Monday, 6 February 2023

தற்கொலை -2

 தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் அல்லது செய்து கொள்பவர்கள் உள ரீதியில் கோழைகளாவர். சவால்களைச் சந்திக்கும் துணிவை இழந்தே தற்கொலையை நாடுகின்றனர். இவர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தற்கொலை ஒரு தீர்வாகும் என நினைக்கின்றனர். உண்மையில் தற்கொலை என்பது தீர்வன்று. அது ஒரு பிரச்சினையில் இருந்து இன்னொரு பிரச்சினைக்கு இடம் மாறுவது மட்டுமேயாகும்.

கடன் தொல்லை, வறுமை, வியாபாரத்தில் நட்டம், காதல் தோல்வி போன்ற அற்ப காரணங்களுக்காக ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் பிரச்சினை முடியாது! 

அவன் இறந்த பின்னர் அந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து அவனது குடும்பத்தைத் தொற்றிக் கொள்ளும். தற்கொலை செய்பவர்கள் தங்களைச் சேர்ந்தவர்களை கடினமான சோதனையில் போட்டு விட்டு தமது இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் அழித்துக் கொள்கின்றனர்.

அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.

நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.

‘மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

(4:28-32)

முதல் வசனம் மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டுள்ளான் என்று கூறுகின்றது. அந்த பலவீனத்தின் காரணத்தினால் தப்பு, தவறு செய்கின்றான், பேராசை கொள்கின்றான். அவனது உளவியல் பலவீனத்தின் வெளிப்பாடே தற்கொலையாகும்.

ஒருவர் சொத்தை மற்றவர் தவறான முறையில் சுரண்டக் கூடாது என்று அடுத்து பேசுகின்றான். அநியாயங்களுக்கு நியாயம் கிடைக்காத போது மனிதன் கொலை, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றான். சரியான இறை நம்பிக்கை இருந்தால் மறுமையில் நீதி கிடைக்கும் என்று நிம்மதி பெற முடியும்.

அடுத்து, தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று குர்ஆன் தடுக்கின்றது. இப்படித் தடை போட்டால் மட்டும் சரியா? தற்கொலை செய்து கொள்ளும் பலரும் தமக்கென்று யாரும் இல்லை, தம் மீது அன்பும் பரிவும் காட்ட எவரும் இல்லை என்ற தவறான விரக்தி நிலையிலேயே அதைச் செய்கின்றனர்.

அடுத்து, அல்லாஹ் உங்களோடு அன்பாக இருக்கின்றான் என்று ஆறுதல் கூறப்படுகின்றது. தற்கொலை உணர்வுடையவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது அவர்களை அதிலிருந்து காப்பதற்கான ஒரு வழியாகும்.

ஆனால், சிலர் வெறும் அன்புக்கு மட்டும் கட்டுப்பட மாட்டார்கள். எனவே, அடுத்து அல்லாஹ், ‘நான் அன்பானவன் ஆனால், நீ தற்கொலை செய்து கொண்டால் உன்னைக் கடுமையாகத் தண்டிப்பேன்’ என எச்சரிக்கின்றான். பிரச்சினையில், கஷ;டத்தில் இருந்து விடுபட நீ தற்கொலை செய்து கொண்டால் நரகம் என்ற மிகப் பெரும் பிரச்சினையில் நீ மாட்டிக் கொள்வாய் என இங்கு எச்சரிக்கப்படுகின்றது.

அடுத்து, மனிதன் செய்யும் பாவங்களும் தற்கொலைக்கான காரணங்களில் ஒன்றாகும். பாவம் செய்தவனை அவனது ஆழ் மனது வாட்டி வதைக்கின்றது. தான் இப்படியெல்லாம் செய்துவிட்டேனே என்று தன்னைத் தானே தாழ்த்தி மனிதன் விரக்தி அடைகிறான். வாழத் தகுதியற்றவன் என நினைக்கின்றான். இதனால் அவனுள் தற்கொலை எண்ணம் பெறும் எழுச்சி பெறுகிறது. எனவே, இங்கு இறைவன் பாவ மன்னிப்புப் பற்றி பேசுகின்றான்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும்.....

இளம் வயது தற்கொலை...

No comments:

Post a Comment