Tuesday, 4 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷித் தலைவர்கள்


நபிகளாரைப் பின்பற்றுபவர்களின் தொகை அதிகரித்துச் சென்றது. என்றாலும் புதிதாக மதம் மாறியவர்கள், அடிமைகளாக அல்லது அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக அல்லது சுற்றுப்புறக் குறைஷியராகவே இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

குழிவின் குறைஷியருள் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பொதுவாக வாலிபர்களாக அல்லது இளம் யுவதிகளாக இருந்தனர்.அவர்கள் செல்வாக்குள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களானாலும் தம்மளவில் எவ்வித செல்வாக்குமற்றவர்களாகவே விளங்கினர். அவர்களது மதமாற்றம் தம் குடும்பத்தாரதும் மூத்த உறவினர்களதும் சினத்தைப் பன்மடங்கு அதிகரிப்பதாகவே அமைந்தது.

அப்த்-அர்-ரஹ்மான், ஹம்ஸா, அர்கம் ஆகியோரது மதமாற்றம் தனிப்பட்ட பின்னணிகளைக் கொண்டிருந்தது. அவர்கள் தலைமைத்துவ நிலையினின்றும் சேய்மையிலேயே இருந்தனர். குறைஷியரின் தலைவர்களில் சிலரை எவ்வாறேனும் தமது செல்வாக்குக்குள் கொண்டுவர முனைந்தனர் நபிகளார். எவருமே, ஏன் அன்னாரின் பெரிய தந்தையாரான அபூதாலிப் கூட அன்னவரைச் சேர்ந்து கொள்வதில் எவ்வித விருப்பினையும் காட்டவில்லை. தமது தூதினைப் பரப்ப அபூஜஹ்லின் மாமனாரான வலீதைப் போன்ற ஒருவரது ஆதரவு கிடைக்கக் கூடுமாயின் அது பேருதவியாக இருக்கும் எனக்கருதினர் நபிகளார். அவர் மக்ஸுக் கோத்திரத் தலைவராக இருந்தது மட்டுமன்றி, ஒரு வகையில் முழு குறைஷிக் குலத்தவரதும் உத்தியோக பூர்வமற்ற தலைவராகவும் மதிக்கப்பட்டு வந்தார். அத்தோடு ஏனையோரை விட தர்க்கங்களுக்கு செவி சாய்க்கக் கூடிய ஒருவராகவும் அவர் விளங்கினார்.

ஒரு நாள் வலீதுடன் தனிமையில் உரையாடக்கூடியதொரு சந்தர்ப்பம் நபிகளாருக்குக் கிட்டியது. இருவரும் மிகத் தீவிரமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமீபத்தில் இஸ்லாத்தில் இணைந்திருந்த ஒருவர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு குருடர். நபிகளாரின் குரலைக் கேட்ட அவர், அவ்விடத்தில் நின்று, குர்ஆனின் சில வாசகங்களை ஓதும்படி அன்னாரை வேண்டினார். வேறொரு சந்தர்பத்தில் அவரது வேண்டுகோளை நிறைவேற்றுவதாகவும், அதுவரை பொறுமையுடன் இருக்கும் படியும் அக்குருடர் வேண்டப்பட்டார். என்றாலும் அவர் பிடிவாதமாக இருக்கவே, நபிகளார் கடுகடுத்தவர்களாகத் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். நபிகளாருக்கும் வலீதுக்குமிடையிலான சம்பாஷணையும் இதனால் முறிவுற்றது. எனினும் இதிலேற்பட்ட தடை பெரு நஷ்டங்களெதனையும் விளைவித்துவிடவில்லை. ஏனெனில் எவ்வித பிரயோசனமுமற்றதாக இருந்த ஏனைய பலரது நிலைமையைப் போலவே வலீதின் போக்கும் பயனளிக்காததொன்றாகவே இருந்தது.

உடனடியாகவே ஒரு ஸூறா அருளப்பட்டது.

அவர் கடுகடுத்தார்; புறக்கணித்தார்; தன்னிடம் ஓர் அந்தகர் வந்ததற்காக என அதன் ஆரம்ப வசனங்கள் அமைந்தன. தொடர்ந்து வந்த வசனங்களில் எவன் அலட்சியம் செய்கின்றானோ அவன் பக்கமே நீர் கவனம் செலுத்துகின்றீர்; அவன் பரிசுத்தவானாகாவிட்டால் அதைப்பற்றி உம்மீது யாதொரு குற்றமுமில்லை(யே)! எவர் ( தாமாகவே) உம்மிடம் ஓடி வருகின்றாரோ அவர்தாம் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றவர். எனினும் நீர் அவரை அலட்சியம் செய்து விடுகின்றீர்1
அல் குர்ஆன்: 80:5-10 எனவும் கூறப்பட்டது.

சிறிது காலத்தினுள்ளேயே வலீத் கூறினார்: “ குறைஷிகளின் தலைவனாக, அவர்களின் அதிபதியாக நான் இருக்கையில் எனக்கல்லாது முஹம்மதுக்குத்தான் இறைவசனங்கள் இறங்க வேண்டுமா? அல்லது இரு நகரங்களது இரு பெரும் தலைவர்களாக நானும், தகீப்பின் அதிபதி மஸ்ஊதும் இருக்க முஹம்மதுக்கா இவை அனுப்பப்படவேண்டும்?” ( இ.இ.238: பார்க்க குர்ஆன் 43:30-31 ) வலீதின் நிலை அவ்வாறிருக்க, அபூ ஜஹ்லின் போக்கோ தன்னம்பிக்கை மிகுந்ததாக, மனவெழுச்சி மிக்கதாக அமைந்திருந்தது. “நாங்களும் அப்த்-மனாபின் மக்களும் கெளரவ மேம்பாட்டுக்காக ஒருவரோடொருவர் போட்டியிட்டிருக்கின்றோம். அவர்கள் விருந்துகள் கொடுத்திருக்கின்றார்கள்; நாங்களும் விருந்துகள் கொடுத்திருக்கின்றோம். பிறரது சுமைகளை அவர்கள் தாங்கியிருக்கின்றார்கள்; நாங்களும் தாங்கியிருக்கின்றோம். அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள்; நாங்களும் கொடுத்திருக்கின்றோம். இரு பெண் குதிரைகளைப் போல, முழங்காலோடு முழங்காலாக இரு சாராரும் சமமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் கூறுகின்றார்கள் ‘எங்களது மக்களில் ஒருவர் இறைதூதர்; வானலோகத்திலிருந்து அவருக்கு இறை வசனங்கள் வருகின்றன’ என்று. நாம் இவ்வாறான நிலையை எப்போது அடையப் போகின்றோம்? இறைவன் பெயரால், நாம் அவரை நம்ப மாட்டோம்; அவர் உண்மை பேசுபவர் என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார் அவர்.

உத்பாவின் போக்கு ஏனையோருக்கு முற்றும் முரணானதல்ல. ஆனாலும் நிலை உணராத ஒன்றாக இருந்தது அது. முஹம்மத் ஓர் இறைதூதராக இருப்பதால் அவரைப் பின்பற்ற வேண்டும் என்பதல்ல அவரது சிந்தனை. அவரது இறைதூதுவ நிலைமை அப்த்-மனாபின் மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதனால் மட்டும் மகிழ்ந்தவராக இருந்தார் அவர். ஒரு நாள் அபூஜஹ்ல், தனது ஆழ்ந்த வெறுப்புக்கு ஆளாயிருந்தவரை சுட்டிக் காட்டிக் கூறினார் : “ ஓ அப்து-மனாபின் புதல்வர்களே! அதோ உங்கள் இறைதூதர். ” இதைக் கேட்டு நின்ற உத்பா ஆக்ரோஷம் மிகுந்தவராக,

“ நாங்கள் ஓர் இறைதூதரை அல்லது அரசனையே பெற்றிருந்தாலும் கூட, அதனால் உமக்கென்ன நேர்ந்து விட்டது? ” எனப் பதிலிருறுத்தார். அரசன் பற்றிய பிரஸ்தாபம் குஸை குறித்ததாகும். அப்த்-மனாப் குஸையின் மகன் என்பதையும், மக்ஸும் வெறுமனே ஓர் உடன் பிறவா சகோதரன் என்பதையும் மக்ஸுமியான அபூஜஹ்லுக்கு குறிப்பாய் உணர்த்துவதாயமைந்தது அது. நபிகளார் இவ்வாதப் பிரதிவாதங்களைச் செவியுறும் தூரத்திலேயே இருந்தார்கள். அபூ ஜஹ்லும் உத்பாவும் நின்றிருந்த இடத்துக்கு வந்த நபிகளார் கூறினார்கள் :

“ ஓ உத்பா! நீர் கவலையுறுவதெல்லாம் உமது நலத்துக்காகவேயன்றி அல்லாஹ்வுக்காகவோ அவனது தூதருக்காகவோ அல்ல.
உம்மைப் பொறுத்தவரை ஓ அபூஜஹ்லே! பேரபாமொன்று உம்மீது வரும். சிரிதே நீர் சிரிப்பீர் : அதிகமாக அழுவீர் ” - ( தபரீ.1203.3 )


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment