14. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும் கூட்டங்களைத் தேடி உலா வருகிறார்கள். அத்தகைய கூட்டத்தாரைக் கண்டால். அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கும் முதல் வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில் தங்களுடைய இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூழ்ந்து கொண்டிருப்பார்கள். (கூட்டத்திலுள்ள மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து விடுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் '(அங்கு) அல்லாஹ், இவ்விஷயங்களை நன்கு அறிந்திருந்தாலும் கூட அவ்வானவர்களிடம் கேட்கின்றான்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? அதற்கு வானவர்கள் நாங்கள் பூமியிலிருக்கும் உன்னுடைய சில அடியார்களிடமிருந்து வருகிறோம். அவர்கள் உன் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன் மேன்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன்னைத் தவிர (வேறு) இறைவன் இல்லை என்று சாட்சியம் பகர்ந்து கொண்டிருந்தார்கள். உன்னை புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள். உன்னுடைய அருளை வேண்டியவர்களாக இருந்தார்கள் என பதில் கூறுவார்கள்.' அல்லாஹ் : என்னிடம் அவர்கள் எதனை வேண்டினார்கள்?
வானவர்கள் : உன்னுடைய சுவர்கத்தை உன்னிடம் அவர்கள் வேண்டுகிறார்கள்.
அல்லாஹ் : அவர்கள் என்னுடைய சுவர்க்கத்தைக் கண்டுள்ளார்களா?
வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய சுவர்கத்தைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.
அல்லாஹ் : எதிலிருந்து அவர்கள் என்னிடம் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.
வானவர்கள் : உன்னுடைய நரக நெருப்பிலிருந்து (பாதுகாப்பு தேடுகிறார்கள்)
அல்லாஹ் : அவர்கள் என்னுடைய நரக நெருப்பை கண்டுள்ளார்களா?
வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய நரக நெருப்பைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.
அல்லாஹ் : நான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் வேண்டியதை அருளி, அவர்கள் தேடும் பாதுகாப்பையும் அளித்துவிட்டேன்.
வானவர்கள் : யா அல்லாஹ்! அவர்கள் மத்தியில் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்க கூடிய ஒரு அடியானும் இருந்தான், அவன் அவ்வழியே செல்லும்போது அக்கூட்டத்தாருடன் அமர்ந்து விட்டான்.
அல்லாஹ் : அவனுடைய பாவங்களைக் கூட நான் மன்னித்துவிட்டேன். அத்தகைய மக்களுடன் (கூட்டத்தில்) அமர்பவர்களும் வேதனையடையமாட்டார்கள்.
நூல் : புகாரி, முஸ்லிம்.
[குறிப்பு : மேற்கண்ட 14 வது ஹதீஸ் குத்ஸி சம்பந்தமாக வேறு விதமான மொழிபெயர்ப்புகள் தமிழில் காணக் கிடைக்கின்றன. இருப்பினும் நாம் வெளியிட்டுள்ள சரியான தமிழ் மொழிபெயர்ப்பின் அரபி மூலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளை பார்வையிட விரும்புபவர்கள்இங்கே சொடுக்கி பார்த்துக்கொள்ளவும
15. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த) சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன்.
நூல்:புகாரி, முஸ்லிம்.
16. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் (மனிதன் புரியும்) நற்செயல்களையும், தீய செயல்களையும் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இதனை விளக்கும் முகமாக (பின்வருமாறு) சொன்னார்கள். 'எவர் நற்செயல் ஒன்று செய்ய வேண்டுமென்று நாடி அதனைச் செய்யவில்லையோ (நற்செயல் புரியவேண்டுமென்ற அம்மனிதரின் எண்ணத்தின் காரணமாக) அதை அல்லாஹ் முழு நற்செயலாக பதிவு செய்து கொள்கிறான். ஆனால் அவர் நற்செயலைச் செய்ய நாடி அதனைச் செய்தும் விட்டால், அல்லாஹ் அதனைப் பத்து நற்செயல்களிலிருந்து எழு நூறு நற்செயல்கள் வரையிலோ அல்லது அதனைவிடப் பன்மடங்கு அதிகமாகவோ பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீய செயலை செய்ய நாடி, அதனைச் செய்யாவிட்டால், அல்லாஹ் அதனை ஒரு நற்செயலாகவே பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒரு தீய செயலை செய்ய நாடி அதனை செய்தூம் விட்டால், அல்லாஹ் அதனை ஒரே ஒரு தீய செயலாக மட்டுமே பதிவு செய்து கொள்கிறான்.
நூல்: புகாரி,முஸ்லிம்.
No comments:
Post a Comment