Thursday, 24 November 2016

4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் முடங்கியிருக்கும் பணம்: முறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆபத்து

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளால் வங்கிகளில் சுமார் 4 லட்சம் கோடிக்கு மேல் குவிந்திருக்கிறது. இதை முறைப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பயனற்றதாகிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நவம்பர் 9-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி வரை நாடு முழுவதும் ரூ.33,006 கோடிக்கு செல்லாத நோட்டுகளை, வங்கியில் கொடுத்து செல்லும் நோட்டுகளாக மக்கள் மாற்றி இருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் ரூ. 5,11,565 கோடி மதிப்பிலான பண மதிப்பு நீக்கம் செய்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டிருக் கின்றன. இதில் இருந்து ரூ.1,03,316 கோடிகள் மட்டுமே மீண்டும் வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டு மக்களின் கைக்கு போயிருக்கிறது. எஞ்சிய 4,08,249 கோடி ரூபாயானது வங்கிகளில் அப்படியே உள்ளது. இது கடந்த 21-ம் தேதி நிலவரம்.
பணவீக்கம் அதிகரித்தது
இப்படி கணக்கில் செலுத்தி எடுக்கப்படாமல் இருக்கும் பணத்தால் வரலாறு காணாத வகையில் வங்கிகளில் கையிருப்பு அதிகமாகி இருக்கிறது. இதுதொடர்பாக ’தி இந்து’விடம் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரி கே.சுந்தரேசன், ’’இப்படி வங்கிகளிடம் தேவைக்கு அதிகமான கையிருப்பு முடங்கி இருக்கக் கூடாது. இதை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
இதற்கு முன்பு 2004-ல் அதிகமான அந்நியச் செலாவணி வரவால் இந்திய வங்கிகளில் இப்படி தேவைக்கு அதிகமான கையிருப்பு குவிந்தது. அப்படி வந்த அந்நியச் செலாவணி முழுவதும் ரிசர்வ் வங்கியின் இருப்பிற்கு போய்விட்டது. அதற்கு பதிலாக தரப்பட்ட இந்திய பணம் நாட்டுக்குள் வந்துவிட்டது. அதுவே வங்கிகளில் கூடுதல் கையிருப்பாக குவிந்தது. இதனால் பணவீக்கமும் அதிகரித்தது
அப்போது நாட்டின் பொருளா தார வீழ்ச்சியைத் தடுக்க ‘சந்தை நிலைப்படுத்துதல்’ திட்டத்தை (Market Stabilization Scheme - MSS) உடனடியாக அமல்படுத்தியது ரிசர்வ் வங்கி. பொதுவாக, வங்கிகள் தேவைக்கு அதிகமான கையிருப்பு இருக்கும்போதெல்லாம் அதை ரிசர்வ் வங்கியிடம் செலுத்தி விட்டு அதற்கு நிகரான கடன் பத்திரங்கள் உள்ளிட்டவை களைப் பெற்றுக் கொள்வார் கள்.
அதுபோல, பணம் தேவை இருப்பவர்கள் தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களைக் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்வார்கள்.
கருவூல பில்கள்
2005-ல் வங்கிகளின் தேவைக்கு அதிகமான பணத்தை ரிசர்வ் வங்கியானது எம்.எஸ்.எஸ். கணக் கில் செலுத்திவிட்டது. அது அப் படியே கடன் பத்திரங்களாக முடக்கப்பட்டது. 2005 மார்ச் இறுதி யில், எம்.எஸ்.எஸ். கணக்கில் ரூ.64,211 கோடி டெபாசிட் செய்யப் பட்டது. இது கடன் பத்திரங்கள் மற்றும் கருவூல பில்களாக மாற்றப்பட்டன.
அதுபோன்ற நடவடிக்கை இப்போதும் எடுக்கப்பட வேண்டும் தற்போது வங்கிகளுக்கு வந்திருப்பதில் பெரும்பகுதி சாமானியர்களின் வீடுகளுக்குள் இருந்த சேமிப்பு பணம்தான். இது மீண்டும் சேமிப்பாகவே அந்த வீடுகளுக்குள் சென்றால்தான் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது. அதற்கு என்.எஸ்.சி. மாதிரியான சேமிப்பு பத்திரங்களை அரசு வெளியிடலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் கூடுதல் கையிருப்பாக உள்ள பணத்தை மீண்டும் கடன் என்கிற பெயரில் பெரும் முதலாளி கள் மற்றும் நிறுவனங்களிடம் வங்கிகள் கொடுத்துவிடக்கூடும். இப்படி நடந்தால் பிரதமரின் கறுப்பு பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பலன் தராமல் போக வாய்ப்பிருக்கிறது.’’ என்று சொன்னார்.
‘தவறுகள் நடக்கலாம்’ - எச்சரிக்கும் ‘ஃபெட்ச்’
நாடுகளின் பொருளாதார வளர்ச்சிநிலை குறித்து மதிப்பிடும் முன்னணி இண்டர்நேஷனல் கிரெடிட் ஏஜென்சிகளில் ஒன்றான ‘ஃபெட்ச்’ (Fetch) இந்திய வங்கிகளில் குவிந்துள்ள தேவைக்கு அதிகமான கையிருப்பு பணத்தை குறித்தகாலத்தில் முறையாக பயன்படுத்தாமல் விட்டால் மீண்டும் தவறுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறது.
இதுகுறித்தும் பேசிய சுந்தரேசன், “வங்கிகளில் தேங்கி உள்ள பணத்தை முன்பு போல ரிசர்வ் வங்கியில் எம்.எஸ்.எஸ். கணக்கு தொடங்கி அதில் செலுத்துவதன் மூலம் அரசின் கடன் சுமை குறையும், அந்நியச் செலா வணியை பெருக்கிக் கொள்ள முடியும், கூடுதல் பணத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த முடியும். விவசாயம் உள்ளிட்ட முன்னுரிமை பட்டியலில் உள்ள தொழில்களுக்கான கடன்களுக்கு எம்.எஸ்,.எஸ். கணக்கில் உள்ள பணத்தை வங்கிகள் தாராளமாக கடன் கொடுப்பதன் மூலம் சாமானியர்களின் கைக்கு மீண்டும் பணம் போய் சேரும். இதுதான் இப்போது எடுக்கப்பட வேண்டிய ஆரோக்கியமான அவசரமான நடவடிக்கை’’ என்றார்.

No comments:

Post a Comment