நாம் செய்வோம் ; தீய எண்ணங்களுடன் வந்திருந்தாலோ அவருடைய வாளினாலேயே அவரைக் கொன்று போடுவோம் ” 

உமர் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை நபிகளாரும் ஏற்று, அவரை எதிர் கொண்டழைக்க அன்னாரே முன் சென்று, உமரின் இடைவாரைப் பிடித்து அறையின் மத்திய பகுதிக்கு இழுத்து,

“ உம்மை இங்கு கொண்டு வந்ததென்ன ஓ கத்தாபின் மகனே! உம்மீது இறைவன் பெரும் ஆபத்தொன்றனை இறக்கி வைக்கும் வரை நீர் ஓய்ந்திருப்பதை நான் காண முடியாது ” என்றார்கள். உமர் கூறினார் :

“ ஓ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும், அவர் கொண்டு வந்துள்ள தூதின் மீதும் எனது நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தவே 
நான் உங்களிடம் வந்துள்ளேன் ”. உடனே நபிகளார் அல்லாஹு அக்பர் என உரத்த குரலில் கூறினார்கள். வீட்டிலிருந்த அனைவரும் இதனைக் கேட்க முடிந்தது. உமர் இஸ்லாத்தினுள் நுழைந்தமையை அனைவரும் அறிந்து கொண்டனர் ; மகிழ்வுற்றனர். 
- இ.இ. 227


தான் இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டமையை இரகசியமாக வைத்துக் கொள்வதென்பது உமரைப் பொறுத்த மட்டில் இயலாத காரியமாயிருந்தது. எல்லோரிடமும் இதனைக் கூறிவிடவே விரும்பினார் அவர். நபிகளாருக்கு யார் யாரெல்லாம் தீவிர எதிர்ப்புக்காட்டி வந்தார்களோ அவர்களனைவருக்கும் தனது மதமாற்றத்தைப் பிரகடனப்படுத்தி விட வேண்டுமென அவர் அவாவினார். 


பின்னைய காலங்களில் உமர் கூறினார் ;

“ நான் இஸ்லாத்தில் சேர்ந்து கொண்ட அன்றைய இரவு, மக்காவில் நபிகளாருக்கு எதிர்ப்புக் காட்டுவதில் மிக்க வன்மையுடன் நடப்பவர் யார் என எனக்குள்ளேயே சிந்தித்தேன். அவரிடம் சென்று நான் முஸ்லிம் ஆகிவிட்ட செய்தியை சொல்லிவிட வேண்டும். யார் அவர்? அபூஜஹ்ல் என்பதே எனது பதிலாயிருந்தது. எனவே அடுத்த நாள் காலையிலேயே நான் அபூஜஹ்ல் வீடு சென்று கதவைத் தட்டினேன். அபூஜஹ்ல் வெளியே வந்து ‘எனது சகோதரியின் மகனுக்கு நல்வரவாகட்டும். உம்மை இங்கு கொண்டு வந்தது என்ன? ’ என்றார். நான் ‘அல்லாஹ்விலும் அவனது தூதரிலும், அவர் கொண்டு வந்துள்ள தூதின் உண்மையிலும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்பதை உம்மிடம் கூறவே நான் வந்தேன் ' எனப் பதில் கூறினேன். ‘ உம்மை இறைவன் சபிக்கட்டும் ; நீர் கொண்டு வந்த செய்திகளையும் இறைவன் சபிக்கட்டும் ’ எனக் கூறிய அபூஜஹ்ல் எனது முகத்தில் அறைந்தாற் போலக் கதவை அடித்துச் சாத்தினார் ”, - இ.இ. 230



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment