7. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
'மலை உச்சியில் நின்று, தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து பின்பு தொழுகின்ற இடையனை (ஆடு மேய்ப்பவனை)க் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.' அப்போது அல்லாஹ் கூறுகிறான்: 'என்னுடைய இந்த அடியானை பாருங்கள். அவன் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து விட்டு, தொழுகிறான். அவன் என்னைப் பற்றி மிக அச்சஉணர்வு கொண்டவனாக விளங்குகிறான். என்னுடைய (இந்த) அடியானின் பாவங்களை நான் மன்னித்து, அவனை சுவர்கத்தினுள் நுழையச் செய்துவிட்டேன்.'
நூல்: நஸயீ, அஹ்மத், அபூதாவுத்.
8. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
திருக்குர்ஆனின் தாய் சூரா பாத்திஹாவை ஓதாமல் ஒருவன் நிறைவேற்றும் தொழுகையானது குறையுள்ளதாகும். (அத்தொழுகை) முழுமை பெறாது. இவ்வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூன்று முறை திரும்பத்திரும்ப சொன்னார்கள். ஒருவர் அபுஹுரைரா(ரழி) அவர்களிடம், 'நாங்கள் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுதால் கூடவா?.' என்று வினவினார். அதற்கு அபுஹுரைரா(ரழி) அவர்கள், பின்வருமாறு பதிலளித்தார்கள்: 'நீங்கள் உங்கள் மனதிற்குள் அதை ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் சொல்லியதாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன். 'நான் எனக்கும் என்னுடைய அடியானுக்கும் மத்தியில் தொழுகையை இரண்டு பாகங்களாக பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்கு உண்டு.
அடியான், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். என்று ஓதியவுடன், அல்லாஹ், 'என் அடியான் என்னைப் புகழ்ந்துள்ளான்.' என்று சொல்கிறான்.
அடியான், அர்ரஹ்மானிர்ரஹீம்; என்று ஓதியதும், அல்லாஹ், 'என் அடியான் கண்ணியத்தை எடுத்துரைத்துள்ளான்.' என்று கூறுவான்.
அடியான், மாலிகி யவிமித்தீன் என்று ஓதியதும், அல்லாஹ், என் அடியான் என் மேன்மையை எடுத்துரைத்துள்ளான்.' என்று கூறுவான்.
அடியான், இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தயீன். என்று ஓதியதும், அல்லாஹ், 'இது எனக்கும், எனது அடியானுக்கும் இடையேயுள்ளதாகும். எனது அடியான் கேட்பதை நான் அவனுக்கு கொடுப்பேன்.' என்று கூறுவான்.
அடியான், இஹ்தி நஸ்ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம். கைரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன். என்று ஓதியதும், அல்லாஹ், 'இது என்னுடைய அடியானுக்கே (உரித்தானது) என்னுடைய அடியான் எதனைக் கேட்கிறானோ, அதனை அவன் பெறுவான்.' என்று பதிலுரைத்து முடிக்கிறான்.
நூல்: முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.
9. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், அல்லாஹ்விடத்தில், அடியானின் கடமைகளில் முதன் முதலாக அவனுடைய தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். (தொழுகையை சரியாக நிறைவேற்றி) அவை செவ்வனே அமைந்திருந்தால், அடியான் வெற்றியும் ஜெயமும் பெறுவான். (தொழுகையை சரியாக நிறைவேற்றாது இருந்ததின் காரணமாக) அவைகளில் குறை காணப்பட்டால், அடியான் தோல்வியும், நஷ்டமும் அடைவான். அவனது கடமையான தொழுகையில் ஏதாவது குறையிருப்பின், கட்டாய தொழுகையிலுள்ள பழுதை நீக்கி,அதனை முழுமைபடுத்த, அடியான் உபரி தொழுகைகளை தொழுதுள்ளானா என்று பாருங்கள். என்று அல்லாஹ் கட்டளையிடுவான். பின்னர் (நோன்பு, ஜகாத் போன்ற) அனைத்துக் கடமைகளுக்கும் இதே முறையில் தீர்ப்பளிக்கப்படும்.
நூல்: திர்மிதி.
No comments:
Post a Comment