
குறைஷியர் தமது திட்டங்களை மிக்க வைராக்கியத்துடனும் திறம்படவும் செயல் படுத்தி வந்தனர். எனினும் தனியொரு விவகாரத்தில் எவ்வாறோ அவர்களது திட்டங்களனைத்தும் ஆரம்பத்திலிருந்தே தோல்வியில் முடிந்தன. மக்காவின் வடமேற்குப் பிரதேசத்தில் செங்கடலை அண்மியிருந்த பனீ கிபார் கோத்திரத்தின் அபூ'தர் என்பார் ஏற்கெனவே நபிகளார் குறித்தும் அன்னாருக்குண்டாயிருந்த எதிர்ப்புகள் குறித்தும் தெரிந்திருந்தார். தனது கோத்திரத்தாரின் பெரும்பான்மையினரைப் போல இவரும் வழிப்பறிக் கொள்ளைக்காரராகவே இருந்தார். எனினும் ஏனையோரைப் போலன்றி அவர் இறைவனின் ஏகத்துவம் பற்றி அசைக்க முடியாத நம்பிக்கையுடையவராகவும் சிலை வணக்கத்துக்கு எவ்வித மதிப்புமளிக்காதவராகவும் விளங்கினார். ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு மக்கா செனறிருந்த அவரது சகோதரர் உனைஸ் திரும்பி வந்ததும், குறைஷியரிடையே ஒரு மனிதர் தன்னை ஓர் இறைதூதர் எனக் கூறிக் கொள்வதாகவும், அவர் லா இலாஹ இல்லல்லாஹ் ‘ வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை ’ எனப் பிரசாரம் புரிவதாகவும். இதனால் குறைஷியர் அவரைத் தம்மவரல்ல எனக் கூறிவருவதாகவும் அபூதர்ரிடம் தெரிவித்தார். உடனடியாகவே மக்காவுக்குப் புறப்பட்டார் அபூதர். ஓர் உண்மையான இறைதூதர் இதோ இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் சென்ற அவரை மக்காவுக்கான பாதையில் சந்தித்த குறைஷியர், அவர் எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள விழைந்தாரோ அவற்றையெல்லாம் கூறி வைத்தனர். சிரமங்களேதுமின்றி அவர் நபிகளாரின் வீட்டையடைந்தார். வீட்டு முற்றத்தில் ஒரு வாங்கின் மேல் படுத்திருந்தனர் நபிகளார். போர்வையின் ஒரு முனை அன்னாரின் முகத்தை மறைத்திருந்தது. அபூதர் அன்னாரை எழுப்பி உதய சோபனம் கூறினார். “ உங்கள் மீது சாந்தி உண்டாவதாக ” எனப் பதிலிறுத்தனர் நபிகளார்.
“ உமது பிரகடனங்களை எனக்குரைப்பீராக ” என்றார் அந்த நாடோடி அறபி. “ நான் கவிஞனல்ல; நான் இப்போதுரைப்பது குர்ஆன். அதனை உரைப்பது நானல்ல; அல்லாஹ்வே அதனைக் கூறுகின்றான் ” என்ற நபிகளாரிடம் “ எனக்காக அதைக் கூறுவீராக ” என வேண்டினார் அபூதர். நபிகளார் ஒரு ஸூறாவை ஓதிக் காட்டினர். உடனே அபூதர்,
“ வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர, முஹம்மத் அல்லாஹ்வின் திருத்தூதராவார் எனச் சாட்சி பகர்கிறேன் ” எனக் கூறினார். “ உம்முடைய மக்கள் யார்? ” என வினவிய நபிகளார் பதிலைக் கேட்டதும் அபூதர்ரை மேலும் கீழும் வியப்புடன் பார்த்தவர்களாகக் கூறினார்கள் :
“ நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியோரை நன்னெறியில் செலுத்துவான் ” - (இ.ஸா.4:164) பனீ கிபார்கள் பெரும்பாலும் கொள்ளைக்காரர்களென்பது யாவரும் அறிந்த விடயமாகவே இருந்தது. இஸ்லாத்தினை அவருக்குப் போதித்துப் பின்னர், தனது மக்களிடம் திரும்பிச்சென்று மேலும் கட்டளைகளை எதிர்ப்பார்த்து நிற்கும்படி கூறினர் நபிகளார்.
அபூதர் பனீகிபாருக்குத் திரும்பிச் சென்றார். அவர் மூலம் அக்கோத்திரத்தாருள் பலர் இஸ்லாத்தினுள் நுழைந்தனர். வழிப்பறிக்கொள்ளையையே தொடர்ந்த அவர் குறைஷியரின் வர்த்தகப் பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்தினார். கொள்ளைப் பொருட்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அவர் விதித்த நிபந்தனை, அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும், முஹம்மதுவின் இறைதூதுவ நிலைமையையும் சாட்சியம் கூறி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
மற்றொமொரு சந்திப்பு, பனீ-தவ்ஸ் கோத்திரத்தாருக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வதாக அமைந்தது. கிபார்களைப் போல இவர்களும் மேற்குப் பிரதேச கோத்திரத்தாராக இருந்தனர். தவ்ஸ் கோத்திரத்தின் துபைல் என்பார் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், தான் மக்காவை அண்மித்தபோது குறைஷிகள் சிலர், மாந்திரீகரான முஹம்மதைக் காண்பதையும் அவர் கூறுவனவற்றைக் கேட்பதையும் குறித்து எச்சரித்தமையையும் தான் தமது மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு விடுவார் என்ற பீதியை ஊட்டியமையையும் பற்றிக் கூறினார். துபைல் ஒரு கவிஞனாகவும், தன் கோத்திரத்தாரிடையே மிக்க செல்வாக்குடையவராகவும் விளங்கியமையால் அவரை எச்சரித்து வைப்பதில் குறைஷிகள் மிக்க கவனம் செலுத்தினர். தானும் மயக்கப்பட்டு விடலாம் என்றஞ்சினார் அவர். பள்ளி வாசலை அடையுமுன்னர், தன் காதுகளை பஞ்சால் அடைத்துக் கொண்டு போகுமளவுக்கு அவர் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
நபிகளார் என்றும் போல் யெமனிய முனைக்கும் கரும்பாறைக்கும் இடையில் ஜெரூஸலத்தை முன்னோக்கியவர்களாகக் கஃபாவின் தென் கிழக்குச் சுவர் தமது முன்னதாகத் தொழுகைக்கென நின்றிருந்தார்கள். அன்னாரது குர்ஆன் ஓதுதல் அதிக சப்தமில்லாததாகயிருந்தாலும்
“ ஓதப்பட்டனவற்றில் சிலதை நான் கேட்கவேண்டுமென்பதே இறைவனின் விருப்பமாக இருந்திருக்கின்றது. அழகான வசனங்களை நான் செவிமடுத்தேன். எனவே நான் எனக்குள் கூறிக்கொண்டேன் : ‘ நான் நுண்ணிய அறிவுடையவன். ஒரு கவிஞன். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வித்தியாசங்களைத் தெரியாதவனல்ல, ஏன் நான் இந்த மனிதர் கூறுபவற்றைக் கேற்கக் கூடாது? அது நன்மையாயின் ஏற்பேன். தீமையாயின் தவிர்ப்பேன். ’ நபிகளார் அங்கிருந்து செல்லும் வரை நான் காத்திருந்தேன். பின்னர் அவரைத் தொடர்ந்து, அவர் வீட்டினுள் நுழைந்ததும் நானும் உள்ளே சென்று,
‘ ஓ முஹம்மத்! உமது மக்கள் பல்வேறு விஷயங்களைக் கூறி உமது நிலைமைக் குறித்து என்னை அச்சுறுத்தினர். உமது வார்த்தைகளைக் கேட்டு விடக்கூடாது என்று நான் காதுகளை அடைத்துக் கொண்டு வந்தேன். நான் உமது வசனங்களைக் கேட்க வேண்டுமென்பதே இறைவன் நாட்டமாக இருந்துளது. உமது போதனைகள் குறித்த உண்மைகளை எனக்குக் கூறுவீராக! ’ எனக் கூறினேன் ”.
நபிகளார் அவருக்கு இஸ்லாம் பற்றி விளக்கிக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். துபைல் இஸ்லாதின் பாலானார். தனது கோத்திரத்தாரை இஸ்லாத்தினுள்ளாக்கும் உறுதியுடன் திரும்பிச் சென்ற அவர் கூறியனவற்றை அவரது தந்தையாரும் மனைவியுமே ஏற்றுக் கொண்டனர். ஏனைய தவ்ஸ் வாசிகள் எதிர்த்து நிற்கலாயினர்.
பெரும் ஏமாற்றத்துடன், சினம் மீதூரப் பெற்றவராக, நபிகளார் தனது கோத்திரத்தார் மீது சாபமிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் மக்காவுக்கு வந்தார் துபைல். மாறாக நபிகளார், பனீ-தவ்ஸ்கள் நேர்வழி பெறவேண்டுமென அல்லாஹ்வை இறைஞ்சி துபைலிடம் கூறினார்கள் : “ உமது மக்களிடம் திரும்பிச் சென்று அவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பீராக! அவர்களிடம் அமைதியுடனும் பொறுமையுடனும் நடந்து கொள்வீராக! " - (இ.இ.252-4)
தனக்கிடப்பட்ட ஆணைகளை அடியொற்றி நடந்தார் அவர். வருடங்கள் கழிந்து செல்ல, மேலும் மேலும் பல தவ்ஸ் குடும்பங்கள் இஸ்லாத்தின் பாலாகின.
நபிகளாரைக் காணுமுன்னர் துபைல் சந்தித்தது அன்னாரின் எதிரிகளையே. ஏனைய பல யாத்திரிகர்கள் நபிகளாரைப் பின்பற்றியிருந்த விசுவாசிகளையும் சந்தித்திருந்தனர். எதிரிகள் கூறியவற்றினின்றும் முற்றிலும் மாறான செய்திகளையே அவர்கள் கூறினர். ஒவ்வொருவரும் இயல்பாகவே தாம் நம்பத் தூண்டப்பட்டனவற்றை மட்டுமே நம்பினர். இதன் பயனாக புதிய மதமான இஸ்லாம் அறேபியா முழுவதும் புகழ்ந்து அல்லது இகழ்ந்து பேசப்படலாயிற்று. எனினும் வேறு எங்கணையும் விட ஒரே ஓர் இடத்தில் தான் இஸ்லாம் குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
அந்த இடம் - யத்ரிப்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்
No comments:
Post a Comment