Saturday, 1 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷியர் எதிர்ப்பு


இஸ்லாத்தின் இவ்வாரம்ப காலங்களில் விசுவாசிகள் பலரும் ஒன்று சேர்ந்து, குழுக்களாக மக்காவை அண்மியிருந்த குறுகிய பள்ளத்தாக்குகளுக்குச் சென்று பிறர் காணாதவாறு கூட்டாகத் தொழுது வந்தனர். ஒரு நாள் அவ்வழியாக வந்த சிலை வணக்கஸ்தர்கள் சிலர் அவர்களைத் தடுத்துக் கேவலப்படுத்தினர். இறுதியில் அவர்களுக்கிடையில் சண்டையும் மூண்டது. ஸுஹ்ரா கோத்திரத்து ஸஅத், அவிசுவாசிகளில் ஒருவரை ஒட்டகத் தாடை எலும்பொன்றினால் தாக்கிக் காயப் படுத்தினார். இஸ்லாத்தின் பாதையில் முதன் முறை இரத்தம் சிந்தப்பட்டமை இதனால் ஏற்பட்டதாகும். எனினும் இச்சம்பவத்தின் பின்னர், அவர்கள் வன்செயல்களினின்றும் தம்மை தவிர்த்துக் கொள்ள முடிவு செய்தனர். ஏனென்றால் நபிகளாருக்கு வந்த இறைவசனங்கள் எல்லாம் பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி அடிக்கடி வற்புறுத்தலாயின. விசுவாசிகள் அவற்றை தமக்கும் உரிய கட்டளைகளாகவே கொண்டனர் :

“ அவர்கள் கூறுவதை சகித்துக் கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி

இரும் ” - குர்ஆன்: 73:10


“ மேலும் இந்நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளியும். (அதிகமல்ல) ஒரு சொற்ப

அவகாசம் அவர்களுக்கு அளியும் ” - குர்ஆன்: 86:17

இரு சாராரைப் பொறுத்தமட்டிலும், இந்த வன்செயல் வழக்கத்துக்கு மாறானதொரு செய்கையாகவே இருந்தது. நபிகளார் தமது மதத்தை பகிரங்கமாகப் பிரகடனப் படுத்திய பின்னரும் கூட குறைஷிகள் அனைவரும் அன்னார் மீது பொறுமையைக் கடைப்பிடிக்கும் மனப்பாங்கினராகவே விளங்கினர். இவ்வாறான பொறைமை, நபிகளார் குறைஷியரது கடவுளரையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும், வழி வழி வந்த மரபுகளையும் கண்டிக்கத் தொடங்கும் வரை தொடர்ந்திருந்தது. கண்டனங்கள் உணரப்படத் தொடங்கியதும் குறைஷிகளின் தலைவர்கள் சிலை அபூதாலிபிடம் சென்று,
“ ஓ அபூதாலிப். எம் மத்தியில் உமது நிலைமை மிக உயர்ந்ததும் கெளரவமானதாகவும் உளது. உமது சகோதரனது மகனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்படி நாம் வேண்டியுள்ளோம். நீர் அதனைப் பொருட்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. அவர் எமது தந்தையரை இழிவுபடுத்துவதையும், எமது வழக்கங்களை கேவலப்படுத்துவதையும், எமது கடவுளரை இகழ்ந்துரைப்பதையும் நாம் பொறுத்திருக்க முடியாது. அவர் இதனைக் கைவிட்டு விடும்படி செய்யும். இல்லையேல் உம்மிருவரையும் நாம் எதிர்த்து நிற்போம். ” எனக் கூறிச் சென்றனர். 



மிகவும் கவலையுற்றவராக அபூதாலிப், தம் தம்பி மகனை அழைப்பித்தார். குறைஷிகளின் அச்சுறுத்தல்களை அன்னாரிடம் கூறி, “ ஓ எனது சகோதரன் மகனே! உம்மையும் என்னையும் காத்துக் கொள்வீராக. என்னால் சுமக்க முடியாத பளுவெதனையும் என் மீது ஏற்றிவிடாதீர் ” என வேண்டிக்கொண்டார் அவர்.
எனினும் நபிகளார், “ அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனது தூதினைக் கைவிடக்கோரி, அவர்கள் எனது வலது கையில் சூரியனையும் இடது கையில் சந்திரனையும் தந்தாலும் கூட, அதனை அல்லாஹ் வெற்றிகரமாக்கி வைக்கும்வரை அல்லது நான் அதிலேயே மரிக்கும் வரை அதனை நான் கைவிட மாட்டேன் " - (இ.இ.168) எனக் கூறி கண்களில் கண்ணீர் மல்கியவர்களாக எழுந்து செல்லத் தொடங்கினார்கள். அபூதாலிப், அன்னாரைத் திருப்பியழைத்துக் கூறினார் :
“ எனது சகோதரன் மகனே! நீர் கூற வேண்டுவனவற்றைக் கூறும். இறைவன் பெயரால் நிச்சயமாக, நான் எக்காரணங் கொண்டும் உம்மைக் கைவிட மாட்டேன் ”.


தமது வார்த்தைகள் அபூதாலிபைப் பொறுத்த மட்டில் எவ்வித பயனுமளியாமற் போனதைக் கண்ட குறைஷித் தலைவர்கள் உணர்ந்திருந்தும் அவர்கள், அவரது தம்பி மகனை நேரடியாக எதிர்க்கத் துணியவில்லை. ஏனெனில் ஒரு கோத்திரத் தலைவர் என்ற வகையிலேயே அபூதாலிப் தன் தம்பி மகனுக்குப் பாதுகாப்பளித்து வந்தார். தலைமைத்துவத்தைக் கெளரவித்து நடக்க வேண்டியது ஏனைய கோத்திரங்களின் தலைவர்களுக்கும் அவசியமானதொன்றாக இருந்தது. எனவே விசுவாசிகளுள் பாதுகாப்பளிக்கப்படாதவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் புதிய மதத்துக்குக் குந்தகம் விளைக்கலாம் எனக் கொண்டு அதற்கான பரந்த பகிரங்க நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தக் குறைஷித் தலைவர்கள் முடிவு செய்தனர்.


தமக்குப் பிரச்சினையாயமைந்து விட்ட இப்புதிய மதத்தை எதிர்ப்பதற்குக் கொள்கையொன்றனை வகுத்துக் கொள்ளும் முயற்சியில் குறைஷித் தலைவர்களனைவரும் ஒன்று படலாயினர். நிலைமை மிகவும் பாரதூரமானதொன்றாக விளங்கியது. புனித யாத்திரைக் காலம் அண்மிக் கொண்டிருந்தது. முழு அறேபியாவிலிருந்தும் மக்கள் மக்காவை நோக்கி வருவார்கள். விருந்துபசாரம் செய்வதில் குறைஷிகள் மிக்க புகழ் பெற்றவர்களாக இருந்தார்கள். உண்ணவும் குடிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது மட்டுமன்றி, வரும் ஒவ்வொருவரையும் எதிர்கொண்டழைத்து அவர்களையும் அவர்கள் கொண்டு வரும் தெய்வங்களையும் கூட உபசரித்தல் கடன். ஆனால் இம்முறையோ வரும் யாத்திரிகர்கள், தமது கடவுளர் முஹம்மதாலும் அவரைச் சார்ந்தோராலும் இகழப்படுவதைச் செவி மடுக்க வேண்டியிருக்கும். அவர்களது முன்னோரது மதங்களைக் கைவிடும்படி அவர்கள் கேட்கப்படுவார்கள். மட்டுமன்றி பல நிரானுகூலங்கள் கொண்டதொரு புதிய மதத்தைப் பின்பற்றும்படியும் வற்புறுத்தப்படுவார்கள். அவர்களில் பலர் மீண்டும் மக்கா வரமாட்டார்கள் என்பதில் ஐயமேதுமில்லை. இது குறைஷியரின் வர்த்தகத்துக்கு நிச்சயமாகக் குந்தகங்களை விளைவிக்கும். இதுவரை புனிதத்தலத்தின் காவலர்களெனத் தாம் பெற்றிருந்த கெளரவமான நிலையைக் குறைஷிகள் இழக்க வேண்டியும் நேரிடலாம். சில வேளை அறபிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டுகள் அமைத்து வந்து, குறைஷிகளை மக்காவிலிருந்தும் துரத்தி விட்டு அவர்களது இடத்தில் வேறு ஒரு குலத்தாரை, அல்லது குலக் கூட்டமொன்றனை நிறுவலாம். இதனைக் குறைஷிகளே குஸாஅக்களை துரத்துவதன் மூலம் செய்து காட்டியிருந்தனர். அதற்கும் முன்னர், குஸாஅக்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரைப் பதவியிழக்கச் செய்திருந்தனர். எனவே, முஹம்மத் எந்த வகையிலும் குறைஷிக் குலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவரல்ல என்பதனை வெளியே இருந்து வரும் அறபிகளனைவரும் உணரச் செய்ய வேண்டும். அவரது இறைத்தூதுத்துவம் பற்றிய பிரகடனங்களை மறுத்துரைப்பது இலகுவான கருமமே. எனினும் அது வெறுமனே ஒரு அபிப்பிராயத்தை தெரிவிப்பதாகவே அமையும். மற்றொரு வகையில், மறமுகமாக அவர்களை முஹம்மதின் போதனைகளைக் கேட்டுத் தாமாகவே முடிவுகளுக்கு வரத் தூண்டுவதாகவும் அமைந்து விடக் கூடும். ஆகவே அதற்கும் மேலாக ஏதேனும் கூறப்பட வேண்டும்.

இங்குதான் குறைஷிகளின் பலவீனம் மிகத் தெளிவானதாக இருந்தது. சிலர் அவரைக் குறி சொல்பவர் என்றனர். சிலர் தீய ஆவிகளினால் பீடிக்கப்பட்டவர் என்றனர். சிலர் இவர் ஒரு கவிஞர் என்றனர். மற்றும் சிலர் இவர் ஒரு மாந்திரீகர் என்றனர். இக்குற்றச்சாட்டுகளனைத்திலும் எது பிறரைத் திருப்படுத்தக் கூடியதாக அமையும் என ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமாயிற்று. இது குறித்து ஆலோசனை நடாத்தவெனத் தமது காலத்தில் போதிய செல்வாக்குப் பெற்றிருந்தவரும், முகீராவின் மகனுமான வலீதிடம் அனைவரும் சென்றனர்.

அனைத்தையும் மறுத்துரைத்தார் வலீத். என்றாலும் பின்னர் சிந்தித்துப் பார்த்தப்போது, உண்மையிலேயே முஹம்மத் ஒரு மாந்திரீகரல்லாவிடினும் கூட, மாந்திரீகர்களையும் விஞ்சிய விசேட திறன் பொருந்தியவராகவே தோற்றலானார். எந்த ஒருவரையும், அவரது தந்தையிடமிருந்து, சகோதரிடமிருந்து, மனைவியிடமிருந்து, பொதுவாக குடும்பத்தாரிடமிருந்தே பிரித்து வைக்கக் கூடியவராக இருந்தார் அவர். எனவே குறைஷியரனைவரது ஏகோபித்த குற்றச் சாட்டு அந்த அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்றார் வலீத். அதாவது ‘முஹம்மத் ஒரு பயங்கரமான மந்திரவாதி; எவ்வாறாயினும் அவரிடமிருந்து தப்பியிருக்க வேண்டும்’ என்பதே அது. மக்காவை வந்து சேரும் எல்லாப் பாதைகளிலும் தமது மக்களை நிறுத்தி வருவோர் அனைவருக்கும் முஹம்மத் குறித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும். தமது சொந்த அனுபவங்கள் மூலமே நபிகளார் எத்துணை வெற்றிகரமாக நடந்து கொள்வார்கள் என்பதனைக் குறைஷியர் நன்கு அறிந்திருந்தனர்.
தனது பிரச்சாரங்களைத் தொடங்கு முன்னர், மக்காவிலேயே மிகவும் விரும்பப்பட்ட ஒரு மனிதனாக அவர் இருக்கவில்லையா?
வாய்மைத் திறனில் அவரது நா கிஞ்சிற்றேனும் குறைந்து விடவில்லை.
அவரது நடைமுறைகளின் பெருமிதமும் குன்றி விடவில்லை.



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,
 

No comments:

Post a Comment