Thursday, 24 November 2016

பண மதிப்பு நீக்கத்தால் தினமும் ரூ.200 கோடிக்கு தங்க நகை வர்த்தகம் பாதிப்பு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கத்தால் மக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், தினமும் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படுவதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:
பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் நகை வாங்குவதை முற்றிலும் தவிர்த்து விட்டனர். தற்போது, 20 சதவீத வர்த்தகம் மட்டுமே நடக்கிறது. இதனால், தமிழகத்தில் தங்க நகை வியாபாரிகளுக்கு தினமும் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. செக், கிரடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவர்கள் மூலமே 20 சதவீத வர்த்தகமும் நடக்கிறது. டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் வங்கிகள் 1.5 சதவீதம் சேவை கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்த கட்டணத்தை வங்கிகள் ரத்து செய்தால் மக்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள். வியாபாரி களின் வர்த்தக பாதிப்பும் குறையும்.
திருமணச் செலவுக்கு ரூ.2.5 லட்சம் வரை வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலைவாசியில் இந்த தொகை போதாது. இந்த தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்தால் திருமணம் நடத்துவோருக்கு பணப்பற்றாக்குறை இல்லா மல் இருக்கும். அடுத்த 4 மாதங்களுக்கு இந்தப் பிரச்சினை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால், அடுத்த சில மாதங்களுக்கு தங்கம் வாங்குவது கணிசமாக குறையும். இதன் அடிப்படையில் தேவையும் குறையும் என்பதால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment