Saturday, 3 December 2016

மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்படுவதாக புகார்: மத்திய அரசுக்கு எதிராக மம்தா போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டது ஏன், ராணுவப் புரட்சி நடக்கப்போகிறதா?’ என பகீர் கேள்விகளை எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராணுவத்தினர் அப்புறப் படுத்தப்படும் வரை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற மாட்டேன் வெளியேற மாட்டேன் எனக் கூறி, 30 மணி நேரம் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்திய மம்தா, வியாழன் இரவு முழுவதும் மாநில தலைமைச் செயலகத்திலேயே தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘முர்ஷிதாபாத், ஜல்பாய்குரி, டார்ஜிலிங், வடக்கு 24 பர்கானாஸ், புர்துவான், ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட இடங்களில் மொத்தம், 19 சோதனைச் சாவடி களில் ராணுவத்தினர் நிறுத்தப்பட் டுள்ளனர்.

மாநில அரசின் அனுமதி பெறாமல் ராணுவம் எப்படி அங்கு நிறுத்தப்பட முடியும்? இதற்கு முன் இப்படியொரு சம்பவம் நடந்த தில்லை. இது மிக தீவிரமான பிரச்சினை. இதென்ன ராணுவப் புரட்சியா? இங்கிருந்து ராணுவம் அகற்றப்படும் வரை, தலைமைச் செயலகத்தில் இருந்து நான் வெளியே வர மாட்டேன்’ எனக் கூறினார்.

இதற்கு ராணுவம் தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப் பட்டது. ‘எதிர்பாராத நெருக்கடி சமயங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவத் துக்கு சரக்கு வாகனங்களை அனுப் புவதற்காக, நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து தொடர்பான புள்ளியியல் விவரங்களைச் சேகரிக்கும் பணியை ராணுவம் மேற்கொள்கிறது.

இது, மேற்கு வங்க மாநிலத் தில் மட்டும் நடக்கும் விஷயமோ, இந்தாண்டு புதிதாக தொடங்கிய வழக்கமோ அல்ல. ஆண்டுக்கு இருமுறை என, 10 ஆண்டுக்கும் மேலாக நடக்கிறது. கடந்த ஆண்டு கூட, நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. மேற்கு வங்கம் மட்டுமின்றி மேலும்சில மாநிலங் களிலும் இந்த பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கமான ராணுவப் பயிற்சி நடவடிக்கை தான் இது. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. முறை யான அரசு உத்தரவுப்படி, மேற்கு வங்க மாநில போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ஒத்துழைப்புடனே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இதனை திரிணமூல் காங்கிரஸ் மறுத்தது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் கூறும்போது, ‘‘போலீஸுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறுவது தவறான தகவல். புள்ளிவிவரம் ஏற்கெனவே கைவசம் உள்ளது. வாகன சோதனையை மேற் கொள்ள ராணுவத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பல மாவட்டங்களில் நள்ளிரவுக்குப் பிறகும் ராணுவம் நகர்த்தப்பட்டது’’ என்றார்.

மம்தா பானர்ஜியின் போராட்டம் காரணமாக, மேற்குவங்க தலை மைச் செயலகம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் இருந்து ராணுவத்தினர் அகற்றப்பட்டனர். எனினும், நேற்றைய தினமும் தலை மைச் செயலகத்தில் இருந்து மம்தா வெளியேறாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து இவ்விவகாரத்தைக் கையாள திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இதுகுறித்து புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச் சினை எழுப்பினர். அதோடு, கொல் கத்தாவில் ஆளுநர் மாளிகைக்கு வெளியேயும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்துக்குப் பிறகு நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய மம்தா, ‘மத்திய அரசு எங்களை நசுக்கப் பார்க்கிறது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்’ என்றார்.

பண மதிப்பு நீக்க உத்தரவால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பு: கோவை தொழில் துறையினர் கவலை

பண மதிப்பு நீக்கத்தால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிக்கிறோம். எனவே, பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் வனிதா மோகன், கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத் தலைவர் வி.சுந்தரம் மற்றும் 51 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஏறத் தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு பெரும்பாலும் மாத மற்றும் வாரச் சம்பளம் ரொக்கமாகத்தான் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவால், கடந்த மாதமே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் பரிதவித்தோம். இந்த மாதம் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. மேலும், தொழிலுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப் பாகங்களை வாங்கக் கூட பணமில்லை. இதனால், உற்பத்தி 30 முதல் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொழில் துறை நிலைகுலைந்துள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாணாவிட்டால், தொழில் துறை முற்றிலுமாக நசிந்துவிடும் சூழல் உருவாகும். எனவே, வங்கிகளுக்கு போதுமான அளவுக்கு பணம் விநியோகித்து, தொழில் துறையினருக்கு வழங்கவும், ஏடிஎம்-களில் போதுமான அளவு பணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் இருந்து பணம் பெறும் அளவை உயர்த்த வேண்டும்.

மேலும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்க ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதேபோல, அனைவருக்கும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் கிடைக்க, வங்கிகள் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றனர்.

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய 27 வங்கி அதிகாரிகள் பணி இடைநீக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியதாக பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய நிதிய மைச்சகம் நேற்று உறுதி செய்தது.

நாடு முழுவதும் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை யடுத்து தொழில் அதிபர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தங்களிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை குறுக்கு வழியில் மாற்ற முயன்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது.

அண்மையில் சென்னை பெசன்ட் நகரில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி கிளை மேலாளர் லோகேஷ்வர ராவ், ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் முகேஷ் உள்ளிட்ட 5 பேர் கமிஷன் தொகை பெறுவதற்காக தொழில் அதிபர்களின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கறுப்புப் பணத்தை சட்டவிரோதமாக மாற்ற முயன்றதாக கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவில் ரூ.5.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை இரு தொழிலதிபர்களிடம் இருந்து வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்காக ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆந்திராவின் ஏலூரில் ரூ.19 லட்சமும் கிருஷ்ணா மாவட்டம் பெத்தனபல்லியில் ரூ.18 லட்சமும், திருப்பதியில் ரூ.1.5 கோடியும் என புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன.

தெலங்கானாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஹைதராபாத்தின் ஹிமாயத் நகரில் ரூ.94 லட்சமும், மேதக்கில் ரூ.10 லட்சமும் பிடிபட்டன. இவை அனைத்தும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டு களாக இருந்தன. இது தொடர்பாக இரு மாநிலங்களிலும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் சிலர் உதவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதே போல் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகள் வழங்கிய வங்கி மேலாளர் மற்றும் காசாளரை போலீஸார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் நடந்த இந்த மோசடிகளைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகளை களையெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இதுவரை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கறுப்புப் பணத்தை வெள்ளை யாக மாற்ற உதவிய குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் பட்டது.

பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இதுவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அதிகாரிகள் வேறு பதவி களுக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். நேர்மையான பணப் பரிவர்த்தனை நடப்பதற் கான அனைத்து நடவடிக்கை களும் முழுவீச்சில் முடுக்கிவிடப் பட்டுள்ளன. எந்த வகையிலும் மோசடி பணப் பரிமாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. இத்தகைய மோசடியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம்: விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம்

வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம்.

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பு 4.70 லட்சம் கோடி.

ஆக வெளியே இருந்தது 10.74 லட்சம் கோடி. இதில்தான் பெரும்பகுதி கருப்புப்பணம் இருக்கிறது என்று மோடியும், மோடியின் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி கருப்புப்பணம் என கணக்கிடப்பட்டது

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த 3 லட்சம் கோடியில் ஒரு லட்சம் கோடி வங்கியின் கணக்குகளுக்குள் வரும். அது குறித்து ஆராய வேண்டும். மீதி இரண்டு லட்சம் கோடியை புதைத்து விடுவார்கள், எரித்து விடுவார்கள், எதோ செய்து விடுவார்கள், வங்கிக்குள் வராது என்று உறுதியாக நம்பினார்கள். அந்த இரண்டு லட்சம் கோடியை மீட்டதாக அறிவித்து 1 கோடி குடும்பங்களுக்கு தலா இருபதாயிரமாகவோ அல்லது 2 கோடி குடும்பங்களுக்கு தலா பத்தாயிரமாகவோ கொடுத்து, பணக்காரர்களிடம் இருந்து பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்ததாய் ஒரு சினிமா காட்டலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது.

ஆனால் மக்கள் இந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று வரை, வங்கிகளுக்குள் 500 , 1000 ருபாய் நோட்டுகளின் மூலமாக வந்தது 8.5 லட்சம் கோடி. அதாவது வரவேண்டியிருந்த 10.74 லட்சம் கோடியில் இன்னும் 2.24 லட்சம் கோடிதான் வர வேண்டும். இன்னும் முழுசாக 28 நாட்கள் இருக்கின்றன. அதுவும் வந்து விடும். அதற்கு மேலும் வந்து விடும்.

கணக்கிடப்பட்டு இருக்கும் புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம் வந்தால் என்ன அர்த்தம். கண்டுபிடிக்க முடியாதபடி கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. அது அரசுக்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் மோடியின் திட்டம் அம்பேலாகிறது. எனவே தான், ஜந்தன் கணக்குகளில் பணம் கட்டப்படுவதற்கும் எடுப்பதற்கும் இப்போது கெடுபிடிகள் விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பே exchange கிடையாது என்று சொல்லப்படுகிறது. இன்று முதல் 500 ருபாய் நோட்டுகள் பெட்ரோல் பம்ப்பிலும் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. மோடியின் திட்டத்தை காப்பாற்ற ரிசர்வ் வங்கி நாளெல்லாம் மூளையைக் கசக்கிக் கொண்டு இருக்கிறது. கருப்புப்பணம் மட்டும் நோக்கமல்ல, cashless economy தான் எதிர்காலம் என போகாத ஊருக்கு வழி காட்டி திசை திருப்பும் நாடகமும் அரங்கேறுகிறது.

ஒரு பாசிச கோமாளியின் முட்டாள்தனத்தால் மொத்த நாட்டிற்கும் பைத்தியம் பிடித்ததும், மக்களை பிச்சைக்காரர்களை போல ரோட்டில் நிறுத்தியதும் தான் மிச்சம். இதனால் ஏற்படும் பாதிப்புகளை யோசித்தால் அது பெரும் பயங்கரமாய் இருக்கிறது.

மாதவராஜ், எழுத்தாளர்;  தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

Saturday, 26 November 2016

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது.

கியூபா நேரப்படி 22.29 மணிக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி தகவல் வெளியிட்டார்.

கியூபாவில் புரட்சியை வழிநடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ, 1959 முதல் 1976 வரை அந்நாட்டின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை அதிபராகவும் இருந்தவர். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர், 2008-ல் பதவியிலிருந்து விலகினார். நீண்ட காலம் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் என்ற பெருமைகுரியவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி 'தி இந்து' நாளிதழில் ஜி.எஸ்.எஸ். எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள் இங்கே:

யாருக்கும் இல்லாத ஒரு பெருமை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர்.

1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.

படித்தது மதபோதகப் பள்ளிகளான ஜெசூட் கல்வி அமைப்புகளில்தான். படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.

அரசியலில் மாளாத ஆர்வம். தவிர தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஆனால் இத்தனை இருந்தும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாராம். பிறருடன் எளிதில் பழகமாட்டார். ஆனால் இந்தக் கூச்சமெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்தான்.

1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார். அந்த ஊர் சட்டக் கல்லூரியிலும் வன்முறை, அரசியல், கோஷ்டி மோதல் ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.



ஃபிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria என்பதாகும். இந்தக் காலகட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ மீது சரியாகவோ தவறாகவோ சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்பது. பரவலாகப் பேசப்பட்டா லும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.

கல்லூரிப் பருவத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை.

என்றாலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.

ரஃபேல் ட்ரூஜில்லோ என்பவர் டொமினிகன் குடியரசை ஆண்டு வந்தார் (மேற்கிந்தியத் தீவுகளில் கியூபாவுக்கு அடுத்த பெரிய நாடு இது). இவரது அரசின் அடக்கு முறையை எதிர்த்து பிரபல எழுத்தாளர் ஜுவான் போஷ் என்பவர் உருவாக்கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் காஸ்ட்ரோ.

இதற்காக அவர் தற்காலிகமாக பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து விலகினார். (இப்போதெல்லாம் பணியிலிருந்து சிறிது காலம் விலகி மீண்டும் அதில் சேரும் sabbatical என்ற வசதி சில நிறுவனங்களில் இருப்பதுபோல் அப்போது ஹவானா பல்கலைக்கழகத்திலும் இருந்திருக்க வேண்டும்!)

ஆனால் டொமினிகன் குடியரசை நோக்கி கப்பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று `இப்போது செயல்பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்தது.

அப்போது ஃபிடல் காஸ்ட்ரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலைமீது துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் கடந்து கரையை அடைந்தார். அந்தப் பகுதியில் சுறாமீன்கள் அதிகம் என்பதும் இந்தத் தகவல் ஃபிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதற்கு அடுத்த ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ பலவித செயல்களில் ஈடுபட்டார். அந்தச் செயல்களைப் புரட்சி என்று கூறி சிலிர்ப்பதோ, வன்முறை என்று கூறி வெறுப்பதோ அவரவர் பார்வையைப் பொறுத்தது.

கொலம்பியாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜார்ஜ் கெய்டான் என்பவர் படுகொலை செய்யப்பட அந்த நாடே பற்றி கலவரங்களில் எரியத் தொடங்கியது. அந்தக் கலவரங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் ஃபிடல் காஸ்ட்ரோ. தெருக்களில் வீடுவீடாகச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான அறிக்கைகளை விநியோகித்தார்.

கொலம்பிய ஆட்சியாளர்கள் கியூபா மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவர்களைத் துரத்த, அவர்கள் கொலம்பியாவில் உள்ள கியூபா தூதரகத்தில் சரணடைந்தனர். பிறகு அங்கிருந்து ஹவானா வந்து சேர்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார்!

பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.

கியூபாவில் அப்போது ஆர்டொடாக்ஸோ கட்சி என்ற ஒன்று இருந்தது. நாட்டிற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்றது அந்தக் கட்சி. சமூக நீதியை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்ததும் ஊழலை ஒழிப்பது தன் தலையாய பணி என்றது. ஃபிடல் காஸ்ட்ரோ இந்தக் கட்சியின் சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டார்.

*

அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு (நிஜமாகவும், உருவகமாகவும்).

அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு இதெல்லாம் மனதில் தைக்காது. அவர்கள் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரிக்கும் ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

அவரை அழிக்க அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்ததாகக் கூறுவார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டுக்குள் வெடிவைத்து அவர் முகத்தை சின்னாபின்னமாக்கக்கூட ஒரு முயற்சி நடந்ததாகக் கூறுவார்கள். ஆனால் பலிக்கவில்லை.

Thursday, 24 November 2016

செல்லாக் காசு


செல்லாக் காசு


கடந்த இரு வாரத்திற்கு முன்பாக வாட்ஸ் அப் முழுவதும் பரவிய செய்தி என்னவென்றால்...

வாட்ஸ் அப் என்பது சீனாவின் தயாரிப்பு அதனை மாற்றி டெலகிராம் என்ற இந்தியாவின் பொதுச் சேவையை பயன்படுத்துமாறு சொல்லப்பட்ட பொய்.

ஆம், சீனர்கள் எப்போதும் போலவே தங்களின் பரிவர்த்தனையை அவர்களின் சொந்தச் சேவை தளங்களின் மட்டுமே பயணம் செய்வதை ஆரம்பகாலத்தில் இருந்தே அறிவோம். உதாரணமாக யாஹூ என்ற ஒரு பொது வலைத்தளம் உலகமெல்லாம் தனது இலவச சேவையைச் செய்த போது சீனா தனது சொந்த வலைப்பூவாக  163. காம் என்ற ஒரு பொதுத் தளத்தினை தமது நாட்டினருக்கு அறிமுகம் செய்தது.

உலகில் அனைவரும் வியாபாரத் தகவல்களைப் பரிமாற அவர்களின் வணிகத் துறை அனுமதி வழங்கிய தள்ங்களில் செயல்பட்ட போது உலகிற்கான பொதுத் தளமாக Global Source என்ற ஒரு தளத்தினை முன்னிறுத்தியது. அதுவும் தனிமை.

உலகின் அதிகமான பகுதியில் Android செயல்படும் தொடுதிறை அலைபேசி அறிமுகமான போது அவர்கள் Apple மட்டும் அனுமதித்தார்கள். Google இன்றுவரை அவர்களிடம் எடுபடவில்லை.
இதற்கு காரணம்; அவர்களின் உள்நாட்டு வலைத்தளமான Alibaba என்ற உலக வர்த்தகத்தின் முக்கிய பங்கினை அவர்கள் தங்களின் சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.


இன்று இந்தியாவையும் சீனாவிடம் நாம் செல்லாக் காசாக்கிவிட்டோம். ஆம் இன்று நமது உடனடி பணப் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தும் PayTM என்பது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பண பரிவர்த்தனை என்பதை இந்தியர்கள் மறந்துவிட்டோம்.

நமது பணத்தினை வங்கியில் பதிவு செய்து பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவிப்பதை உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது.




காரில் கடத்திய ரூ.3.6 கோடி பறிமுதல்

தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோத வழிகளில் புதிய நோட்டுகளாக மாற்ற பெருந்தொகை காரில் கொண்டு செல்லப்படுவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடந்த செவ்வாய் கிழமை இரவு வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹோண்டா சிட்டி காரில் போலீஸார் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக 500, 1000 நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவற்றின் மதிப்பு ரூ.3.6 கோடி.
காரில் வந்த 3 பேரில் ஒருவர் நகை வியாபாரி, மற்றொருவர் ஆடிட்டர், மூன்றாவது நபர், ஆடிட்டரின் உதவியாளர் என்று தெரிந்தது. மூவரையும் காஷ்மீரி கேட் போலீஸார் கைது செய்தனர். வருமான வரித் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

வங்கி டெபாசிட் ரூ. 2.5 லட்சத்தை தாண்டினால் நடவடிக்கை: பான் கார்டு அவசியமாகிறது

வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி வரை போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகை செலுத்துவோர் பான் கார்டு விபரத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பலரும் ரூ. 49 ஆயிரத்தை பல முறை தங்கள் வங்கிக் கணக்கில் போட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையான காலத்தில் ஒரு கணக்கில் போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாயிருந் தால் அது வரி விதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்றார்போல மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் ஆண்டு வருவாய் கணக்கு தாக்கல் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டில் ஒரு தனிநபர் தங்கள் கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தால் அது குறித்த தகவலை தங்களுக்கு தெரிவிக்குமாறு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு வரி விதிப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வரம்பை ரூ. 2.5 லட்சமாகக் குறைத்துள்ளது.
நடப்புக் கணக்குகளில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையில் போடப்பட்ட தொகையின் அளவு ரூ. 12. 50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு வரி விதிப்பு ஆணையம் கூறியுள்ளது.
இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் தபால் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றாலும், ஒருவரே பல வங்கிகளில் கணக்கு வைத்து அதை செயல்படுத்தினால் அது எவ்விதம் ஒருங்கிணைக்கப்படும் என்ற தகவல் தெரியவில்லை.

இதுவரை பருவமழை 69% குறைவு: இதேநிலை நீடித்தால் 1974-ம் ஆண்டு நிலைமை திரும்பும் அபாயம்

இந்தாண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் அக்டோபர் 1-ம் தேதிமுதல் நவம்பர் 23 வரை இயல்பைவிட 69 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இந்நிலை நீடித்தால் 1974-ம் ஆண்டு மழைப் பொழிவு மிகவும் குறைந்து வறட்சி ஏற்பட்டது போல இந்தாண்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு முன்னாள் உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். ஒவ் வோர் ஆண்டும் தென்மேற்கு பருவ மழை முடிந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்கும்போது, பல் வேறு காரணிகள் கணக்கில் கொள் ளப்பட்டு வடகிழக்குப் பருவமழை இயல்பாக இருக்குமா அல்லது குறையுமா என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவிக்கும்.
இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. “இந்த ஆண்டு சராசரி மழை அளவான 44 செ.மீ. வரை இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அக்டோபர் மாதம் 181.1 மி.மீ., நவம்பரில் 171.7 மி.மீ., டிசம்பரில் 89.2 மி.மீ. ஆக மொத்தம் 442 மி.மீ. மழை பெய்தால், அதுதான் இயல்பான அளவாகும். கடந்தாண்டு இயல்பை விட அதிகமாக 53 சதவீதம் (676.1 மி.மீ.) அளவுக்கு மழைப் பொழிவு இருந்தது. ஆனால், இந்தாண்டு இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது.
கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழைக் காலத்திலும் இயல்பைவிட (320 மி.மீ.) குறைவான அளவே அதாவது 250 மில்லி மீட்டர்தான் மழை பதிவானது. இது இயல்பை விட 20 சதவீதம் குறைவாகும்.
போதிய அளவு மழை பொழிவு இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் துணை டைரக்டர் ஜெனரல் ஒய்.ராஜ் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
கடந்த 45 ஆண்டுகளில் 1974 மற்றும் 1995-ம் ஆண்டுகளில்தான் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட மிகக் குறைவாக பெய்துள்ளது. 1974-ம் ஆண்டில் சராசரி மழையைவிட 34 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு இருந்தது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு 1995-ம் ஆண்டில் சராசரி மழையைவிட 15 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு இருந்தது. அந்த ஆண்டில் இயல்பைவிட வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்தபோதிலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பெய்தது. மார்ச் முதல் மே வரையிலான கோடை காலத்தில் இயல்பைவிட 69 சதவீதம் மழை அதிகமாகப் பெய்தது. அதையடுத்து தென்மேற்குப் பருவ மழையும் இயல்பைவிட 5 சதவீதம் கூடுதலாக இருந்தது. அதனால் தமிழகத்தில் பாதிப்பும் குறைவாக இருந்தது.
இந்தாண்டு அக்.1-ம் தேதிமுதல் இன்றுவரை (நவ.23) இயல்பைவிட 69 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. இந்நிலை நீடித்தால் தமிழகத்தில் 1974-ம் ஆண்டு நிலைமை (கடும் வறட்சி) ஏற்படும். வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் 5 வாரமே உள்ள நிலையில் 150 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை மழை பெய்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். அடுத்து வரும் 5 நாட்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றார் ஒய்.ராஜ்.

4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் முடங்கியிருக்கும் பணம்: முறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆபத்து

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளால் வங்கிகளில் சுமார் 4 லட்சம் கோடிக்கு மேல் குவிந்திருக்கிறது. இதை முறைப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பயனற்றதாகிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நவம்பர் 9-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி வரை நாடு முழுவதும் ரூ.33,006 கோடிக்கு செல்லாத நோட்டுகளை, வங்கியில் கொடுத்து செல்லும் நோட்டுகளாக மக்கள் மாற்றி இருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் ரூ. 5,11,565 கோடி மதிப்பிலான பண மதிப்பு நீக்கம் செய்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டிருக் கின்றன. இதில் இருந்து ரூ.1,03,316 கோடிகள் மட்டுமே மீண்டும் வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டு மக்களின் கைக்கு போயிருக்கிறது. எஞ்சிய 4,08,249 கோடி ரூபாயானது வங்கிகளில் அப்படியே உள்ளது. இது கடந்த 21-ம் தேதி நிலவரம்.
பணவீக்கம் அதிகரித்தது
இப்படி கணக்கில் செலுத்தி எடுக்கப்படாமல் இருக்கும் பணத்தால் வரலாறு காணாத வகையில் வங்கிகளில் கையிருப்பு அதிகமாகி இருக்கிறது. இதுதொடர்பாக ’தி இந்து’விடம் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரி கே.சுந்தரேசன், ’’இப்படி வங்கிகளிடம் தேவைக்கு அதிகமான கையிருப்பு முடங்கி இருக்கக் கூடாது. இதை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
இதற்கு முன்பு 2004-ல் அதிகமான அந்நியச் செலாவணி வரவால் இந்திய வங்கிகளில் இப்படி தேவைக்கு அதிகமான கையிருப்பு குவிந்தது. அப்படி வந்த அந்நியச் செலாவணி முழுவதும் ரிசர்வ் வங்கியின் இருப்பிற்கு போய்விட்டது. அதற்கு பதிலாக தரப்பட்ட இந்திய பணம் நாட்டுக்குள் வந்துவிட்டது. அதுவே வங்கிகளில் கூடுதல் கையிருப்பாக குவிந்தது. இதனால் பணவீக்கமும் அதிகரித்தது
அப்போது நாட்டின் பொருளா தார வீழ்ச்சியைத் தடுக்க ‘சந்தை நிலைப்படுத்துதல்’ திட்டத்தை (Market Stabilization Scheme - MSS) உடனடியாக அமல்படுத்தியது ரிசர்வ் வங்கி. பொதுவாக, வங்கிகள் தேவைக்கு அதிகமான கையிருப்பு இருக்கும்போதெல்லாம் அதை ரிசர்வ் வங்கியிடம் செலுத்தி விட்டு அதற்கு நிகரான கடன் பத்திரங்கள் உள்ளிட்டவை களைப் பெற்றுக் கொள்வார் கள்.
அதுபோல, பணம் தேவை இருப்பவர்கள் தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களைக் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்வார்கள்.
கருவூல பில்கள்
2005-ல் வங்கிகளின் தேவைக்கு அதிகமான பணத்தை ரிசர்வ் வங்கியானது எம்.எஸ்.எஸ். கணக் கில் செலுத்திவிட்டது. அது அப் படியே கடன் பத்திரங்களாக முடக்கப்பட்டது. 2005 மார்ச் இறுதி யில், எம்.எஸ்.எஸ். கணக்கில் ரூ.64,211 கோடி டெபாசிட் செய்யப் பட்டது. இது கடன் பத்திரங்கள் மற்றும் கருவூல பில்களாக மாற்றப்பட்டன.
அதுபோன்ற நடவடிக்கை இப்போதும் எடுக்கப்பட வேண்டும் தற்போது வங்கிகளுக்கு வந்திருப்பதில் பெரும்பகுதி சாமானியர்களின் வீடுகளுக்குள் இருந்த சேமிப்பு பணம்தான். இது மீண்டும் சேமிப்பாகவே அந்த வீடுகளுக்குள் சென்றால்தான் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது. அதற்கு என்.எஸ்.சி. மாதிரியான சேமிப்பு பத்திரங்களை அரசு வெளியிடலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் கூடுதல் கையிருப்பாக உள்ள பணத்தை மீண்டும் கடன் என்கிற பெயரில் பெரும் முதலாளி கள் மற்றும் நிறுவனங்களிடம் வங்கிகள் கொடுத்துவிடக்கூடும். இப்படி நடந்தால் பிரதமரின் கறுப்பு பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பலன் தராமல் போக வாய்ப்பிருக்கிறது.’’ என்று சொன்னார்.
‘தவறுகள் நடக்கலாம்’ - எச்சரிக்கும் ‘ஃபெட்ச்’
நாடுகளின் பொருளாதார வளர்ச்சிநிலை குறித்து மதிப்பிடும் முன்னணி இண்டர்நேஷனல் கிரெடிட் ஏஜென்சிகளில் ஒன்றான ‘ஃபெட்ச்’ (Fetch) இந்திய வங்கிகளில் குவிந்துள்ள தேவைக்கு அதிகமான கையிருப்பு பணத்தை குறித்தகாலத்தில் முறையாக பயன்படுத்தாமல் விட்டால் மீண்டும் தவறுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறது.
இதுகுறித்தும் பேசிய சுந்தரேசன், “வங்கிகளில் தேங்கி உள்ள பணத்தை முன்பு போல ரிசர்வ் வங்கியில் எம்.எஸ்.எஸ். கணக்கு தொடங்கி அதில் செலுத்துவதன் மூலம் அரசின் கடன் சுமை குறையும், அந்நியச் செலா வணியை பெருக்கிக் கொள்ள முடியும், கூடுதல் பணத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த முடியும். விவசாயம் உள்ளிட்ட முன்னுரிமை பட்டியலில் உள்ள தொழில்களுக்கான கடன்களுக்கு எம்.எஸ்,.எஸ். கணக்கில் உள்ள பணத்தை வங்கிகள் தாராளமாக கடன் கொடுப்பதன் மூலம் சாமானியர்களின் கைக்கு மீண்டும் பணம் போய் சேரும். இதுதான் இப்போது எடுக்கப்பட வேண்டிய ஆரோக்கியமான அவசரமான நடவடிக்கை’’ என்றார்.

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம்: மக்கள் ஆறுதல்

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம் தொடங்கியிருக்கிறது. சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.500 விநியோகிக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூ.2000 நோட்டு தரப்பட்டது. பழைய நோட்டுகளை மாற்றிவிட்டாலும் அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான மக்கள் ரூ.2000-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகளை முதலில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றனர்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிம்போது, "பாதுகாப்பு காரணங்களால், தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை நேரடியாக இப்போது தெரிவிக்க முடியாது. வேண்டுமென்றால் அதை ரகசிய அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் சில்லறை தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது. புதிய ரூ.500 நோட்டை மக்கள் ஆறுதல் அடைந்து ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்

பண மதிப்பு நீக்கத்தால் தினமும் ரூ.200 கோடிக்கு தங்க நகை வர்த்தகம் பாதிப்பு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கத்தால் மக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், தினமும் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படுவதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:
பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் நகை வாங்குவதை முற்றிலும் தவிர்த்து விட்டனர். தற்போது, 20 சதவீத வர்த்தகம் மட்டுமே நடக்கிறது. இதனால், தமிழகத்தில் தங்க நகை வியாபாரிகளுக்கு தினமும் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. செக், கிரடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவர்கள் மூலமே 20 சதவீத வர்த்தகமும் நடக்கிறது. டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் வங்கிகள் 1.5 சதவீதம் சேவை கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்த கட்டணத்தை வங்கிகள் ரத்து செய்தால் மக்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள். வியாபாரி களின் வர்த்தக பாதிப்பும் குறையும்.
திருமணச் செலவுக்கு ரூ.2.5 லட்சம் வரை வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலைவாசியில் இந்த தொகை போதாது. இந்த தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்தால் திருமணம் நடத்துவோருக்கு பணப்பற்றாக்குறை இல்லா மல் இருக்கும். அடுத்த 4 மாதங்களுக்கு இந்தப் பிரச்சினை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால், அடுத்த சில மாதங்களுக்கு தங்கம் வாங்குவது கணிசமாக குறையும். இதன் அடிப்படையில் தேவையும் குறையும் என்பதால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பழைய நோட்டுகளை இனி மாற்றிக் கொள்ள முடியாது: பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

பழைய நோட்டுகளான ரூ;500, ரூ.1000 ஆகியவற்றை வங்கிகளில், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை வியாழன் இரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

ஆனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. 

அதாவது தண்ணீர், மின்கட்டணங்கள், அரசு மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், ரயில்வே கவுண்டர்களில் பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரீபெய்ட் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்ய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம். 

வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் பழைய நோட்டுகளை கொடுத்து தினசரி அடிப்படையில் மாற்றி கொள்வது குறைந்து வந்ததால் இன்றுடன் நோட்டுகள் மாற்றுவது முடிவுக்கு வருகிறது என்று முடிவெடுத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஆனால் வங்கி, தபால் நிலையக் கணக்குகளில் இந்த பழைய நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிவரை டெபாசிட் செய்து கொள்ளலாம் என்பதில் மாற்றமில்லை. 

மேலும் மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் மாணவர் ஒருவருக்கு ரூ.2000 வரை செலுத்த பழைய ரூ.500 தாள்களைப் பயன்படுத்தலாம். 

சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதன் பிறகும் கூட டிசம்பர் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 தாள்களைக் கொண்டு சுங்கக் கட்டணம் செலுத்தலாம். 

வெளிநாட்டினர் தங்கள் நாட்டுப் பணத்திற்கு ரூ.5000 வரை தங்கள் பாஸ்போர்ட்டை வங்கிகளில் காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

நோட்டு உத்தி மீதான மன்மோகனின் 10 தெறிப்புகள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், அதை செயல்படுத்தும் விதத்தில் உள்ள கோளாறுகளை சுட்டிக்காட்டியும் மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பேசியதன் 10 முக்கிய அம்சங்கள்:
* "ஊழல், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எதிர்க்கத்தக்கது அல்ல. ஆனால், ரூ.500, 1000 செல்லாது என்ற உத்தியை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்.
* ரூபாய் நோட்டு நடவடிக்கையை செயல்படுத்திய விதத்தால், ரிசர்வ் வங்கி மோசமான நிர்வாகத்துக்கு முன்னுதாரணம் ஆகிவிட்டது.
* அவசரகதி அறிவிப்புகள் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பை குறைத்துவிடும்.
* மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையானது, திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை.
* காலம் கடந்துவிட்டாலும்கூட ஏழை மக்களின் துயர் துடைக்க இப்போதாவது பிரதமர் மோடி ஏதாவது நடைமுறைக்கு சாத்தியப்பட்ட நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.
* மத்திய அரசு சொல்வது போல நோட்டு நடவடிக்கையின் தாக்கம் சீரடைய 50 நாட்கள் ஆகும் என்றால், இந்த 50 நாட்களும் சாமானிய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
* ஒரு நாட்டின் மக்கள் வங்கிகளில் தாங்கள் செலுத்திய பணத்தையே எடுக்க முடியாத நிலை வந்துள்ளது யோசித்துப் பார்க்க முடியாத நிகழ்வு. உயர் மதிப்பு நோட்டுகளை முடக்கியுள்ள செயல், மக்கள் மத்தியில் ரூபாய் மீதும், வங்கிகள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யும்.
* நோட்டு நடவடிக்கையால் சாமானிய மக்கள் மட்டுமின்றி, அமைப்பு சாரா தொழில்கள், வேளாண் துறை, சிறு - குறு தொழில்கள், கூட்டுறவு சேவைகள் முடங்கியுள்ளன. இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
* மத்திய அரசின் இந்த நோட்டு நடவடிக்கையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 2% வரை குறையலாம். நான் குறைவாக கணித்திருக்கிறேன். இதற்கும் அதிகமான அளவில்கூட ஜிடிபி குறைய வாய்ப்புள்ளது.
* நீங்கள் (மத்திய அரசு) சொல்வது போல் இது நீண்டகால நலத் திட்டம் எனில், எனக்கு நினைவுக்கு வரும் ஜான் கென்னியின் வார்த்தைகள்: "நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம்".

Thursday, 17 November 2016

திப்பிலி

திப்பிலி ( 10 ) , சீரகம் (1 ஸ்பூன் ) , மிளகு ( 20 ) ஆகியவற்றுடன் நொய் அரிசி ( கால் கிலோ ) , சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கோழைக்கட்டு போன்றவை தீரும்.

திப்பிலி, அக்கரகாரம், அதிமதுரம் - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச்சதை விரைவில் கரையும்.

திப்பிலி ( 10 ) , கிராம்பு (5 ), மிளகு (5 ), மஞ்சள் தூள் ( அரை ஸ்பூன் ) ஆகியவற்றை தண்ணீரில் ( 3 டம்ளர் ) போட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வந்தால் காது, மூக்கு, தொண்டைசார்ந்த நோய்கள் குணமாகும்.



திப்பிலியை வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து  காயவைத்துப் பொடிசெய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ( நினைவாற்றல் ) அதிகரிக்கும்.

திப்பிலியை எலுமிச்சைசாற்றில் ஊற வைத்துக் காய வைத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்

பூண்டு

பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது ஒரு சிறந்த ஆண்டிபயோடிக்காக செயல்படும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’என்பார்கள். ஐந்து அல்லது ஆறு பூண்டு பற்களை பாலில் நன்றாக வேகவைத்துப் தினமும்குடித்து வந்தால் உடம்பில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களின் அடைப்பு குறையும். அத்தகைய பூண்டின் சிறப்புக்களை ஆராய்வோம்.
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. தவிர அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட்,  வைட்டமின் சி, பி6 போன்றவையும் உள்ளதால் இவையெல்லாம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எலும்புகளை பலப்படுத்தும்.  

உடலின் மெட்டாபாலிசத்தை தூண்டும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை,  மூலநோய்கள் போன்றவை வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு முக்கிய காரணி.
பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும். 
ரத்த சுத்தமின்மை,  ரத்த அழுத்தம் சம்பந்மான நோய்கள், ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
கடுமையான காய்ச்சல் இருந்தால், சிறிது பூண்டுச் சாறை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்த்தால் காய்ச்சல் குறையும். 

டிசம்பர் 30 வரை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படாது: ரிசர்வ் வங்கி

ஏ.டி.எம்.மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் விதிக்கப்படும் சர்வீஸ் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 500 ரூபாய் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள 500 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய பணத்தை மற்றிக்கொள்ள வங்கிகள், ஏ.டி.எம். முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
ஒருநாளைக்கு குறிப்பிட்ட அளவு பணம் மட்டுமே பெற்றுக் கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  டிசம்பர் 30 வரை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

11 புதிய மொழிகளில் விரைவில் சேவை: பிபிசி அறிவிப்பு

லண்டனில் இருந்து செயல்படும் பிபிசி சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி, 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் தனது சர்வதேச சேவையை விரைவில் விரைவுபடுத்தவுள்ளது.

இதுகுறித்து பிபிசி சார்பில் மும்பையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு, பிபிசி சர்வதேசச் சேவையை விரிவுபடுத்துவதற்காக, பிரிட்டன் அரசு நிதியுதவி அறிவித்திருந்தது. அதன்படி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் வானொலி மற்றும் வலைதளச் சேவைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டில் (2017) செய்திச் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், இந்தியப் பிராந்தியத்தில் 157 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம். இதன் மூலம், பிரிட்டனுக்கு வெளியே பிபிசியின் மிகப்பெரிய மையமாக தில்லி உருவெடுக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, ஹிந்தி, வங்க மொழி, தமிழ் உள்பட 29 மொழிகளில் பிபிசி சேவைகளை வழங்கி வருகிறது. வாரம்தோறும் சுமார் 34.8 கோடி பேர் பிபிசியின் சேவைகளை ரசித்து வருகின்றனர்.

பிபிசி-யின் நூற்றாண்டு விழா, வரும் 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதற்குள், 50 கோடி நேயர்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

'கோடீஸ்வர' கடன்காரர்கள் தர வேண்டிய ரூ.7,016 கோடி கடனை தள்ளுபடி செய்ய எஸ்.பி.ஐ. முடிவு!


புது தில்லி:  தாங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க மனமில்லாத மிகப்பெரிய 'கோடீஸ்வரர்'களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், நாட்டை விட்டு தப்பியோடிய 'தொழிலதிபர்' விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட 'வேண்டுமென்றே' கடனை திரும்ப செலுத்தாத 63 கோடீஸ்வர கடன்காரர்களின் கடனை தள்ளுபடி செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.
இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன்தொகை முழுமையாகவும், 31 பேரின் கடன் தொகையில் பாதியும் தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக கேஎஸ் ஆயில் (வெறும் ரூ.596 கோடி), சூர்யா பார்மாசூடிகல்ஸ் (வெறும் ரூ.526 கோடி மட்டுமே), ஜிஇடி பவர் (வெறும் ரூ.400 கோடிகள்தான்) மற்றும் சாய் இன்போ சிஸ்டம் (சுமாரா ரூ.376 கோடிகளே) அடங்கும்.
இதில், 17 வங்கிகளில் சுமார் 6,963 கோடியை கடனாக வாங்கி, கடனை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்து.
முன்னதாக, கடந்த 2013 முதல் 2015ம் நிதியாண்டில் 29 மாநில வங்கிகள் இதுபோன்று கோடீஸ்வர கடன்காரர்கள் வாங்கிய ரூ.1.14 லட்சம் கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்தது. இதிலும் எஸ்பிஐ வங்கியே ரூ.40,084 கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்தது. இது குறித்து செய்தித் தாள்களில் வெளியான செய்தியைப் பார்த்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நினைவிருக்கலாம்.

அமுதத்தை நஞ்சாக்கும் அணுகுமுறை...

மதப் பரப்புரைகளையும், அதற்கெதிரான நெருப்புரைகளையும் மையமாக வைத்து, தாய் மண்ணின் அமைதியும், தனிமனித அமைதியும் குலைக்கப்பட்டு வரும் காலத்தில், சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள், சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய செய்திகள் பலவுண்டு.
இந்தியாவின் அரசியல் சாசனம் உன்னதமான கூறுகள் பலவற்றைத் தன்னகத்தில் கொண்டுள்ளதால், மண்ணகத்தில் சிறந்த அரசியல் சாசனமாய்ப் போற்றப்படுகிறது.
இது இந்தியர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் சமம் என்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டுரிமை ஆகியவற்றை எல்லார்க்கும் சமமாக வழங்கியுள்ளது.
ஒருவர் தான் விரும்பிய சமயத்தை, ஏற்க, பின்பற்ற, பரப்ப உள்ள உரிமையை (To Profess, To practice, To propagate) அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமாகவே தந்துள்ளது. அதே நேரம், பொது ஒழுங்குக்கும், சமூக அமைதிக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இவை அமைய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது,
எனவே இந்நாட்டில் யாரும் எந்த சமயத்தையும் ஏற்கலாம், பின்பற்றலாம், பரப்பலாம்.
பரப்பும் தன்மை கொண்ட இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம் உள்ளிட்ட மதங்களை ஏற்று அதில் புதிதாக இணைபவர்களுக்கு சட்டம் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.
அதே நேரம் சமூகத்தில் மதப் பரப்புரையாளர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அமளிகள் பல அரங்கேறி வருகின்றன. அர்த்தமற்ற வெறியுணர்வுகளும், அழுக்காறுமிகு அரசியலும், அதன் பின்னணியில் உள்ளன.
வெறுப்பு அரசியல் வித்தகர்கள், சன்மார்க்கப் பரப்புரையாளர்களுக்கு எதிராக வன்முறையை வளர்ப்பது ஒருபுறம் என்றால், சன்மார்க்கம் பேசுகிறவர்களும் (?) நளினத்தையும் நாவடக்கத்தையும் கையாளாமல், ஒரு சூப்பர் ஸ்டார் அந்ததை உருவாக்கிக் கொண்டு சூழ்நிலை அறியாமல் பேசுவது மறுபுறம்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது திருமூலரின் திருமந்திரம்.
யான்பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள்
சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே
இது சைவ சித்தாந்தப் பாடல் என்றபோதும், இஸ்லாமிய சித்தாந்தத்தை இது மிக ஆழமாக எடுத்துரைக்கிறது என்பது சுவையான செய்தி.
இறைவன் ஒருவன் என்னும் ஏகத்துவத்தை இயற்கையறிவாக (ஃபித்ரா) மனித குலத்திற்கு இறைவன் தந்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
நம்முள்ளே உணர்வு வடிவில் ஒரு மந்திரமுள்ளது. அதைச் சொல்லிடின் இந்த அகிலமெல்லாம் நிறைந்த அந்த மறைபொருள் நாம் பற்றிக் கொள்ளும் வகையில் தலைப்படும், அப்படித் தலைப்பட்டதால் தனக்குக் கிடைத்த இன்பம், இவ்வுலகிற்கும் கிடைக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.
அவர்தான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று உச்ச தொனியில் உலகு மெச்ச உச்சரித்தவர். நபிகள் நாயகத்திற்கும் முற்பட்டவர்.
உன்னொரு கன்னத்தில் இட்டால் - நீ
ஓங்கி அடித்து விடாதே
இன்னொரு கன்னத்தைக் காட்டு - இது
என்றென்றும் ஞானத்தின் பாட்டு
என்று கிறிஸ்தவப் போதனையை, கவிதைக் கல்வெட்டாய்ப் பதிவு செய்கிறார் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன்.
வேதங்களை ஆய்வு செய்தால் நெறி வளரும். மாறாக பேதங்களை ஆய்வு செய்தால் வெறிதான் வளரும். அது அறத்துக்குப் புறம்பாக அவதூறுகளைப் பரப்ப வைக்கும்.
நபிகள் நாயகம் இஸ்லாமைப் புதுப்பித்தவர்களே அன்றி உருவாக்கியவர் அல்லர். அவர் புதுப்பித்த இஸ்லாம் அதற்கு முந்தைய வேதங்களையும் தூதர்களையும் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இறைவனுக்கு இணை கற்பிப்பதையும், உருவ வழிபாட்டையும் அணுவின் துகளளவும் ஏற்காத இஸ்லாம் மார்க்கத்தின் இறை வேதமான திருக்குர்ஆன், "அவர்கள் அழைத்து வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை ஏசாதீர்கள்' (திருக்குர்ஆன் 6 : 108) என்று ஆணித்தரமாய் ஆணையிடுகிறது.
சாந்தி மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை (திருக்குர்ஆன் 2 : 256) என்றும் எடுத்துரைக்கிறது.
வற்புறுத்தியும், வலிமையைப் பயன்படுத்தியும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்ய அனுமதி உண்டென்றால், நபிகள் நாயகம் (ஸல்) தான் பெரிதும் நேசித்த, பெரிய தந்தையாரான அபுதாலிபை முஸ்லிமாக்கி இருப்பார்கள்.
முஸ்லிம்களை அழிப்பதற்காக படையெடுத்து வந்து, பத்ருப் போரில் தோல்வியைத் தழுவி, கைது செய்யப்பட்டவர்களில் நபிகள் நாயகத்தின் மருமகன் அபூல் ஆஸும் இருந்தார்.
அவரை மீட்பதற்குப் பிணைப் பொருளாக, நபிகளின் ஆருயிர் மனைவியும் இஸ்லாத்தை முதலில் ஏற்ற பெண்மணியுமான அன்னை கதீஜாவின் கழுத்தணிகலனை அவரது மகள் ûஸனப் அனுப்பியிருந்தார்.
அதைப் பார்த்து மனங்கலங்கிய மாநபியவர்கள் தோழர்களின் அனுமதி பெற்று அவரது மருமகனைப் பிணைப்பொருளோடு விடுவித்தார்கள். அதேபோல் அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழரும முதல் கலீஃபாவுமான அபூபக்கர் (ரலி) அவர்களின் மகனும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணியில் ஆயுதமேந்தி போரிட்டவர்தான்.
பெற்ற மகனை தந்தையும், வளர்த்த தந்தையை மகனும் கூட மார்க்கத்தை ஏற்கச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது என்னும்போது, அச்சுறுத்தியோ ஆசை காட்டியோ ஒருவரை நிர்ப்பந்திக்க இஸ்லாம் மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லை. இது தாஃயீகள் எனப்படும் சரியான மார்க்க அழைப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும்.
பிற சமயங்களின் சடங்குகளையும், நம்பிக்கையையும் தாக்குவதும், இழிவு செய்வதும், அவர்களின் மரியாதைக்குரிய பெரியவர்களைப் பழிப்பதும் வன்முறைக்கு வித்திடும் வக்கிரப் போக்குகள் ஆகும்.
சமயங்களைப் பரப்புவதாக, இதுபோன்ற அசட்டுத் தனங்களில் ஈடுபடுவோரும் உள்ளனர். இந்தப் போக்குகளை அவர்களின் சொந்த மக்களே ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சர்ச்சைகளில் சிக்க வைக்கப்பட்ட டாக்டர் ஜாகிர் நாயக்கின் அழைப்புப் பணி நமக்கு உடன்பாடு எனினும் அவரது அழைப்பு பாணியில் நமக்கு கிஞ்சிற்றும் உடன்பாடில்லை.
புழுதியில் கிடக்கும் மக்களைப் புறந்தள்ளிவிட்டு, மேட்டுக்குடிகளைப் பற்றியே மிகவும் சிந்திக்கும் அவரது போக்கின்மீதும், முற்றிலும் வணிகமயமான அவரது கல்வி நிறுவனத்தின்மீதும், நமக்குக் காட்டமான விமர்சனங்கள் ஆரம்பம் முதலே உண்டு.
ஆனால் சட்டத்தை மீறும் வகையிலோ சமூக அமைதியைக் குலைக்கும் வகையிலோ அவர் நடந்துகொண்டதில்லை. குறிப்பாக பயங்கரவாதத்தை அவர் மறைமுகமாகவும்கூட ஆதரித்தது இல்லை.
ஆனால், பயங்கரவாதத்தோடு அவர் தொடர்புப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பரப்புரையாளர் என்று ஊடகங்களில் வர்ணிக்கப்படுவது ஆச்சர்யமளிக்கிறது.
அவர்மீது மத்திய அரசும் முன்னணி ஊடகங்களும் அள்ளி வீசிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளித்தன. சமயப் பரப்புரைகளை முடக்கும் முறைகேடான முயற்சிகளாகவே அவை பார்க்கப்பட்டன. "என்னிடமிருந்து நீங்கள் ஒரு செய்தியை அறிந்தாலும், அதைப் பரப்புங்கள்' என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.
நபிகளின் பொன்மொழிகள் நன்மொழிகளாகவும், புண்படுத்தும் வகையிலின்றி, மனிதத்தைப் பண்படுத்தும் வகையிலும் இருந்தன.
ஏசுபிரான், மோசஸ், திருவள்ளுவர் உள்ளிட்ட மகான்களும், தீர்க்கதரிசிகளும் மனிதருக்கு ஞானப்படுத்தும் வழிகளைச் சொன்னார்களே தவிர, ஊனப்படுத்தும் வெறிகளை உபதேசிக்கவில்லை.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்
தாம் பெற்ற அறிவையும், இன்பத்தையும், உலக மக்கள் அனைவரும் பெறுவது கற்றறிந்த சான்றோர்களுக்கு களிப்பு தரும் என்கிறார் வான்புகழ் வள்ளுவர்.
எனவே, ஒருவர் நம்புகின்ற, பின்பற்றுகின்ற ஒரு கொள்கையை, பிறருக்கும் எடுத்துரைக்கலாம், ஏற்குமாறு கூறலாம். நளினமாகவும், அழகிய முறையிலும் விவாதிக்கலாம்.
வன்முறைக்கு வித்திடும் வகையில் மதப் பரப்புரைகள் அமையுமானால், குளிக்கப் போய் அழுக்கைப் பூசிக் கொள்வது போன்ற அவலங்களே அரங்கேறும்.
அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுப்போரை சட்டம் கட்டுப்படுத்த வேண்டும்.
அதேநேரம், சமயப் பரப்புரையாளர்களுக்கு ஒரு தாழ்மையான கோரிக்கை:
அமுதம் பற்றிய உங்களின் ஆரவாரப் பரப்புரைகளைப் பார்த்து பிற மக்கள் அதை நஞ்சு என நினைத்துவிடாத வகையில் நடந்துகொள்ளுங்கள்.
சமயம் காக்க குரல் கொடுப்போர்க்கு, ஒரு குறள் - யாகா வாராயினும் நா காக்க...

கட்டுரையாளர்:
பேராசிரியர்.
ஜெ. ஹாஜாகனி

2,000 ரூபாய் நோட்டு பிறந்த கதை

ஹெச்டி என்றால் `உயர் வரையறை’ (High Definition) என்றுதான் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீபத்திய நாட்களில் இந்திய பண விவகார அமைப்பில் ஹெச்டி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஹெச்டி-க்கு இன்னொரு விரிவாக்கத்தை வைத்துள்ளனர். தற்போது நாடெங்கிலும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோட்டிற்கு ரகசிய குறியீடாக ஹெச்டி என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். ஹெச்டிக்கு விரிவாக்கம் என்னவென்றால் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு (High Denomination). இந்த ரகசிய குறியீட்டை வைத்துதான் 2,000 ரூபாய் நோட்டுகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.
ரூ.2,000 பிறந்த இடம்
மைசூரில் உள்ள பேங்க் நோட் பேப்பர் மில் இந்தியா நிறுவனத்தில் ஹெச்டி அல்லது உயர் மதிப்பு கொண்ட 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளனர். இந்த அச்சடிக்கும் நிறுவனம் கடந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் நிறுவனமும் (Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) இந்திய நிதியமைச்சகத்தின் செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவும் (Security Printing and Minting Corporation of India Limited) இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கின.
இந்த பேப்பர் மில் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் தனது செயல்பாடுகளை தொடங்கியது. ஆனால் வர்த்தக ரீதியான தயாரிப்புகளை கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில்தான் தொடங்கியுள்ளது. இங்குதான் 2,000 ரூபாய் நோட்டுகள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து அச்சடிக்க தொடங்கப்பட்டது. அதாவது 1,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திய பிறகே 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கியுள்ளனர்.
2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த பிறகு, அட்டைபெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டுள்ளது. அதன் மேல் ஹெச்டி என்று எழுதப்பட்டு மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பு கொண்ட பொருட்களை பரிமாற்றம் செய்வதற்காக நன்கு பயிற்சி பெற்றவர்களை இதில் பயன்படுத்தியுள்ளனர். அதாவது இந்த அட்டைப்பெட்டியில் என்ன உள்ளது என்பது பற்றி கூட கேள்வி கேட்காமல் பரிமாற்றம் செய்யக்கூடிய பணியாளர்களை இதில் பயன்படுத்தியுள்ளனர்.
மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை தகவலின்படி கடந்த ஐந்து வருடமாக 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகமாகியுள்ளது. அதாவது 2011-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 109 சதவீதமும் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 76 சதவீதமும் அதிகரித்துள்ளன. மேலும் பாகிஸ்தானில் குவெட்டாவில் உள்ள பிரிண்டிங் பிரஸ்ஸில் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் ஒரு கும்பல் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சித்த போது காவல்துறையிடம் பிடிபட்டது. நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 86 சதவீதம் உள்ளன.
2005-ம் ஆண்டிலிருந்து நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண் டிருக்கின்றன. பாகிஸ்தானில் அச்சடிக்கப் படும் போலி இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வரு கின்றன என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு காரணங் களுக்காகத்தான் மத்திய அரசு 1,000 மற்றும் 5,00 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துள்ளது.
பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தற்போது வங்கிகள் மூலமாகவும் அஞ்சலகங்கள் மூலமாகவும் ரிசர்வ் வங்கிக்கு செல்லும். பிறகு இந்த நோட்டுகள் இயந்திரத்தின் மூலம் மிக சிறிய துகள்களாக நறுக்கப்பட்டு எரிக்கப்படும்.
மேற்கு வங்கத்திலும், மைசூரிலும் உள்ள பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் நிறுவனம், நாசிக்கில் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் மற்றும் தேவாஸில் உள்ள பேங்க் நோட் பிரஸ் ஆகிய இடங்களில் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தினால் பிரச்சினை வருமா?

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தலாமா?
நான் கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தி வருகிறேன். கடந்த நிதியாண்டில் நகைக்கடன் வாங்கியுள்ளேன். இடம் வாங்க கடன் வாங்கியுள்ளோம். தற்போது அந்தப் பணத்தை திரும்ப செலுத்த விரும்புகிறேன். சேமிப்பு கணக்கில் இருப்பு வைத்துத்தான் கடனுக்கு மாற்ற முடியும் என்கிறார்கள். இதனால் எனக்கு ஏதேனும் சிக்கல் வருமா? ரூ.2.5 லட்சத்திற்கு மேல் செலுத்தினால் ஏதேனும் பிரச்சினை வருமா?
- பாரதிதாசன், ராமநாதபுரம்
புதிய காசோலை வாங்கலாம்
நீங்கள் வருமான வரி கட்டுபவர் என்பது வங்கிக்குத் தெரியும். கடன் வாங்கினால் அது வருமான கணக்கில் வராது. எனவே இதில் மறுதளிக்க எதுவுமில்லை. எந்த வங்கியில் கடன் வாங்கினீர்களோ அதே வங்கியில் கடன் பணத்தை திருப்பிக் கொடுத்து புதிதாக காசோலை கேட்டு வாங்கலாம்.
விவசாய வருமானத்தை செலுத்தினால் சிக்கல் வருமா?
நான் விவசாயி. எனது தோப்பில் மா, தென்னை மரங்கள் உள்ளன. இதன் மூலம் இத்தனை ஆண்டுகளாக நான் சேமித்த தொகை ரூ.4 லட்சம் கையிருப்பு உள்ளது. எனக்கு வங்கி கணக்கும் இல்லை. இப்போது இந்தப் பணத்தை வங்கியில் செலுத்தும் போது விவசாய வரவு - செலவு கணக்கை கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்களா? வருமான வரி விதிக்கப்படுமா?
- முகமது ரஃபீக், மதுரை
ஆவணத்தை காட்டினால் ஆபத்தில்லை
விவசாயத்திலிருந்து எத்தனை கோடிக்கு வருமானம் வந்தாலும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அதேசமயம், விவசாய வருமானத்தை வங்கியில் டெபாசிட் செய்து அந்தத் தொகைக்கு வட்டி பெறப்பட்டால் அதற்கு மட்டும் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் விவசாயம் செய்திருந்தால் அதற்கான ஆவணங்கள், நில வரி ரசீதுகள் உள்ளிட்டவைகளை வைத்திருப்பீர்கள். அவைகளைக் கொண்டுபோய் வங்கியில் காட்டினால் போதும். நீங்கள் செலுத்தும் தொகை தொடர்பாக எவ்வித கேள்வியும் எழுப்பப்பட மாட்டாது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கலாமா?
ங்களது ஆட்டோமொபைல் கடையில் தினமும் 50 ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது. நாங்கள் அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். பொதுமக்களின் நலன் கருதி எங்களைப் போன்ற வியாபாரிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இன்னமும் வாங்கி வருகிறார்கள். ஆனால், அவற்றை வாங்கக்கூடாது என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இது சரியா?
- பூச்சிராஜன், தூத்துக்குடி
செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வாங்குவது சட்டப்படி குற்றம்.
குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசாங்கம் அறிவித்த பிறகு, அரசாங்க நிறுவனங்களோ, அரசால் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களோ தவிர வேறு யாரும் அவற்றை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் அது சட்டப்படி குற்றம். அரசாங்கமோ, அரசு அறிவிக்கும் நிறுவனங்களோ பழைய நோட்டுகளை வாங்கினால் அது மறு சுழற்சிக்கு வராது; நேரடியாக ரிசர்வ் வங்கிக்குச் சென்றுவிடும். அதில்லாமல் தனியாரோ பிற வர்த்தக நிறுவனங்களோ பெற்றுக்கொள்ளும் ரூபாய் நோட்டுகள் மீண்டும் மீண்டும் மறுசுழற்சிக்கு வரும். அதனால்தான் இத்தகைய நடவடிக்கை கையாளப்படுகிறது.
எனது கணக்கில் மற்றவரின் பிரீமியம் பணத்தை வரவு வைக்கலாமா?
நான் எல்.ஐ.சி. ஏஜென்டாக இருக்கிறேன். ஆகையால் வாடிக்கையாளர்கள் பல இடங்களிலிருந்து பிரீமியம் செலுத்த எனது (சேமிப்பு) வங்கிக் கணக்கில் பணம் செலுத்துகின்றனர். அப்படி ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை பணபரிமாற்றம் நடந்துள்ளது. நான் வரி செலுத்த வேண்டுமா?
- பரமேஸ்வரன், கரம்பக்குடி
சேமிப்புக் கணக்கில் வரவுவைக்க முடியாது
வங்கியில் செலுத்தப்படும் பணம் அனைத்துமே வருமானமாகவோ ஊதியமாகவோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பரமேஸ்வரன் நடப்புக் கணக்கு வைத்திருந்து அதில் அவரது வாடிக்கையாளர்கள் பிரீமியம் தொகையை செலுத்தி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதில்லாமல், அவரது சேமிப்புக் கணக்கில் பிரீமியம் தொகைகளை செலுத்தி இருப்பதால் இதற்கு வருமானவரி துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரலாம்.
பிரச்சினை தீர என்னதான் வழி
த்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்பும்கூட சில வியாபாரிகள் இன்னமும் அந்த நோட்டுகளை வாங்கிக் கொண்டு வியாபாரம் செய்வதால் பழைய நோட்டுகளை வாங்க மறுக்கும் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது. சில இடங்களில் பழைய நோட்டுகளை வாங்குவதும் பல இடங்களில் வாங்க மறுப்பதும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சில்லறை பொருட்களை வாங்கமுடியாமல் மக்களும் தவிக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க வழியே இல்லையா?
- மகேந்திரன், போரூர் வியாபாரிகள் சங்க தலைவர், சண்முகநாதன், காரைக்குடி
விரைவில் சகஜ நிலை திரும்பும்
பூச்சிராஜனுக்கு சொன்ன பதில்தான் இவர்களுக்கும். செல்லாது என அரசாங்கம் அறிவித்த பின்பும் அந்த நோட்டுகளை தனியார் வாங்குவது சட்டப்படி குற்றம். எனவே, நீங்களும் வாங்க வேண்டாம். அடுத்த சில நாட்களுக்குள் எல்லாம் சகஜநிலைக்கு வந்துவிடும்.
வங்கியில் செலுத்திய பணத்தை திருப்பி எடுத்தால்?
ற்போது வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சத்தை செலுத்திவிட்டு பிறகு அதை திருப்பி எடுத்துவிட்டால் அந்தக் தொகைக்கு வருமான கணக்கு காட்டவேண்டி இருக்குமா?
- மணிமாறன், திருவாடானை
சந்தேகம் இருந்தால் மட்டுமே கேள்வி வரும்
வங்கியில் பணம் போடும் அனைவரையும் வருமான வரித்துறையினர் கேள்வி கேட்பதில்லை. யார் மீது சந்தேகம் வருகிறதோ அவர்களை மட்டும்தான் கண்காணிக்கிறார்கள். உதாரணத்திற்கு, தியாகராய நகரில் ஜவுளிக்கடை நடத்தும் முதலாளி தனது கணக்கில் பத்து லட்ச ரூபாய் போட்டால் சந்தேகம் வராது; கேள்வி எழுப்ப மாட்டார்கள். அதேசமயம், அவரது கடையில் வேலை செய்யும் நூறு பேர் தங்களது வங்கிக் கணக்கில் ஒரே சமயத்தில் தலா ரூ. 2.5 லட்சம் செலுத்தினால் சந்தேகம் வரும்; கேள்வி கேட்பார்கள். அப்போது, வருமானத்திற்கான ஆதாரத்தை காட்டாவிட்டால் சிக்கலை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்


சுவிஸ் வங்கி பதுக்கல் முதல் ஏடிஎம் காத்திருப்பு வரை: மாநிலங்களவையில் மோடி அரசை கிழித்த எதிர்க்கட்சிகள்

ரூபாய் நோட்டு உத்தி மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) கடுமையாக விமர்சித்தன.



காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, "ஒரே இரவில் 86% பணத்தை புழக்கத்திலிருந்து அரசு தடை செய்துள்ளது. அப்படியெனில் அரசு அந்த பணம் அத்தனையும் கள்ளப்பணம் என நினைத்ததா? அப்படி என்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு வெளியிட்ட அறிக்கையில் புழக்கத்தில் உள்ள பணத்தில் 0.02% மட்டுமே கள்ளப்பணம் என ஏன் சொன்னது.
மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்கள் எல்லோருமே மருத்துவம் படிக்காமலே மருத்துவர்கள் போல் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாகிவிட்டனர். காரணம் அவர்கள் அவ்வப்போது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.
சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையை எடுத்துவிட்டு சுவிஸ் வங்கியில் பணத்தை குவித்துவைத்திருப்பவர்களை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது? வங்கிகளில் பெருமளவில் பணத்தை கடனாக வாங்கிவிட்டு அவற்றை திருப்பிச் செலுத்தாவதற்கள் பெயரை இந்த அரசு வெளியிடுமா?
நோட்டு நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்னரே அரசு முன்னேற்படுகளை செய்திருந்தால் இப்போது பணப் பற்றாக்குறை வந்திருக்காது. சொந்த நாட்டில் மக்கள் பணத்துக்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்க பிரதமரோ ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்து மக்களை அவர் அவமானப்படுத்திவிட்டார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாளைக்கு ஐந்து முறை உடையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
நோட்டு நடவடிக்கை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால், பாரத ஸ்டேட் வங்கிக்கு கடந்த மார்ச் மாதமே நோட்டு நடவடிக்கை குறித்து தெரியும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு தனக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே நோட்டு நடவடிக்கை குறித்த தகவலை கசியவிட்டிருக்கிறது" என்றார்.

மோடியை ஹிட்லர், முசோலினியுடன் ஒப்பிட்ட பிரமோத் திவாரி
மாநிலங்களவை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி, பிரதமர் மோடியை ஹிட்லர், முசோலினி, மற்றும் கடாஃபி ஆகிய சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டார்.
அவர் பேசும்போது, "சீதாராம் யெச்சூரி கோரியது போல் ரூ.500, 1000 நடவடிக்கை மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசை ஏதோ சிட்பண்ட் நிறுவனம் போல் மாற்றிவிட்டீர்கள்.
சில தொடர் நோட்டுகளை மட்டுமே புழக்கத்திலிருந்து விடுவிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் 86% நோட்டுகளை முடித்துள்ளீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? அயல்நாடுகளுக்கு அனுப்பும் தொகையின் உச்ச வரம்பை அதிகரித்ததன் மூலம் 10 மாதங்களாக இதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்.
உங்களுக்கு ‘பிடித்தமான’ மாநிலங்களில் நிறைய பணம் டெபாசிட் ஆகியுள்ளன. பிரதமர் 50 நாட்கள் கேட்கிறார், ஆனால் 50 நாட்களுக்குப் பிறகு ராபி, கரீப் விளைச்சலை வாங்க ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள். நம் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக்கி விட்டீர்கள். உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.
நம் பிரதமரை இந்த விஷயத்தில் ஹிட்லர், முசோலினி, கடாஃபியுடன் ஒப்பிடலாம்," என்றார்
இவ்வாறு இவர் பேசியவுடன் எதிர்ப்பு கிளம்பியது. ஹிட்லருடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று ரவிசங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் பிரமோத் திவாரி தனது ஒப்பீட்டை தொடர்ந்தார். கடைசியில் "ஒரே வழிதான் உள்ளது, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கவும், நீங்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்க இதனைச் செய்யவில்லை. உங்கள் நண்பர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை" என்று முடித்தார் தன் பேச்சை.
அதிமுக எதிர்ப்பு:
ரூபாய் நோட்டு நடவடிக்கையால் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் சேமிப்பும் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார். அதிமுக எப்போதுமே கறுப்புப்பணத்தை எதிர்க்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் எங்கள் கட்சி எப்போதுமே வரவேற்றிருக்கிறது. கறுப்புப் பணத்தை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கிறார்.
ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறாக புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்ததால் கிராமப்புறங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தியிருக்க வேண்டும் என அவர் கூறினார்.

மக்களை ஏன் வதைக்கிறீர்கள்?- சீதாராம் யெச்சூரி
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பொதுமக்களை ஏன் வதைக்கிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறும்போது, "தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் இலாமல் மக்கள் தவிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் பாஜக தனது கட்சி நிதியை பிரதமர் அறிவிப்பதற்கு முன்னதாகவே வங்கியில் செலுத்தியது எப்படி? இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாற்று ஏற்பாடுகள் முழுமை பெற 50 நாட்கள் ஆகும் என பிரதமரே சொல்லியிருக்கும் நிலையில் அதுவரை மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளையே பயன்படுத்தலாம் என அறிவியுங்கள்" என்றார்.
மாயாவதி சரமாரி தாக்கு:
மாநிலங்களவை விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசும்போது, மத்திய அரசின் ரூ.500, 1000 நோட்டுகள் மீதான நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பணக்காரர்களை பாதுகாக்க மத்திய அரசு உதவி செய்ததாக குற்றம்சாட்டி அவர் மேலும் பேசும்போது, "நிதி நெருக்கடி நிலை பிரகடனம் போல் செய்துவிட்டனர். இந்தியாவே முடக்கப்பட்டது போல் உள்ளது. ஜப்பானிலிருந்து வந்த பிரதமர் காஸியாபூர் கூட்டத்தில் பேசும்போது தான் ஊழலுக்கு எதிரானவர் என்றார். ஆனால் அவர் பேசிய கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடே ஊழல் வழிமுறைகளைக் கையாண்டு செய்யப்பட்டதுதான்.
தனது கட்சியினர், சாதகமானோர் மற்றும் பணக்காரர்கள் பெரிய நோட்டுகளுக்கான 'தகுந்த' ஏற்பாடுகளை செய்யும் வரை காத்திருந்து 10 மாதங்கள் எடுத்துக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பகுஜன் முன்னதாக கட்சியாகும் முன் இயக்கமாகவே வளர்ந்தது, சாதாரண மக்களிடமிருந்து நிதி திரட்டியே கட்சியை வளர்த்தோம், கோடீஸ்வர நபர்களிடமிருந்து நிதி திரட்டவில்லை.
இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அலட்சியம் காட்டிய அரசு, பணக்காரர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க உதவி புரிந்துள்ளது. தற்போது உங்கள் பலவீனங்களை மறைக்க மற்ற கட்சியினரை குற்றம் சொல்லத் தொடங்கியுள்ளீர்கள்.
ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து இத்தகைய நடவடிக்கையை எடுக்கக் காரணம் உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநில தேர்தல்களே. இந்த மாநில மக்கள் நிச்சயம் உங்களுக்கு தண்டனை அளிப்பார்கள். மக்கள் கையில் மை-யை பூசியதற்கான தகுந்த பலனை எதிர்பார்க்கலாம்' என்றார் மாயாவதி.