Tuesday, 4 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷித் தலைவர்கள் (தொடர்… )



செல்வ நிலையைப் பொறுத்தவரை, குறைஷிக் குலத்தின் பல்வேறு கோத்திரத்தாரும், மேலோர் கீழோவராவதும் கீழோர் மேலோவராவதுமாக பல்வேறு மாற்றங்கட்கும் உட்பட்டு வந்தனர். அப்போதைய சூழலில் பொருள் வளம் மிக்கனவாக விளங்கியவை அப்த்-ஷம்ஸ், மக்ஸும் கோத்திரங்களாகும். ஷம்ஸிய கோத்திரத்தின் ஒரு கிளையாருக்கு உத்பாவும் அவரது சகோதரர் ஷைபாவும் தலைமை வகித்தனர். அதன் உமையாக் கிளையாருக்குத் தலைவராக விளங்கியவர் இவர்களது ஒன்று விட்ட சகோதரர் ஹர்ப்.

ஹர்ப் மரணமடைய, அவரது புதல்வர் அபூ ஸுப்யான் தலைமை பதவியை ஏற்றிருந்தார். ஏனைய பல மனைவியருடன், அபூ ஸுப்யான் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரையும் மணஞ் செய்திருந்தார். பொது விவகாரங்களிலும் வர்த்தகத்திலும் அபூ ஸுப்யான் பெரு வெற்றிகள் பெற்று வந்தமைக்குப் பல காரணங்களிருந்தன. தீர்மானங்கள் எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர். ஆழமாகச் சிந்திப்பவர். பொறுமையுடன் ஆலோசனைகள் நடத்துபவர். தக்க சந்தர்ப்பங்களைத் தவறியேனும் நழுவவிடாத அவரது கூரிய சிந்தனையின் காரணமாகத் தனக்கு நீண்ட காலத்திலாவது சாதகமான பலனேற்படக் கூடுமாயின் மிக்க தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்.

மனைவியான ஹிந்த் மிக இலகுவாக சினத்துக்குள்ளாவதோடு, எந்த ஒரு விடயத்திலும் சடுதியான முடிவுகளை மேற்கொள்பவராயிருந்தார். முரண்பட்ட போக்குகள் இயல்பாகவே இருவரிடையிலும் மனக் கசப்புகளைத் தோற்றுவிப்பனவாக இருந்தன. என்றாலும் தான் ஏதும் ஒரு தீர்மானம் எடுத்து விட்டால் அதிலிருந்தும் மனைவி ஹிந்த் கூட தன்னைத் திசை திருப்பி விட முடியாத உறுதி படைத்தவராயிருந்தார் அபூ ஸுப்யான். இவர் நபிகளார் மீது காட்டி வந்த எதிர்ப்பு, எதிர்பார்க்கக் கூடியது போல, அபூஜஹ்லின் எதிர்ப்பினைக் காட்டினும் தாக்கம் குன்றியதாகவே இருந்தது.
நபிகளாரைப் பொறுத்த தமது கருத்துகளில் குறைஷித் தலைவர்கள் வெவ்வேறு நோக்குடையவர்களாயிருந்தாலும் அன்னாரின் போதனைகளை முற்று முழுதாக நிராகரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டிருந்தார்கள். வாழ்வில் பல வெற்றிகளைக் கண்ட அவர்கள், பொதுப்பட அறேபியாவில் மனித மகத்துவத்தின் இலட்சிய நிலையொன்றனைத் தாம் அடைந்து கொண்டுள்ளதாகக் கருதி வந்தனர். செல்வப் பெருக்கம் அம்மகத்துவத்தின் ஓர் அம்சம் எனக் கொள்ளப்படாவிடினும், அது, அடைய விரும்பும் இலக்குகளை அடைந்து கொள்ள அவசியமான முக்கிய காரணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது.

ஒரு மனிதன் உயர்வானவன் எனக் கருதப் பட வேண்டுமாயின், பிறர் அவனைத் தமது பாதுகாவலனாக அல்லது நேசனாகத் தேடி வர வேண்டும். அவ்வாறான நிலையை ஒருவன் அடைந்துக் கொள்ளத் தானே நம்பிக்கையான, சிறந்த நேசர்களைக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு அடிப்படையாகப் பலம் வாய்ந்த உறவினர்களைப் பெற்றிருத்தல் அவசியம். சொந்த திருமண பந்தங்களும், புதல்வர் புதல்வியரது திருமண ஏற்பாடுகளும் இவ்வாறான உறவுகளை அமைத்துக் கொள்ளப் பேருதவியாக விளங்குவன. அவற்றைச் செல்வத்தின் மூலம் இலகுவாக செய்து கொள்ள முடிந்தது. ஒரு விருந்துபசாரகன் என்ற வகையிலும் ஒரு தலைவன் போதிய செல்வத்தைப் பெற்றிருக்க வேண்டியவனானான். இவ்வாறான இலட்சிய நிலையை அடைந்து கொள்ளச் சில குண விசெடங்களும் அவசியமானவையாயிருந்தன. அதில் சிறப்பானது பரோபகாரத் தன்மை. எவ்வாறாயினும் இப்பரோபகார சிந்தையின் அடிப்படையில் எழுந்த அம்சங்கள் எதுவும் மறுமையின் நலனைக் குறியாகக் கொண்டிருக்கவில்லை. அறேபியா முழுவதும் மட்டுமன்றி அதற்கப்பாலும், அளவிளாத பரோபகாரம், சிங்கம் போன்ற தீரம், கூட்டுறவுக்காகவோ பாதுகாப்புக்காகவோ உத்தரவாதத்துக்காகவோ அல்லது வேறு எந்த ஒரு காரணத்துக்காகவோ கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நேர்மைத் திறம் ஆகிய நற்குண ஒழுக்கங்களுக்காக இவ்வுலகிலும் இறப்பின் பின்னரும் கூட புகழ்ந்தேத்தட் படுபவர்களாக இருப்பதே வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதாயிருக்கும் என அவர்கள் கருதினர்.

வலீத் முதலிய குறைஷித் தலைவர்கள் இவ்வாறான மகத்துவங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். இவை, அவர்களுக்கு ஒரு வகையான ஆன்ம திருப்தியை அளித்து வந்ததால், இவ்வுலகியலின் பெறுமதியின்மையை வற்புறுத்திய போதனைகளுக்கு அவர்கள் செவிடர்களாகவே அமைந்தனர். ஏனெனில் எவையெல்லாம் பெறுமதியற்றன எனக் கூறப்பட்டனவோ, அவையே இவர்களது வெற்றிகளின் அத்திவாரங்களாயிருந்தன. அறேபியா அவ்வாறே தொடர்ந்தும் இருப்பதில்தான் அவர்களது அமரத்துவ நிலைமை தங்கியிருந்தது. கடந்த காலங்களிலிருந்து எதிர்காலத்துக்கு அறாபிய மகத்துவங்களைக் கொண்டு செல்வதுவே அவ் அமரத்துவ நிலையை அடையும் வழி.

பல்வேறு தரங்களில், குறைஷித் தலைவர்கள் அனைவருமே, இறை வசனங்களின் மொழியழகினால் கவரப் பட்டிருந்தார்கள். எனினும் அவற்றின் போதனைகளை அங்கீகரிக்க அவர்களது ஆன்மாக்கள் முன்வரவில்லை. அவர்களும் அவர்களது கீர்த்தி வாய்ந்த முன்னோரும் எதனையும் சாதித்து விடவில்லை; அவர்களது முயற்சிகள் அனைத்துமே விரயமாய் விட்டன என்றெல்லாம் கூறி நின்ற (குர்ஆனின்)வாசகங்களுக்கெல்லாம் செவிசாய்க்க அவர்கள் விரும்பவில்லை.

“ இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும் தவிர வேறொன்றுமில்லை ; மறுமையின் வீடு நிச்சயமாக நிலையான வாழுமிடம் (என்பதனை) அவர்கள் அறிந்திருந்தால். (தவறிழைக்க மாட்டார்கள்) ”

அல்குர்ஆன்: 29 : 64


இன்னும் வரும்…

இறைவன் நாடினா
ல்
,
 

No comments:

Post a Comment